‘உடல்நோயைவிட மனநோய்தான் மனிதனை
அதிகம் அழிக்கும் தன்மை வாய்ந்தது’ – சிசரோ
ஈழத்தில் நான்கு தசாப்த காலமாக இடம்பெற்ற யுத்தமும் 2004 இல் ஏற்பட்ட சுனாமி பேரனர்த்தமும் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பலரை உளநோயாளர்களாக உருவாக்கியுள்ளது. அதன் விளைவாக உளத்தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய பிரச்சினைகள், முரண்பாடுகள், உறவுச் சச்சரவுகள், இடப்பெயர்வுகள், இழப்புக்கள், பிரிவுகள், பேரழிவுகள் என்பவற்றின் உள்விளைவுகளையே போரியல் நெருக்கீடு எனலாம். குறிப்பாக வடக்குக் கிழக்குப்பிரதேசத்தில் நடைபெற்ற கொடும் போரினால் மக்கள் அதிகமான உளநெருக்கீட்டிற்கு உள்ளாகியுள்ளனர். இவற்றில் சிறுவர்கள், இளைஞர்கள் யுவதிகள் விசேடதேவைக்கு உட்பட்டோர், வயோதிபர்கள், என்ற வயது, பால் என்ற வேறுபாடின்றி மக்கள் பாரிய உள நெருக்கீட்டைச் சந்தித்துள்ளனர் என்பதை நமது கண்ணூடாக காணமுடிகின்றது.
முப்பது ஆண்டுகளாய் போராட்ட காலத்தில் வாழ்ந்த ஈழத் தமிழர்களின் வரலாற்றில் 2007ம் ஆண்டு முதல் மே 2009ம் ஆண்டு வரை உறவுகளையும் உடைமைகளையும் தொலைத்து பல வித இன்னல்களையும் எதிர் நோக்கி எஞ்சிய மக்கள் முகாம் வாழ்விற்குள் உள்வாங்கப்பட்டார்கள்.
ஒரு இனத்தினை அழிப்பதினையே குறியாகக் கொண்டு இலங்கை அரசின் முப்படைகளும் இணைந்து முள்ளிக்குளம் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை நடத்திய கொடூரத் தாக்குதல்களிலும் பாதுகாப்பு வலயம்’ எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதி மீதும் நடத்திய கொடூரமான தாக்குதல்களில் பல ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்பட்டும் அதேவேளை, பல ஆயிரக்கணக்கானோர் உடல் அங்கங்களை இழந்தும் படுகாயமுற்று பல சொல்லிட முடியாத துயரங்களையும் வேதனைகளையும் அடைந்தார்கள்.
இதில் நேரடியான பாதிப்பின் உச்சத்தில் அங்கங்களை இழந்தவர்கள் , உறவுகளை இழந்தவர்கள், கண்ணெதிரே சூடுபட்டு விழுந்த உறவுகளை கைவிட்டு ஓட வேண்டிய நிலையில் ஒடியவர்கள், ஒவ்வொரு இடங்களிலும் இருந்து தப்பி வரும்போது காயமுற்றவரைக் காப்பாற்ற முடியாமல் வந்தவர்கள், பாதி உயிருடன் பதுங்கு குழியில் விட்டு விட்டு வந்தவர்கள், உயிருக்காகப் போராடி மருத்துவ உதவி கிடைக்காமல் இறந்தவர்கள் ஒருபுறம் இறந்த உறவினர்களது உடலுக்கு அருகிருந்து கதறியழ முடியாமல் இறுதிக் கிரிகைகளைச் செய்ய முடியாமல், யார் இறந்தார்கள் எனத் தெரியாமல் நடை பிணங்களாய் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்தார்கள்.
