தீவிரவாதிகள் இவர்கள் யார் ?
இவர்களை உருவாக்கும் சக்தி எது?
விடுதலை/ தீவிரவாதம் இரண்டிற்குமான வேறுபாடு என்ன ?
என்பதையே இந்த பதிவு விளக்க முனைகின்றது.
தீவிரவாதிகள் என்ற பெயரை கேட்டவுடன் அவர்களை கொடுமையானவர்கள் என்று எண்ணும்படியே எமது பார்வையை நாம் முன்வைக்கின்றோம். இந்த தீவிரவாதிகளை யார் தீவிரவாதிகளாக மாற்றியமைக்கின்றார்கள் என்ற சிந்தனையை நாம் என்றுமே எண்ணிப்பார்ப்பதில்லை. ஒரு குழந்தை பிறக்கும்போதே தீவிரவாதி ஆக்கப்படுகின்றதா? ஒரு குழந்தை தான் வளரும் சூழலை கருத்தில் கொண்டு தனது அறிவினை விளங்கிக்கொண்டு வளரும் சூழ்நிலையில் எதிர்பாராவிதமாக சந்திக்கும் சந்தர்ப்பங்களை அடிப்படையாக வைத்தே தனது அறிவினை பெற்றுக்கொள்கின்றது. ஆகவே சமூக காரணிகளே ஒரு குழந்தையின் வளர்ச்சியையும் அதற்கான சிந்தனையின் திறனையும் தூண்டுகின்றது எனலாம்.
குறித்த சில ஈழம் வாழ் முஸ்லீம் சகோதர்களை பற்றியே எமது பதிவை நான் முன்வைக்கின்றோம் .ஏனெனில் அவர்களே எமது சக உறவுகள் .எமது வீட்டுக்கு அருகில் வசிப்பவர்கள்.அவர்களின் இயல்பும் எமது இயல்பும் ஓரளவாவது ஒத்த சிந்தனையில் தான் பயணிக்கும் என்று ஆழமாக நம்புகின்றோம்.
கொழும்பில் நிகழ்ந்த தாக்குதலின் பின்னர் குறித்த முஸ்லீம் சகோதர்களின் உறவுகளை ஊடகங்கள் தொடர்புகொண்டு கேட்டபோது அவர்கள் கூறிய முதல் விடயத்தை மட்டுமே இங்கே
நாம் சுட்டிக்காட்டிட விரும்புகிறோம். ”ஆம்” அவர்கள் கூறியது சிறுவயதில் தீவிரவாத செயற்பாட்டில் ஈடுபட்ட நபர்கள் ”மிகவும் பாசவானார்கள்,.சமூகம் சார்ந்த அதிகூடிய அக்கறையுள்ளவர்கள்” எனபதே அதுவாகவும்.ஆக ஒரு சமூகம் சார்ந்து அதிகமாகவும் ,பாசவலையில் அதிகமாகவும் உள்ள நபர்களையே தீவிரவாத தாக்குதலுக்கு பயன்படுத்தவேண்டும் என்பது எழுதப்படாத நடைமுறையா? என்பதை நாம் இங்கே கவனிக்கவேண்டும்.
சந்தர்ப்பத்திற்கு ஏற்ப மாறும் நபர்களை அல்லது தமது சுயலாபத்தில் இயங்கும் நபர்களை தாக்குதல் நடத்திட யாரும் அணுகுவதில்லை.ஆகவே உண்மையாக சமூகம் மீது அக்கறையுள்ள பாசத்தின் பிடியில் சிக்கியுள்ள நபர்களே தீவிரவாதிகளாக மாற்றப்படுகின்றார்கள். .இவர்களின் பாசத்தை ”மதம்” என்ற திணிப்புக்குள் உள்செலுத்திய நபர்களே அதிதீவிர குற்றவாளிகளாக நாம் நோக்க வேண்டும்.
ஒரு குறித்த வட்டத்தில் வாழும் சமூக சேவையில் அதிதீவிர ஈடுபாடு காட்டும் நபர்களை இலக்குவைக்கும் ”வியாபார உலக அரசியல் வர்க்கம்” தமது செயற்பாட்டினை சரியாக நிகழ்த்திட குறித்த நபர்களை குறிவைத்து படுகுழிக்குள் விழுத்தி விடுகின்றார்கள்.
”விடுதலைப் போராட்டம்” என்ற சொற்பதம் இன்றுவரை சரியாக விளக்கப்படாத ஒரு சொல்லாகவே இருந்துவருகின்றது. ஒவ்வொரு விடுதலை போராட்டத்தின் ஆரம்ப காலங்களும் தவறுகளுடன் மட்டுமே ஆரம்பிக்கும் வாய்ப்புள்ளது. அந்த காலப்பகுதியில் நிகழ்ந்த சம்பவங்களை மட்டுமே கவனத்தில் கொண்டு விடுதலை போராட்டமே தவறு என்று இன்றுவரை கூறும் அறிவற்ற பலரை நாம் கடந்துகொண்டுள்ளோம்.
இன்றுவரை தற்புகழ்ச்சியும் தலைமைத்துவ போட்டியுமே பல அழிவுகளுக்கு காரணமாக உள்ளது. அந்த வலைக்குள் எந்த மானிடமும் தப்புவதில்லை. ஆகவே ஒரு ”விடுதலை போராட்டம் தீவிரவாதம் என்ற பெயரினை சுமப்பதும் ஒரு தீவிரவாதம், தீவிரவாத ஒழிப்பிற்கு எதிரான சமாதான உடன்படிக்கை” என்று பெயர் பெற்றுக்கொள்ளுவதும் ”உலக ஆயுத விற்பனை நாடுகளின் ”
வியாபார யுக்தியுல் மட்டுமே தங்கியுள்ளது.
இந்த யுத்தியை முறியடிக்க ஆக்கபூர்வமாக செயற்பட எமது அறிவினை பெருக்கி ஆற்றலை கூட்டிட வேண்டும்.
அதனை விடுத்து நாமெல்லாம் மனிதநேயவாதிகள் என்றும் சமநிலைவாதிகள் என்றும் எழுத்தில் எழுதிவிட்டு செல்வது எனது பதிவு சரியா ?உனது கருத்து சரியா என்று மோதிக்கொள்வது எமது காலத்தை வீணடிக்கும் செயற்பாடு என்று தான் கூறலாம்.
விழிப்புணர்வும் மக்களை ஒன்றித்து அவர்களுக்கு ஆக்கபூர்வமான கருத்துக்களை விதைப்பதும் அன்பினை பெருக்கலுமே எமது முன்னுள்ள தேவைப்பாடு என்பதுடன் எம் கிராமங்களை நாமே காத்திட வேண்டும் என்ற கருத்தினை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும்.
”இராணுவ குவிப்பு” என்பது இராணுவ ஆட்சியின் இன்னொரு அம்சமாகும் .இராணுவ ஆட்சியுள்ள நாடுகளில் ஜனநாயகம்/மனிதநேயம் எவ்வாறு நிகழும் என்பதை அறிவாளர்கள் சிந்திக்கும் தருணமிது ..
நன்றி
நெருப்பு