திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருகே உலக சாதனை சான்றிதழ் பெற்ற தாய் மற்றும் அவரது மகனை கலெக்டர் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். திருவண்ணாமலை அடுத்த செங்கம் அருகே உள்ள தோப்பூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீதேவி, பொறியியல் பட்டதாரி. இவர்களுக்கு கே.எஸ்.நந்தீஷ்வரன்(3) என்ற மகன் உள்ளார். இவர், அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிரிகேஜி படித்து வருகிறார்.
இந்நிலையில், நந்தீஷ்வரன் 96 வகையான சிற்றிலக்கியங்கள், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள், அதன் தலைநகரங்கள், தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்கள், திருக்குறள் மற்றும் அறிவியல் பொருட்களை கூறினால் அதை கண்டுபிடித்தவர்களின் பெயர்களை சரளமாக கூறி அசத்துகிறார். மேலும், ஸ்ரீதேவி மிரர் டெக்ஸ் (கண்ணாடி பிம்ப எழுத்து) என்னும், கண்ணாடியில் காண்பித்து படிக்கும் தலைகீழான எழுத்துக்களை எழுதி சாதனை படைத்துள்ளார்.
இவர் தனது 2 கைகளாலும் ஒரே நேரத்தில் ஒரு கையில் சரியான முறையிலும், அதே எழுத்தை மற்றொரு கையில் தலைகீழாகவும் (மிரர் டெக்ஸ்ட்) எழுதி சாதனை படைத்துள்ளார். இவருக்கு சாம்பியன் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் நிறுவனம் சான்றிதழ் வழங்கியது. இந்நிலையில், தாய் மற்றும் மகன் ஆகிய இருவரும் சாதனை படைத்து சாம்பியன் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் நிறுவனம் சார்பில் உலக சாதனைக்கான சான்றிதழ் பெற்றனர். தகவலறிந்த கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, ஸ்ரீதேவி மற்றும் சிறுவனை நேற்று முன்தினம் நேரில் அழைத்து பாராட்டினார்.
மேலும், சிறுவனிடம் கலெக்டர் சில கேள்விகளை கேட்டதற்கு, சிறுவன் தனது மழலை பேச்சால் பதில் கூறி அசத்தினார். இதையடுத்து சிறுவன் மேலும் சிறந்து விளங்க கலெக்டர் வாழ்த்தி பரிசு வழங்கினார்.