இவர்கள் சவால்களுக்கும் , பிரச்சினைகளுக்கும், நெருக்கடிகள். கஷ்டங்கள் , மனச்சிக்கல்கள், பழிவாங்கல்கள், அடக்குமுறைகள், உட்பட சித்திரவதை, கடத்தல், காணாமல் ஆக்கப்படல், இடைத்தங்கல் முகாம், நீண்டகாலத் தடுப்பு ,சிறை வாழ்வு, திறந்தவெளிச் சிறைச்சாலை , இனப்படுகொலை, என பல்வேறுபட்ட அவலகரமான சம்பவங்களின், காட்சிகளையும் இனச்சுத்திகரிப்பு போன்ற மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளில் பல இன்னல்களுக்கும் முகங்கொடுத்து அனுபவித்து வந்தவர்கள். அவற்றை எதிர்கொள்ள முடியாது இன்று துவண்டு போயுள்ளனர். போர் நடைபெற்ற இடங்களில் மீள் குடியேற்றப் பட்ட ஒவ்வொரு தனிநபரும் உடல் , உள சமூக ,பொருளாதார ரீதியாக, ஏதோவொரு வகையில் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இன்றைய சூழலில் பாதிப்புக்களை சுமந்து வாழ்ந்து வரும் உறவுகளுக்கு வடுவாய், வலியாய் பதிந்து போன நினைவுகள், மனதில் அடக்கிய அபிலாசைகளும், அவர்களின் மனதில் பதிந்த காட்சிகள் ஆழ் மனதில் பதியப்பட்டு எண்ணங்களாக தேக்கி வைக்கப்படுகின்றன. தமது உள்ளத்து உணர்வுகளை வெளிக் கொணர முடியாது, அவற்றிலிருந்து விடுபட வழி தெரியாமல் பலர் வாழ்கின்றார்கள்.
வன்முறைகளும் படுகொலைகளும் கட்டவிழ்ந்துவிட குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கொல்லப்படுவதை பார்த்த சிறுவர்களின் கதைகளைக் கேட்கும் பொழுது நேரடி சாட்சிகள் படுகொலைகளின் விளிம்பில் போர் மிச்சம் விட்டுச் சென்ற எச்சங்களாய் வாழும் மக்களின் பாதிப்புக்களும் ஏக்கங்களும் மனக் காயங்களும் சமூகப் பொறுப்பையும் தற்போதைய காலத்தில் தேவையாக ஆலோசனைகளையும் ஆற்றுப்படுத்தலினையும் உணர்த்தி நிற்கிறது.
வலிகளோடும் துன்பங்களோடும் வாழும் உறவுகள் அதிகம் அந்த வகையில் குடும்பத்தோடு மகிழ்ச்சியாகக் கலகலப்பாக இருந்த நாட்கள் இந்தத் தனிமைக்கும் தவிப்புக்கும் தானா என்று தனக்குள்ளேயே பேரினவாதம் சிதைத்த படுகொலை கொடூரங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தைச் சொந்த இடமாகக் கொண்ட முனியாண்டி செல்வராசா என்ற தந்தையின் வலியின் வாழ்வைப்பற்றி கூறிய போது கண்ணீர் கரை புரண்டோடுகிறது.
ஆறு பிள்ளைகளையும் மனைவியையும் இழந்தது மட்டும் அல்லாது தனது இரண்டு கால்களையும் ஒரே எறிகணையில் இழந்து வாழ்கின்றார். கண்டியில் இருந்து திருமணம் காரணமாக மன்னார் மாவட்டத்தில் முள்ளிக்குளம் பிரதேசத்தில் வசித்து வரும் இந்த உறவின் சோகக்கதையை சொற்களால் வடித்துவிட முடியவில்லை. மனைவி மற்றும் பிள்ளைகளின் நினைவுகள் வறுமை, இயலாமை என அவரின் வலிகளைச் சொல்லிக் கொண்டேபோகலாம். இத்தகைய கதைகளை நேரடியாகக் கேட்கும் போது அவற்றில் இருந்துவிடுபட எமக்கே பல வாரங்கள் ஆகிவிடுகின்றன. அப்படியாயின் அவரின் நிலை என்ன?
முள்ளிவாய்க்கால் மேற்கு அ.த.க பாடசாலையில் தரம் 10ல் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் தங்கை 2009ஆம் ஆண்டு நான்காம் ஈழப் போரின் போது ஆறு வயதே நிரம்பியிருந்த சிறுமி வலிகளை தாங்கி நாளாந்தம் எழுந்திடும் மீள் நினைவுகளில் செத்துப் பிழைத்து சிறு வயதில் கேட்ட விமானக் குண்டு மற்றும் எறிகணைகளின் காதைக் கிழிக்கும் பெரு முழக்கம் இன்றும் தனக்குள் இரைந்து கொண்டிருப்பதாகக் கூறுகின்றாள்.
