எல்லோரும் நினைப்பதைப்போல மே 18 உடன் தமிழ் மக்களின் முள்ளிவாய்க்கால் பேரவலம் முடிந்துவிடவில்லை. அது முல்லைத்தீவு,ஓமந்தை,செட்டிகுளம்,வவுனியா என நீண்டு சென்று இன்றும் ஆறாத ரணமாகவே எம்மில் இருக்கிறது. ஆம் இந்த பத்தியானது மே 18 2009 இற்கு பின்னர் முள்ளிவாய்க்காலில் இருந்து இடம் பெயர்ந்த மக்கள் போராளிகளின் அவல வாழ்வு பற்றி பேசுகிறது.
18 மே 2009. விடிகாலை 2.30 மணிக்கு நானும் எனது குடும்பமும் எல்லா மக்களைப் போலவே வட்டுவாகல் நோக்கி இடம்பெயர்கிறோம். எந்த வாகனங்களும் இல்லை. எல்லோருமே தமது கைகளில் இருக்கின்ற சிறிய பைகள் ஒரு சிலர் மட்டும் உடுப்பு வைக்கும் பெட்டிகளை தலையில் சுமந்து கொண்டு நடைப்பயணம் நடக்கிறது. மக்கள் சாரை சாரையாக இடம்பெயர்ந்து வட்டுவாகலில் நிலைகொண்டுள்ள இராணுவ நிலையை நோக்கி நகர்கின்றனர். ஆனாலும் எறிகணைத்தாக்குதலும்,துப்பாக்கி தாக்குதல்களும் ஓயவில்லை. இடம்பெர்ந்து கொண்டிருக்கும் மக்களை நோக்கிய தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. குடும்பம் குடும்பமாக மக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர். முள்ளிவாய்காலில் இருந்து வட்டுவாகல் நோக்கிய பாதையின் இருமருங்கிலும் எறிகணை மற்றும் துப்பாக்கி தாக்குதலில் பலியானவர்களின் உடலங்கள் ஆங்காங்கே துணி,பாய் போன்றவற்றால் மூடப்பட்டு கிடக்கின்றன.
காலை விடிந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் நாலா பக்கமும் தாக்குதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தாக்குதலை பொருட்படுத்தாமல் மக்கள் வட்டுவாகல் நோக்கி நடக்கின்றனர். எனக்கு முன்னர் பல ஆயிரம் பேர் சென்று கொண்டிருக்கின்றனர். வீதியின் அருகில் ஒரு தாய் அவரது இரண்டு பிள்ளைகள் இன்னொரு சிறுவனின் உடலை வைத்துக்கொண்டு அழுகின்றனர். என்ன நடந்தது என்று விசாரித்தேன்.
‘தம்பி என்ற கணவர் மாத்தளன் செல்லடியில் செத்துப்போனார் எங்களுக்கு மூன்று பிள்ளைகள் நாங்கள் இப்ப இதில வந்துகொண்டிருக்கேக்க என்ற மூத்த மகன் ரவுன்ஸ் பட்டு செத்திட்டான். ஐயோ நான் என்ன செய்வேன்’ என அந்த தாய் தன்தலையில் மண்ணை அள்ளிப்போட்டு அழுகிறார். மரணம் மலிந்த பூமியில் வாழ்ந்து பழகிய எமது மக்கள் இந்த காட்சியை பார்த்தவண்ணமே சென்றுகொண்டிருக்கின்றனர். அவரவருக்கு அவரவர் உயிர் பெரிதல்லவா? என்ன செய்ய முடியும்? யார் அந்த தாய்கு உதவ முன்வருவார்கள். அந்த குடும்பத்தின் நிலை தர்ம சங்கடமாகிறது. எல்லா பக்கமும் தாக்குதல் நடந்துகொண்டிருக்கிறது. மக்கள் சென்று கொண்டிருக்கிறார்கள். இறந்து கிடக்கும் தன் மூத்த மகனை பார்ப்பதா? உயிரோடிருக்கும் மற்றைய இரண்டு பிள்ளைகளையும் பாதுகாப்பதா? மகன் இறந்து கிடக்கும் சோகத்தை விட அவனது இறுதிக்கிரியைக் கூட செய்வதற்கு கால அவகாசம் இல்லை. அழுது தன்னுடைய ஆற்றாமையை தீர்த்துக்கொள்ளக் கூட அந்தத் தாய்க்கு அவகாசம் இல்லை.
