அரசியல் தலைவர்களைப் பாதுகாக்கும் அரசியல் யாப்பு இந்த நாட்டுக்கு தேவையில்லை, நாட்டு மக்களைப் பாதுகாக்கின்ற அரசியல் யாப்பே இந்த தேசத்துக்குத் தேவை. மக்களுக்கு தேவையான அரசியல் யாப்பினை மக்களே உருவாக்க வேண்டும் என்று சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.
தேசத்தைக் கட்டியெழுப்புவோம் என்ற தொனிப்பொருளில் மறுமலர்ச்சி இயக்கமும் ஆய்வுக்கும் கலந்துரையாடலுக்குமான நிலையமும் இணைந்து அண்மையில் கிண்ணியாவில் நடத்திய சமூக ஆர்வலர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்;
இந்த நாட்டை எல்லோரும் சேர்ந்து பாதுகாக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. 18ஆவது திருத்தமோ 19வது திருத்தமோ அரசியல்வாதிகள் வர்த்தகம் செய்யக் கூடாது என்று கூறவில்லை. இப்போது ஜே.வி.பி. கொண்டு வந்திருக்கின்ற 20ஆவது திருத்தில் கூட அரசியல் வாதிகள் வியாபாரம் செய்யக் கூடாது என்று ஏன் கூறவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
1977ஆம் ஆண்டுக்குப் பிறகு அரச சொத்துக்களைக் கொள்ளையிடுவதென்பது அரசியல் வாதிகளின் இலச்சினையாக மாறிவருகின்றது. இன்று அரச காணிகளை எடுத்து அரசாங்கத்துடன் வர்த்தகம் செய்து தொழில் அதிபராக மாறிய பாராளுமன்ற உறுப்பினர்களையே இப்போது இலங்கை அரசியலில் காணக் கூடியதாகவுள்ளது.
மக்களின் பிரதிநிகளாக இருந்துகொண்டு வியாபாரம் செய்கின்ற அரசியல்வாதிகளை, பாராளுமன்றத்தில் இருந்து வீட்டுக்குத் திருப்பி அனுப்பக்கூடியதான அரசியல் யாப்பு தற்போது தேவையாக இருக்கின்றது என்றும் விக்டர் ஐவன் மேலும் தெரிவித்தார்.