யுத்தம் தந்த கோர சம்பவத்தை இன்னும் என்னால் மறக்க முடியாது அதை நினைக்கும் போது இன்னும் என் மனம் பதை பதைக்கிறது என ஜோகராசா பிறின்சிகா கூறுகையில், என்னுடைய முதல் பள்ளி நண்பியின் வயிற்றில் இராணுவத்தின் எறிகணை தாக்கி ஆறு வயதிலேயே துண்டாடப்பட்டுக் கிடந்தாள்.
நான் என்னை அறியாமலே ஓலமிட்டு அழ ஆரம்பித்து விட்டேன். இறுதியில் எல்லோரும் அந்த இடத்தை விட்டு விலகிச் சென்றார்கள். யாருமே நிற்க முடியாத நிலை. என்னை அப்பா தூக்கிக் கொண்டு செல்ல ஆரம்பிக்கும் போது அப்பாவின் பின் பக்கமாக என் தலை என் நண்பியைப் பார்த்தேன். அவளின் உடல் சிந்திய குருதி அந்த நிலத்தோடு ஊறிப்போகாமல் தேங்கி நிற்க அந்த இடம் மறையும் வரை பார்த்துச் சென்றேன்.
யுத்தம் முடிவுற்ற நிலையில் இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்ட தனது அன்புத் தந்தை இன்றும் வீடு வந்து சேரவில்லை என்று குமுறுகின்றாள் .இராணுவம் இப்படி எத்தனையோ உறவுகளைச் காணாமல் செய்திருக்கின்றார்கள் தந்தை இல்லாத நிலையில் தாய் கூலி வேலைகளைச் செய்து பிறின்சிகாவை கற்பிக்கிறார்.
1998 ஆம் ஆண்டு வன்னி சென்று விடுதலை போராட்டத்தில் இணைந்து 2009ஆம் ஆண்டு வரை போராடிய 38 வயதான முன்னாள் பெண் போராளி கூறுகையில் 2009 மே 18 ஆம் நாள் ஏராளமான மக்களோடு நாங்களும் இராணுவக் கட்டுப்பாட்டினுள் வரவேண்டிய துர்ப்பாக்கிய நிலை உருவானது. நான் உட்படப் பல போராளிகள் சயனைட் அருந்தி வீரமரணம் எய்திட திட்டமிட்டோம். இருந்தாலும் எங்களின் தியாகங்கள் வீணாகாது என்றோ ஒரு நாள் கண்ட கனவு பலிக்கும் அதைப் பார்த்து விட்டு உயிர் துறக்கலாம் என்று சக போராளிகள் சிலர் ஆற்றுப்படுத்தினார்கள்.
ஆளுமை கொண்ட பெண்ணாக இயல்பு வாழ்வை நிம்மதியாக பாதுகாப்பாக மன மகிழ்ச்சியோடு வாழ முடியாது என தெரிந்தும் மக்களோடு சேர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்து இன்று பல சொல்லமுடியாத இன்னல்களையும், அவமானங்களையும், அநீதி மற்றும் துன்ப துயரங்கள் கொடுமையான சோகத்தை எதிர் கொண்டு வாழ்ந்து வருகின்றேன். புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றின் ‘மாவீரர்களின் தியாகங்கள் வீணாகிப் போகக் கூடாது’ என்ற பிரார்த்தனையோடு நாட்கள் நகர்கின்றது எனக் கூறினார்.
நான் இராமலிங்கம் பாலகிருஸ்ணன் சொந்த இடம் நெத்தலியாறு. 60 வயதாகின்றது. எனக்கு ஒரு மகள். அழகிய குடும்பம் பாக்குகளை சீவி கடைகளுக்கு விற்பதன் மூலம் வாழ்க்கையை நடத்தி வருகின்றேன். யுத்தத்திற்கு முன்னர் மகிழ்ச்சி நிறைந்த எனது வாழ்க்கை பின்னர் இருண்டு போயிற்று. நித்தம் நித்தம் வலிகளின் நினைவுகள் என்னை ஆட்கொள்கிறது.
2009ம் ஆண்டு மாசி மாதம் 13ம் நாள் அன்று இரவு 10 மணி இருக்கும் எல்லோரும் நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த அந்த வேளை ஒரு ஆட்லறி எறிகணை எங்களுக்கு 10 மீற்றர் தூரத்தில் விழுந்து வெடித்தது. எறிகணை விழுந்து வெடித்த சத்தத்தில் தான் நாங்கள் விழித்தோம். எனது இடது கால் தொடையோடு தொங்கிக் கொண்டிருந்தது. எனது அன்பு மருமகன் அதே இடத்தில் உடல் சிதறிப் பலியாகிப் போனார். நானும் மாத்தளன் வைத்தியசாலைக்கு உடனடியாக மாற்றப்பட்டேன்.இறந்து போன எனது மருமகனின் நிலை என்ன? மனைவியும் மகளும் பிஞ்சுக் குழந்தையோடு என்ன செய்வார்கள் என்ற ஏக்கமும் என்னை வாட்டியது.
