வடதமிழீழம்: மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் அனுமதியுடனேயே நான்கு வருடங்களுக்கு முன் மாந்தை பகுதியில் தற்காலிக வளைவு அமைக்கப்பட்டது. அது தற்போது சேதமடைந்துள்ளதால் நீண்டகாலம் இருக்கக்கூடியதாக இவ் வளைவை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பரிபாலன சபைத் தலைவர் எந்திரி எஸ்.எஸ்.இராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மன்னார் மாந்தை லூர்து மாதா ஆலயத்திற்கு முன்பாக சிவராத்திரி தினத்தை முன்னிட்டு அப்பகுதியில் இந்து மக்கள் வளைவு ஒன்றை வைப்பதற்கு நடவடிக்கை எடுத்தபோது, அதை கத்தோலிக்கர்கள் உடைத்தெறிந்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியது.
இது விடயமாக மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பரிபாலன சபை செயலாளர் எஸ் எஸ்.எஸ்.இராமகிருஷ்ணன் தெரிவிக்கையில்-
“நான்கு வருடங்களுக்கு முன் மன்னார் பிரதேச சபை தலைவராக எஸ்.மாட்டீர் டயஸ் இருந்த காலத்தில், நாங்கள் குறிப்பிட்ட இடத்தில் தற்காலிகமாக பைப்புகள் மூலம் வளைவு அமைக்க முற்பட்டபோது அந்த பகுதி மக்கள் சிலர் அதற்கு இடையூறு ஏற்படுத்தினர். நாங்கள் மன்னார் பிரதேச சபையிடம் அனுமதி கோரிய போது, முன்னாள் மன்னர் பிரதேசசபை தலைவர் லூர்து மாதா ஆலயத்திற்கு முன்பாக இவ் வளைவை அமைக்க மறுப்பு தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து நாங்கள் அந்த நேரம் மன்னார் மறைமாவட்ட ஆயராக இருந்த தற்பொழுது ஓய்வுநிலை ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகையை நாடினோம். அப்பொழுது அவர், நீங்கள் தற்காலிகமாக வளைவை வையுங்கள். நான் பிரதேசசபை தலைவரிடம் இதை தெரிவிக்கிறேன் என கூறினர். இதைத் தொடர்ந்து நாங்கள் அமைத்த இந்த தற்காலிக அப்படியே இருந்து வந்தது. விழாக்காலங்களில் அதில் பனர்கள் கட்டி, அதை புதுப்பொலிவாக்கினோம்.
இப்பொழுது அந்த இடத்தில் நிரந்தர வளைவை அமைக்க சட்டபூர்வ அனுமதி பெற்றுவிட்டோம். வீதி அபிவிருத்தி திணைக்களம் அதற்கு அனுமதியளித்துள்ளது. ஆனால், இதற்குள் அங்கு மனிதப்புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டதால், உடனடியாக நிரந்தர வளைவை அமைக்க முடியவில்லை.
ஆனால் தற்போது அந்த தற்காலிக வளைவு பழுதடைந்த நிலையில் காணப்பட்டது. இதை முன்னையதைவிட சற்று பலம் நிறைந்த ஒரு வளைவாக அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்கள்.
சம்பவத்துக்கு இரு தினங்களுக்கு முன்பு அவ்விடத்தில் வளைவை அமைப்பதற்கான வேலையை மேற்கொண்ட போது, ஒரு சிலர் அங்கு வந்து இடையூறு ஏற்படுத்தினர். பின் எனக்கு விடயம் தெரிவிக்கப்பட்டது. அந்த இடத்திற்கு சென்று தடை செய்தவர்களுக்கு விளக்கம் கொடுத்தேன். ஆனால் அவர்கள் அவ்விடத்தில் அமைக்க அனுமதி வழங்க முடியாது என்று தெரிவித்த போது, அவ்விடத்திற்கு பங்குத் தந்தையும் வந்து விட்டார். பின் நாங்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்தோம். ஆனால் வந்திருந்த மக்கள் இதை அமைப்பதற்கு தடைவிதித்து கொண்டிருந்ததால் அதை கைவிட்டு வரும்படி நான் அவர்களிடம் சொல்லிவிட்டு திரும்பி விட்டேன்.
அதை அறிந்த எங்களின் சிலர், நமது இடம்தானே ஏன் அமைக்க முடியாது என்று தெரிவித்து விட்டு ஞாயிற்றுக்கிழமை வளைவை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது இப்பிரச்சினை தலைதூக்கியது. நான் அந்த இடத்திற்கு சென்ற போது, அங்கு கட்டப்பட்டிருந்த வளைவை பிடுங்கி எறிந்து கொண்டிருந்தனர். காவல்துறையினருக்கு தெரியப்படுத்தி விட்டு அவர்கள் வருவதற்குள் அமைக்கப்பட்ட இரு தூண்கள் தகர்த்தெறியப்பட்டுள்ளது“ என்றார்.