கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் யேர்மனியின் அனைத்து நகரங்களிலும் இருந்து டுசில்டோர்ப் நகரத்திற்கு அணிதிரண்டிருந்த தமிழீழ மக்கள் டுசில்டோர்ப் புகையிரத நிலயத்திற்கு முன்பாக அணிதிரண்டு அங்கிருந்து அந்த மாநிலத்தின் பாராளுமன்றம் இருக்கும் இடத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்.
செல்லும் வழிகளில் இனப்படுகொலை சம்பந்தமான துண்டுப்பிரசுரங்களை யேர்மனிய மக்களுக்கு விநியோகித்தபடியும் எமக்கான நீதி மறுக்கப்பட்டிருப்பதை இளையோர்கள் ஒலிபெருக்கிமூலம் யேர்மனிய மக்களுக்கு அறிவித்தபடியும் ஊர்வலமாகச் சென்றமக்கள் கைகளில் பதாதைகளைத் தாங்கியும் சென்றனர்.
பின் பாராளுமன்றத்திற்கு முன்பாக அணிதிரண்ட மக்கள் அங்கு அமைக்கப்பட்டிருந்த உறவுகளின் கல்லறைக்கு தீபம் ஏற்றி மலர்தூவி தமது இதயவணக்கத்தைச் செலுத்தினர். ஊர்வலம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இறுதி நிகழ்வு முடியும்வரை சீரற்ற காலநிலையால் மழைபெய்து கொண்டேயிருந்தது. மழையில் நனைந்தபடி இனப்படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளுக்கு அங்கு வருகைதந்திருந்த மக்கள் உணர்வுபூர்வமாக வணக்கம் செலுத்திய விதம் யேர்மனிய மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்திய காட்சியைப் பார்கக்கூடியதாக இருந்தது