இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பில் இலங்கையில் முஸ்லிம் அமைச்சர்களின் இராஜினாமா தொடர்பாக என்ற மகுடத்தில் நேற்றைய தினம் ஆசிரியர் தலையங்கத்தைத் தீட்டியிருக்கும் அந்தப் பத்திரிகை, முஸ்லிம் சமூகத்தவர்களை ஆபத்தானவர்களாகக் காட்டும் ஒருங்கிணைந்த திட்டமிட்ட பிரசாரமொன்று இப்போது இலங்கையில் முன்னெடுக்கப்படுகிறது என்று விசனம் வெளியிட்டிருக்கிறது.
ஆசிரியர் தலையங்கத்தின் முழு விபரம் வருமாறு:
இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவொன்றினால் கடந்த உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களுக்குப் பிறகு இலங்கைத் தீவில் வெளிக்கிளம்பிய புதிய பிளவொன்றை இரு முஸ்லிம் ஆளுநர்களும், ஒன்பது அமைச்சர்களும் கூண்டோடு இராஜினாமா செய்த சம்பவம் மேலும் ஆழப்படுத்தியிருக்கிறது. பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆதரவளித்ததாகவும், விசாரணைகளில் தலையீடு செய்ததாகவும் மாகாண ஆளுநர்களான அஸாத் சாலி, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகிய மூவர் மீதும் குற்றஞ்சாட்டிய சிங்கள பௌத்த கடும்போக்காளர்கள் அவர்களைப் பதவி விலக வேண்டுமெனக் கோரினர்.
அந்த மூன்று முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் எதிராக சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எந்தவொரு சான்றுமே விசாரணையாளர்களினால் கண்டுபிடிக்கப்படாத ஒரு நேரத்தில் இவ்வாறாக ஆக்ரோஷமான கோரிக்கை முன்வைக்கப்பட்டதால் சினமடைந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த சகல முஸ்லிம் அமைச்சர்களும் தங்களது பதவிகளை இராஜினாமாச் செய்து தங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டை வெளிக்காட்டினார்கள்.
பாராளுமன்ற உறுப்பினரான பௌத்த பிக்கு அத்துரலியே ரத்ன தேரர் கண்டியில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து வைத்ததையடுத்து முஸ்லிம்களுக்கும், இந்த அமைச்சர்களுக்கும் எதிரான பிரசாரம் தீவிரமடையத் தொடங்கியது. தேரருக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
கிறிஸ்தவ தேவாலயங்களிலும், ஆடம்பர ஹோட்டல்களிலும் 250 இற்கும் அதிகமானவர்களை பலியெடுத்த குண்டுத்தாக்குதலின் விளைவாகத் தோன்றிய கொந்தளிப்பு சகல இனத்தவர்கள் மத்தியிலும் பீதியையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியது. முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்செயல்களும், அச்சுறுத்தல்களும் குண்டுத்தாக்குதல்களின் விளைவான தன்னிச்சையான செயற்பாடுகளாக அன்றி, திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டவையாகவே தோன்றின. இஸ்லாமியத் தீவிரவாத மதப்பிரசாரகர் சஹ்ரானின் தலைமையிலானதும், தற்கொலைக் குண்டுதாரிகளை உள்ளடக்கியதுமான தேசிய தௌஹீத் ஜமா-அத் இயக்கம் பாதுகாப்புப் படையினரதும், பொலிஸாரினதும் துரித நடவடிக்கைகளால் நிர்மூலம் செய்யப்பட்டுவிட்டதையும் பொருட்படுத்தாமல் முஸ்லிம்கள் மீது வன்முறைகள் தூண்டப்பட்டன.
குண்டுத்தாக்குதல்களை அடுத்து நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டார்கள். இஸ்லாமிய அரசின் பிரசாரங்களினால் தூண்டிவிடப்பட்டிருக்கக்கூடிய சதித்திட்டமும் அம்பலமானது. குண்டுத்தாக்குதல்கள் நடைபெறக்கூடிய ஆபத்திருப்பதாக முன்கூட்டியே கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக அரசாங்கத்தைப் பொறுப்புக்கூற வைக்காமல் முஸ்லிம் சமூகம் இலக்கு வைக்கப்படுகின்றமை ஆச்சரியமாக இருக்கின்றது. எந்தவொரு சமூகத்திலும் இருக்கக்கூடிய இனக்குழும பெரும்பான்மைவாத உணர்வுகள் எப்போதுமே குற்றஞ்சாட்டுவதற்கு ஒரு அடுத்தவரையும் புதிய எதிரிகளையும் தேடுவதில் நாட்டம் காட்டும். அதுவும் குறிப்பாக மத ரீதியாகத் தூண்டிவிடப்பட்ட ஒரு தாக்குதலின் விளைவாகப் பேரனர்த்தம் நிகழ்ந்தால் அந்த பெரும்பான்மைவாத உணர்வு மேலும் தீவிரமடையும். ஆனால் குண்டுத்தாக்குதல்களை நடத்தியவர்களுக்கு எதிரான ஆவேசம் செல்வாக்கு மிக்க சில பிரிவினரால் முஸ்லிம்களை நோக்கிய வெறுப்பாகவும், பீதியாகவும் மாற்றப்பட்டிருப்பது இலங்கையின் துரதிஷ்டமாகும்.
நாட்டின் இரு பிரதான தேசிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த ஜனாதிபதியும், பிரதமரும் தற்போதைய அரசியல் நிலைவரத்தின் மீது சில பௌத்த பிக்குமார் தங்களது அளவிற்கு ஒவ்வாத முறையில் செல்வாக்குச் செலுத்துவதற்கு எதிராக உறுதியான ஒரு நிலைப்பாட்டை எடுக்கவில்லை.
வெறுப்புணர்வுப் பிரசாரங்களைப் பலர் கண்டிக்கவுமில்லை. ஆனால் நிதியமைச்சர் மங்கள சமரவீர, பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொண்டிருந்ததாக தனது அமைச்சரவை சகாக்களில் ஒருவருக்கு எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டைக் கண்டித்ததுடன், இன மற்றும் மத வெறுப்புணர்வைத் தூண்டுவதற்கு முயற்சிக்கின்ற அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள், ஊடாக நிறுவனங்களைக் கடுமையாகத் துணிச்சலுடன் சாடினார்.
முஸ்லிம்கள் கணிசமானளவில் வாழும் சில பகுதிகளில் கடந்த மாதம் வன் முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அந்த சமூகத்தை ஆபத்தானவர்களாகக் காட்டும் ஒருங்கிணைந்த திட்டமிட்ட பிரசாரமொன்று இப்போது உக்கிரமாக முன்னெடுக்கப்படுகிறது. சிங்களப் பெண் களை வஞ்சகத்தனமான முறையில் முஸ்லிம் வைத்தியர்கள் மலடாக்கினார்கள் என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான பிரசாரத்தின் உக்கிரத்தை வெளிப்படுத்துகிறது. நாசகா ரத்தனமான உள்நாட்டுப் போரொன்றி லிருந்து விடுபட்டிருக்கும் இலங்கை, இனங்களுக்கிடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதிலும் ஒப்புரவான ஒழுங் கொன்றைத் தோற்றுவிப்பதிலும் கவனத் தைச் செலுத்த வேண்டியது அவசிய மாகின்றது. சமூகங்களுக்கிடையிலான மோதல் இலங்கைக்கு மேலும் பாதகமான விளைவுகளையே கொண்டுவரும்.