தென் தமிழீழம் , மட்டக்களப்பு வவுணதீவு சிங்கள காவலரணில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் திகதி கடமையில் இருந்த சிங்கள பொலிஸார் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவமே ஐஎஸ். பயங்கரவாதிகளின் முதலாவது தாக்குதல் என்று விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக இலங்கைப் படைத்தரப்பு கூறியுள்ளது. இது தொடர்பான செய்தியை கொழும்பில் இருந்து வெளிவரும் திவயின என்ற சிங்கள நாளிதழ் வெளியிட்டுள்ளது. ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஏற்பாட்டில்; தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பு கடந்த வருடம் நவம்பர் மாதம் 30ஆம் திகதி இலங்கையில் முதலாவது தாக்குதலை நடத்தியுள்ளதாகப் இலங்கைப் படைத்தரப்பு கூறியுள்ளது. உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலையடுத்து தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்புத் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுகின்றன.
தௌஹீத் ஜமா அத் இயக்கத்தின் தலைவரெனக் கூறப்படும் சஹ்ரான் ஹாசீமினின் வாகனச் சாரதியான காத்தான்குடி -3 மீன் மார்க்கெட் வீதியைச் சேர்ந்த 53 வயதுடைய முகமது சாஹீர் ஆதம்பாலெப்பை கபூர் நேற்று வெள்ளிக்கிழமை கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு காத்தான்குடிப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் நிலையக் காவல் நிலையத்தில் கடமையில் இருந்த இலங்கைப் பொலிஸார் இருவர் கொல்லப்பட்டமை குறித்த தகவல் வெளிவந்ததாக அந்த நாளேட்டின் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
சஹ்ரான் ஹாசீமிடம் 35 ஆயிரம் ரூபா சம்பளத்துக்கு பணியாற்றியதாகவும் வவுணதீவு பொலிஸ் நிலையக் காவல் நிலையத்தில் கடமையில் இருந்த இரண்டு பொலிஸார் கொலை செய்யப்பட்ட விடயத்தில், தனக்குத் தொடர்புள்ளதாகவும் அவர் வழங்கிய வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
இதேவேளை, மட்டக்களப்பு வவுணதீவு காவலரனில் கொலை செய்யப்பட்ட இரண்டு பொலிஸாரின் துப்பாக்கிகளும் காணாமற்போயிருந்தன. இதுவரை அந்த இரண்டு துபாக்கிகளும் கண்டுபிடிக்கப்படவுமில்லை.
அத்துடன் இந்த சம்பவத்துடன் தொடர்புள்ளதாகச் சந்தேகிக்கப்பட்டு முன்னாள் போராளிகள் சிலர் இலங்கைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். வாழைச்சேனையில் உள்ள போராளி ஒருவரும் அவருடைய குடும்பமும் வெளியேற்றப்பட்டு அவரது வீடு முற்று முழுதாகச் சோதனையிடப்பட்டிருந்தது.
அத்துடன் கிளிநொச்சி – வட்டக்கச்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான ராசநாயகம் சர்வானந்தன் என்பவரும் இலங்கைப் பொலிஸாரால் பொலிஸார் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஐஎஸ்.பயங்கரவாதிகளே அந்தக் கொலைகளைச் செய்துள்ளதாக தற்போது விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
உயிர்த்த ஞாயிறன்று மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய தற்கொலைக் குண்டுதாரி முகமட் அசாத்தின் தாயர், சஹ்ரான் ஹாசீமினின் வாகனச் சாரதியான முகமது சாஹீர் ஆதம்பாலெப்பை கபூர் ஆகியோர் உட்பட ஏழுபேர் நேற்று வெள்ளிக்கிழமை காத்தான்குடியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.