நிலவன் துறைசார் உளநல ஆலோசகர் மற்றும் உளச்சமூகப்பணியாளர். இலங்கையில் அரச மற்றும் அரசார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியவர். பல துறைசார் நிபுணர்களிடம் பயிற்சிகளை பெற்று தொடர்ந்தும் புலம் பெயர் தேசத்தில் உளச்சமூகப் பணியுடன் தனது துறைசார் மேட்படிப்புக் கல்வியினையும் கற்று வருகின்றார்.
யுத்தத்தினால் பாதிப்படைந்த மக்களுக்கும் அப்பிரதேச தடுப்பு முகாம்களிலும், இடைத்தங்கல் முகாம்கலும், மற்றும் சிறைச்சாலைகளில் உளவளத்துணையாளராக பணிபுரிந்த காலகட்டத்தில், ஆழமான வடுக்களைக் சுமந்த மக்களுடனான பணியில் தான் பெற்றுக் கொண்ட அனுபவங்களையும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் உளவியற் பாதிப்புகளைப் போக்குவதற்கான பணியின் முக்கியத்துவத்தையும் போரின் பின்னரான தேவைகள், மற்றும் இச் சேவைகளைச் செய்வதில் உள்ள பிரச்சினைகள், உளவளத்துணையில் கிடைக்கும் பெறுபேறுகள் போன்றவற்றைப் பற்றி தொடர்ந்து பேசிவருகின்றார்.
உளவியல் உளவளத்துணை வாழ்க்கைக்கு உதவுகின்றதா அது தொடர்பாக கூறுங்கள் ?
ஆம், உளவளத்துணை செயற்பாடானது உள்ளத்தை வளப்படுத்துகின்ற ஓர் கலையாக அமைவதோடு ஒரு மனிதனின் புதைந்து கிடக்கின்ற உள்ளார்ந்த வளங்களையும் திறன்களையும் வெளிக்கொணரும் ஒரு முறையாகவும் காணப்படுகிறது .
மனிதன் சாதாரண வாழ்க்கை நடவடிக்கைககளில் ஈடுபடுகின்றபோது அவன் எதிர்பார்த்தோ எதிர்பாராமலோ பல்வேறு பிரச்சினைகளுக்கும் சிக்கல்களுக்கும் இடையூறுகளுக்கும் முகங்கொடுக்கின்றான்.
ஒருவர் குடும்ப மற்றும் சமூக நடவடிக்கைகளில் ஈடுபடும்போது குடும்ப,சமூக,தொடர்பாடல் திறன்கள் குன்றியும், தொழிலின்மை, தொழில் திருப்தியின்மை, போஷாக்கின்மை, சமூகப் புறக்கணிப்பு, சமநிலையற்ற மனவெழுச்சிகள் போன்ற பல்வேறு சமூகப்பிரச்சினைகளாலும் உள நெருக்கீடுகள், பதகளிப்பு, மனச்சோர்வு மற்றும் மெய்ப்பாட்டுக்கோளாறுகள் போன்ற பல்வேறு உளக்கோளாறுகளுக்கு உட்படுகின்றான்.
அவ்வாறான சந்தர்ப்பங்களில் சிலர் அவற்றிற்கு தன்னம்பிக்கையோடு முகங்கொடுத்து வாழ்க்கை நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கின்றனர். வேறு சிலர் அதன் மூலம் மனத்தாக்கங்களுக்கும் நெருக்கீடுகளுக்கும் உட்பட்டு தமது வாழ்க்கை நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுக்க முடியாமல் மிகவும் சிரமப்படுவதையும் எம்மால் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
இவ்வாறான நிலைமைகளிலிருந்து குறித்த நபரை விடுவித்து அவரது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவி செய்து எதிர்காலத்தில் ஏற்படும் அவ்வாறான நிலைமைகளுக்கு வெற்றிகரமாக முகங்கொடுப்பதற்கு அவரது ஆளுமையை விருத்தி செய்வதையே உளவியல் உளவளத்துணை என அழைக்கப்படுகிறது.
