சித்திரவதைகளுக்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக ஆராய்வதற்கு ஐ.நா. உபகுழு ஶ்ரீலங்காவுக்கு முதலாவது பயணத்தை மேற்கொள்ளவுள்ளது.
அதன்படி குறித்த குழு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. அதனைத்தொடர்ந்து 12ஆம் திகதி வரை ஶ்ரீலங்காவில் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு பேர் கொண்ட ஐ.நா. உபகுழு இந்தப் பயணத்தின் போது, அரசாங்க அதிகாரிகளுடனும், சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு, சிவில் சமூக அமைப்புகளுடனும் கலந்துரையாடவுள்ளது.
மோல்டோவா நாட்டைச் சேர்ந்த விக்டர் சகாரியா தலைமையிலான இந்தக் குழுவில், மொறிசியசைச் சேர்ந்த சத்யபூசண் குப்தா டோமா, சைப்ரசைச் சேர்ந்த பெட்ரோஸ் மைக்கலிடேஸ், பிலிப்பைன்சை சேர்ந்த ஜூன் லொபீஸ் ஆகியோர் அடங்குகின்றனர்.
ஶ்ரீலங்காவில் சித்திரவதைக்கு எதிரான மற்றும் மோசமான நடத்தைக்கு எதிரான பாதுகாப்பு குறித்து இந்தக் குழு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.
இதற்கு முன்னர், பிரித்தானியா, காபோன், செனகல், கானா, பல்கேரியா ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்யவுள்ளதாக அறிவித்திருந்த இந்தக் குழு, தற்போது மேலதிகமாக ஶ்ரீலங்கா, ஆஜென்ரீனா, பலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கும் விஜயம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
அரசியல் கைதிகள், கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட தமிழர்கள் தொடர்பான விடயங்களில் ஶ்ரீலங்கா மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், ஶ்ரீலங்காவுக்கு கு விஜயம் செய்யவுள்ள குறித்த குழு, இந்த விடயங்கள் தொடர்பாக ஆராயும் என எதிர்பார்க்கப்படுகின்றது.