புறக்கோட்டை ஜந்து லாம்பு சந்தியில் உந்துருளியொன்று பாதுகாப்பு படையினரால் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்ட உந்துருளியை சோதனையிட்ட பாதுகாப்பு படையினர் குறித்த உந்துருளியை இவ்வாறு வெடிக்க வைத்துள்ளனர்.
சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் அதிகமாக குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த உந்துருளி சோதனையிடப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்தே குறித்த உந்துருளி பாதுகாப்பு படையினரால் வெடிக்க வைக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, வெள்ளவத்தை சவோய் திரையரங்கிற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டி ரக உந்துருளி ஒன்றின் ஆசனத்தை பாதுகாப்பாக திறப்பதற்காக பாதுகாப்புத் தரப்பினரால், பாதுகாப்புடனான வெடிப்புச் சம்பவம் ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது.
பிரதேசவாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய, உரிமையாளர் அற்ற நிலையில், குறித்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உந்துருளியை சோதனைக்கு உட்படுத்துவதற்காக இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வெடிப்புச் சம்பவம் நிகழ்த்தப்பட்டதன் பின்னர், குறித்த உந்துருளியை சோதனைக்கு உட்படுத்தியபோது, அதில் எவ்விதமான வெடிபொருளும் இருக்கவில்லை என்றும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு உள்ளிட்ட நகர் பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி விட்டுச் செல்லும், வாகன சாரதியின் பெயர் மற்றும் தொலைபேசி இலக்கங்களை குறிப்பிட்டு, வாகனங்களின் முன் பகுதியில் காட்சிப்படுத்திவிட்டுச் செல்ல வேண்டும் என காவற்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, கட்டான திம்பிரிகஸ்கட்டுவ பிரதேசத்தில் உள்ள வீதி ஒன்றுக்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் இருந்த பொதி ஒன்று பாதுகாப்புத் தரப்பினரால், பாதுகாப்பான முறையில் வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது.
காவல்துறை விசேட அதிரடிப் படையினரினால் குறித்த வெடிப்புச் சம்பவம் நிகழ்த்தப்பட்டதாக, கட்டான காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பின்னர், வெடிக்க வைக்கப்பட்ட பொதியை சோதனைக்கு உட்படுத்தியபோது, அதில் C-4 ரக வெடிபொருள் இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும், குறித்த வெடிப்புச் சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் – ரம்பவே – கோனேவெவ பகுதியில் உள்ள பாடசாலைக்கு அருகில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்றைய தினம் குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த கைக்குண்டை செயலிழக்கச் செய்வதற்காக, குண்டு செயலிழப்பு பிரிவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.