தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் தற்போதைய தலைவர் எம்.வை.எம். தெளபீக் மெளலவி, அந்த அமைப்பின் ஊடக செயலர் மொஹம்மட் லெப்பை அஹமட் பைரூஸ், பொருளாளர் மொஹிதீன் பாவா மொஹம்மட் பைசர் மற்றும் சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு தரப்பினருடனான மோதலில் கொல்லப்பட்ட நபரொருவரின் மனைவி எனக் கருதப்படும் பெண் ஆகியோரை எதிர்வரும் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபர்களான நால்வரையும் கடந்த 28 ஆம் திகதி மாலை கைது செய்த காத்தான்குடி பொலிசார் அவர்களை 72 மணி நேர தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடாத்தினர். அதனையடுத்து அவர்கள் நீதிமன்றில் ஆஜர்ச் செய்யப்ப்ட்ட போதே இவ்வாரு விளக்கமரியலில் வைக்க உத்தர்வு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில், தடை செய்யப்பட்ட அமைப்பான தேசிய தெளஹீத் ஜமா அத், மற்றும் ஜமாத்துல் மில்லதுல் இப்ராஹீமீய்யா சைலானி அமைப்பின் உறுப்பினர்களையும் தேடிய வேட்டை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், சோதனை நடவடிக்கைகளும் தொடர்கின்றன.
பொலிசார், பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர், முப்படையினர் இணைந்து இந் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.இந் நிலையில் உயிர்த்த ஞாயிறுதின பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள், வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களைத் தேடி நாடளாவிய ரீதியில் தொடர்ந்தும் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில், இதுவரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் 160 க்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சி.ஐ.டி. தேடிய முக்கியஸ்தர் குளியாபிட்டியில் கைது
தொடர் குண்டுத்தககுதலின் முக்கிய சூத்திரதாரியாக கருதப்படும், ஷங்ரில்லா ஹோட்டல் தற்கொலை தாரி சஹ்ரான் ஹாஷிமின் மிக நெருக்கத்துக்கு உரிய நபராக கருதப்படும் ஒருவரை சி.ஐ.டி. நேற்று கைது செய்தது. பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருடன் இணைந்து சி.ஐ.டி. முன்னெடுத்த விஷேட நடவடிக்கையின் போது குளியாபிட்டிய, சுபாரிதிபுர பகுதியில் இவரை சி.ஐ.டி. கைது செய்துள்ளது. மொஹம்மட் அன்வர் மொஹம்மட் ரிஸ்கான் என அறியப்படும் சந்தேக நபரிடம் சி.ஐ.டி. விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சம்மாந்துறை சோதனை
இதேவேளை உளவுத்துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய சம்மாந்துறை – மல்கம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒரு தொகை வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.
கைத்துப்பாக்கிகள் இரண்டு, அதற்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் 17, , சுமார் 200 ஜெலட்னைட் குச்சிகளும் 17 ரி – 56 ரக துப்பாக்கி ரவைகளும் டெட்டனேட்டர்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர். அட்டாளைச்சேனை – பாலமுனை கடற்கரை பகுதியிலும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது
கைக்குண்டு மீட்பு
அனுராதபுரம் – கல்நேவ, நாமல்கமுவ பகுதியில் உள்ள நீர்த்தாங்கியிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நீர்த்தாங்கியில் கைக்குண்டு காணப்படுவதாக தாங்கியின் உரிமையாளரால் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த பகுதிக்கு வருகைதந்த மஹவ கடற்படை பயிற்சிக் கல்லூரியின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் குண்டை செயலிழக்கச் செய்துள்ளனர்.
குருணாகல் வெல்லவ சோதனையும் கைதுகளும்
குருணாகல் வெல்லவ காவல் துறை பிரிவிற்குட்பட்ட ஹதிரவெலான பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று முற்பகல் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். இதன்போது தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்புடன் தொடர்புள்ளதாக கருதபப்டும் பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
6 வாள்களும் கோடரி ஒன்றும் கத்தி ஒன்றும் இறுவட்டுக்கள், கணினி ஒன்றும் போலி முடிகள் இரண்டுடன் சந்தேக நபர்கள் 15 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணகைள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் குருணாகல் பிராந்திய பொலிஸ் அத்தியட்சர் மஹிந்த திஸாநாயக்க கூறினார்.