வீதியில் வந்த சிலர் அந்த தாய்க்கு அறிவுரை கூறுகின்றனர். நிக்காதையுங்கோ உங்கட மற்ற பிள்ளைகளையும் பற்றி யோசியுங்கோ.. அந்த தாய்கு நிலைமை புரிகிறது. ஆனாலும் அந்த இடத்தில் தன்னுடைய மூத்த மகனின் சடலத்தை என்ன செய்வது. சடலத்தை தம்முடன் எடுத்துச்செல்ல முடியாது. அதே நேரம் இறந்து கிடக்கும் தன் மகனின் சடலத்தை புதைப்பதற்கு யார் உதவுவார்கள் யாரை உதவிக்கு அழைப்பது? எல்லோருமே பார்த்துக்கொண்டு செல்கின்றனரே தவிர அந்த தாயின் கேள்விகளுக்கு பதில் தர யாரும் தயாரில்லை. பின்னர் அந்த தாய் வீதியில் வந்த ஒரு சிலரின் உதவியுடன் முன்னர் எப்போதோ எறிகணை வீழ்ந்து வெடித்ததால் ஏற்பட்ட சிறிய கிடங்கு ஒன்றில் அந்த சிறுவனின் உடலை புதைத்துவிட்டு கண்ணீரோடு எஞ்சிய இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டார்.
இந்த சம்பவம் நடந்த இடத்தை விட்டு ஐம்பது மீற்றர் தூரம் நகர்ந்திருப்பேன் வீதியின் அருகில் ஏற்கனவே காயப்பட்ட போராளிகள் பலர் தங்களது உறவினர்களை எதிர்பார்த்த படி காத்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் சேலைன் ஏற்றப்பட்ட படி சேலைன் போத்தல்களை கையில் சுமந்தவண்ணம் இருக்கின்றனர் இடுப்பிற்கு கீழே இயங்காத நவம் அறிவுக்கூட போராளிகள் பலரும் அவர்களோடு இருக்கின்றனர். அந்தப் போராளிகள் வீதியில் செல்லும் மக்களை நோக்கி அண்ணா,அக்கா எங்களையும் கூட்டிக்கொண்டு போங்கோ எங்களை விட்டிட்டு போகாதையுங்கோ என்று அழுகின்றனர். வீதியில் சென்ற எவரும் அந்த போராளிகளுக்கு உதவவில்லை. ஏனெனில் அவர்களை தூக்கிச் செல்லும் அளவுக்கு யாரும் இல்லை. எல்லோரும் அவர்களை பார்த்து கண்கலங்கினரே தவிர யாரும் அவர்களுக்கு உதவவில்லை.
இப்படியே வட்டுவாகல் நோக்கி நடக்கிறேன். வட்டுவாகல் பாலத்தை அண்மிக்கும் போது இறந்து நான்கு ஐந்து நாட்கள் கடந்த பெண் ஒருவரின் சடலம் வீதியின் நடுவில் உருக்குலைந்து துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கிறது. அதைக்கூட யாரும் கணக்கெடுக்கவில்லை. மக்கள் தமது உயிர் காப்பாற்றப்பட்டால் போதும் என்ற எண்ணத்துடன் நடக்கின்றனர். மே 18 காலை 06.00 மணியிருக்கும். வட்டுவாகல் பாலத்தின் கரையை அடைந்து விட்டோம். இப்போது கடற்படை கோத்தா முகாம் இருக்கும் பகுதியூடாக இராணுவத்தினர் சுட்டபடி முள்ளிவாய்க்கால் நோக்கி நகர்கின்றனர். மக்கள் இராணுவ கட்டுப்பாட்டு பகுதியை நோக்கி பெருமளவில் வந்துகொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் கூட இராணுவம் தாக்குதலையோ அல்லது படை நடவடிக்கையையோ கைவிடவில்லை. வட்டுவாகல் பாலம் ஒடுங்கிய ஒரு பாதை. அதனூடாக இரண்டரை இலட்சம் மக்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் வெளியேறிவிடவேண்டும் என முண்டியடிக்கின்றனர். நல்ல வேளை எதிர் திசையில் எவரும் வரவில்லை என்பதோடு மக்கள் இடம்பெயர்ந்த போது கையில் பெரிய பொருட்கள் எதனையும் எடுத்துவரவில்லை.
