கணுக்கால் முதற்கொண்டு
கழுத்து வரை காயம்
இடது கையிலே
இரண்டு விரல்களுமில்லை.
முள்ளிவாய்க்கால் முற்றுகையில்
மனைவியவள்
மண்ணுட் தாண்டாள்.
ஒரு பிள்ளையோடு இவன்
ஒதுங்கினான் மெனிக்பாமில்.
எல்லைப் படைக்கு
இருவார உதவிக்கு
இவன்சென்ற தகவல்கசிந்து
இருவருட புனர்வாழ்வு.
அதை முடித்து ஊரில்
ஆரம்பித்தான் புதுவாழ்வு.
சாரதித் தொழிலிவனுக்கு
சாதகம் ஆனது.
அதைத் தொடர்ந்து செய்தற்கோ
முதலின்றிப் போனது.
காணியொரு துண்டு விற்றும்
கடனுக்கு காசெடுத்தும்
லீசிங் அடிப்படையில்
பெற்றிட்டான் ஆட்டோவொன்று.
விடிகாலை நான்கு மணிக்கு
வீதிக்குச் சென்றிடுவான்.
நள்ளிரவு தொடும்வரை
தொழிலோடு நின்றிடுவான்.
‘ஐயா வாங்க…’
‘அம்மா வாங்க’
‘குறைஞ்ச ரேட்தான்’
இச்சொற்கள் எந்நாளும் இவன்
இயம்பும் சொற்கள்.
பள்ளி செல்லும் பிள்ளைக்கு
பானையிலே சோறு வைப்பான்.
காலைச் சமையலே
பகலும் இரவுமென
பலன் கொடுக்கும்
பன்னிரெண்டகவை பிள்ளைக்கு.
மாத லீசிங் கட்டுவதற்காய்
தூக்கம் மறந்தான்
ஏக்கம் நிறைந்தான்.
வாடகைக்கு அமர்த்திட
வருவோர் சிலர்
கடன் சொல்லி மறைந்திடுவர்.
சிலரோ சினந்து
சில்லறை கொடுத்து ஓடிடுவர்.
எரிபொருள் விலையேறினாலும்
இவன் வாடகை ஏறுவதில்லை.
வாடகை ஏற்றினால்
எவருமே ஏறுவதுமில்லை.
ஆட்டோவது திருத்தத்தில்
அகப்பட்டுக் கிடந்தாலோ
அந்நாள் பட்டினிதான்.
லீசிங் கட்டு தாமதித்தால்
லீசிங்காரன் ஏச்சில்
நின்றிடும் மூச்சு.
‘காசு கட்ட வக்கில்ல
ஆட்டோ ஒரு குறை’
அயலாரின் சொற்களும்
அம்பாகித் தாக்கும்.
தாயற்ற பிள்ளையை
தாங்க வேண்டுமேவென
சகித்துக் கொள்வான்.
எறிகணைச் சிதறல்கள்
ஏராளம் உள்ள இவனுடம்பு
இடையிடையே பலவீனம் காணும்.
படுத்து விடுவான்.
பரிதவித்து அழுவான்.
லீசிங் கட்டுதற்காய்
சகித்துத் தொழில் போவான்.
அடைமழைக் காலம்.
ஐயிரண்டு நாட்களாய்
அடங்காத நோவு.
எறிகணைச் சிதறல் உள்ள
இவன் பாகம் தவித்தது.
இயலாமல் தளதளத்தது.
சுகம் இல்லை
அதனால் தொழில் இல்லை.
லீசிங் கட்டவில்லை
தேற்றிட ஆளுமில்லை
கம்பனியார் வந்தனர்
ஆட்டோவை
கைப்பற்றியே சென்றனர்.
●●●●●●
நிலக்கடலை தன்னை
நிறைவாக வறுத்தாள் மகள்.
கட்டுரைப் போட்டியில் வென்ற
காசிலே வாங்கிய
கடலைப் பொதிகளவை.
‘கச்சான் நான் வறுப்பன்
கடதாசிப் பையிலையும்
வடிவாக அடைப்பன்.
விற்று வாங்க அப்பா
கடனும் லீசிங்கும்
கண்காட்டவே வேணாமப்பா’
மாணவியான மகள்
மகத்தான தத்துவமுரைத்தாள்.
மறுநாள் மலர்கிறது.
ஐந்து மணிக்கு
அருமை மகளெழுந்தாள்.
இருவரும் இணைந்தனர்.
தொழில் தொடங்கிற்று.
இதோ…
அவள் பள்ளி போகிறாள்.
அவன்
பள்ளி முன்னேயே
தொழில் தொடங்குறான்….
யோ.புரட்சி,
பிற்பகல் 12.53,
31.05.2019.