இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தியது தற்கொலை குண்டுதாரிகள் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
வீடு சுற்றி வளைப்பு
இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் தாக்குதலை நடத்திய சந்தேகநபர்கள் தங்கியிருந்ததாக கூறப்படும் வீடொன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகத்தின் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
பாணந்துறை பகுதியில் இன்று மாலை இந்த வீடு சுற்றி வளைக்கப்பட்டதாகவும், குறித்த பகுதியில் தற்போது சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.
இலங்கையில் இன்று இடம்பெற்ற வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
இந்த சந்தேகநபர்கள் அனைவரும் கொழும்பு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 10 பேரை குற்றப் புலனாய்வு பிரிவினர் தமது பொறுப்பிற்கு எடுத்து விசாரணைகளை நடத்தி வருவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியது.
தீ வைப்பு
பாணந்துறை பண்டாரகாம பகுதியில் இரண்டு வர்த்தக நிதியகங்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
வெடிகுண்டுகள்
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புடன் தொடர்புடைய வெடிகுண்டுகளை கொண்டு சென்றதாக கூறப்படும் சிறிய ரக வேன் ஒன்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் இன்று மாலை இந்த வேன் கைப்பற்றப்பட்டதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
வேனின் ஓட்டுநரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் போலீஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
2 வாரங்களில் அறிக்கை
இலங்கையில் இடம்பெற்ற தேசிய துன்பியல் சம்பவத்திற்கான அடிப்படைக் காரணிகளையும், அதன் பின்னணியையும் கண்டறிவதற்கு விசேஷ குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலாளர் உதய ஆர் செனவிரத்னவினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற நீதியரசர் உள்ளிட்ட விசேட குழுவொன்றே நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.
இந்த விஷயம் தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 இந்தியர்கள்
இந்த குண்டு வெடிப்பில் மூன்று இந்தியர்கள் பலியாகி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியர்கள் மூன்று பேர் இறந்துள்ளதாக இந்திய தூதரகத்திடம் இலங்கை தேசிய மருத்துவமனை கூறி உள்ளது. லோகாஷினி, நாராயண் சந்திரசேகர் மற்றும் ரமேஷ் ஆகியோர் இறந்துள்ளனர்.” என்றுள்ளார்.
இன்றைய குண்டுவெடிப்புகளில் இதுவரை, மூன்று காவல் அதிகாரிகள் உள்பட 207 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 450 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பு தாக்குதல்கள் தொடர்பாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவான் விஜேவர்தன, ஊடக நிறுவனங்களின் பிரதம அதிகாரிகளை சந்தித்தார்.
“இந்த குண்டு வெடிப்புகளில் பெரும்பாலானவை தற்கொலை தாக்குதல்கள். இது தொடர்பாக இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.” என்றார்.
அவசர காலசட்டம்
இலங்கையில் அவசரகால சட்டத்தை அமல்படுத்துவதற்கான தீர்மானம் எதுவும் இதுவரை எட்டப்படவில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சகத்தில் இன்று மாலை ஊடக நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவசரகால சட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அவசரகால சட்டத்தை அமல்படுத்துவதற்கான தீர்மானங்கள் இதுவரை எட்டப்படவில்லை என குறிப்பிட்ட அவர், எதிர்வரும் நாட்களை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் குறித்து கலந்துரையாடப்படும் எனவும் கூறினார்.
உதவிடுங்கள்
இலங்கை இஸ்லாமிய மன்றம் இந்த தாக்குதல்களை கண்டித்துள்ளது.
இலங்கை இஸ்லாமிய மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதம் மற்றும் இன பிரிவினையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல்களுக்கு எங்கள் கண்டனங்களையும், உயிரிழந்தவர்களுக்கு எங்கள் அஞ்சலிகளையும் தெரிவிக்கிறோம். மக்களின் இயல்பு வாழ்க்கையை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது..
இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, கொடிய குற்றங்கள் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் அரசாங்கத்தை கோரி உள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய இஸ்லாமிய சமூகத்திற்கு இலங்கை இஸ்லாமிய மன்றம் அழைப்புவிடுத்துள்ளது.
இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கண்டனம்
இலங்கையில் இன்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவிக்கின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் கொழும்பிலுள்ள பிரபல நட்சத்திர விடுதிகள் சில இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதலுடன் ஒரு விதமான ஒருங்கிணைக்கப்பட்ட பின்னணியொன்று இருப்பதனை அவதானிக்க முடிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்தவ மக்களின் முக்கிய சமய நிகழ்வின் போது, இடம்பெற்ற இந்த சம்பவத்தை எண்ணி வருந்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார்.
