முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளின் ஏற்பாட்டிற்கு பல வகையிலும் உறுதுணையாக இருந்து ஒத்துழைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவேந்தல் நிகழ்வானது ஆண்டுதோறும் வடமாகாண சபையின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் 2015,2016,2017 என படிப்படியாக மேம்பட்ட நிலையில் செய்து வருகின்றோம்.
இம்முறை பல இளைஞர்கள் இரவு பகலாக இடங்களை துப்பரவு செய்வதிலும் ஏனைய பணிகளை செய்வதிலும் ஆர்வத்துடன் உதவினார்கள்.
இது தவிர முல்லை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் இலவசமாக போக்குவரத்து ஒழுங்கினை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலும் ஏனைய மாவட்டங்களின் போக்குவரத்து ஒழுங்குகளுக்கு பலரும் ஒத்துழைத்தார்கள்.
தாகம் தணிப்பதற்காக முல்லை ப.நோ.கூட்டுறவுச் சங்கத்தினர் உள்ளூர் பானங்களின் மூலம் தாகங்களைத் தணித்தார்கள், சூரிச்சு அருள்மிகு சிவன்கோயில் சைவத் தமிழ்ச் சங்கம் சுவிற்சர்லாந்து அமைப்பு குமணன் அவர்கள் மூலம் இலைக்கஞ்சி வழங்கும் ஏற்பாடுகளை செய்திருந்தது.
ஏனைய பல பணிகளை பலரும் மனமுவந்து கேட்டவுடன் தளத்திலே நின்று செய்து உதவினார்கள்.
களத்திலே செய்த ஏற்பாடுகளை யாராவது உடைத்து விடுவார்களோ அல்லது சேதப்படுத்தி விடுவார்களோ என்பதற்காக இரவு காவலில் ஈடுபட்ட இளைஞர் குழு அனைவருக்கும் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு பிரதேசசபையின் ஒத்துழைப்புக்கள் மற்றும் ஏனைய பணிகளைச் செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு சார்பில் தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.