கிழக்கு மாகாணத்தில் சுகாதாரத் துறையினையும், சுதேச வைத்தியத்துறையினையும் அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டத்தில் கனடா நிறுவனங்கள் உதவி வருகின்றன.
அந்தவகையில் கிழக்கு மாகாண சுகாதாரத் துறையினை அபிவிருத்தி செய்வதற்கான ஓர் கட்டமாக கனடா வைத்தியர் குழுவொன்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை இன்று கிழக்கு மாகாணசபையில் மேற்கொண்டுள்ளது.
சக்தி வாய்ந்த ஓர் சுகாதார அபிவிருத்தி கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டு வர வேண்டும், அதற்காக சிறந்த சுகாதார அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு தொடர்ந்தும் கனடா உதவிகளை வழங்கவுள்ளதாக அங்கு வருகை தந்த வைத்தியர் ப்ரான்சிஸ் தெசிஸ்சர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவிக்கையில்,
கிழக்கு மாகாண சுகாதாரத் துறையின் அபிவிருத்திக்கு மேலும் வலு சேர்க்கும் முகமாக கனடா நிறுவனங்களின் பங்களிப்பு மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்ந்தும் வழங்கப்பட உள்ளது.
இதன் மூலம் கிழக்கு மாகாண சுகாதார அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு கிடைக்கும் எனவும் அபிவிருத்திகளை நாம் மேலும் பெறுவதில் எவ்வித முரண்பாடுகளும் இல்லாமல் பெற வேண்டியது எமது கடமை எனவும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கிழக்கு மாகாண சுதேச துறையின் மாகாணப் பணிப்பாளர், சுதேச வைத்திய துறை வைத்தியர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.