இன நல்லிணக்கத்தையும், நாட்டின் ஸ்திரத்தன்மையையும் சீர்குலைக்கும் வகையில் செயற்படும் தீயசக்திகளின் நோக்கங்களுக்கு துணை போகாமல், அமைதியை பேணி, நாட்டின் சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்ட அனைவரும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் கேட்டுக்கொண்டுள்ளார்.
எங்களை முன்பே எச்சரித்தனர்
ஒரு வாரத்திற்கு முன்பு எங்கள் அமைச்சகத்தின் பாதுகாப்பு பிரிவிற்கு கொழும்பு நகரத்தை தாக்கிட தற்கொலைதாரிகள் திட்டமிடுவதாக தகவல்கள் கிடைத்தன என்று தேசிய ஒருமைப்பாடு, மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவலகள் அமைச்சர் மனோ கணேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கண்டனம்
ஐ.நா பொதுச் செயலாளர் ஆண்டனியோ இலங்கை குண்டுவெடிப்புகளை கண்டித்துள்ளார்.
“கிறிஸ்தவர்களின் புனித நாளான ஈஸ்டர் அன்று நடத்தப்பட்டுள்ள இந்த கொடிய தாக்குதல் கண்டனத்திற்குரியது. இலங்கைக்கு துணையாக ஐ.நா இருக்கும். புனித இடங்களை மதிக்க வேண்டும்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
இதுவரை 207 பேர் மரணம்
ராணுவம், காவல்துறை மற்றும் விமானப்படை ஆகியற்றின ஊடக பொறுப்பாளர்கள் இன்று மாலை ஊடகங்களை சந்தித்தனர்.
“ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவத்தினர் கொழும்பில் மட்டும் குவிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவு உள்ளதால் விமானப் பயணம் மேற்கொள்பவர்கள் விமானச் சீட்டை காண்பித்து தங்கள் பயணத்தை மேற்கொள்ளலாம்” என்றனர்.
“இதுவரை 207 பேர் மரணித்துள்ளனர்; 405 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கொழும்பு தேசிய வைத்திய சாலையில் 66 சடலங்கள் உள்ளன. அங்கு காயமடைந்த 260 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நீர் கொழும்பில் 104 சடலங்கள் உள்ளன. அங்கு 100 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கழுபோவிலாவில் உள்ள வைத்திய சாலையில் 2 சடலங்கள் உள்ளன, 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மட்டகளப்பு வைத்திய சாலையில் 28 சடலங்கள் உள்ளன. அங்கு 51 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரகமாவில் 7 சடலங்கள் உள்ளன. 32 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
இந்த தாக்குதல்களில் பிரிட்டனை சேர்ந்தவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுவதாகவும், ஆனால் அதுகுறித்த மேலதிக தகவல்கள் ஏதும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று இலங்கைக்கான பிரிட்டனின் தூதர் ஜேம்ஸ் டாரிஸ் தெரிவித்துள்ளார்.
முன்பே தகவல்
அவர், “இந்த தாக்குதல் குறித்து முன்பே உளவு அமைப்புகளுக்கு தகவல்கள் வந்தன. ஆனால், சுதாரிப்பதற்குள் இந்த தாக்குதல்கள் நடந்தேறிவிட்டன. இது வெளிநாட்டிலிருந்து திட்டமிடப்பட்ட தாக்குதல்கள். இனவாத பிரச்சனை ஏற்பட வேண்டும் என்று எதிர்பார்த்தே இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன.” என்றார்.
தாக்குதல்கள் தொடரலாம் என பொதுமக்களிடையே அச்சம் நிலவுகிறது. அதை நாம் புறந்தள்ள முடியாது. மேலும் தாக்குதல்கள் நடத்த வாய்ப்புள்ளது என்றார்.
பாடசாலைகள், பல்கலைக்கழகங்களுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
விசேஷ ஊடக பிரிவு
இந்த தாக்குதல்களை தொடர்ந்து விசேஷ ஊடக பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் போது இருந்த இந்த அமைப்பானது 2009ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது. இப்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்
உளவுத் துறை இந்த தாக்குதல் குறித்து முன்பே வந்த தகவல்களில் ஒருவரின் பெயரை குறிப்பிடப்பட்டு இருந்தது. அவரின் பெயரும், ஷாங்ரி லா நட்சத்திர விடுதியில் இறந்தவரின் பெயரும் ஒன்றாக உள்ளது என்றும் அமைச்சர் ரூவான் விஜேவர்தன ஊடகவியலாளர்ஜ சந்திப்பில் கூறினார்.
