இன்று முள்ளிவாய்கால் மண்ணில் கால் பதித்து மனம் வெதும்பி கண்ணீர் விட்டழுது விளக்கேற்றி வந்து விட்டோம். அடுத்தது என்ன? 2020 மே 18 வரை மறப்போம் மன்னிப்போம் என்ற தத்துவமா?
ஒரு நாள் கூடி பூ வைத்து விளக்கேற்றி போதல் மட்டும் போதுமா? நாங்கள் வந்து அஞ்சலி செலுத்துவோம் என்பதற்காக அவ்வுயிர்கள் அவ் மண்ணில் விழவில்லை. தமிழினம் வரலாறாய் நிமிர்ந்து இரத்தம் சிந்தி மரணித்தவர்களுக்கு என்ன கைமாறு செய்தோம் நாம்?
இந்த இனஅழிப்பை மேற்கொண்ட கொடியவர்களுக்கு நாம் என்ன தண்டனை பெறுக்கொடுத்தோம். எந்த குற்றவியல் நீதிமன்றத்திலே நிறுத்தினோம்? ஆனால் முள்ளிவாய்கால் மண்ணில் கால் பதித்து அவ் உறவுகளை நினைத்து விளக்கேற்றும் போது ‘உங்களை நம்பியே இம் மண்ணில் விழுந்தோம். எங்கள் நெருப்பில் குளிர் காயாதீர் என்ற உறவுகளின் ஆத்மாக்களின் குரல் கேட்டு நான் நீதிமன்றில் நிற்பது போல் உணருகின்றேன்.
அவர் வேண்டாம் இவர் வேண்டாம் என்று முள்வாய்க்கால் மண் எவரையும் ஒதுக்க வில்லை. ஆனால் இவ் மண்ணில் கால்பதித்து பிரார்த்திக்கும் அதே நேரம் எம்மையும் மனதால் சுயபரிசோதனை செய்திக்க வேண்டும்.
மே 18 2008 இல் முள்ளிவாய்க்கால் பேரவலம் நடைபெறும் போது தமிழர்களின் கூக்குரலுக்கு செவி சாய்க்காது மௌனமாக இருந்து விட்டு முள்ளிவாய்க்கால் பேரவலத்தை தந்தவர்களுக்கே வாழ்த்துச் செல்லி விட்டு தியாகமும் வீரமும் விதையுண்டிருக்கும் முள்ளிவாய்க்கால் புனித பூமியில் கால் பதிக்க எமக்கு எந்த வகையிலும் அருகதையுள்ளதா என்பதையும் அந்த ஒரு கணம் நாம் அனைவரும் எண்ணிப்பார்ப்போம்.
இனவெறி ஆட்சியாளர்களின் அருவருடிகளாக இருந்து கொண்டு தமிழ்த்தேசியவாதிகளாக தம்மை வேடப்படுத்தி நிற்பர்கள் போர் முடிந்தாக கூறும் காலம் ஒரு தகாப்சத்தை எட்டியநிலையில் இவர்கள் எதை எமக்குப் பெற்றுத்தந்தார்கள் என்று முள்ளிவாய்கால் அவலத்தில் இரத்தமும் சதையுமாக துயர் சுமந்த சாட்கள் மௌமாக அதே சமயம் வெஞ்சினத்துடனும் வேகும் நெச்சுடனும் அவதானித்தபடியே இருக்கின்றனர்.
நெஞ்சிலே அவலத்தையும் வலியையும் சுமந்தவர்களுக்கு மருந்து மறப்போம் மன்னிப்போமா? அவர்கள் கொன்றொழித்தது ஆடு மாடுகளை தான் என்றால் நீங்கள் இதை கூறியிருக்கலாம் நாங்கள் ஆடு மாடுகளை திரும்ப வாங்கி விட்டு போய் இருப்போம். அவர்கள் இடித்தழித்தது குடிமனைகளையும் கட்டிடங்களையும் தான் என்றாலும் நீங்கள் இதை கூறியிருக்கலாம் நாங்கள் மீண்டும் கட்டிவிட்டு இருந்திருப்போம். ஆனால் அவர்கள் கொன்றொழித்தது எங்கள் அம்மாவை, அப்பாவை எங்கள் அண்ணாக்களை, அக்காக்களை தங்கைகளை இதற்கும் மேல் ஒன்றுமே அறியாத சின்னச் சிறு மொட்டுக்களை. இவர்களை எல்லாம் இழந்து விட்டு எங்களுக்கு நீங்கள் கூறுகின்ற மறத்தலும் மன்னித்தலும் சாத்தியமா? நீங்களே விடை கூறுங்கள்.
கொன்றொழித்தவர்களுக்கு தண்டனை வேண்டும் இன அழிப்புக்கு நீதி வேண்டும் என்ற அவர்களின் கனவு மெய்படாதவரை நாம் எது செய்தாலும் ஆறமாட்டார்கள் என்பது திண்ணம்.
இன்று முள்ளிவாய்க்கால் பிரகடனம் முள்ளிவாய்காலில் இனஅழிப்பு செய்யப்பட் ஆத்மாக்களுக்கும் அவர்களின் உறவினருக்கும் 10 ஆண்டுகளுக்குப் பின் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும் என்பதும் திண்ணம் . அப் பிரகடனத்தை செயற்படுத்துவதே எங்கள் எல்லோருடைய கடமையாகயிருத்தல் வேண்டும்.
இனியும் அதை விடுத்து, வல்லாதிக்க, மேலாதிக்க, இனவாத சக்திகளுக்கு எடுபிடிகளாக இருந்து கொண்டு தமிழனத்தின் உரிமைகளையே மெல்ல மெல்ல தாரைவார்க்கத் மீண்டும் துணிந்து செயற்படுப்போகின்றீர்களா என்பதே இப்போதுள்ள வினா?
வரலாறு தமிழரை, தமிழ் மண்னை என்றோ ஒரு நாள் விடுதலை செய்தே தீரும் அப்போது அதே வரலாறு உங்களை மன்னிக்க போது கிடையாது ஏன் எனில் வீரமும் தியாகமும் கோழைகளையும் துரோகிகளையும் அங்கீகரித்தாக சரித்திரம் இல்லை.
வரதராஜன் பார்த்திபன்
யாழ்.மாநகர சபை உறுப்பினர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி