முள்ளிவாய்க்கால் முடிவல்ல
இன்னும் எத்தனை நாளுக்குத்தான்
அழுதுவடிப்பதென்று இங்கு பலர்
நிறுத்திவிட்டார்கள்
பேரவலத்தின் பெரிய வாயை மூடுவதற்கு
குட்டி மகிழ்ச்சிகளை கொட்டிவிட்டு
கும்மாளம் போடுகிறது உலகு
நாங்களும் விளக்கமற்ற ஜடங்கள் போல விக்கித்து நிற்கிறோம்
நிரந்தரத் தீர்வொன்றை பெற்றுத்தருகிறோம்
எனச் சொல்லிச் சொல்லியே
குட்டிச்சுவராகிப் போய்விட்டது
அரசியல் பேச்சுக்கள்
ஆனால் இன்னமும் நிலத்தடி நீரில்
பொங்கி பிரவாகிக்கிறது
மாண்டவரின் குருதி
புழுதி படிந்த மேக மூட்டத்துள்
மூசுத்திணறி அலைகிறது
அழிந்து போனவரின் ஆத்மாக்கள்
ஆலையங்களில் குண்டு வெடிக்கும்
அராஜக தேசம் அங்கு செல்வது
ஆபத்து என சொல்லிவிட்டது
ஐ நா
மௌளவிகளும் மத குருக்களும்
தீர்மானிக்கும் அரசியல் நகர்வுகளுக்குள்
மேலும் மேலும் நசுங்கிச் சாகிறது நம் இனம்
இந்த அவஸ்தையில்
மே பதினெட்டும் மேய்பன் அற்ற மாடுகளைப் போல
அந்தரித்து கடக்கப்போகிறதா…?
அழுவதற்கு இனியென்ன
எல்லாம் முடிந்துவிட்டதென்று
நாக்கிளிப் புழுக்கள் போல நகர்கிறார்கள் பலர்
கண்ணீரை சேமித்துக் கொள்ளுங்கள்
இதைவிட பெரிய அழுகையை எமக்குத் தருவதற்கு
நயவஞ்சக உலகம் ஒத்திகை பார்க்கத் தொடங்கிவிட்டது
முள்ளிவாய்க்காலுக்கு கொள்ளி வைக்க
பலர் சூழ்ச்சிச் சுள்ளிகளை சேகரிப்பதையும் நாம் அறிவோம்
வீரர்கள் முகங்களை பொதுவெளியில்
முடக்கி நீண்ட பெரும் சதிச்செயலுக்கு
அவர்கள் தயாராகுவதையும் நாங்கள் அறிவோம்
அதற்காக மௌனம் ஒன்றே தீர்வாகிவிடாதே..!
முள்ளிவாய்க்கால் படுகொலை என்பது
செவிவழிக் கதைகளில் வரும் சித்தரிப்பு அல்ல
அது உத்தரித்து உருக்குலைந்த ஓர் இனத்தின் இறுதி உயில்
மரணங்களை கால நீரோட்டத்தில்
கரைத்துவிடுவது மனித மரபு
அதற்காக காரணம் ஏதுமின்றி கொல்லப்பட்ட
குழந்தைத் தலைகளைக் கூட்டியள்ளிய கொடுங்கால
நினைவுகளை மறப்பதென்பது
மனிதத்திற்கொவ்வாத செயல்
ஒன்றா இரண்டா ஐய்யோ….!
ஆயிரக்கணக்கில் ஆட்டுப்பிழுக்கைகளை
கிள்ளி எறிவதைப்போல
மனிதத்தலைகளை அள்ளிப்புதைத்த காலத்தை எப்படி மறப்பது
வெள்ளைச் சீருடையில் துள்ளிக்குதித்த
கிருசாந்தி கிழிபட்டதையும்
வெள்ளைத்துணி போர்த்தி
பின் செந்நிற மேனியாய் சிதைக்கப்பட்ட
இசைப்பிரியாவின் துயர் மிகு நிமிடங்களையும்
இன்று பலர் மறந்துவிட்டார்கள்
கால நீரோட்டத்தில் கவலைகளை
அள்ளிச்சொருகிய படி
இன்னும் ஏன் அலைகிறீர்கள்
என பலர் சொல்லித் திரிகிறார்களே தவிர
எமக்கான சுந்தர வாழ்வை இன்னும்
நாங்கள் சுகிக்கவில்லை என்பதை ஏன்
நம்ப மறுக்கிறார்கள்
காற்றின் கதவுகளுக்குள்
நின்றுவிடுவதற்காகவா
காட்டாறுகளை கடந்து வந்தோம்
பள்ளங்களில் இருக்கும் நீருக்கு
சுவையிருக்கலாம்
ஒரு மாம்சத்தின் பிசுபிசுப்பின்
மாறாத் திரவமாய் மாற்றப்பட்டிருக்கும்
எங்கள் நிலங்களின் நீர்
காலகாலமாய்
கேட்ட பனைக்கீற்று இராகங்களில்
பரிதவிக்கும் ஆத்ம ஓலங்களை
எப்படி புறக்கணித்து உறங்குவது..?
