எமது வாழ்வில் ஒரு பெரும் சோகத்தை தந்தது. 2009 ஆம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடப்பெயர்வு, சிறிலங்கா அரசாங்கம் இனப்போரை தங்களுக்குச் சாதகமாக நடத்தி அப்பாவி தமிழ் மக்களை கொன்றொழித்த அத்தனை கொடிய வலிகள் வரலாற்றிலே மறக்க முடியாதவை.
தமிழர்களின் ஆயுதப்போராட்டங்கள் 1970களின் இறுதிப் பகுதியிலேயே ஆரம்பித்திருந்தன. தமிழ் மக்களின் இடம்பெயர்வுகள் அதற்கு இரு தசாப்தங்களுக்கு முன்னரே ஆரம்பித்து விட்டன.1956, 1958, 1961, 1977, 1981, 1983 ஆகிய ஆண்டுகளில் பதற்றம், கலக்கம், இடப்பெயர்வுகளும் மனித அவலத்தின் முக்கிய சாட்சியமாகவும் போரின் குறியீடாகவும் அமைகின்றது. அதன் தொடர்ச்சியாக 83இல் இடம்பெற்ற சிங்கள இனவாத அரசின் கொடூரங்கள் பெரும் அழிவு ஏற்படுத்தப்பட்டிருந்தது. அவ்வாறு ஆரம்பமான தமிழ் மக்களின் இடப்பெயர்வு 2009 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக நீடித்திருந்தது. கதறக் கதற படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் சிதறுண்ட உடலங்களை பார்த்த நினைவுகள் இன்றும் என்னை ஆட்கொள்கிறது.
உள்நாட்டில் தமிழர்கள் உயிர் வாழ்வதற்காக இடப்பெயர்வை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டோர் எண்ணிக்கைதான் மிக அதிகம். இடம்பெயர்த்தப்படும் போதும் முதலில் பதுங்குகுழிகளை மக்கள் அமைத்திட ரத்தம் குடித்து ஏப்பமிடும் அரசின் மரணப்பிடியில் மாட்டிக்கொண்ட அனைத்து மக்களின் உணர்வுகளும் எப்பொழுது நாம் இறப்போம் என்று சொல்ல முடியாத வகையில் அவர்கள் ஒவ்வொரு நாளும் துயரப்பட்டுக் கொண்டிருந்தனர். பல நாடுகளின் கூட்டுச் சதியால் புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் ஒரு மாபெரும் இன அழிப்பினை நிகழ்த்தியது சிங்கள பேரினவாதம்.
உலக நாடுகள் கொடுத்த அதிபயங்கர ஆயுதங்களாலும், ரசாயனக் குண்டுகளும், கொத்துக்குண்டுளும் நம் இனத்தை அழிக்க ஆரம்பித்து மன்னாரின் முள்ளிக்குளம் அடம்பன், பாலைக்குழி, மடு வழியாக படையினரின் முன்னேற்றம் ஒருபுறம் இருக்க ஓமந்தையில் இருந்து முன்னேறிய வன்னி முன்நகர்வு முயற்சியில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா படையினரின் பல அணிகளின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு இடைநிறுத்திட, கிளாலி கடற்கரை தொடக்கம் முகமாலை அடங்கிய நாகர்கோவில் கடற்கரை வரையிலான வட போர்முனையும் அதிரத் தொடங்கியது.
நாற்புறமும் பல்லாயிரம் எதிரிகள் சூழ்ந்துகொண்டு சர்வதேச நாடுகளின் ஆயுத தொழில்நுட்ப உதவியோடு நிகழ்த்திய கொடும் போரை எதிர்கொண்டு பல்லாயிரம் எதிரிகளை வீழ்த்திய சிலநூறு வீரர்களின் வீரஉடல்கள் எம் மண்ணிலே போர்க்களத்தின் களச்சாவுகளைவிட ஒரு மணி நேரத்திற்குள் சிறிலங்கா படையினரும் வான்படையின் போர்விமானங்களும் நடத்திய தொடர் குண்டுகளையும் எறிகணைகளைகளையும் மழைபோல பொழிந்திட ஆயிரம் இரண்டாயிரம் என ஊர் மனைகளுக்குள் விழுந்த எறிகணைகளில் ஏற்பட்ட அவலச் சாவுகள் பல நூறைத் தாண்டத் தொடங்கிட பாதுகாப்பைத் தேடி ஒதுங்கிய ஆலயங்கள், பாடசா6rலைகள், குடியிருப்புகள் ,வைத்தியசாலைகள் , என மக்கள் செறிவான இடங்களை இலக்குவைத்து கண்மூடித்தனமான தாக்குதல்களில் பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவங்கள் எம் வாழ் நாளிலும் மறக்க முடியாத வடுக்களை ஏற்படுத்தியிருக்கின்றது.
