முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று(18) இலங்கையிலும் பல்வேறு புலம்பெயர் நாடுகளிலும் அனுஷ்டிக்கப்பட்டன.
இந்நிலையில் தமிழின படுகொலைக்கு நீதிகேட்டு ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பிய பாராளுமன்ற முன்றலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று(18) காலை 9.00 மணி தொடக்கம் 5.00 மணி வரை அனுஷ்டிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் உணர்வுடன் கலந்து கொண்டிருந்தனர்.
பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த நினைவுக் கல்லின் முன்னிலையில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செய்யப்பட்டதுடன் படுகொலை நினைவு சுமந்த பதாதைகளைத் தாங்கிய வண்ணம் சிறுவர் முதல் பெரியவர் வரை மிகவும் உணர்வுடன் அனுஷ்டித்தனர்.
இலங்கை அரசினால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்ற தமிழின அழிப்பை தடுத்து நிறுத்தி, நீதியைப் பெற்றுத் தரவும், அனைத்துலக விசாரணையை முன்னெடுக்கவும் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தரக்கோரியும் பல கோரிக்கைகள் உள்ளடங்கிய மகஜர் ஒன்றும் ஐரோப்பிய ஆலோசனைச் சபையின் பொதுச் செயலரிடம் கையளிக்கப்பட்டது.
இறுதியில் “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற முழக்கத்துடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.