தென்தமிழீழம்: கல்முனை வடக்கு தமிழ் பிரதேச உபசெயலகத்தை ஒரு முழுச்செயலகமாக மாற்றித்தருமாறு கோரி தமிழ் மக்கள் நீண்டகாலமாக விடுத்துவரும் கோரிக்கையை வலியுறுத்தி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கல்முனையில் நடைபெறவிருக்கும் நடைபவனியில் உண்மையையும் நியாயத்தையும் சமாதானத்தையும் விரும்பும் சகல மக்களையும் கலந்துகொள்ளுமாறு வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி. வி விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த நடைபவனியில் தானும் பங்கேற்ப இருப்பதாக தெரிவித்துள்ள முன்னாள் முதலமைச்சர் இதுதொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச உபசெயலகத்தை ஒரு முழுச்செயலகமாக மாற்ற 1993ல் இருந்து முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் இன்றுவரை அது ஒரு வெற்றியளிக்காத முயற்சியாகவே இருந்து வந்துள்ளது.
முக்கியமாகக் காணி மற்றும் நிதி அதிகாரமற்ற ஒரு உப பிரதேச செயலகமாகவே 1989ல் இருந்து இது இயங்கி வருகின்றது. இது கல்முனை தமிழ்ச் சமூகத்தைப் பாரியளவில் பாதிக்கின்றது என்பதை அண்மையில் கல்முனை சென்ற போது அறிந்து கொண்டேன். இது பற்றி சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கமுடியும். ஆனால் சூழல் அதற்கு அனுசரணை வழங்குவதாகத் தெரியவில்லை.
பொதுவாக வழக்குகள் இழுத்தடித்துச் செல்வதையும் நாம் கணக்கில் எடுக்க வேண்டும். இது முற்றிலும் சுயநலம் மிக்க பலம் மிக்க அரசியல் வாதிகள் சிலரின் பக்கச் சார்பான அரசியல் நடவடிக்கைகளின் பிரதிபலிப்பே ஆகும். ஆகவே இதற்கு அரசியல் ரீதியான செயற்பாடுகளே அவசியம் அவர் தெரிவித்தார்.
ஆகவே சகலரும் இந்த நியாயந் தேடும் நடைபவனியில் பங்குபற்றி நியாயத்தையும் இன ஒற்றுமையையும் கொண்டுவர ஒன்றுபட வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கின்றார்.