வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன், தான் வெளியிட்ட கருத்தை திரிவுபடுத்தி தெரிவித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெஷிலேட் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தெரிவித்த கருத்தினையே ஊடகம் ஒன்றுக்கு திரிவுபடுத்தி அவர் கூறியுள்ளதாக ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
”ஶ்ரீலங்காவின்” டெய்லிமிரர் ஆங்கில நாளேட்டில் திங்கட்கிழமை வெளியான ஒரு கட்டுரையில், மேற்படி ஶ்ரீலங்கா அரசின் பிரதிநிதிகள் குழுவின் ஒரு அங்கத்தவராக ஜெனீவாவில் பங்கேற்ற வடக்கு மாகாண ஆளுநரான கலாநிதி சுரேன் ராகவன் கருத்துத் தெரிவித்தார்.
அதில் ‘இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கையில் உள்ள சில விடயங்களை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது’ என ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அதிக பொறுப்புணர்ச்சி மற்றும் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் அவருடைய இரு முக்கிய அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியதாகவும் ஆளுநர் ராகவன் கூறியதாக டெய்லிமிரர் பத்திரிகையின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் வட. மாகாண ஆளுநரின் மேற்படி கூற்றுக்களை முற்றாக மறுக்கும் ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர், இந்த இரு கருத்துக்களில் எதுவும் உண்மையானதல்ல என கூறியுள்ளார்.
‘ஒன்றில், ஆளுநர் கூறியதை (டெய்லிமிரர்) பத்திரிகை தவறாக புரிந்திருக்க வேண்டும். அல்லது நான் கூறியதை ஆளுநர் தவறாக விளங்கியிருக்க வேண்டும். அல்லது தவறாக என்னை மேற்கோள் காட்டியிருக்க வேண்டும்’ என உயர்ஸ்தானிகர் விளக்கமளித்துள்ளார்.
அத்துடன், தொடர்ந்து கருத்துத் தெரிவித்த உயர்ஸ்தானிகர், மனித உரிமை பேரவைக்கு தான் சமர்பித்த எழுத்து மற்றும் வாய்மூல கூற்றுக்கள் விடயத்தில் தான் ஸ்திரமாக இருப்பதாகவும், அக்கூற்றுக்கள் ஶ்ரீலங்காவின் தற்போதைய நிலைமையை மிகச் சரியாக பிரதிபலிப்பதாக தான் நம்புவதாகவும் கூறினார்.
“இலங்கை அரசின் பிரதிநிதிகள் குழுவினருடன் மேற்கொண்ட கலந்துரையாடலில் நான் கூறிய கருத்துக்கள் திரிக்கப்பட்டுள்ளமை என்னை மிகவும் கவலை கொள்ளச் செய்துள்ளது” எனக் கூறிய உயர்ஸ்தானிகர், ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் கூறப்படும் விடயங்களை பாரிய விதத்தில் தவாறாக எடுத்துரைப்பு செய்யும் போக்கை ஶ்ரீலங்கா பத்திரிகைகள் தொடர்வதாகவும் சுட்டிக்காட்டினார்.
ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகராலயத்தின் அறிக்கையின் பிரதிகளை, அது பிரசுரிக்கப்படுவதற்கு முன் பேரவையின் 47 அங்கத்தவ நாடுகளினதும் வேண்டுகோளின் அடிப்படையில் ஶ்ரீலங்கா அரசுக்கும் பகிரப்பட்டுள்ளது. அறிக்கையை இறுதி மாற்றங்களுடன் பிரசுரிக்கப்படுவதற்கு முன் ஶ்ரீலங்கா அரசின் கருத்துக்கள் கவனத்திற்கொள்ளப்பட்டதுடன், கடந்த பெப்ரவரி மாதம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முக்கிய உயர் அதிகாரிகளைக் கொண்ட பிரிதிநிதிகள் குழுவொன்று ஶ்ரீலங்காவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது அவர்கள், ஶ்ரீலங்கா அரசின் பல உயரதிகாரிகளை சந்தித்து அறிக்கையின் விடயங்கள் தொடர்பாக மிக விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது என்று தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த உயர்ஸ்தானிகர், ஐ.நா. மனித உரிமை பேரவையின் 30/1 (2015) மற்றும் 34/1 (2017) தீர்மானங்களை செயற்படுத்த ஶ்ரீலங்கா அரசாங்கத்திற்கும் அதன் மக்களுக்கும் ஒத்துழைப்பு வழங்க தானும் தனது அதிகாரிகளும் மிகுந்த அர்ப்பணிப்புடன் இருப்பதாக உறுதியளித்தார். அத்துடன் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு தீர்மானத்தின் (40/1) போது, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஶ்ரீலங்கா அரசு வாக்களித்த சில விடயங்களை பூர்த்தியாக செயற்படுத்த மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டதையும் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், 2009 ஆண்டு முடிவுக்கு வந்த மோதல்களின் போது நடைபெற்ற பாரிய மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் மற்றும் நியாயம் வழங்குதல் தொடர்பான தமது கடப்பாடுகளை நிறைவேற்றுவது சம்பந்தப்பட்ட முன்னெடுப்புக்களில் இலங்கை அரசு மீள்கவனம் செலுத்த வேண்டும் என்றும், என்ன நடந்தது என்ற விடயம் தொடர்பான உண்மைகளை நிலைநிறுத்தவும், நல்லிணக்கத்தை மேம்படுத்தவும் தேவையான தமது பொறுப்புக்களை நிறைவேற்ற ஶ்ரீலங்கா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயர்ஸ்தானிகர் மேலும் வலியுறுத்தினார்.