இந்த நிலத்துள் மக்காதிருக்கும்
மழலை என்புகளை
எம் பேரர்களின் உழவு இயந்திரங்கள்
உடைத்தழிக்கவிருப்பதை
பார்ப்பதற்காகத்தானா இந்தப் பேரமைதி..?
மேலிருந்து வீழும்
மழைத்துளிகளின் தயவில்
முளைத்தவாறுதான் இருக்கிறது
அவர்களின் உயிர்கள்
நாங்கள்
அவற்றை புறக்கணிக்கிறோம்
அவற்றை மிதிக்கிறோம்
ஆம் நாங்கள்
புதிய முகம் தரித்த
மிருகங்களாகிவிட்டோம்
வெள்ளிக் கொலுசுகளை
அள்ளி உருட்டியதைப்போல கலகலத்து
ஜொலித்திருந்ததே அன்று எங்கள் ஜீவிதம்
கனகாம்பரம் உடுத்தி கலகலப்பாக
சென்று வந்த கோவில் திருவிழாக்கள்
எத்தனை பெரிய மகிழ்வான நினைவுகள்
பின்னொரு நாள்
பீறிட்டுப் பாயும் பெருமழை வெள்ளத்தில்
அள்ளிச் செல்லப்படும்
சித்தெறும்புகளாய்
சிதைக்கப்பட்டதே எங்கள் பெரு வாழ்வு
உடுப்பதற்கோ உண்ணுவதற்கோ
கழிப்பதற்கோ களைப்பாறவோ
நாழிகை ஏதுமின்றி
நரமாமிசம் புசிக்கும்
நச்சுக் குண்டுகளுக்கு மத்தியில்
தத்தித்திரிந்த எங்கள்
தறிகெட்ட வாழ்க்கையை
பத்தாண்டு ஆகிவிட்டதால்
மறந்துவிடலாம் என்கிறார்கள்
காட்டுத்தீயை அணைத்துவிடலாம்
ஆனால் காற்றுப்பட்டு மேற்பக்கம்
காய்ந்தாலும் உள்ளுக்குள்
கதகதத்துக்கொண்டிருக்கும்
எரிமலைக் குழம்பு அணைந்துவிட்டதாய்
சிலர் நினைப்பதுதான் வேடிக்கை
பிணங்கள் சரியச் சரிய
திகைப்பூட்டும் வீரத்தோடு
சமராடியவர்களில் பலர் இன்னும்
சாகாமல் இருப்பதும் பலருக்கு
அடிவயிற்றில் புளியை அடிக்கடி
கரைக்கிறது
அதை மெல்ல மறைப்பதற்கு
விடுதலையை விற்றுத் திரிகிறார்கள்
நம்பிவிட வேண்டாம்
விடுதலை என்பது உரிமைக்கான
ஏகோபித்த குரல்
அடுத்தவன் சொத்தை அள்ளிச்சுருட்டிய
பிரித்தானியா தவிர விடுதலைக் குரல்
எல்லா நாட்டிலும் ஒலித்ததுதான்
பெரும்பகையை விரட்ட சின்னப்பகைவர்
தமிழரை கையுக்குள் போட்டு
அன்று சிங்களன் நிகழ்த்திய
சதிச்செயலுக்கு நாங்கள்
கொடுத்த விலைகள் எம் தலைகள்
ஆராரோ பாடலை ஐந்து வயது தாண்டியதும்
மறந்துவிடுவதைப்போல
எம்மவர் தியாகங்களை
எந்நிலை வரினும் மறந்துவிடமுடியாது
முள்ளிவாய்க்காலில் எம்
ஈழ அன்னையின் முலை அறுத்த வரலாற்றை
ஒற்றை நினைவேந்தலோடு ஒழித்துவைக்கவும் முடியாது
ஆயுதங்கள் மட்டுமே விடுதலையின்
துறவுகோலல்ல
அதை விளங்காதவர்கள் பலரும்தான்
இன்றும் விடுதலைப் பேச்சை எடுத்தால்
வியாக்கியானம் பேசுகிறீர்கள்
காற்று கனத்த மேகங்களை உருட்டிச்
செல்லும்போதெல்லாம்
மாவீரர் பாடல்கள் மண்மேல் ஒலிக்கிறது
அது எங்கள் நிலம்,
குடிக்கும் நீரிலும் எம்மவர் குருதியின்
நிறம்
இன்று குருதிஸ் மக்கள் குதூகலிப்பதைப்போல
குண்டியில் கால்பட நாமும் குதிப்போம்
அதன் பின்பும் மாண்டவர் நினைவை
மறக்காதிருப்போம்.
-அனாதியன்