நடப்பு மக்களவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் குறித்த சர்ச்சைகள் இன்னும் முடிவுக்கு வரவில்லை. டெல்லி தலைநகர்ப் பகுதியிலும் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் ஏராளமான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த அச்சத்தைப் போக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமையும் பொறுப்பும். ஆனால், நேரடியான பதிலைச் சொல்லாமல் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்குச் சென்று சரிபார்த்துக்கொள்ளலாம், இணையத்தில் சோதித்துக்கொள்ளலாம் என்று பதில் கூறிவருவது சரியான அணுகுமுறையா என்ற கேள்வியே எழுகிறது.
இணைய வசதி வாக்காளர்கள் அனைவருக்கும் இல்லை. வாக்காளர் பட்டியல் இருக்கும் அலுவலகம் தேடிச்சென்று சரிபார்த்துக்கொள்வது என்பது எல்லோருக்கும் இயலாத காரியம். கடந்த தேர்தலில் வாக்களித்த தனது பெயர் ஏன், எதற்காக நீக்கப்படுகிறது என்று வாக்காளர்களுக்குச் சந்தேகம் எழுவது இயற்கை. அடுத்தடுத்து தேர்தலில் தோல்வியைச் சந்தித்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து பெரிதாகக் குரல் எழுப்பிய அரசியல் கட்சிகள், இதில் அதிக கவனம் செலுத்தவில்லை. வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்டது குறித்து கூறுபவர்கள் சிறுபான்மையினரின் பெயர்கள் பக்கம் பக்கமாக நீக்கப்பட்டுவிட்டன என்கிறார்கள்.
ஏறக்குறைய 2.1 கோடி பெண் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. நடக்கவிருக்கும் தேர்தலில் வெற்றியைத் தீர்மானிப்பதில் பெண்களின் வாக்குகளே முக்கியப் பங்கு வகிக்கப்போகின்றன. இந்நிலையில், பெண் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதாக எழுந்திருக்கும் புகார்கள் எளிதாகப் புறந்தள்ளிவிடக்கூடியதல்ல. இதைத் தேர்தல் ஆணையம் மட்டுமல்ல; அந்தந்த மாநில அரசுகளும்கூட ஆய்வுசெய்து தெரிவிக்க வேண்டும். 100% வாக்களிப்பு அவசியம் என்ற பிரச்சாரம்செய்யும் தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலையும் 100% சரியாகத் தயாரிக்க வேண்டாமா?
மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, வாக்காளர் பட்டியலில் பெயர்ச் சேர்ப்பு, பொது விநியோக முறைக்கான ஆய்வு ஆகிய பணிகளில் அரசு ஊழியர்கள் முழு அக்கறையுடன் செய்கிறார்களா, மேல் அதிகாரிகள் அதைச் சரிபார்க்கிறார்களா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. அதை வீட்டில் இருப்பவர்களிடம் காட்டி ஒப்புதல் பெறுவதும் இல்லை. இந்தக் குறைகளையெல்லாம் தீர்க்க வேண்டும் என்ற அக்கறை அரசுக்கு இருக்க வேண்டும். இதற்கு முன்பு நடந்த பொதுத் தேர்தல்களின்போதெல்லாம் இந்த அளவுக்குச் சர்ச்சைகள் ஏற்பட்டது இல்லை. இது நல்லதல்ல. வாக்காளர் பட்டியல்கள் தயாரிப்பில் நம்பகத்தன்மையை ஏற்படுத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் முழுப் பொறுப்பு.