தென்னாசிய வட்டகையில் ஐ.நா. பொதுச் செயலாளரின் பிரதிநிதியாகப் பணியாற்ற அழைக்கப்படக்கூடிய பிரமுகர்கள் அணியில் ஒருவராகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனும் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்.
ஐ.நா. பொதுச் செயலாளரின் விசேட பிரதிநிதிகளாகப் பணியாற்றக் கூடிய முக்கிய பிரமுகர்களுக்கான இரண்டு நாள் கருத்தாடல் அமர்வு இன்றும் நாளையும் நேபாளத்தில் நடைபெறுகின்றது. அந்த அமர்வில் எம்.ஏ.சுமந்திரன் எம்.பியும் பங்குபற்றுகின்றார்.
தென்னாசிய வட்டகையில் திடீரெனப் பிணக்குகள் உருவாகின்றபோது, ஐ.நா. செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதிகளாக அவற்றைக் கையாளும் தகுதியுடையோரை ஐ.நா. செயலாளர் நாயகம் தேர்ந்தெடுத்துள்ளார்.
ஆப்கானில்தான், பங்களாதேஷ், பாகிஸ்தான், இந்தியா, நேபாளம், மாலைதீவு, இலங்கை, பூட்டான் உட்பட பத்து நாடுகளில் இருந்து சுமார் 25 பிரமுகர்களை ஐ.நா. செயலாளர் நாயகம் தமது பிரதிநிதி அந்தஸ்துடன் தெரிவு செய்துள்ளார். அவர்களுக்கான கருத்தாடல் அமர்வே தற்போது நேபாளத்தில் நடக்கின்றது.
இலங்கையிலிருந்து எம்.ஏ.சுமந்திரனும், முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் பிரசாத் காரியவாசமும் ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் தேவைப்படும் அவசர வேளையில் தமது பிரதிநிதியாகச் செயற்படுவதற்குரிய பிரமுகர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மனித உரிமைகள் செயற்பாட்டாளரான ராதிகா குமாரசுவாமியும் இந்தக் கருத்தாடல் அமர்வில் பங்குபற்றுகின்றார்.
ஐ.நா. செயலாளர் நாயகத்தால் இப்பொறுப்புக்குப் பெயர் குறிப்பிட்டுத் தெரிவு செய்யப்பட்டோரில் பெரும்பாலானோர் இராஜதந்திரிகளும், சர்வதேச சமூக செயற்பாட்டாளர்களும் ஆவர்.
சுமந்திரன் எம்.பியும், நேபாள தேச எம்.பி. ஒருவருமே இப்பொறுப்புக்கு அழைக்கப்பட்ட ஆக இரண்டு அரசியல்வாதிகள் என்பது குறிப்பிடத்தக்கது