எனது காணியில் ஏராளமான பனை, தென்னைகள் இருந்தன. அதிகமான தென்னைகள் எறிகணைகளிலும் துப்பாக்கி ரவைகளிலும் தலையிழந்து கறுப்புக் கம்பங்களாக காட்சியளிக்கின்றது. எஞ்சியிருக்கும் தென்னைகளில் இருந்து பெறுகின்ற தேங்காய்களும் நான் கொள்வனவு செய்து இரவிரவாக இருந்து வெட்டி விற்கின்ற பாக்குகளும் தான் எங்கள் வாழ்வாதாரம். என் ஆரணி பேத்தியின் கல்விக்கும் இவற்றின் வருகின்ற சிறிய வருமானம் தான். இவ்வாறு சொத்துக்களையும் உயிர்களையும் இழந்து நாளாந்தம் நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றார்கள், என் மகள் போல எத்தனையோ பெண்கள் இளம் வயதிலேயே கணவனைப் பறிகொடுத்து பல்வேறு சமூக நெருக்கடிகளைக் தினம் தினம் எதிர்கொள்கின்றார்கள். இவற்றுக்கெல்லாம் யார் பொறுப்பு? என வினாவை முன்வைத்தார்.
வடக்கு மாகாணத்தில் வாழும் 3 லட்சத்து 76 ஆயிரத்து 405 குடும்பங்களில் 52 ஆயிரத்து 142 குடும்பங்கள் கணவனை இழந்த நிலையில் பெண்களைத் தலமைத்துவமாகக் கொண்ட குடும்பங்கள் என மாவட்டச் செயலகங்களின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு வடக்கின் 5 மாவட்டச் செயலக அரச அதிபர்களின் புள்ளி விபரங்களின் பிரகாரம் மொத்தமாக 376405 குடும்பங்கள் வடக்கில் வாழ்கின்றார்கள். இவ்வாறு வாழும் குடும்பங்களில் 52142 குடும்பங்கள் கணவனை இழந்து வாழும் நிலையில் இவர்களில் 10 ஆயிரத்து 303 குடும்பங்களுக்கு மேல் கடந்த காலத்தில் யுத்தத்தின் போது கணவர்கள் உயிரிழந்தமையினால் விதவைகள் ஆக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு யுத்தம் காரணமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் விதவைகள் ஆக்கப்பட்ட பெண்கள் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே அதிகமாக வாழ்கின்றனர். வடக்கு மாகாணத்தில் இறுதி ஆண்டின் நிலவரப்படி மாகாணத்தில் வாழும் குடும்பங்களில் 18 வீரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் விதவைக் குடும்பங்களாகவே தற்போதும் வாழ்கின்றமை இதன் மூலம் உறுதி செய்யப்படுகின்றது.
மரணத்தால் ஏற்படும் இழப்புகள் தவிர்க்க முடியாதவை. உளவியல் பிரச்சினைக்கு உட்பட்டுக் காணப்படுகின்ற விதவைகளை நாங்கள் நோக்குவோமானால் அன்பார்ந்த கணவரின் மரணத்தால் ஏற்படும் இழப்பை எதிர்கொள்ளும்போது உண்டாகும் இழப்புத் துயர் துன்பமும் துயரமும் சொல்லில் வடிக்க முடியாதவை. கணவரின் திடீர் இழப்பின் மூலமாக இவர்களிடையே பயம், பதட்டம், ஏக்கம், கவலை, களைப்பு, என்பன காணப்படுகின்றன. இழப்புத் துயரத்துக்கு உளவியல் ஆலோசனை அவசியம். இழப்புத் துயரம் மனச்சோர்வுக்கும் வழி வகுத்துவிடலாம். எனவே, அதற்கு ஆலோசனை பெறுவதே சிறந்தது.