கொழும்புவின் தெமடகொட பகுதியில் ஒரு வீட்டில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின்போது, குண்டு வெடித்ததில் மூன்று காவல் அதிகாரிகள் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து உடனடியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.
இலங்கையில் இன்று காலை ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததை தொடர்ந்து மதியம் இரண்டு மணியளவில், தெகிவலை மற்றும் தெமடகொட மேலும் ஆகிய இடங்களில் மேலும் இரு குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன.
தெகிவலையில் உள்ள உயிரியல் பூங்காவிற்கு எதிரே உள்ள கட்டடம் ஒன்றில் இந்த குண்டு வெடித்துள்ளதாக காவல்துறையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து உயிரியல் பூங்கா மூடப்பட்டது.
இந்நிலையில் கொச்சிகடை பகுதிக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வந்திருக்கிறார். ”நாட்டின் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக கவனம் செலுத்த வேண்டிய தருணமிது” என ரணில் தெரிவித்திருக்கிறார்.
யாழ்பாணத்தில் உள்ள யாழ் புனித மரியன்னை உள்ளிட்ட தேவாலயங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
3:30 PM கிரிக்கெட் வீரர்கள் சச்சின் மற்றும் சங்கங்கரா கண்டனம்
இலங்கையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சச்சின் டென்டுல்கர், வெறுப்பும் வன்முறையும், அன்பு மற்றும் இரக்கத்தை வெற்றி கொள்ளாது என்று பதிவிட்டுள்ளார்.
இலங்கை தாக்குதல் சம்பவம் தனக்க மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகவும், இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தன்னுடைய இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாக ட்வீட் செய்துள்ளார்.
3:15 PM ‘பயங்கரவாத குழுக்களின் செயல்பாட்டை தடுக்க நடவடிக்கை’
நாட்டில் பயங்கரவாத குழுக்களின் செயல்பாட்டை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் ருவண் விஜேவர்தன தெரிவித்துள்ளார். தற்போது சிஐடி, காவல்துறை மற்றும் ராணுவப்படைகள் இது தொடர்பாக விசாரித்து வருவதாகவும், இந்த தாக்குதலில் ஈடுபட்வர்கள் அவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், விரைவில் காவலில் எடுக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
சமூக ஊடகங்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது என்றும் மாலை ஆறு மணியில் இருந்து ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
3:10 PM இலங்கையில் சமூக ஊடகங்கள் முடக்கம்
தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து இலங்கையில் முக்கிய சமூக ஊடகங்களை அந்நாட்டு அரசு முடக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், செய்திகளை அனுப்புவதும், பெறுவதும் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாக தெரியவில்லை.
3:00 PM போலீஸ் ஊரடங்கு உத்தரவு அறிவிப்பு
இலங்கையில் போலீஸ் ஊரடங்கு உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
காலை என்ன நடந்தது?
இலங்கையில் கொழும்பு உள்ளிட்ட ஆறு இடங்களில் ஞாயிறு காலை 9 மணியளவில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதுவரை இதில் குறைந்தது 187 பேர் வரை உயிரிழந்திருப்பதாக கொழும்பு தேசிய மருத்துவமனை பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். 471க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்தபின் அங்கு நடத்தப்படும் மிகப்பெரிய தாக்குதலாக இன்றைய தாக்குதல் கருதப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, ஷாங்ரி லா நட்சத்திர விடுதி, கிங்ஸ்பரி நட்சத்திர விடுதி, சின்னமான் கிராண்ட் நட்சத்திர விடுதி, மட்டக்களப்பு ஆகிய ஆறு இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
2:20 PM ‘சதிகாரர்களை அரசாங்கம் உடனடியாக அடையாளம் காண வேண்டும்’
நாட்டின் அமைதி, இன ஐக்கியத்தை பதற்றத்திற்குள்ளாக்கும் வகையில் கொழும்பில் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ள அமைச்சர் ரிஷாத்பதியுதீன், அமைதிக்கு எதிரான சதிகாரர்களை அரசாங்கம் உடனடியாக அடையாளம் காண வேண்டுமென தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் நடத்தப்பட்ட சம காலத்தாக்குதல்கள் மற்றும் மட்டக்களப்பு தேவாலயத் தாக்குதல்கள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள கண்டனச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது,
முப்பது ஆண்டு யுத்தம் மிகப்பெறுமதியான விலைகொடுத்து முடித்து வைக்கப்பட்டது. இதற்குப் பின்னரான ஒரு தசாப்த கால நிசப்தத்தை தகர்க்கும் வகையில் இத்தாக்குதல்கள் உள்ளன.