அதேவேளையில் பாதுகாப்பு வலயத்தின் சகல பகுதிகளிலும் சிறிலங்கா படையினர் தொடர்ந்து எறிகணை, கிபிர், மிக் போன்ற போர் விமானங்கள், எம்.ஐ.24 உலங்குவானூர்திகள்,கனரக பல்குழல் பீரங்கி ஆட்லறி எறிகணை,, ஆர்பிஜி உந்துகணை மற்றும் சிறிலங்கா வான்படையினரின் எம்ஐ-24 ரக உலங்குவானூர்திகளின் பீரங்கித் மற்றும் தொலைதூர துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை ஆட்டிலறிகள், பீரங்கிகள், கடற்படையினரின் பீரங்கி மற்றும் மோட்டார் உட்பட சிங்கள காலாட் படையினரின் நீண்ட தூரவீச்சுக்கொண்ட துப்பாக்கிகளாலும் சரமாரியான தாக்குதல் அகோரமாக நடத்தினர். உணவு,குடிநீருக்கான பற்றாக் குறைகள், மருத்துவ நெருக்கடிகள், இருப்பிடம் இல்லாத வீதி வாழ்வு, பதுங்குகுழி வாழ்வு என இன்னும் பலவற்றை அனுபவித்த காலம் மிகவும் கொடுமையானது.
இடம்பெயர்வுக் காலங்களில் பாடசாலைகள், பொது நோக்கு மண்டபங்கள் வைத்தியசாலையாக மாறின இப்படி 2008 கார்த்திகை மாதம் விஸ்வமடு பாடசாலையில் இயங்கிய வைத்தியசாலை 421 பிரசவங்களும் 65க்கு மேற்ப்பட்ட சத்திரசிகிச்சைப் பிரசவங்களும், கர்ப்பப்பை அகற்றுதல் உள்ளடங்களாக பல பெண்ணியல் சத்திரசிகிச்சைகளும் அக்காலப்பகுதியில் நடைபெற்றது. வைத்தியர் மனோகரன் தலைமையில் சத்திர சிகிச்சை பிரசவங்களை திருமதி யசோதரன் என்ற தாதி உத்தியோகத்தர் IUS நிறுவனத்தில் பயின்று வெளியேறிய தாதி உத்தியோகத்தர்களும் பொறுப்பேற்று கடமைசெய்து வந்தமை குறிபிடத்தக்கது.
அதேவேளையில் தமிழர்களுக்கு எதிராக சிங்களப் பேரினவாதம் நடத்திய போரில் பாதுகாப்பு வலயத்தின் சகல பகுதிகளிலும் சிறிலங்கா படையினர் தொடர்ந்து எறிகணை, பல்குழல் பீரங்கி, ஆர்பிஜி உந்துகணை மற்றும் சிறிலங்கா வான்படையினரின் எம்ஐ-24 ரக உலங்குவானூர்திகளின் பீரங்கித் தாக்குதல்களில் கர்ப்பிணித் தாய்மார்கள்,சிறுவர்கள் ஆண்கள், பெண்கள், முதியவர்கள், என்ற பேதேமின்றி பலரும் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள்.
