சிங்களத் தலைவர்கள் மௌனம்;
ஐ.நாவிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு!
“சிங்கள மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதனை நாம் விரும்பவில்லை. ஆனால், துரதிஷ்டவசமாக இந்த நாடு ஒரு சில சிங்கள – பௌத்த பேரினவாதிகளால் இயக்கப்படுகின்றது. அத்தகைய சக்திகளுக்கு எதிராக சிங்களத் தலைவர்கள் செயற்படாமல் உள்ளனர். இது வருந்தத்தக்க விடயம்.”
– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.
ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகமும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் பயங்கரவாத ஒழிப்பு நிறைவேற்று சபையின் நிறைவேற்று அதிகாரியுமான மிஷேல் கோனின்சஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை நேற்று சனிக்கிழமை கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.
இந்தச் சந்திப்பில் ஐ.நா. உதவிச் செயலாளர் நாயகத்துடன் ஐ.நாவுக்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர், சட்ட அதிகாரி அட்ரியா மற்றும் விசேட உதவியாளர் திரு லைலா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கூட்டமைப்பின் தலைவருடன் அதன் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டார்.
இந்த இரு தரப்புப் பேச்சின்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களின் அமுலாக்கத்தின் முக்கியத்துவம் தொடர்பில் இரா சம்பந்தன் கருத்துத் தெரிவித்தார்.
“இந்தத் தீர்மானங்களின் கூட்டுப் பங்காளிகள் என்பதனை மறந்தவர்களாக இலங்கை அரசு செயற்படுகின்றது. தீர்மானங்களின் முன்மொழிவுகளை அமுலாக்குவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறவில்லை” என்று இரா.சம்பந்தன் விசனம் தெரிவித்தார்.
“இந்த நிலைமை தொடர்பில் நாங்கள் அதிருப்தி அடைந்துள்ளோம். இது நாட்டுக்கு நல்லதல்ல. மிக விசேடமாக ஐக்கிய நாடுகள் சபைக்கு இந்த நிலைமை தொடர்ந்தால் அபகீர்த்தி ஏற்படும்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“ஓர் அரசு சர்வதேச சமூகத்துக்கு வாக்குறுதிகளை வழங்கிவிட்டு அவற்றைச் சற்றும் மதிக்காமல் செயற்படுமேயாகில் அத்தகைய நடவடிக்கையானது ஐக்கிய நாடுகள் சபை போன்ற அமைப்புகளின் உருவாக்கத்துக்கான அடிப்படை நோக்கங்களைக் கேள்விக்குறியாக்கும் செயற்பாடாகும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஒரு புதிய அரசமைப்பை உருவாக்குவதற்காக இலங்கை நாடாளுமன்றத்தால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இந்த அரசு உதாசீனம் செய்துள்ளதைச் சுட்டிக்காட்டிய கூட்டமைப்பின் தலைவர், இத்தகைய தீர்மானங்களுக்கு எதிரான அரசின் செயற்பாடானது நல்லிணக்க முயற்சிகளுக்கும் கடந்த கால சம்பவங்கள் மீள்நிகழாமையை உறுதி செய்வதற்குமான பொறிமுறைகளில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களையும், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் உதாசீனம் செய்யும் வகையில் செயற்படுகின்றமையானது இந்த அரசு பிறிதொரு அட்டவணையில் முன்செல்லுகின்றமைக்கான எடுத்துக்காட்டாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், தற்போது அமுலில் உள்ள கடுமையான பயங்கரவாத தடைச் சட்டத்தின் பின்னணியை விளக்கிய அதேவேளை, இந்தச் சட்டத்தை பிறிதொரு சட்டத்தால் மாற்றீடு செய்வது இந்த அரசு சர்வதேச சமூகத்துக்குக் கொடுத்த வாக்குறுதிகளில் பிரதானமான ஒன்றாகும் என்பதையும், ஒரு வரைபு சட்டமூலம் இருக்கின்ற போதிலும் அது குறித்ததான முன்னெடுப்புகள் இன்னும் முற்றுப்பெறவில்லை என்பதனையும் சுட்டிக்காட்டினார்.