வட்டுவாகல் பாலத்தில் மக்கள் அடிக்குமேல் அடிவைத்து நகர்கின்றனர். அந்தளவுக்கு சனநெரிசல்;;; மெது மெதுவாக நகர்ந்து வட்டுவாகல் பாலத்தின் மறு கரையை சென்றடைகிறேன். ஐந்து நாட்களுக்கு மேலாக சரியான உணவு இல்லை. தேனீர் இல்லை. குடிப்பதற்கு தண்ணீர்கூட இல்லை. வட்டுவாகல் பாலம் தாண்டி சற்று தூரம் முல்லைத்தீவு பிரதான வீதியில் எல்லா மக்களும் போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பின்னால் எந்த கேள்வியும் இன்றி எங்கே போகிறோம் என்று தெரியாமல் சென்று கொண்டிருக்கிறேன். வீதியின் ஓரத்தில் பனங்கூடலுக்குள் ஒரு சிறிய நீர்குட்டை. நீர் குட்டையை பார்த்ததும் பெரிய நின்மதி. எப்படியாவது நீரை அள்ளி குடித்து விட வேண்டும் என்ற ஆவல். வீதியில் எப்போதும் சுடுவதற்கு தயார் நிலையில் இருக்கும் இராணுவத்தை கூட பொருட்படுத்தவில்லை. திடீரென வீதியில் இருந்து பனங்கூடல் நோக்கி ஓடுகின்றேன். ஆவலுடன் இரு கைகலாலும் தண்ணீரை அள்ளி வாயில் விடுகிறேன் கடுமையான உப்பு. அந்த நீர் உப்பாக இருக்குமென நான் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் வறன்டிருந்த எனது தொண்டை உப்பு நீரையும் ஏற்றுக்கொண்டது. தவிர்க்க முடியாமல் அந்த தண்ணீரை அள்ளிக் குடித்துவிட்டு என்னுடன் வந்த எனது குடும்பத்தினரின் நிலையும் அவ்வாறேதான். அவர்கள் வீதியில் எனக்காக காத்திருக்கின்றனர். அவர்களுக்கும் அதே உப்புத்தண்ணீரைத்தான் கொண்டு செல்லவெண்டும். தண்ணீரை கொண்டு செல்லதற்கு கையில் எந்த உபகரணமும் இல்லை. அருகில் கிடந்த பழைய பொலுத்தீன் பையை எடுத்து அதில் தண்ணீரை சேகரித்து எல்லோருக்கும் உப்பு நீரை பருக கொடுத்து நடக்கிறோம்.
முல்லைத்தீவு பிரதான வீதியின் கரையோரமாக ஒரு பத்து ஏக்கர் பரப்பளவுள்ள வயல் வெளி அந்த வயல்வெளியை சுற்றி இராணுவத்தினர் பயன்படுத்தும் முட்கம்பி வேலியிடப்பட்டு சுற்றிவர இராணுவத்தினர் நிறுத்தப்பட்டிருக்கின்றனர். இடம்பெயர்ந்து செல்கின்ற அனைவரும் அந்த வயல்வெளி திறந்த வெளி சிறையினுல் அடைக்கப்படுகின்றனர். பத்து ஏக்கர் பரப்பளவு கொண்ட வயல் வெளிக்குள் மூன்று லட்சம் மக்கள் போராளிகள் அடைக்கப்படுகின்றனர்.
காயமடைந்தவர்கள்,நோயாளிகள் சிறு குழந்தைகள்,வயோதிபர்கள் என எல்லோருமே கந்தக வெயிலில் ஒதுங்குவதற்கு ஒரு மரம் கூட இல்லாமல் வெயிலின் கொடுமையாலும் பசி,தாகம் போன்றவற்றால் மயங்கிக்கிடக்கிறார்கள். சிறுவர்கள் வெயில் கொடுமை தாங்காமல் தண்ணீருக்கு அழுகின்றனர். இராணுவம் தண்ணீர் தாங்கியை கொண்டு வந்து தண்ணீர் கொடுக்க முயற்சிக்கிறது. ஆனாலும் மக்கள் தண்ணீரைக் கண்டதும் ஆர்ப்பரித்து ஓடுகின்றனர் இதைப்பார்த்த இராணுவம் மக்களை நோக்கி தண்ணீரை பீச்சி அடிக்கின்றனர். தம்மை திறத்துவதற்குத்தான் தம்மீது இராணுவம் தண்ணீரை பீச்சி அடிக்கிறான் என்பதைக்கூட உணராமல் அந்த தண்ணீரை ஏந்தி குடிக்கின்றனர். தண்ணிக்கே இப்படி என்றால் சாப்பாட்டின் நிலை என்னவாகர்போகிறதோ என்கிற அங்கலாய்ப்பு என்னுள்…….(தொடரும்)