உலக நாடுகள் செய்த சூழ்ச்சியும் அதனால் உருவான மனித குலத்திற்கு எதிரான இனப்படுகொலைக் கொடூரங்களும், வடுக்களும் வரலாற்றில் ஏமாற்றங்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச சமூகத்தால் மறுக்கப்பட்ட நீதி, எதிர்கால நகர்வுகள் எத்தனை ஆண்டுகள் சென்று திரும்பி பார்த்தாலும் அதன் ரத்த வாடை காற்றில் வீசிக்கொண்டே இருக்கும். பாதுகாப்பு வலயம் என கூறப்பட்ட பகுதிகளில் மக்களை வந்து தங்குமாறு கூறிய சிங்கள இனவாத அரசு உலக நாடுகளினால் தடை செய்யப்பட்ட இரசாயன எறிகுண்டுகளை இரவு பகல் பாராது இடைவிடாது வீசி பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றழித்த இன அழிப்பு சம்பவங்கள் பலவற்றை பார்த்திருக்கின்றேன். எங்கும் நடக்காத கொடூரம் எமது தாய் நிலத்தில் நடந்தேறிய மரணத் துயரத்தின் அவலம் இன்னும் என்னை வாட்டுகின்றது. வேதனைமிகு சம்பவங்கள் சிலவற்றை இங்கு குறிப்பிடுகின்றேன்
வன்னியில் பாதுகாப்புவலயப் பகுதிகளில் சிறிலங்காபடையினர் மேற்கொண்ட ஆட்லறி எறிகணைத் தாக்குதல்களில் 2009 மார்ச் மாதத்தில் படுகாய மடைந்து உயிரிழந்த கர்ப்பிணித் தாய்மார்களில் சிலரது விபரங்கள்.
2009ம் ஆண்டு பங்குனி மாதம் முதலாம் நாளில் இருந்து ஏழாம் நாள் வரை பாதுகாப்பு வலயப் பிரதேசம் காயமடைந்த நிலையில் 700 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார்கள். இவர்களில் 137 பேர் சிறுவர்கள். இவர்களில் 32 பேர் உயிரிழந்தர்கள்.
2009ம் ஆண்டு பங்குனி மாதம் 10ம் நாள் அன்று வன்னிப்பெரு நிலப்பரப்பில் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 124-க்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 254-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன் மற்றும் பொக்கணைப் பகுதிகளை நோக்கி அன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை தொடக்கம் பிற்பகல் வரை சிறிலங்கா படையினர் அகோர ஆட்லெறி எறிகணை, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினார்கள். இதில் காயமடைந்த நிலையில் கொண்டு வரப்பட்ட 254 பேரில் 45 பேர் மாத்தளன் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 15 பேர் சிறுவர்கள். கொல்லப்பட்டவர்களின் 26 உடலங்கள் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டது.
2009 பங்குனி பதினேழாம் நாள் அன்று படையினரால் ஏவப்பட்ட எறிகணைகள் அங்கு உறங்கிக் கொண்டிருந்த நிறைமாதக் கர்ப்பிணித் தாய் ஒருவர் சிசுவுடன் வயிறு பிளவுற்று சிசுவும் தாயும் துடி துடித்து இறந்திருந்தார். இப்படிப் பல கர்ப்பிணித் தாய்மார்கள் சொல்லொண்ணா துயர்களுடன் எங்கு செல்வ தெனத் தெரியாது வீதியோர மெல்லாம் இரத்தவெள்ளத்தில் தோய்ந்தசடலங்களைப் பார்த்துக் கடந்து செல்ல வேண்டிய அவல நிலை காணப்பட்டது.
2009-சித்திரை 8ம் திகதி புதன் கிழமை அன்று வன்னியில் பாதுகாப்பு வலயப் பகுதியில் பொக்கணைப் பிரதேசத்தில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையம், பால்மா விநியோக நிலையம் ஆகியவற்றின் மீது அன்று காலை 7:00 மணியளவில் சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதல்களில் 150 பொதுமக்களுக்கு மேல் கொல்லப்பட்டார்கள். மேலும் 100 சிறுவர்கள் உட்பட 290 பேருக்கு மேல் படுகாயமடைந்தார்கள்.
பொக்கணையில் இயங்கிவந்த சிறுவர் பாதுகாப்பு நிலையத்தை இலக்கு வைத்து சிறிலங்கா இராணுவத்தினரால் 3 எறிகணைகள் வீசப்பட்டது. இத்தாக்குதலில் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் உட்பட பெருமளவிலானோர் படுகொலை செய்யப்பட்டார்கள்.படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களில் 47 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தார்கள்.
2009-சித்திரை 12ம் திகதி ஞாற்றுக் கிழமை அன்று அதிகாலை முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள பாதுகாப்பு வலயப் பிரதேசம் மீது சிறிலங்கா படையினர் நடத்திய அகோர எறிகணை துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 294 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 432 பேர் படுகாயமடைந்துள்ளனர். இப்பகுதியில் 45 நிமிட நேரத்தில் 300 க்கும் அதிகமான எறிகணைகள் சிறிலங்கா படையினரால் ஏவப்பட்டன. அவை அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் ஆகிய மக்கள் வாழ்விடங்கள் மீது வீழ்ந்து வெடித்தது.
