கண்ணுக்குள் நூறு நிலவா….?
அத்தியாயம்-01
மெல்லிய காற்று இதமாக வீச போர்வையை இழுத்து போர்த்தபடி உறங்கிக்கொண்டு இருந்தாள் தீபனா. அதிகாலை நேரம் யன்னல் கரையோரம் மெதுவான காற்று உடம்பில் மோத இதமான இசை மனதை வருட கண்களை மூடியபடி குட்டித்தூக்கம் போடுவது என்றால் தீபனாவுக்கு எப்போதுமே பிடிக்கும். கடிகாரத்தில் வைக்கப்பட்ட அலாரம் விடாமல் ஒலித்துக்கொண்டு இருந்தாலும் அதனை பற்றி கவலைப்படும் மனநிலை அவளுக்கு இல்லை.இந்த இன்பத்தை இழக்க அவளது மனம் எப்போதும் விரும்புவதில்லை.
”தீபனா, தீபனா” அலாரம் அடிப்பது கூட காதில் வாங்காமல் இப்படி தூங்குகின்றாளே உங்க செல்ல பொண்ணு என்று அவளது அம்மா கத்தும் சத்தம் அடுக்களையில் இருந்து அகங்காரமாய் ஒலித்துக்கொண்டு இருந்தது. அதற்கு தீபனாவின் தந்தை தாயை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவதை உணர்ந்து சிரித்தபடி விழிமூடி இருந்தாள் தீபனா.
தீபனா எப்போதும் அப்பாவுக்கு செல்ல பொண்ணு தான்.நான்கு ஆண் குழந்தைகளின் பின் வந்த குழந்தையல்லவா? அவருக்கு அவள் தான் வீட்டுக்கு மகாராணி. அவள் என்ன செய்தாலும் தந்தையின் ஆதரவு எப்போதும் அவளுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது. அவள் வீட்டுக்கு செல்லப்பெண்ணாக இருந்தாலும் அவளது அம்மா அப்பா தலையை குனியும் எந்த ஒரு செயலையும் அவள் செய்யமாட்டாள் என்ற நம்பிக்கை அவளது தந்தைக்கு எப்போதும் உண்டு. அந்த நம்பிக்கையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று தீபனா எப்போதுமே எண்ணிக்கொள்வாள்.
”ஓய் தீபனா” நீ இன்னும் தூங்கிட்டு இருக்கின்றாயா”? இன்று உனக்கு தேர்வு உண்டு என்று சொன்னாய் அல்லவா? நேரம் ஆகிவிட்டது எழும்பு” என்று விரட்டியபடி தீபனாவின் அண்ணா வந்தான்.
”சரிடா ஒரு டூ மினிட்ஸ் தா, ப்ளீஸ் டா என்று சொல்லியபடி அவசரமாக எழுந்தாள் தீபனா. இன்று அவளுக்கு உயர்தர மாதிரிப்பரீட்சை.
இதுநாள்வரை படித்த பாடங்கள் எல்லாவற்றையும் எவ்வளவு தூரம் அவளால் உள்வாங்க முடிந்து இருந்தது என்பதற்கான தேர்வு நாள்..அவளால் படித்த பாடங்களை இலகுவாக நியாபகப்படுத்த முடியும் ஏனென்றால் அவள் படிக்கும் பாடங்களை பாடமாக பார்க்காமல் நடைமுறையுடன் இணைத்தே படிப்பாள். அவள் எடுக்கும் பாடங்கள் அனைத்தும் மனித வாழ்வில் நடைமுறை பாடங்கள் மட்டுமே..
அவளுக்கு பிடித்த விஞ்ஞான பாடங்களை மட்டுமே அவள் தெரிவு செய்திருந்தாள்.ஒரு மனிதனின் நாளில் அதிகாலையில் இருந்து இரவு நேரம் வரை செய்யும் ஒவ்வொரு செயலும் விஞ்ஞான பாடங்களில் படிக்கும் செயல்களே என்பதனை உணராதா மனிதர்கள் தான் விஞ்ஞான பாடத்தை கடினம் என்று சொல்லுவார்கள் என்று அவளது ஆசிரியர் சொன்னது அவளுக்கு இப்போதும் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது.
அவசர அவசரமாக தன்னை தயார்படுத்திக்கொண்ட தீபனா அம்மாவிடம் ஓடினாள்.”ப்ளீஸ் அம்மா எனக்கு கொஞ்சம் சாப்பாடு கட்டி தருவீர்களா? நேரம் ஆயிடிச்சு அண்ணா திட்ட போறான்” என்று கேட்டாள்.
”இவ்வளவு நேரமும் தூங்கிவிட்டு என்னை இன்னும் கடினப்படுத்துறியா நீ?” என்று கோபமாக கூறிய தாய் தீபனாவின் பார்வையை நேரடியாக கண்டவுடன் மௌனமாக சிரித்தபடி சாப்பாட்டை கட்டி கொடுத்தாள்.
தீபனாவின் அருகில் வந்த தாய் ”அம்மு நீ நன்றாக செய்வாய் உன் பரீட்சையை”என்று கூறி இறுக்க அணைத்துக்கொண்டாள். தாயின் ஸ்பரிசம் தீபனாவிற்கு சொல்லமுடியாத உத்வேகத்தை கொடுத்தது.
வாசலில் காத்திருந்த அண்ணாவின் துவிச்சக்கர வண்டியில் ஓடி சென்று ஏறினாள் தீபனா. ”மாடு, மாடு” நேரம் ஆச்சு எனக்கு.. இனி உன்னை உன் ஸ்கூலில் விட்டு விட்டு நா வேலைக்கு போகணும் கொஞ்சம் நேரத்திற்கு எழும்பி வெளிக்கிட்டால் என்ன என்று மண்டையில் செல்லமாக தட்டினான் அவளது பெரியண்ணா சரவணன்.
தன்னில் பிழை இருப்பதால் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தாள் தீபனா..
மிகவேகமாக துவிச்சக்கர வண்டியை உழக்கியபடி சரவணன் செல்ல இதமான காற்று முகத்தில் மோத அழகிய காலையையும் கவிழ்ந்திருந்த மந்தமான மேக குவியலையும் ரசித்தபடி தீபனா இருந்தாள்..
இன்னும் அடுத்த திருப்பம் வந்தால் உன்னை பாடசாலையில் இறக்கிவிட்டு நான் வேலைக்கு போய்விடுவேன் என்று கூறியபடி வளைவில் வேகமாக திருப்பும் போது எதிரே ஒரு கார் வேகமாக வந்துகொண்டு இருந்தது.
தொடரும்…..
எழுத்தாக்கம்
-காவியா
படம் – அனாதியன்