குறிப்பாக கிறிஸ்தவ சகோதரர்கள் புனித ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடுகையில் தேவாலயங்கள் வன்முறைக்குள்ளானமை பெரும் அதிர்ச்சியளிக்கிறது. மதச் சுதந்திரங்களைப் பறித்து,மத உணர்வுகளைக் காயப்படுத்தியுள்ள இந்தக் கயவர்களை எவ்விதக் கருணையும் காட்டாது தண்டிக்க வேண்டும். எந்த நோக்கங்களையும் அடைந்து கொள்ள வன்முறைகள் வழிமுறையாகப் பின்பற்றப்படக் கூடாது.
இந்நெருக்கடியான நிலையில் சில விஷமிகள் சமூக முறுகல்களைத் தூண்டிவிட முனைவது வேதனையளிக்கிறது.
ஏப்ரல் 11 ஆம் தேதி இணையங்களில் வெளியான கடிதத்தை வைத்து முஸ்லிம் அமைப்புக்களில் முடிச்சுப்போடும் முயற்சிகளும் நிறுத்தப்பட வேண்டும்.
புலனாய்வுத்துறை விசாரணைகளை நடத்தி சூத்திரதாரிகளைக் கண்டறியும் வரை சட்டத்தை எவரும் கையிலெடுக்கக் கூடாது என்று கூறியிருக்கிறார்.
இந்த வன்முறையில் உயிரிழந்த இறைவிசுவாசுகளின் சகல குடும்பத்தினர், உறவினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதாகவும் அவர் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
2:00 PM – குண்டுவெடிப்பில் காயமடைந்த சீன நாட்டவர்கள்
இலங்கையில் நடந்த குண்டுவெடிப்புகளில், பல சீன நாட்டவர்கள் காயமடைந்துள்ளதாக சீன அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
ஆனால், அவர்கள் தற்போது நிலையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1:40 PM – ரத்தம் கொடுக்க குவியும் மக்கள்
குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு ரத்தம் தேவை என்று கோரியதை அடுத்து நூற்றுக்கணக்கான மக்கள் ரத்தம் கொடுக்க மருத்துவமனையில் திரண்டுள்ளனர்.
பிபிசியிடம் பேசிய கொழும்புவை சேர்ந்த உஸ்மான் அலி, “இனம், மதம் ஆகிய பாகுபாடுகளை கடந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் நூற்றுக்கணக்கான மக்கள் ரத்தம் கொடுக்க திரண்டு வருகின்றனர்” என்றார்.
1:30 PM – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கண்டனம்
1:05PM – இந்திய பிரதமர் மோதி கண்டனம்
இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு இந்திய பிரதமர் மோதி கடும் கண்டனம் தெரிவிப்பதாக ட்வீட் செய்துள்ளார். இலங்கை மக்களோடு இந்தியா துணை நிற்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
12:59 PM –முப்படைகளின் தளபதிகளோடு பிரதமர் சந்திப்பு
தாக்குதலுக்கு யார் பொறுப்பாக இருக்கலாம் என்பது குறித்த தகவல்களை மக்கள் பரப்ப வேண்டாம் என்று இலங்கை அமைச்சர் ஹர்ஷா டி சில்வா கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், இலங்கை முப்படைகளின் தளபதிகளை, அந்நாட்டு பிரதமர் சந்தித்துள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்று நேரத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
12:50 PM– ஈஸ்டர் பிரார்த்தனைகள் ரத்து
தேவாலயங்களில் தாக்குதல் நடந்துள்ளதை தொடர்ந்து மாலை நடைபெறவிருந்த பிரார்த்தனைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, கொழும்பு பாதிரியார் அறிக்கை விடுத்துள்ளார்.
12:46 PM– கொழும்பு தேசிய மருத்துவமனை நிலவரம்
கொழும்பு தேசிய மருத்துவமனையில் 45 பேர் உயிரிழந்திருப்பதாக அம்மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதில் ஒன்பது பேர் வெளிநாட்டவர்கள்.
12:36 PM – நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல்’
கொழும்புவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் தாக்குதல் நடந்த இடத்தில் பிபிசியின் சிங்கள சேவையின் செய்தியாளர் அசாம் அமீன் உள்ளார்.
அவர் கூறுகையில், “அமைதியாக இருந்த ஞாயிற்றுக்கிழமை காலை வேலையில், அனைவரும் ஈஸ்டர் திருநாள் பிரார்த்தனைகளில் இருந்தனர். திடீரென்று இந்த தாக்குதல் நடந்தது.