2009-சித்திரை 19ம் திகதி ஞாற்றுக் கிழமை அன்று அதிகாலை 2.00 மணி தொடக்கம் தம்மிடம் இருக்கும் அனைத்து நாசகார ஆயுதங்களின் கூட்டாதரவுடன் பாரிய படை நடவடிக்கையினை இராணுவம் மேற்கொண்டது. அந்த அகோர தாக்குதலில் 476 சிறுவர்கள் உட்பட 1496 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் 3333 தமிழர்கள் காயமடைந்தார்கள்.
2009ம் ஆண்டு சித்திரை மாதம் 20ம் திகதி திங்கள் அன்று பீரங்கிக் குண்டுகளும், இரசாயனக் குண்டுகளும், கொத்துக்குண்டுகளும் அதிகாலையில் இருந்து மதியம் 11 மணி வரை புதுமாத்தளன் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை பரந்திருந்த மக்கள் மீதும் அங்கு இருந்த தற்காலிக மருத்துவமனைகள் மீதும் சிங்களப்படைகளின் விமானங்களும் பீரங்கி மோட்டார்களும் குண்டு மழை பொழிந்தது. 5 மணித்தியாலப் போராட்டத்தில் கடற்கரை மணலினுள்ளும், கடலிற்குள்ளும், ஏன் ஓர் சிறு மறைவு இருந்தால் கூட அதனுள்ளும் மறைந்து தம்மைக் காக்க முயன்ற குழந்தைகள், சிறார்கள் உட்பட 985 அப்பாவி மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டதுடன். 2300 பேர்வரை காயமடைந்தனர்.
காவல் அரண்களிற்குத் தப்பி ஓடிய மக்களைப் பிடித்து கொண்டுக் மீண்டும் புதுமாத்தளன் வைத்தியசாலைப் பக்கம் முன்னேறிய படையினர் அங்கு காயப்பட்டிருந்த பொதுமக்களையும் போராளிகளையும் சரமாரியாகச் சுட்டனர். அதே வேளை இரசாயனக் குண்டுத் தாக்குதலினாலும் மயக்க வாயுக்களினைக் கொண்ட குண்டுகளும் வீசப்பட்டிருந்தமையால் வைத்தியசாலையினை சூழவுள்ளோர் மயக்கமடைந்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
2009ம் ஆண்டு சித்திரை மாதம் 22ம் திகதி புதன் கிழமை அன்று சிறிலங்கா படையினர் அம்பவலவன் பொக்கணை,வலைஞர்மடம் மக்கள் வாழ்விடங்கள் மீது செறிவான ஆட்லெறி எறிகணை, கொத்துக்குண்டு எறிகணை பீரங்களில் 324 பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 423 பேர் படுகாயமடைந்துள்ளனர். வலைஞர்மடம் கத்தோலிக்க தேவாலயம் மீது சிறிலங்காப் படையினர் நடத்திய செறிவான எறிகணைத் தாக்குதலில் பங்குத்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளார் படுகாயமடைந்தார். தேவாலய வளாகத்தில் மட்டும் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10 பேர் படுகாயமடைந்தனர்.
வலைஞர்மடத்தில் இயங்கிவந்த நெட்டாங்கண்டல் மருத்துவமனை மிக மோசமாக சேதமடைந்திருந்தது. கடந்த இரு நாட்களில் சிறிலங்கா படையினரின் கொடூரத் தாக்குதலில் 2 ஆயிரம் வரையான மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 1700 பேர் உயிராபத்தான நிலையில் முள்ளிவாய்க்கால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள் .
இதே வேளை காயப்பட்டவர்களை ஏற்றிச்செல்ல அனைத்துலக செஞ்சிலுவை சங்கக்குழுவின் ‘கிறீன் ஓசின்’ கப்பல் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு வந்தது. ஆனால் கப்பலை நோக்கி சிறிலங்கா படையினர் பீரங்கித் தாக்குதலை நடத்தினர். இதனால் கப்பல் மீண்டும் ஆழ்கடலுக்குச் சென்றது. அதனையடுத்து பல மணிநேர தாமதத்தின் பின்னர் கப்பல் கரையில் இருந்து ஒரு கிலோ மீற்றர்களுக்கு அப்பால் தரித்து நின்றது.
