உயிர்த்த ஞாயிறுதினத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹஸீம், தான் திட்டமிட்டிருந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கான 6 இளைஞர்களை, மூளைச் சலவை செய்துள்ளார்.
சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தியே, பகிரங்கமாகத் தேடிக் கண்டுபிடித்துள்ளாரென, இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆறு இளைஞர்களையும், தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை நடத்தத் தயாராகும் மனநிலைக்குக் கொண்டுவருவதற்காக அவர் இதனை செய்துள்ளார்.
மூளைச் சலவையை, தொடர்ந்து பல மாதங்களாக, தனிப்பட்ட “செட்ரூம் (Chat Room)” ஊடாக மேற்கொண்டுள்ளார்.
சர்வதேச ஊடகமொன்று இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது.
சிலோன் தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவர் ஆர்.அப்துல் ராசிக், இலங்கை தௌஹீத் ஜமாஅத் அமைப்பு மற்றும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா அமைப்பு ஆகிய இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிட்டுள்ளது.
முஸ்லிம்கள் அல்லாதவர்களை இலக்கு வைத்தே, இந்தத் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு இருந்ததாகக் மேற்படி ஊடகம், குறிப்பிட்டுள்ளது.
இதற்காக, தற்கொலைத் தாக்குதலை நடத்தக்கூடிய மனப்பக்குவத்துக்கு அவ்விளைஞர்களைக் கொண்டுவருவதற்காக, அவர்களுக்கான மூளைச்சலவை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்காக சஹ்ரான் ஹாஸிம் தீவிரமாகச் செயற்பட்டுள்ளாரெனவும் இதற்காக, பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்றன பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், ராசிக் தெரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டில், சஹ்ரான் ஹஸீமின் செயற்பாடுகளால் அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடுமென அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.
இருந்த போதிலும், அதற்கெதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று, ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் அமைப்பு தெரிவித்துள்ளது.