கிளிநொச்சி பளை பகுதியில் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரும், பொலிஸாரும் மீளப்பெறப்பட்டுள்ள நிலையில் அங்கு நிலவிய பதற்றமான சூழ்நிலை தணிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏ9 வீதியில் கடமையில் ஈடுபட்டிருந்த 119 நடமாடும் பொலிஸார் மீது நேற்று நள்ளிரவு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் அசாதாரண சூழ்நிலை நிலவியிருந்தது.
இதன்போது குறித்த பகுதியில் தடயவியல் பொலிஸாரும் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்ததுடன், துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட ஆயுதத்தின் பாகம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
மோப்ப நாய்களை கொண்டு பொலிஸார் தேடுதல் பணிகளில் ஈடுபட்ட நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் அப்பகுதியிலிருந்து வாகனங்களில் தப்பிச் சென்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே தற்போது குறித்த பகுதியிலிருந்து இராணுவத்தினரும், பொலிஸாரும் மீளப்பெறப்பட்டுள்ளமையால் சுமூக நிலை நிலவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நள்ளிரவு வேளையில் சேவையில் ஈடுபட்டிருந்த நடமாடும் பொலிஸாரின் வாகனத்தை இலக்கு வைத்து சூடு நடத்தப்பட்டுள்ளதுடன் தாக்குதலில் வாகனம் சிறியளவில் சேதமடைந்த போதிலும் அதிகாரிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.