2009ம் ஆண்டு சித்திரை மாதம் 22ம் திகதி புதன் கிழமை அன்று மாலை 6:30 மணி வரைக்கும் 354 நோயாளர்கள் மட்டும் கப்பலில் ஏற்றப்பட்டனர். 500 நோயாளர்களை ஏற்றுவதற்கே முன்னர் திட்டமிடப்பட்டடிருந்தது. அதேவேளையில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக் குழுவின் பொறுப்பதிகாரி படையினரின் தாக்குதல் அச்சம் காரணமாக கரைக்கு வரவில்லை. அவர் கப்பலிலேயே நின்றுவிட்டார். அதேவேளையில் படையினர் நடத்திய தாக்குதலில் காயமடைந்த அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளாரும் கப்பலில் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
2009-ம் ஆண்டு வைகாசி மாதம் முதல் வாரத்தில் முள்ளிவாய்க்கால் மத்தியில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் கனிஷ்ட வித்தியாலயத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்த பிரதான மருத்துவமனையை இலக்கு வைத்து அரச படையினர் மேற்கொண்ட சரமாரியான எறிகணைத் தாக்குதலில் ஏற்கனவே காயமடைந்து, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்கள் உள்ளிட்ட பல நூற்றுக்கணக்கானவர்கள் ஸ்தலத்திலேயே துடிதுடித்துப் பலியானார்கள். இதே போன்று ஒவ்வொரு நாட்களும் இன்னும் பலர் வெவ் வேறு இடங்களில் படுகொலை செய்யப்பட்டார்கள்.
குழந்தைகள் வற்றிய வயிற்றோடு இறந்துபோனதற்கு முக்கிய காரணம் உணவு, குடிநீருக்கான பற்றாக்குறை, மருத்துவநெருக்கடிகள், இருப்பிடம் இல்லாத வீதி வாழ்வு, பதுங்குகுழி வாழ்வு, என இன்னும் பலவற்றை பட்டியல் படுத்திச் சொல்லமுடியும். களமுனையில் நின்ற போராளிகள் உணவு தமக்கில்லாது விட்டாலும் இருக்கின்ற உணவினை வயிறு நிறைய குழந்தைகளுக்கு கொடுத்தார்கள். காயப்பட்டு வரும் போராளிகளுக்கும் மக்களுக்கும் குருதி தேவையினை பூர்த்தி செய்த குருதிக் கொடையாளிகளின் ஆறுதல் வார்த்தைகள் இன்னும் என் காதுகளில் எதிரொலிக்கிறது. விடுதலை இலட்சியத்தின் பற்ருறுதிக்கு தக்க சான்றாய்.
தமிழீழம் என்கின்ற தணியாத லட்சியத்திற்காக எத்தனை கொடிய துன்பங்களையும், சுமக்கத் தயாராகி போராடியப் போராளிகளையும் பொதுமக்களையும் நச்சுக் குண்டுகள் மூலம் அழித்தொழித்தமையும், அங்கு பாதுகாப்பு வலயம் என கூறப்பட்ட பகுதிகளில் மக்களை வந்து தங்குமாறு கூறிய சிங்கள அரசு அதேவேளை உலக நாடுகளினால் தடை செய்யப்பட்ட இரசாயன எறிகுண்டுகளை இரவு பகல் பாராது இடைவிடாது வீசி பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றழித்த நிகழ்வுகளையும் நேரில் பார்த்த காட்சிகள் சாட்சியாய் உள்ளன.
சர்வதேச சட்டங்களுக்கு முரணாக போரில் உயிரிழிப்புக்களையும், துயர்களை சுமந்த போதும் தொடர்ந்து பயணித்த நான்கு இலட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் சுமக்க முடியாத வேதனைகளையும், இழப்புக்களையும் ,சுமைகளையும் கடந்து சிறீலங்காப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்ட முட்கம்பிக்குள்ளும் வனவாசம் செல்வதற்கு தரம் பிரிக்கப்பட்டார்கள்.
சகல பிரதேசங்களும் யுத்தப் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டதுடன் யுத்தத்தில் ஈடுபட்டு 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி நூற்றுக்கணக்கான விடுதலைப் புலிகள் அமைப்பின் முதன்மை உறுப்பினர்கள் உட்பட போராளிகள் மற்றும் பொதுமக்கள் படையினரிடம் உறவினர்களால் கையளிக்கப்பட்டும், சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டார்கள்.
முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் வெள்ளைக்கொடியுடன் கிறிஸ்தவ மதகுருவான பிரான்ஸிஸ் யோசப்புடன் இணைந்து பல போராளிகள் படையினரிடம் சரணடைந்திருந்தார்கள். இவ்வாறு சரணடைந்து காணாமல் போகச் செய்யப் பட்டவர்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்க முனைப்புக்காட்டி வருகிறது சிறிலங்க அரசு. மரணச் சான்றுதழ் பெற்றுக் கொள்ள மாட்டோம் என இக் கோரிக்கை விடுத்தவர்கள் சந்தேகக்கண் கொண்டு நோக்கப்பட்டதுடன் சிலர் விசாரணைக்கும் உட்படுத்தப் பட்டு வருகின்றார்கள். மனித உரிமைகள் எந்தளவுக்கு மதிக்கப்படுகின்றன என்பதையும் சிறுபான்மைச் சமூகமான தமிழ் சமூகத்தின் நிலைமை எப்படி இருக்கிறது என்பதையும் எடுத்துரைக்கும் காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் குறித்த பிரச்சினை. சிறிலங்கா அரசு எப்போது தீர்வு தரப் போகிறது என மக்கள் போராட்டங்களை நிகழ்த்தி வருகின்றார்கள் இதற்குச் சர்வதேசமும் பதில் கூற வேண்டும்.
முகாமுக்குள் வெளி ஆட்கள் வருவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை இராணுவத்தினாலும், போலீஸ் படையினராலும், மற்றும் அடிக்கடி பங்குகொள்ளுகின்ற அரசாங்க சார்பு துணை இராணுவக் குழுக்களினாலும் விசாரணை என்ற பெயரில் ஆண்களும், பெண்களும் பல வார்த்தைகளால் சொல்ல முடியாத உடல், உள, பாலியல், ரீதியாகப் பல சித்திரவதைகளையும், கொடுமைகளையும் அனுபவித்த சொந்தாங்கள் மன நோயாளியாகினோர் அதிகம். அவர்களில் பலர் இன்று யாழ்ப்பாணம் தெல்லிப்பளை, வவுனியா, மந்திகை, முல்லேரியா, மனநோயாளர் வைத்தியசாலைகளில் சிகிச்சைகள் பெற்று வருகின்றார்கள்.
தழிழர் பிரதேசங்கள் இராணுவமயப் படுத்தப்பட்டதனாலும், அங்கு இராணுவப் படைகளின் அதிகரித்த நடமாட்டத்தினாலும் பாதுகாப்புக் குறித்து அச்சம் நிலவுகின்றது. சகல பிரதேசங்களும் யுத்தப் பாதிப்புக்குள்ளாக்கப் பட்டதுடன் யுத்தத்தில் ஈடுபட்டு நீண்ட காலம் இரகசியத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாலும் பெண்கள் குடும்பப் பொறுப்பை ஏற்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். போரினால் கணவனை இழந்த ஒருபெண் பொருளாதாரரீதியிலும் உடலியல் மற்றும் உணர்வுகள் சார்பாகவும் எவ்வாறு ஒரு பாலியல் தொடர்புகளை பேணுபவளாக காணப்படுகின்றாள் இது ஒரு நியாயமற்ற தொடர்பு எனினும் இந்தப்போர் பல பெண்களை வலிந்து நுளைத்திருக்கின்றது.
தடுப்பில் இருப்பவர்களின் நிலை இன்னும் மோசமானது. ஒருநாள் போராளியாக இருந்தவர்கள் கூட வருடக் கணக்கில் தடுப்பில் வாட வேண்டிய கட்டாயம். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மாத்திரமல்லாது நலன்புரி நிலையங்களிலும் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் விசாரணைக்கெனக் கூட்டிச் செல்லப்பட்டனர். இன்னும் சிலர் சரணடைந்திருந்தனர். அவர்களில் பலருக்கு என்ன நடந்ததென்றே தெரியாத நிலை. எஞ்சியோர் இப்படிப்பட்ட தடுப்புமுகாம் களில் அடைக்கப்பட்டனர்.
வவுனியா மாவட்டமே கேந்திர நிலையமாக இயங்கியது. அங்கு தற்காலிக வாழ்விடங்களாகப் பாடசாலைகள் கூட்டுறவுப் பயிற்சி நிலையம், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, பல்கலைக்கழக வளாகம், மெனிக்பாம் முகாம், மற்றும் செட்டிகுளம் பகுதியில் பல வலயங்களாக்கப்பட்டு தற்காலிக கொட்டகைகளில் மக்கள் குடியேற்றப்பட்டு இருந்தனர்.