இவ் உளவளத்துணைச் செயற்பாட்டின்போது ஒருவர் தன்னை முழுமையாக விளங்கிக்கொள்வதற்கு உதவுகின்றது. அதாவது ஒருவர் தனது பலம், பலவீனத்தை சரியாக விளங்குவதோடு தனது பலவீனங்களை நீக்கி திறன்களை விருத்தி செய்வதனூடாக ஆரோக்கியமற்ற மனவெழுச்சிகள், சிந்தனைகளிலிருந்து நீங்குகிறார். இதன்மூலம் தனது உளவியல் தேவைகளை சரியாகப் பூர்த்தி செய்வதுடன் சிறந்ததோர் வாழ்க்கையையும் ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பமும் கிடைக்கின்றது.
ஈழப் போர் உளவியல் நெருக்கீடு பற்றி கூறுங்கள்?
ஈழத்தில் மூன்று தாசப்த காலமாக இடம்பெற்ற யுத்தமும் 2004 இல் ஏற்பட்ட சுனாமி பேரனர்த்தமும் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பலரை உளநோயாளர்களாக உருவாக்கியுள்ளது. அதன் விளைவாக உளத்தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய பிரச்சினைகள், முரண்பாடுகள் உறவுச்சச்சரவுகள் இடப்பெயர்வுகள், இழப்புக்கள், பிரிவு, பேரழிவுகள் என்பவற்றின் உள்விளைவுகளையே போரியல் நெருக்கீடு எனலாம். குறிப்பாக வடக்கு, கிழக்குப்பிரதேசத்தில் நடைபெற்ற கொடும் போரினால் மக்கள் அதிகமான உளநெருக்கீட்டிற்கு உள்ளாகியுள்ளனர். இவற்றில் சிறுவர்கள், இளைஞர்கள், யுவதிகள், விசேடதேவைக்கு உட்பட்டோர் வயோதிபர்கள் என்ற வயது பால் வேறுபாடின்றி மக்கள் பாரிய உள நெருக்கீட்டைச் சந்தித்துள்ளனர் என்பதை நமது கண்கள் ஊடாக காணமுடிகின்றது.
உடல் ரீதியான நோய்கள் ஏற்படுவதைப் போன்று உளரீதியான நோய்களும் எற்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் போரியலினால் பலவிதமான பாரிய உளநோய்களை கொண்டுள்ளோர் காணப் படுகின்றார்கள். போர் நெருக்கீட்டுத் தாக்கங்களால் துன்புறும் உள்ளத்து உணர்ச்சிகளின் வெளிப்பாடக மீளமீள ஏற்படும் பல எண்ணிக்கையான உடலியல் முறைப்பாட்டு குறிகாட்டியாக மெய்பாட்டு முறைப்பாட்டு நோயினால் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
போரின் படுகொலைகள்,சித்திரவதைகள், தடுப்புக்காவல்கள், பாலியல் பலோர்க்காரம், கண்ணிவெடி, குண்டு வெடிப்புகள், போன்றவவைகள் ஏற்படுத்திய கொடூரமான சம்பவம் பற்றிய சிந்தனைகள் மீள மீள மனதில் ஆட்கொள்பவர்களாகவும் அச்சம்பவம் பற்றிய கனவுகள் நித்திரைக் குழப்பம் மனதை ஒருநிலைப்படுத்த முடியாதநிலை, ஞாபகமறதி, குற்ற உணர்வாக, செய்திருக்கக்கூடிய ஒன்றை செய்யாமல்விட்டுவிட்டேன் என்ற உணர்வுகளுடன் பயங்கர அனுபவங்களின் விளைவுகளைச் சுமந்து அதிகமானவர்கள் வாழ்கின்றார்கள். இன்று பேரின் பின்னர் கொழுந்து விட்டெறிந்த மனிதாபிமானம், இரக்கம், மற்றும் குற்ற உணர்வு யாவும் கோபம், ஆற்றாமை , குற்ற உணர்வு, விரக்தி, என மாபெரும் உளவியல் சிக்கலில் நிறைந்த உளவியல்ப் போரை தமிழினம் மேல் வலிந்து திணித்திருக்கிறது சிங்கள அரசு.