எதிர்கால நம்பிக்கையின்றிக் காணப் படுகின்றனர். தற்போதுள்ள நிலையில் அவர்கள் தங்கள் குடும்பத்தைக் கொண்டு செல்வதில் கஷ்டமான நிலையை அனுபவிக்கின்றனர். நாளாந்த பொருட்களின் விலையுயர்வு காணப்படுவதால் குடும்பச் சுமை அதிகரித்துச் செல்வதால் அன்றாடத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.
சிலர் தங்கள் பிள்ளைகள் அல்லது கணவன் தடுப்பு முகாம்களில் இருப்பதனாலும் தங்கள் கணவர் இறந்தமையாலும் பல அசௌகரியங்களுக்கு முகங் கொடுக்கின்றனர். நாளாந்த செயற்பாடுகளை செய்வதில் தாமதம் காணப்படுகின்றது. நித்திரைக் குறைவு, தனிமைஉணர்வு , மாத்திரமன்றி சமூகக் கலாசாரச விடயங்களைக் கூடப் பின் பற்றுவது கடினமாகவுள்ளது. விதவை என்கின்ற ஒரேயொரு காரணத்தினால் அவர்களை ஏனையோர் வித்தியாசமான நிலையில் பார்க்கின்றனர். அவர்களுக்கு மதிப்பு அளிக்கப்படுவதில்லை. கலாசார நிகழ்வுகளில் தட்டிக் கழிக்கப் படுகின்றனர். முன்னுரிமை அளிக்கப் படுவதில்லை.
சிலரிடம் இன்னும் போர்க்காட்சிச் சம்பவங்கள் அவர்களின் மனதில் பசுமை மரத்து ஆணி போல் ஆழமாகப் பதிந்துள்ளது. இவை மனவடுக்களாக மனதிலே பதிந்து காணப்படுகின்றன. இவற்றை எம்மிடம் தெரிவிக்கும் போது அழுகை, கோபம், பயம், நடுக்கம், ஏக்கம், என்பனவற்றை வெளிப்படுத்துகின்றனர். மேலும் தங்களின் பாதுகாப்புக் காரணங்களுக்காக அல்லது தொழில் வாய்ப்பிற்காக தனிமையில் புதிய இடங்களுக்குச் செல்வதில் பயப்படுகின்றனர். சிலர் தாங்கள் வீடுகளில் முடங்கியிருக்கப்போவதாகவும் வெளியிடங்களுக்கு செல்லப்போவதில்லை என்றும் கூறுகின்றனர்.
போரில் இறந்தவர்கள் இறந்து போய்விட்டார்கள். ஆனால் அவர்களை பறிகொடுத்த பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னமும்போர்ச்சூழல் காரணமாக அதே அச்சத்தில், அதே சூழ்நிலையில் வாழவேண்டிய நிலை தொடர்கிறது. அபிவிருத்திகளும், மீள்குடியேற்றம், புனரமைப்புக்களும் கொல்லப்பட்ட உயிர்களையும், இழக்கப்பட்ட உடைமைகளையும் ஈடு செய்து விடுமா?
பிறந்த மண்ணில் எத்தனை ஆயிரம் உயிர்கள் இன்னமும் அடைபட்டுக் கிடக்கின்றார்கள். உறவுகள் புதையுண்ட மண்ணில் இழப்புகளின் சோகத்தில் மூழ்கி அந்த இழப்புக்களின் சுமைகளைச் சுமக்க முடியாமல் சுமந்து துன்புறுகிறார்கள். அவர்களது துயர் துடைத்து சுமைகளை இறக்கி ,மனதில் நம்பிக்கை விதைகளை விதைத்து புத்துணர்ச்சி ஏற்படுத்துவதற்கு அவர்களின் நினைவுகளை வெளியே கொண்டு வருவதற்கு அரங்கத்தின் ஊடான ஆற்றுப்படுத்தல் வழிவகுக்கும்
மக்களுக்கு எடுத்துச்செல்லவேண்டிய விடயங்களையும், கருத்து மற்றும் , செய்திகளையும், அரங்கக்கலை வடிவங்களை கொண்டு அவர்கள் வாழ்ந்த சூழல்களுக்கும், அவர்களது நம்பிக்கைகளுக்கும் ஏற்ப, வடிவங்கள் மனிதரது தேவைக்குக் கேற்ப செய்திகளை கொண்டு செல்லும் ஒரு ஊடகமாக இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.