தேவாலயத்தில் உள்ள சில பாதிரியார்களிடம் நான் பேசிய போது, அவர்கள் மிகவும் அதிர்ச்சியில் இருந்தார்கள். புலனாய்வு போலீஸாரும் அதிர்ச்சியில் உள்ளனர். இது ஒரு தன்கு திட்டமிடப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதலாகும்.
தேவாலயத்தின் பாதுகாப்பு அதிகாரியிடம் பேசியபோது, அவரும் அதிர்ச்சியில் இருந்தார். இதற்கு பின்னால் யார் இருக்கிறார் என்பதை தற்போது கூற முடியாது.
2009ஆம் ஆண்டுக்கு பிறகு, இவ்வாறான ஒரு சம்பவத்தை இலங்கை பார்த்ததில்லை. இலங்கை மக்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
அனைத்து முக்கிய நகரங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது ”
இந்த சம்பவம் தொடர்பாக ட்வீட் செய்துள்ள இலங்கை நிதியமைச்சர் மங்கள சமரவீர, இது நாட்டில் குழப்பத்தை உண்டாக்க எடுக்கப்பட்ட முயற்சி என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இது போன்ற சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க நாம் அனைவரும் ஒன்றாக நிற்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பு பொது மருத்துவமனை, கொழும்பு கலுபோவில மருத்துவமனை, மட்டக்களப்பு மருத்துவமனை மற்றும் நீர் கொழும்பு ஆதார மருத்துவமனை ஆகிய இடங்களில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொழும்புவில் குறைந்தது 47 பேர் உயிரிழந்திருப்பதாகவும், அந்தப் பகுதியில் இருக்கும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நீர்கொழும்புவில் கட்டுபிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயத்தில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 50 பேர் வரை உயிரிழந்தக்கலாம் என்று அங்கிருக்கும் காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பில் இதுவரை 35 பேர் இறந்துள்ளனர். குண்டுவெடிப்பு நடந்தபோது சீயோன் தேவாலயத்தில் 33 பேர் உயிரிழந்தனர். பின்னர் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் இறந்தனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஒரு மோட்டார் சைக்களில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்ததால், அருகில் இருந்த பிற மோட்டார் சைக்கிள்களில் இருந்த பெட்ரோல் மூலம் பாதிப்பு அதிகமானதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்துள்ள பலரும் சிகிச்சைக்காக கொழும்பு மருத்துவமனை, மட்டக்களப்பு போதனா மருத்துவமனை, நீர்கொழும்பு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என இலங்கையின் போலீஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு நட்சத்திர விடுதிகளில் நிகழ்ந்த வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் வெளிநாட்டவர்களும் அடங்குவார்கள்.
குண்டுவெடிப்பு குறித்த விசாரணைக்கு அனைத்து பாதுகாப்புப் பிரிவு அமைப்புகளும் களமிறக்கப்பட்டுள்ளதாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
குண்டுவெடிப்பு தொடர்பாக பகிரப்படும் போலிச் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று அவர் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பாதுகாப்பு குறித்த அவசரக் கூட்டம் கூட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளையும் நாளை மறுதினமும் இலங்கையில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மூடப்படும் என்று இலங்கை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவாசம் தெரிவித்துள்ளார்.
இந்த குண்டு வெடிப்பு சம்பவமானது, மனிதாபிமானமற்ற செயல் என முன்னாள் ஜனாதிபதியும், எதிர்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். கொழும்பு கொச்சிகடை பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தை நேரில் சென்று பார்வையிட்டதை அடுத்து, ஊடகங்களுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டார்.
காயமடைந்த பலரும் மருத்தவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி தேவாலயங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடங்களில் மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அதே போல குண்டு செயலிழக்கும் பிரிவினர் மற்றும் விசேஷ அதிரடிப்படையினர் உள்ளிட்ட சில பாதுகாப்பு பிரிவுகளும் சம்பவ இடத்தை பார்வையிட்டு வருகின்றனர்.
இதில் சில வெளிநாட்டவர்களும் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் கொழும்புவில் உள்ள இந்திய உயர் ஆணையருடன் தொடர்பில் இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ட்வீட் செய்துள்ளார்.
கட்டுநாயக்கா விமான நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வரும் பாதையில் சோதனைகளும் இடம்பெறும். அத்துடன் பார்வையாளர் பகுதி மூடப்பட்டுள்ளது. விமானப் பயணிகளை தவிர ஏனையவர்கள் வளாகத்திற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.