அக்குரனை சுற்றிவளைப்பும் கைதுகளும்
அக்குரணை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இலங்கை இராணுவத்தின் 11 ஆவது படைப்பிரிவினர் நேற்று விசேட சோதனைகளை முன்னெடுத்திருந்தனர். காவல் துறை, காவல் துறை விஷேட அதிரடிப் படையினரின் முழு ஒத்துழைப்புடன் பிரதேசம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கைகளின் போது, சந்தேகத்தின் பேரில் சுமார் 25 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது துப்பாக்கியொன்று, போலியாக தயாரிக்கப்பட்ட ஒரு தொகை வாகன இலக்கத்தகடுகள், ஒரு தொகை பிறப்புச்சான்றிதழ்கள் மற்றும் சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிளொன்றும் கைப்பற்றப்ப்ட்டதாக பாதுகபபுத் தரப்பினர் கூறினர்.
இரத்த மாதிரிகளை பெற்றுக்கொள்ளும் ஊசிகளும் வீடொன்றிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. அவை இலங்கையின் வைத்தியர்கள் பயன்படுத்தாத ஊசிகள் என தெரிவிக்கப்படுகிறது. எந்த நோக்கத்திற்காக இவை கொண்டுவரப்பட்டு அவ்வீட்டில் வைக்கப்பட்டிருந்தன என்பது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், குண்டு தயாரிப்பிற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 150 சேர்கிட் பிரேக்கர்ஸ்களும் கைப்பற்றப்பட்டதாக பாதுகாப்புத் தரப்பினர் கூறினர்.
அக்குரணை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இலங்கை தௌஹீத் ஜமாத் அமைப்பின் அலுவலகத்தையும் பாதுகாப்பு பிரிவினர் சோதனையிட்டுள்ளனர். இதன்போது இறுவெட்டுகள், 4 கமராக்கள், ஒரு தொகை துண்டுப்பிரசுரங்கள் உள்ளிட்ட சில பொருட்களை பாதுகாப்புத் தரப்பினர் கைப்பற்றியுள்ளதாக அறிய முடிகின்றது.
கஹட்டகஸ்திகிலியவில் சிக்கிய தோட்டாக்கள்
கஹடகஸ்திலிய பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் வீடொன்றிலிருந்து துப்பாக்கி ரவைகள் 80 உட்பட இராணுவத்தினர் பயன்படுத்தும் சில உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த வீட்டில் வசித்து வந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவரும் அவரது தந்தையும் சந்தேகத்தின் பேரில் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
பத்தேகமவில் 30 பேர் சந்தேகத்தில் கைது
பத்தேகம, இந்திகஸ்கடிய பகுதியில் 30 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த சந்தேக நபர்கள் தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத நிலையில் காவல் துறையால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஹியங்கனை பள்ளியில் தீ பரவல்
மஹியங்கனை நகரில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றில் நேற்று முன் தினம் இரவு தீ பரவியுள்ளது.
பள்ளிவாசலில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் தீயில் கருகியுள்ளதாக காவல் துறையினர் கூறினர். சம்பவம் தொடர்பில் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதன் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கெப்பிதிகொல்லேவையில் கைதான ஐவர்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் வீடியோ காட்சிகள், கையடக்க்த் தொலைபேசிகள், தெளஹீத் ஜமா அத் தலைவர்களின் புகைப்படங்கள், வனாத்துவில்லு பயிற்சி முகாமின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளுடன் முஸ்லிம் இளைஞர்கள் ஐவர் கெப்பிதிகொல்லேவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நகரில் இராணுவத்தினர் பொலிசாருடன் இணைந்து முன்னெடுத்த சோதனைகளின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கெப்பிதிகொல்லேவ பகுதியில் தொழில் நிமித்தம் தங்கியிருந்துள்ளதுடன் வவுனியா, கின்னியா மற்றும் காங்கேசந்துறை அகைய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிசார் கூறினர். இவர்களில் ஹொரவ்பொத்தானை வீதியில் இராணுவ வீதிச் சோதனை சாவடியை காணொளியை எடுத்த இருவரும் அடங்குவதாக காவல் துறையினர் கூறினர்.