வடதமிழீழழ்: யாழ்ப்பாண குடாநாட்டின் குடிதண்ணீர் பிரச்சனைக்கு தீர்வாக, மாற்று குடிநீர் திட்டம் என்ற பெயரில், குடாநாட்டின் வளங்களை பயன்படுத்தி குடிநீரை பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது என ஶ்ரீலங்காவினால் நயமிக்கப்பட்ட வடக்கு ஆளுனர் அண்மையில் அறிவித்திருந்தார்.
இந்த திட்டம் குறித்த முழுமையான விபரங்கள் வெளியாகியுள்ளன.
யாழ் மாவட்டத்தில் ஆண்டுக்கு தற்போது 18.2 எம்.சி.எம் தண்ணீர் தேவை. குடாநாட்டின் நிலப்பரப்பு 1000 சதுரகிலோ மீற்றர். ஆண்டுதோறும் சராசரியாக 1250 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கிடைக்கிறது. இதன் மூலம் 1250 எம்.சி.எம் மழை கிடைக்கிறது. மாவட்டத்தின் தேவைக்கு அதிகமான நீர், மழை மூலம் கிடைக்கிறது. ஆனால் அதை தேக்கி வைக்க உரிய இடம் இருக்கவில்லை.
கிடைக்கின்ற 1250 எம்.சி.எம் மழைநீரில், 50 சதவீதம்- 625 எம்.சி.எம்- நீர் ஆவியாகிறது. நீரேரி, குளம், திறந்த கிணறுகள், நிலப்பரப்புக்களில் தேங்கி நின்றாலும், நாளடைவில் அது ஆவியாகிறது. எஞ்சிய 50 சதவீதத்தில், 20 சதவீதம்- 250 எம்.சி.எம்- நீரே நிலத்துக்குள் நேரடியாக செல்கிறது. மீதி 30 சதவீதம்- 375 எம்.சி.எம்- கடலுக்கு செல்கிறது.
ஆவியாகும் 50 சதவீதமான நீரிலிருந்த மாவட்டத்திற்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.குடாநாட்டிற்குள்ளெயே உப்பாறு நீரேரி (நாவற்குழி துருசு முடியும் இடத்தில் முடிவடையும்), வடமராட்சி நீரேரி (தொண்டைமானாறு துருசு முடியும் இடத்தில் முடிவடையும்) என இரண்டு நீரேரிகளும், மாவட்டத்திற்கு வெளியில் ஆணையிறவு நீரேரியுமாக மூன்று நீரேரிகள் உள்ளன.
வடமராட்சி நீரேரி 78 சதுர கிலோமீற்றர் பரப்பளவுடையது. மழைக்காலத்தில் மாத்திரம் 78 எம்.சி.எம் மழைநீர் இந்த நீரேரிக்கு நேரடியாக கிடைக்கும். நீரேரியை சூழவுள்ள 300 சதுரகிலோமீற்றர் பரப்பளவிலிருந்தும் மழைநீர் இந்த நீரேரியை வந்தடையும்.
உப்பாறு நீரேரி 26 சதுர கிலோமீற்றர் பரப்பளவுடையது. மழைக்காலத்தில் மாத்திரம் 26 எம்.சி.எம் மழைநீர் இந்த நீரேரிக்கு நேரடியாக கிடைக்கும். நீரேரியை சூழவுள்ள 220 சதுரகிலோமீற்றர் பரப்பளவிலிருந்தும் மழைநீர் இந்த நீரேரியை வந்தடையும்.
குடாநாட்டின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் “மாற்று குடிநீர் திட்டம்“ வடமராட்சி நீரேரியை மையப்படுத்தி முன்னெடுக்கப்படவுள்ளது. சாவகச்சேரியில் இருந்து பருத்தித்துறைக்கு செல்லும் வீதியில் ஆறாவது மைல் கல்லுக்கும் ஒன்பதாவது மைல் கல்லுக்கும் இடையிலான பிரதேசத்தில், உப்பாறு நீரேரியில், கப்பூதுவெளி, அந்தனத்திடல் பகுதியில் மிகப்பெரிய குளம் அமைக்கப்படவுள்ளது.
