அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது, ரஷ்யாவுடன் ட்ரம்பின் பரப்புரைக் குழுவினருக்கு தொடர்பு இருந்தாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரிப்பதற்கான அதிகாரியாக எஃப்பிஐ அமைப்பின் முன்னாள் இயக்குநர் ராபர்ட் முல்லர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ட்ரம்புக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான தொடர்பு குறித்து அடுத்தடுத்து சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து அமெரிக்காவின் நீதித்துறை இந்த முடிவை எடுத்திருக்கிறது.
எஃப்.பி.ஐ. மற்றும் நாடாளுமன்றம் நடத்தி வரும் விசாரணையை முல்லர் மேற்பார்வை செய்வார் என தெரிய வந்துள்ளது. முல்லரின் நியமனத்துக்கு ஜனாதிபதி மாளிகை வரவேற்புத் தெரிவித்துள்ளது.
குற்றச்சாட்டுகளில் இருந்து தம்மை முல்லர் விடுவிப்பார் என்று நம்புவதாக ஜனாதிபதி ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டொனால்டு ட்ரம்பின் பரப்புரைக் குழுவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையேயான தொடர்பு குறித்து மத்திய புலனாய்வு அமைப்பு விசாரிக்கத் தொடங்கியதன் காரணமாகவே,
கடந்த வாரம் எஃப்பிஐ-ன் தலைவர் ஜேம்ஸ் கோமே நீக்கப்பட்டதாக ஜனநாயகக் கட்சியினர் குற்றம்சாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.