உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களை அடுத்து, நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் கோரிய பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டு அகதிகளில் எஞ்சியிருந்தோர், இரண்டாவது கட்டாமக நேற்று (30) மாலை வவுனியா – பூந்தோட்ட நலன்புரி நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பொலிஸ் நிலையத்தின் வாகன தரிப்பிடத்தில் ஒரு மாதத்துக்கும் மேலாக தங்க வைக்கப்பட்டிருந்த 77 அகதிகளே, இரண்டாவது கட்டமாக வவுனியா பூந்தோட்ட நலன்புரி நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்று நள்ளிரவு வேளையில் வவுனியா பூந்தோட்ட புனர்வாழ்வு நிலையத்தை அடைந்துள்ளனர். இவ்வாறு ஆண்கள், பெண்கள் , மற்றும் பிள்ளைகள் என பொலிஸ் நிலையத்தில் தங்கியிருந்த அனைவரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பாகிஸ்தானைச் சேர்ந்த அஹ்மதி முஸ்லிம்கள் தொடர்ந்தும் நீர்கொழும்பு அஹ்மதியா பள்ளிவாசலிலும், பஸ்யாலையில் அமைந்துள்ள அஹ்மதியா பள்ளிவாசலிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.