இடப்பெயர்வை அனுபவித்த மக்கள் மீள்குடியேற்றத்தின் பின்னர் தமது வாழ்க்கையைப் புனரமைப்பதற்காகப் பல்வேறு வளங்களைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. மனித, சமூக , பௌதிக, நிதி,சுற்றுச்சூழல், அரசியல் சூழமைவு என்பனவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. போர்ச்சூழலினால் சின்னா பின்னமாக்கப்பட்டு தற்போது ஓர் சுமூகமான முறையில் தமது நாளாந்த செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறபோதிலும் அரசியல் முரண்பாடுகளும் மோதல்களும் பாதிக்கப்பட மக்களளின் வாழ்க்கை நிலைமை வீழ்ச்சி நிலைக்குள்ளாக்கப்படக் கூடிய ஓர் அச்சுறுத்தலாய் உள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.
உள்நாட்டு யுத்த இடர்களை அனுபவித்த மக்களால் அதன் பாதிப்புகளிலிருந்து இலகுவாக மீட்சிபெற முடியாதுள்ளது. இதற்கு அவர்கள் எதிர்கொண்ட வன்முறை பரவியிருந்த அளவும் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளின் அளவும் காரணமாகும். பாரிய யுத்த அனர்த்தத்தின் பின்னர் உளவியல் ரீதியாக மக்கள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு தனிநபர் சாதாரணமாகவே உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகின்றமை நாம் அறிந்த உண்மை. அந்த வகையில் 2008- 2009 ஏற்பட்ட பாரிய யுத்த அனர்த்தத்தின் பின்னர் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்வதில் கூட பல உளவியல் ரீதியான பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. ஒரு தனிமனிதனது அறிவு அனுபவம் செயற்பாடுகளில் தாக்கத்தின் அளவு கூடுதலாகக் காணப்படுகின்ற போது அவன் உளவியல் பிரச்சினைகளுக்கு உட்படுத்தப்படுகின்றான்.
பதகளிப்பு நிலை, பயம், பதற்றம், ஏக்கம், கவலை, ஆறுதலின்மை, களைப்பு, நித்திரையின்மை, பயங்கரக் கனவுகள், எப்போதும் எரிச்சல் படுதல், அனர்த்தத்திற்கு பிற்பாடான நெருக்கீட்டு நிலை , தனிமை உணர்வு, தாழ்வு மனப்பான்மை, என உடலியல் குணங்குறிகள் பல காணப்படுகின்றன. ஈழத்தில் உறவுகள் இறந்தவர்களின் உடல்களையும் காணமுடியாது போனதும் உரிய கலாசார விழுமியங்களுடன் இறுதிக் கிரிகைகளைச் செய்ய முடியாது போனம் சூழலினால் இழவிரக்கத்தின் விளைவுகள் பலர் மத்தியில் காணப்படுன்கிறது.
குழப்ப நிலை, இழவிரக்கம், அறிமுகமற்ற நிலை, மறதி, நித்திரையின்மை, பசியின்மை, செவிப்புல, கற்புல மயக்கம், குற்ற உணர்வு, அதிர்ச்சி, கவலை, உயிர் பிழைத்த குற்றவுணர்வு, தனிமை, கவலை, அச்சம், வெறுப்பு, கோபம், சோர்வு, பதட்டம், எரிச்சல், பழிவாங்கும் உணர்வு, விரக்தி, தற்கொலை எண்ணம், வெறுப்பு, ஏக்கம், ஏமாற்றம், இயலாமை, நம்பிக்கையின்மை,மனக்குழப்பம், மனச்சோர்வு, தற்கொலை உணர்வு என பல சொல்ல முடியாத உள நோய்களையும் கொண்டு தான் மக்கள் வாழ்கிறார்கள்.
படுகொலைகள் நித்தம் நித்தம் ஈழத்தில் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. போர்பூமியில் படுகொலைகள் ,பாலியல் வன்முறைகள், ஆட்கடத்தல்கள், காணாமல் போகச் செய்தல், தாங்கொணா சித்திரவதை போன்ற கொடுமைகள் மூலம் மனிதம் கேள்வி முறையின்றி ஈழத்தில் சிதைக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. பலர் இறப்பின் உச்சம் வரை சென்றிருந்தார்கள். இதன் தாக்கம் ஒரு புறம் இருக்க இன்றும் தொடர்கின்றது ஆயுதமுனை இல்லாத இன அழிப்பு.