நாடகம், கலை, இலக்கியம், கலைக்கான கல்வி நடவடிக்கைகள்,மனத் தடைகளையும் விடுவித்து அவர்களை சமூகச் செயற்பாடுகளிலும், எதிர்காலத் திட்டமிடலுக்கும் ஆளுமை செழிப்பிற்கும் விடுதலை மிக்க வாழ்விற்கும் ஆளுமையும் சக்தி உள்ளவர்களாக புதிய செயற்பாடுகளில் ஊக்குவிக்கும் வழிகளை உருவாக்கிட ஆற்றுப் படுத்தல்கள் காலத்தின் தேவையாக உள்ளது.
விளையாடுதல், ஆடுதல், பாடுதல், எழுதுதல், வரைதல், கதை சொல்லல் போன்ற செயற்பாடுகள் சிறுவர்களது உரிமைகளையும் கடமைகளையும், உள ரீதியாக பாதுகாத்தல் ஆகும். இயற்கை அனர்த்தங்களினாலும் யுத்தத்தாலும் உளப்பாதிப்புக்குள்ளானவர்களையும் காயப்பட்டவர்களையும் ஆற்றுப்படுத்தி ஊரூராய் ஊடாடி மாற்றங்களை ஏற்படுத்தி மனோவியல் ஆலோசனைகள் வழங்கும் பொறிமுறையாக ஆற்றுப்படுத்தல் அரங்குகள் அமைகின்றது.
சிறுவர்களது குதூகலம், மன நிறை மலர்வான வாழ்வை உருவாக்கவும் இயலும் என்பது நிச்சயம். சிதைவடைந்த சமூகத்தை சரியான பண்பாட்டை நோக்கிக் கட்டியெழுப்பவும் அரங்கின் மூலம் அரங்கு பேசவேண்டியவற்றைப் பேசிட அடக்குமுறைக்கும் அச்ச நிலைக்கும் மனித மனங்களைப் புனரமைக்க ஆற்றுப் படுத்தல் அரங்கு அமைகிறது .
அரங்கத்தின் ஊடாக ஈழத்துக் கலைகளான. சித்திரம், சிற்பம், பாடல், ஆடல் நாடகம், வில்லுப்பாட்டு அரங்க விளையாட்டுக்கள், கூத்து, வீதி நாடகம், படக் காட்சி, வடிவங்களையும் பயன்படுத்தி இம் மக்கள் மனங்களில் உறைந்து கிடக்கும் உணர்வுகளை வெளியேற்றி அவற்றிலிருந்து மீள வழி செய்யல் உகந்தது. ஈழத்துக் கலைகளில் ஒரு தனிச் சிறப்பு பெற்ற கலை தான் வீதிநாடகம். வீதி நாடகம் என்றவுடன் நினைவுக்கு வருவது நான் நடித்த, பார்த்த வீதி நாடகங்கள் தான் நினைவுக்கு வருகின்றது.
ஊர்ஊராய் செல்லும் அணியினர் ஒரு கிராமத்தில் மூன்று நான்கு சிறு குழுக்களாகப் பிரிந்து சந்து பொந்து மூளை முடிச்சு என எல்லாத்திசைகளிலும் இருந்து பறையடித்து அந்த ஊரில் மக்கள் கூடும் இடத்திற்கு ஊர் மக்களெல்லோரும் ஒன்றாகி விடுவர். வீதி நாடகத்தினை தொடங்குவதற்கு முன்னர் வந்திருப்பவர்கள் அங்கு இசைக்கப்படும் பறை மற்றும் பக்க வாத்தியங்களின் இசைக்கேற்ப அரங்கப் பாடல்களையும் பாடி ஆடி மகிழ்வார்கள். வீதி நாடகங்கள் மக்களுக்கு விரைவாக துள்ளியமாக நேர்த்தியாகக் கருத்துக்களைக் கொண்டு செல்லக் கூடிய ஊடகமாகவே வீதி நாடகங்கள் இடம் பெற்று இருக்கின்றது.
நான்காம் ஈழப் போருக்கு முற்பட்ட காலப்பகுதிகளில் உளவியல் ஆரோக்கியத்தினை எங்களுடைய கலை. கலாசரா. பண்பாட்டு. சமய. விழுமியங்களை நெறிப்படுத்தி ஆரோக்கியமான சமாளிப்பு ஆற்றல்களையும் நெறிமுறைக்குள்ளும் மனம் சார்ந்த உளவியல் பகுப்பாய்வு கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட தளங்களில் கருத்துப் பகிர்வு உரையாடல்கள் கேட்கவோ அல்லது உள்வாங்கும் நிலையும் காணப்பட்டு இருந்தது.
