தொடர் குண்டு வெடிப்பையடுத்து ஜனாதிபதியின் விசேட வேண்டுகோள்!
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்பினையடுத்து ஜனாதிபதி பொதுமக்களுக்கு விசேட அறிக்கையொன்றினை விடுத்துள்ளார். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தினால் தான் ஆழ்ந்த கவலையில் ஆழ்ந்துள்ளதாகவும், எதிர்பாராத விதமாக இடம்பெற்ற இந்த சம்பம் தொடர்பான விசாரணைகளை முப்படையினர், காவற்துறை விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த விசாரணைகளுக்கு பொது மக்கள் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் விசாரணை முன்னெடுக்கப்படும் கால கட்டத்தில் பொறுமை மற்றும் அமைதி காக்குமாறும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.
தொடர் குண்டுவெடிப்பை வன்மையாக கண்டித்த பிரதமர்!
நாட்டில் இன்று பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களை வன்மையாக கண்டிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அத்துடன் நாட்டின் பாதுகாப்பினை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டு மக்கள் பொறுமையுடனும், அமைதியுடனும் செயற்படுமாறும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். மேலும் வதந்திகளை கேட்டு பதற்றமடைய வேண்டாம் எனவும் ரணில் விக்ரமசிங்க அந்த டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
மஹிந்த கொச்சிக்கடைக்கு சென்றார் – அனுதாபங்களை தெரிவித்தார்…
எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலையத்திற்கு சென்றுள்ளார். கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவ இடத்திற்கு சென்ற எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.
கொச்சிக்கடை தேவாலய வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தான் பிராத்தனை செய்வதாகவும், பொது மக்கள் மிகுந்த அவதானத்துடனும் செயற்பட வேண்டும் எனவும் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்ய எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். கொழும்பு உட்பட ஏனைய பிரசேதங்களில் இடம் பெற்றுள்ள குண்டு வெடிப்பு சம்பவம் வன்மையான கண்டிக்கத்தக்கது.
புனிதமான தேவாலயங்களை மையப்படுத்தி வன்முறை சம்பவங்கள் இடம் பெற்றுள்ளமையானது கொடூரமான நினைவுகளை மீள் திருப்பியுள்ளன. தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் இதனூடாக ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் அனைத்து மக்களும் பொறுப்புடனும், ஒத்துழைப்புடனும் செயற்பட வேண்டும். இக்கட்டான நிலையில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் அனைவரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ ஷ கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்தன, மற்றும் பிரச்ச ரணதுங்க ஆகியோரும் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
பொய்யான வதந்திகளை நம்ப வேண்டாம் சபாநாயகர்
இன்றைய வெடிப்பு சம்பவங்கள் குறித்து சபாநாயகர் கருஜய சூரிய வெளியிட்டுள்ள தனது விஷேட செய்தியில் பல்வேறு விடயங்களை சுட்டிகாட்டியுள்ளார். இன்றைய தினம் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தினால் மெற்கொள்ளக் கூடிய அனைத்து நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு இது தொடரப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டள்ளன.
மற்றும் இந்த தேவாலயங்களை குறிவைத்தும் , பொது மக்கள் அதிகம் நடமாடக் கூடிய முக்கிய இடங்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த வெடிப்பச் சம்பவம் தொடர்பில் அனைத்து மக்களும் சோகத்தில் உள்ளனர். இந்த சம்பவங்கள் குறித்து வெளியிடப்படுகின்ற பொய்யான வதந்திகளை நம்பாமல் அனைவரும் அமைதியாக செயற்பட வேண்டும்.
இந்த திட்டமிட்ட சதித்திட்டக்காரர்களையும் அவர்களின் நோக்கம் குறித்தும் அறிந்துக் கொள்வதற்காக அனைவரும் விசாரணைகளை மேற்கொள்ள ஒத்துழைப்பை வழங்கவேண்டும். நாட்டு மக்கள் அனைவரும் அமைதியாக செயற்படுவதுடன், நாட்டில் ஏற்பட்டள்ள சிக்கல் நிலைமை குறித்துஅவதானமாகவும் இருக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
கார்தினல் ரஞ்சித் மெல்கம் ஆண்டகையின் கோரிக்கை
நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள இந்த வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் கார்தினல் ரஞ்சித் மெல்கம் ஆண்டகை யாரும் சட்டம் ஒழுங்கை கையிலெடுக்க முயற்சிக்கக் கூடாது. எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கு பாதுகாப்பு துறைக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் இது குறித்து பொது மக்கள் பதற்றமடையாமல் விழிப்புடன் செயற்பட வேண்டும்.
அத்தோடு தற்போது இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் படுகாயமடைந்தவர்களுக்கு இரத்தம் தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே இயலுமானவரை அவர்களுக்கு இரத்ததானம் செய்யுமாறு கோருகின்றேன்.
அத்தோடு விடுமுறையிலுள்ள வைத்தியர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி சேவைக்கு திரும்புமாறும் வேண்டுகோள் விடுக்கின்றேன், எனத் தெரிவித்துள்ளார்.
இன்றைய குண்டுவெடிக்கு சம்பங்களை வன்மையாகக் கண்டிக்கிறோம் – கலாநிதி டானியல் தியாகராஜா
பேராயர் தென் இந்திய திருச்சபை
இன்று உலகமெங்கும் கிறிஸ்தவர்கள் கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்பெற்றெழுந்ததைக் கொண்டாடும் ஈஸ்டர் தினமாகும். இதனூடாக மானுட வாழ்வின் மரணங்களிலிருந்து மக்களுக்கு எப்பொழுதும் விடுதலை உண்டு என்ற உண்மை அனைவருக்கும் கொடுக்கப்படுகிறது.
ஆனால், இந்தப் புனிதமான நாளில் குண்டு வெடிப்பு சம்பவங்கள், அதிலும் குறிப்பாக மூன்று தேவாலயங்களில், இவை மேற்கொள்ளப்பட்டமை கோழைத்தனமான ஒரு செயலாகும். மூன்று ஹோட்டல்களிலும் குண்டு வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை 100 பேருக்கு மேற்பட்டோர் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கிறி;ஸ்வர்கள் கொண்டாடிய குருத்தோலைத் திருநாளாகும். இந்த நாளில் சில விசமிகள் அனுராதபுரத்திலுள்ள மெதடிஸ்த தேவாலயத்தைக் குறிவைத்துக் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுமிருந்தது.
இவற்றைப் பார்க்கும்போது பன்மைத்தன்மை நிறைந்த சிறீலங்கா தேசத்தில் அந்த சிறப்பு அம்சத்தைக் குலைத்து, மதக் காழ்ப்புணர்ச்சியைத் தோற்றுவித்து அதனூடான எமது அழகிய நாட்டைச் சின்னாபின்னமாக்க சில குழுவினர் அரசியல் காரணங்களுக்காகவோ அல்லது மதக் காரணங்களுக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அதில் இறங்;கியுள்ளனர் என்பது தெரிகின்றது. இந்தக் கொடிய சம்பவத்தையும் அவற்றை மேற்கொண்டவர்களையும ;தென் இந்திய திருச்சபை யாழ்ப்பாண பேராயம் வன்மையாகக் கண்டிக்கிறது.