கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி, பளை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தையடுத்து குறித்த பகுதியில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் மற்றும் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பளை, கச்சார்வெளி சந்திப்பகுதியில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் போக்குவரத்து பொலிஸாரின் வாகனத்தின் மீது இனந்தெரியாத நபர்களினால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இறுதி யுத்தத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தமிழ் உறவுகளுக்கு நேற்று மே 18ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நடைபெற்றன.
தமது உறவுகளை இழந்த அனைவரும் இதில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். இந்த நிலையில் குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நடைபெற்றுள்ளமையால் மக்கள் மனதில் பயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் அப்பகுதியிலுள்ள மக்களுக்கு வீடுகளை விட்டு வெளியேற வேண்டாமென பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் கொடுத்துள்ளனர்.
சம்பவத்தினைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
புகையிரத கடவை மற்றும் கச்சார்வெளி சந்திப் பகுதியில் பளை பொலிஸார் குவிக்கப்பட்டும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறிப்படவில்லை. இருந்தும் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.