இந்த குளம் 6 சதுரகிலோமீற்றர் பரப்புடையதாகவும், 7.5 மீற்றர் உயரமுடையதாகவும், குளத்தின் அணைக்கப்பட்டு 4 மீற்றர் அகலமுடையதாகவும் இருக்கும். இதற்காக உப்பாறு நீரேரியில் குளம் அமைக்கப்படவுள்ள பிரதேசத்து அண்மையில் மண் எடுக்கப்படும்.
வடமராட்சி நீரேரியில் மழை காலத்தில் கிடைக்கும் நீர்,தொண்டமனாறு துருசு ஊடாக வெளியேற்றப்படும். பின்னர் நீரேரியில் நீர் சேமிக்கப்படும். சாவகச்சேரி- பருத்தித்துறை வீதிக்கும், வல்லைவெளிக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் வடமராட்சி நீரேரியில், அணை அமைக்கப்பட்டு துருசு புதிதாக நிறுவப்படும். வடமராட்சி நீரேரியில் இருந்து குழாய்கள் மூலமாக குளத்துக்கு நீர் இறைக்கப்படும். நீர் இறைக்கும் இயந்திர தொகுதி குளத்திற்கு அண்மையாக நிறுவப்படும்.
குளத்தில் 4.5 மீற்றர் உயரத்துக்கே இயந்திரம் ஊடாக நீர் இறைக்கப்படும். குளத்திற்கு நேரடியாக கிடைக்கும் மழைநீர் மூலம் மிகுதி நிரப்பப்படும். குளத்தில் சராசரியாக 24 எம்.சி.எம் நீர் சேமித்து வைக்கப்படும். நீரேரியிலிருந்து ஆவியாகும் நீரும், குளத்திலிருந்து ஆவியாகும் நீரும் சம அளவாக இருக்கும். நீரேரியின் பரந்த பிரதேசத்தில் இருந்து 1 சென்ரிமீற்றர் நீர் ஆவியானால், குளத்திலிருந்தும் அதேஅளவான நீரே ஆவியாகும். இதனால் குளத்தின் நீர் தொடர்ந்து பேணப்படும். இந்த நீரே சுத்திகரிக்கப்பட்டு, குடாநாட்டு நீர்த்தேவை பூர்த்தியாக்கப்படும்.
புதிதாக அமையும் குளத்தில் நன்னீர் மீன்பிடியை மையப்படுத்திய திட்டமொன்றும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
எனினும், இந்த திட்டம் ஆரம்பிக்கப்படுவதில் ஒரே சிக்கல்- வனஜீவராசிகள் திணைக்களம் இன்னும் அனுமதியளிக்கவில்லை. இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், நாகர்கோவில் பகுதியில் உள்ள மங்குரூஸ் தாவரங்கள் அழிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடமராட்சி நீரேரியுடன், நாகர்கோவில் பகுதி தொடுகையுறுகிறது. வடமராட்சி நீரேரி நன்னீராக மாற்றப்பட்டால், மங்குரூஸ் தாவரங்கள் அழிவடையும் என கருதப்படுகிறது. இந்த தாவரம் உப்பு நீரிலேயே வளரும் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் புத்தளத்திற்கு அடுத்ததாக நாகர்கோவிலிலேயே பெரிய கண்டல் அமைந்துள்ளது. மங்குரூஸ் (கண்டல்காடுகள்) காடுகளை அலையாத்தி (அலையின் வேகத்தை குறைப்பது) என்று தமிழில் அழைக்கிறார்கள். கண்டல் காடுகளை அழிப்பது மிகப்பெரிய சுற்றுசூழல் பாதிப்பை ஏற்படுத்துமென்பது குறிப்பிடத்தக்கது.