மட்டு. சியோன் தேவாலயத்தில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்
இன, மதம், பேதம் கடந்து எம் எல்லோரையும் இணைப்பதற்கு இச்சந்தர்ப்பம் காரணமாய் அமைந்துள்ளது. இயேசுபிரான் எம் எல்லோரதும் பாவங்களை மீட்பதற்காக சிலுலையில் அறையப்பட்டு 3ஆம் நாள் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று எங்களது இரட்சிப்புக்காக மீண்டும் உயிர்த்தெழுந்தார் என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று குண்டுத் தாக்குதலில் சேதமடைந்த மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தை நேற்று (15) மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா சகிதம் பார்வையிட்டதோடு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிடம் நலன் வேண்டி கர்தினால் பிரார்த்தனையும் செய்ததோடு சியோன் தேவாலயத்தின் போதகர் ரோசான் மகேசனிடம் தனது அனுதாபங்களைத் தெரிவித்தது உதவித் தொகைக்கான காசோலையை கையளித்தார். தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிடம் தனித்தனியே அவர்களது நலன் விசாரித்து அவர் மேலும் கூறுகையில்,
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வதற்து நான் எப்போதும் தயாராய் உள்ளேன். நீங்கள் மனந்திறந்து கேட்கலாம் எனவும் உங்களது துயரங்களில் நானும் இணைந்து கொள்வதோடு உங்களது தேவைகள் பூர்த்தியடையவும் நீங்கள் விரைவில் குணமடையவும் இறந்த உங்களது உறவினர்களின் மீட்புக்காகவும் பிரர்த்திக்கின்றேன் என்றார்.
இதன்போது கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி அருண ஜயசேகர, மட்டக்களப்பு பிரதம பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சி.ஐ. திகாவத்துர மற்றும் மட்டக்களப்பு மறை மாவட்டக் குருமுதல்வர் ஏ.தேவதாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
(மட்டக்களப்பு விசேட, வெல்லாவெளி தினகரன் நிருபர்கள்)