தமிழ் மக்கள் தமது உரிமைகளைக் கோரி அஹிம்சைப் போராட்டங்களை நடத்தியபோது தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகள் 1950, 1970 மற்றும் 1980 களில் அரங்கேற்றப்பட்டது என்றும், இவை தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்றம் பெறுவதற்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்கள் என்றும் இதன்போது இரா.சம்பந்தன் எடுத்துக்காட்டினார்.
“சிங்களத் தலைவர்களான பண்டாரநாயக்க மற்றும் டட்லி சேனாநாயக்க ஆகியோர் தமிழ் மக்களின் தலைவரான செல்வநாயகத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் உருவாக்கத்துக்கு முன் இடம்பெற்றவை. ஆயினும், சிங்களத் தலைவர்கள் அந்த ஒப்பந்தகளை மதித்து செயற்படவில்லை. அவர்கள் அவ்வாறு மதித்துச் செயற்பட்டிருந்தால் இந்த நாட்டில் ஒரு போர் ஏற்பட்டிருக்காது” என்றும் இரா.சம்பந்தன் தெளிவுபடுத்தினார்.
“தொடர்ச்சியாகக் கட்டமிடப்பட்ட வகையில் எமது உரிமைகளை மறுக்கும் செயலானது ஐக்கிய நாடுகளின் சமூக அரசியல் உரிமைகள் சாசனத்தை மீறும் செயலாகும். இன்று எமது விருப்புக்கு மாறாக நாம் ஆளப்படுகின்றோம்” என்றும் அவர் தெரிவித்தார்.
“மேலும் மீண்டும் ஒரு போர் உருவாகுவதை நாம் அனுமதிக்க முடியாது. போரினால் எமது மக்கள் பாரிய அழிவுகளைச் சந்தித்துள்ளார்கள்” என்றும் அவர் கவலை தெரிவித்தார்.
“சிங்கள மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதனை நாம் விரும்பவில்லை. ஆனால், துரதிஷ்டவசமாக இந்த நாடு ஒரு சில சிங்கள – பௌத்த பேரினவாதிகளால் இயக்கப்படுகின்றமையும் அத்தகைய சக்திகளுக்கு எதிராக சிங்களத் தலைவர்கள் செயற்படாமையும் வருந்தத்தக்க விடயம்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இந்த நாட்டின் சட்டங்கள் இனங்களுக்கிடையே வித்தியாசமாக பிரயோகிக்கப்படுவதையும், விசேடமாக சட்ட அமுலாக்க நிறுவனங்கள் சிங்கள – பௌத்த கடும்போக்காளர்களின் செயற்பாடுகளைத் திட்டமிட்ட முறையில் அனுமதிப்பதையும் எடுத்துக்காட்டினார்.
“நாங்கள் பிரிவுபடாத பிரிக்க முடியாத ஒன்றிணைந்த இலங்கைத் தீவுக்குள் ஒரு நியாயமான அரசியல் தீர்வை எதிர்பார்க்கின்றோம். இந்த தீர்வை எமக்கு விரைவில் வழங்காத சந்தர்ப்பத்தில் எமது மக்கள் தமது நீண்டகால அரசியல் கோரிக்கைகள் தொடர்பில் மீளச் சிந்திக்க நிர்ப்பந்திக்கப்படுவார்கள்” என்றும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
மேலும், இலங்கை அரசானது தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்றமையை உறுதி செய்யும் வகையில் சர்வதேச சமூகம் மிக உத்வேகத்துடனும் ஆக்கபூர்வமாகவும் செயற்பட வேண்டும் எனவும் அவர் வேண்டிக்கொண்டார்
தமது முன்மொழிவுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் கருத்துக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்பதை உறுதி செய்த ஐ.நாவின் உதவி செயலாளர் நாயகமும் ஐ.நா. பாதுகாப்புச் சபையின் பயங்கரவாத ஒழிப்பு நிறைவேற்று சபையின் நிறைவேற்று அதிகாரியுமான மிஷேல் கோனின்சஸ், ஐ.நாவின் ஆக்கபூர்வமான பங்களிப்புத் தொடர்ந்தும் இருக்கும் என்றும் வாக்குறுதியளித்தார்.