மக்கள் உளரீதியாகப் பாதிக்கப்படுக் கொண்டிருக்கிறார்கள். இவற்றினால் கொலை, கொள்ளை, களவு, போதைக்கு அடிமையாதல் என்ற நிலையில் இளம் சமூகம் படையெடுக்கத் தொடங்குகின்றது. யுத்தத்தின் தாக்கவிளைவானது தனிநபர், குடும்பம், சமூகம் எனப் பல்வேறு மட்டங்களுக்கும் பரவிச்சென்றது. சமூக, கலாசார நடைமுறைகளில் (வழக்காறுகளில் கூட) தடங்கல்களை உண்டுபண்ணி, மக்களின் பாரம்பரிய வாழ்க்கைமுறைமை பாதிப்படைந்து வருகிறது.
மக்கள் உயிரிழப்புகளுடன், காணி, பெறுமதிமிக்க பொருட்கள் முதலியவற்றோடு தமது வாழ்வாதாரத்தையும் இழந்தனர். மேலும் கல்வி, சுகாதாரம், போன்ற சேவைகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளிலும் தமது சொத்துகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளிலும் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொண்டனர். விசேடமாக இடம்பெயர்ந்து சென்ற மக்கள் திரும்பிவந்து மீளக்குடியமர்ந்தபோது சிதைவுற்ற தமது வாழ்க்கையை மீளச்சீரமைப்பதற்குத் தேவையான வளங்களைப் பெற்றுக்கொள்வதற்குப் பல இடர்களை சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது.
வடக்கு, கிழக்கில் அதிக எண்ணிக்கையில் பெற்றோரை இழந்த குழந்தைகள், சகோதரர்கள் சிதையுண்டு போக, சகோதரர்கள் வலிந்து காணமல் போக , சகோதரர்கள் அவயங்களை இழந்திட, கொத்து கொத்தாக பலி கொடுத்து பல இன்னல்களையும் இடர்களையும் சந்தித்து நடை பிண்மாக வாழ்ந்திடும் மாணவர்கள் மத்தில் போர்க் காலச்சூழல் கல்வி வரலாற்றிலே ஓர் பெரிய திருப்பு முனையையினை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தவகையில் கல்விச்சூழலில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்தியதோடு இதன் தாக்கமும் காணப்படுகின்றது. இதன் விளைவாக பாடசாலை மாணவர்கள் இடைவிலகல் அதிகம் ஏற்படுகின்றது.
இன்றைய காலகட்டத்தில் மாணவர் இடைவிலகல் என்பது கல்விச் சமூகம் எதிர் நோக்கும் பெரும் சவாலாகக் காணப்படுகின்றது. பல இடங்களில் சிறுவர் உரிமை மீறல் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனால் சிறுவர்கள் பல இன்னல்களுக்கும், இடையூறுகளுக்கும் ஆளாகின்றார்கள். 5வயதுக்கு குறையாமலும் 16 வயதுக்கு மேற்படாமலும் உள்ள ஒரு பிள்ளை தனதுகட்டாயக் கல்வியை மேற்கொள்ள வேண்டும். மாணவர் இடைவிலகலில் அதிகம் 14-18 வயதுடையவர்களாகக் காணப்படுகின்றார்கள். அதில் 18வயதுக்கு மேற்பட்டவர்கள் தாம் விரும்பியோ விரும்பாமலே இடைவிலகலினை மேற்கொள்கின்றார்கள்.
கடந்த மூன்று தசாப்தங்களாக யுத்தம் பலவழிகளிலும், பல துறைகளிலும் பாரிய பின்னடைவுகளையும், பாரிய இழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளதை யாருக்கும் மறுக்க முடியாது. இந்த இழப்புகளுடன் ஒப்புநோக்கும்போது கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள இடைவெளியை நிரப்ப பல தசாப்தங்கள் போராட வேண்டியிருக்கும். வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் கல்வி இடைவெளியை ஓரளவாவது சீர்செய்ய எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதை பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றோம்.
”மனிதநேயம் வளர மனிதநேயத்தோடு வாழ வேண்டும்”
நிலவன் / நிக்சன் பாலா,
உளவளத்துணை,
மற்றும் உளச்சமூகப்பணியாளர்.
நன்றி E குருவி