பொறியினில் சிக்கிய எலியினை
பிடிப்பது பூனையின் வேலை அல்ல
உலகினில் எலியை உயிருடன் பிடிப்பது
உரிமையில் வளர்க்க அல்ல
திருடிய குற்றம் திருந்திய எலியையும்
பொறியினில் சிக்க வைக்கும்
வருடிய பசியில் சுருங்கிய எலியின்
மனமதும் மயங்கி நிற்கும்
இரையது என்பது எளிதினில் எமை போல்
எலியுக்கும் கிடைப்பதில்லை
பொறியது உண்டு என்பதால் எலியது
பட்டினி கிடப்பதில்லை
பசித்தவர் உண்பதில் தவறுகள் என்பது
பக்குவம் அற்ற செயல்
விடுதலைப் பசியினை உயிர் விலை கொடுத்துமே மீட்பது எங்கள் இயல்
உண்மையில் எமக்காய் விடுதலை வேண்டி வீண் பழி சுமக்கவில்லை
அண்மைய சந்ததி முள் முடி தரித்தலை
அடியுடன் ஏற்கவில்லை
சந்தியில் நின்று சாக்கடை போலே
நாற்றமும் கொண்டதில்லை
குந்தி இருந்துமே சாதியப் பேச்சிலே
ஏற்றமும் கண்டதில்லை
வந்துமே ஏறிய நாய்க் குடி நம்மை
ஆள்வதே தவறு என்றோம்
முந்தையர் ஆண்ட நம் வீரத்தை
மெல்ல முடிச்சுகள் போட்டு நின்றோம்
உரிமையில் தவறுகள் அடிப்படை எனில்
நாம் பொங்கியே எழுந்து போனோம்
உண்மையில் உடல் தனில் உறுப்புகள்
இருந்தும் முடமெனும் ஊனம் ஆனோம்
பசி எனில் பொறியினை நினைத்துமே
பயந்தது உண்மையில் எலிகள் அல்ல
விடுதலை பசியினை விற்றது நாமே விடுதலைப் புலிகள் அல்ல .
- கவிப்புயல் சரண்.