‘நீதிக்கான மக்கள் எழுச்சி’ எனும் தொனிப்பொருளில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் இந்த பூரண ஹர்த்தால் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் ஶ்ரீலங்காவுக்கு கால அவகாசம் வழங்கக்கூடாதென வலியுறுத்தி கிழக்கு மாகாணத்தில் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புக்கள் ஆதரவு வழங்குதாக அறிவித்திருந்தன.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளை மீட்டு தரக்கோரி தொடர்ச்சியான போராட்டங்களில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அதற்கான தீர்வு இதுவரை எட்டப்படவில்லை
இந்நிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் தற்போது இடம்பெற்று வருகின்றமையால், தங்களது கோரிக்கையை அங்கு கொண்டு செல்லும் நோக்குடன் இந்த பூரண ஹர்த்தால் கிழக்கில் இன்று முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தென்தமிழீழ தமிழ் பிரதேசங்களில் பாடசாலைகளுக்கு மாணவர்கள் சமூகமளிக்கவில்லை,
அரச அலுவலகங்கள், அரச மற்றும் தனியார் வங்கிகள் இயங்கவில்லை. வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. பாதுகாப்புக் கடமையில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.