ஒருவன் மனித வெடிகுண்டாக மாறுவதென்பது ஒரே இரவில் நடந்து முடிகின்ற ஒன்றல்ல. அது நீண்ட காலமாக நடந்திருக்க வேண்டிய ஒரு மாறுதல். அவனது பேச்சுஇ செயல் என்று எல்லாவற்றிலும் அது வெளிப்பட்டிருக்கும். இன்றைக்குள்ள நம் வாழ்வு முறையில் பிறர் மீதான அக்கறை என்பது ஒரு அநாவசிய செயற்பாடு போன்றதாக மாறிவிட்டிருக்கிறது. ‘பிரைவசி’ என்ற பிரயோகம் ஒருவரைத் தனிமைப்படுத்துவது என்பதுபோன்ற நிலையை சமகால நாகரீகப் போக்குத் தோற்றுவித்துள்ளது. பிறரின் சுதந்திரத்தில் தலையிடுகின்ற அறமற்ற போக்கும் ‘நமக்கென்ன’ என்ற அலட்சியப் போக்கும் ஒன்றானது என்று எண்ணத் தொடங்கியதால் நாம் ஒவ்வொருவருமே தனிமைப்பட்டு நிற்கிறோம். நம் உணர்வுகளை நாம் பகிர்ந்து கொள்வதில்லை. பிறரின் உணர்வுகளை செவிமடுப்பதுமில்லை. இன்றைய வாழ்க்கை முறையில் அதற்கான நேரமும் இல்லை என்றாகிவிட்டிருக்கிறது. இந்த இடைவெளிகள் நம் ஒவ்வொருவரையும் சிறைப்படுத்தி வைத்திருப்பதிலிருந்து நம்மை நாமே மீ்ட்டுக் கொள்வது காலத்தின் தேவையாக இருக்கின்றது.
உரையாடல்கள் அற்றுப்போன உலகில் ஸ்மார்ட் போன்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். புன்னகைஇ சிரிப்புஇ காதல்இ அழுகைஇ ஏமாற்றம்இ வெறுப்புஇ கோபம் போன்ற அனைத்து உணர்வுகளையும் ஸ்மார்ட் போன்களில் இருக்கும் ‘சிம்போல்ஸ்’களைத் தட்டி வெளிப்படுத்திவிட்டு நகர்கிறோம். நம் உளக்காயங்கள் என்னஇ நம் தேடல் என்ன என்ற தெளிவே இல்லாமல் நாட்கள் நகர்ந்துவிடுகின்ற இந்த வாழ்விலிருந்து நம்மையும் நம் அன்புக்குரியவர்களையும் தேடி அடைய வேண்டியது எத்தனை அவசியம் என்பதை காலம் பல்வேறு விதமாக உணர்த்திக் கொண்டேயிருக்கின்றது.