அப்போதைய சூழலில் உள நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் வீதம் குறைவாக காணப்பட்டு இருக்கின்றது நான்காம் கட்ட ஈழப் போருக்குப் பிற் பட்ட காலப்பகுதியில் கலை, கலாசார, சமய, சமூக , பண்பாட்டு, விழுமியங்கள் அதிகம் பின்பற்றா நிலையும் அதனுடைய வறுமையும் இதனைப்பயன் படுத்த முடியாத வகையில் ஓர் உளம் சார் இன அழிப்பினை திட்டமிட்டு அரசு நடைமுறைப்படுத்தி வருவதை பார்க்க முடிகின்றது.
இவ்வாறு பாதிப்புக்குள்ளான, உள்ளாகிக் கொண்டு இருக்கின்ற எமது சமூகத்தில் இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு போன்ற மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளால் துவண்டு போயுள்ள ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் சமூக, பொருளாதார அரசியல் தேவைகளை அரங்கினூடான உளசமூகச் செயற்றிட்ட ஆற்றுப்படுத்தலினூடாகப் புரியவைத்திட ஆற்றுப்படுத்தல் அரங்க செயற்பாடு இன்றைய தேவைகளுள் மீளக் கட்டியெழுப்புவதற்கு அரங்கத்தின் ஊடான ஆற்றுப்படுத்தலே வழி வகுக்கும்.
அரங்க ஆற்றப்படுத்தல் உள்வாங்கப்பட்டிருக்கும் விடயங்கள் தற்போது உளவியல் ரீதியான பாதிக்கப்பட்டவர்களுகான புனர்வாழ்வு சிகிச்சை முறைகளில் வரைதல் ,எழுதல்,பாடல்,, ஆடல், பேசுதல், நடித்தல்,போன்றவற்றை உளவியல் சிகிச்சை முறைகளாக பயன் படுத்துகின்றார்கள்.
முரண்பாடுகளுக்கான அகிம்சை சார் தீர்வு, சமூக உரையாடல்,சமய மற்றும் இனப் பன்மைத்துவம் மற்றும் வன்முறையெர்திப்பு ஆகிய சிந்தனைகளை மக்கள் மயப்படுத்தி, சகல மக்களும் சமத்துவத்துடன் வாழும் ஆர்வத்தை அரங்க ஆற்றுப்படுத்தல் ஏற்படுத்தும்.
இந்த துன்பகரமான வாழ்வு எம் வாழ்வின் இறுதி அத்தியாயம் அல்ல. இன்னுமொரு புதிய வாழ்வு, சுபிட்சமும், மகிழ்ச்சியும் கொண்ட வாழ்வு எமக்காகக் காத்திருக்கிறது என்ற நம்பிக்கையினை சமூகத்திடமும் விதைக்கப்பட்டு அவை துளிர் விட்டு வளர்வதற்கு வழி வகுக்கும்.
சமூக பொருளாதார அரசியல் அபிலாசைகளை உரிய முறையில் பெறுவதற்கும் இனம்,மொழி, சார்ந்த ஒற்றுமைத்தன்மையை உருவாக்கி சிறுவர் முதல் பெரியோர் வரை ஆக்க முயற்சிகளை ஆரம்பிக்கும் திறன்,பரந்த அறிவு, நடுநிலைமை, தற்துணிவு , சமூக இசைவு, ,விடா முயற்சி, தன்னம்பிக்கை, பல்துறை தேடல் , நிபுனத்துவ உருவாக்கம், முடிவெடுத்தல், நலன் விரும்பும் மனப்பான்மை, பங்களிப்பு, தன்னார்வுத்தொண்டு, தன்னலமற்ற சேவை, வெளிப்படத்தன்மை, ஒத்துழைப்பு, மன தைரியம் ,தலைமைத்துவம் என ஒரு ஆளுமையுள்ள சமூகத்தினை. அரங்கத்தின் ஊடான ஆற்றுப்படுத்தல் ஏற்படுத்திடும்.
நிலவன் / நிக்சன் பாலா,
உளவளத்துணை,
மற்றும் உளச்சமூகப்பணியாளர்.
நன்றி E குருவி