முள்ளிவாய்க்கால் நிகழ்வு மனச்சாட்சியை உலுக்கும் மாபெரும் சோக வரலாறு. இத்துன்பியல் நிகழ்ந்த காலகட்டத்தில் உயிர் பிழைத்தால் போதும் என்று இருந்துவிட்டோம். 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் படுகொலையின் போது நாமும் இறந்திருக்கலாம். ஓர் இனத்தின் இருப்புப் பற்றிச் சிந்தித்து சிறிலங்க மற்றும் வல்லரசு இராணுத்துடன் சமரிட்டு வீரனாக இறந்திருக்கலாம் என பலர் உயிர்பிழைத்த குற்ற உணர்வுடன் வாழ்கின்றார்கள்.
நீங்கள் சொல்வது போல் சிறுவர்கள் , பெண்கள், முதியோர்கள், யுத்தத்தில் அதிகம் பாதிக்கப்படருகின்றார்கள் அனுபவத்திலும் அவதானிப்பிலும் இவர்கள் விவகாரத்தை எப்படி பார்க்கின்றீர்கள்?
பெண்கள் – மிகப் பெரிய கேள்வி இதற்குச் சற்று விளக்கமாக பதில் தரலாம் என நினைக்கின்றேன். மூன்று தசாப்தகாலத்தைக் கடந்து போர் தனிநபர், குடும்பம் , மற்றும் சமூகம் என வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழ்வோர் போர் வடுக்களைச் சுமந்து வாழ்கின்றனர். பாரம்பரிய வாழ்விடம் , சூழல், வாழ்வு முறைமை, கிராமங்கள், உறவுகள், தொடர்புடைமை, சமூக முதலீடுகள், கட்டமைப்புக்கள், நிறுவகங்கள் போன்றன சீர்குலைந்து காணப்படுகிறது. இவர்களில் பெண்கள் போர் நடைபெற்ற காலத்திலும் அதன் பின்னரும் பல்வேறு வகையான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள்.
போர் சூழலில் பல்வேறு இடப்பெயர்வுகளுக்கு முகங்கொடுத்து காயமடைந்தும், உடல் அவயங்களை இழந்தும், தடுத்து வைக்கப்பட்டும், கடத்தப்பட்டும், சித்திரவதைகள் என சொல்லமுடியாத துயரங்களும் , உளவியல் தாக்கம், சமூக பாதுகாப்பு, பெண்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வன்முறை, துஷ்பிரயோகம் மற்றும் பொருளாதார ரீதியான பிரச்சினை என்ற வகையில் பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
தந்தையை , கணவனை , சகோதரனை, மகனை மற்றும் தமது குடும்ப உறுப்பினர்க ளையும் நண்பர்களையும் இழந்துள்ளனர், பூர்வீக நிலம் , வீடு, தொழில், மற்றும் பெறுமதி மிக்க பல்வேறு வளங்களையும், சொத்துடமைகளையும் இழந்து இழப்புத்துயருடன் வாழ்கின்றனர்.
இறந்த கணவனைப் பற்றிய அல்லாது காணாமல் ஆக்கப்பட்ட கணவனை பற்றி ஊடுருவும் நினைவுகள், நித்திரைக் குழப்பம், சுய இரக்கம், எரிர்காலத்தைப் பற்றிய பயம் மற்றும் நிச்சயமற்ற தன்மை. குறைவான சுய மரியாதை, கோபம், எரிச்சல், கவலைத்துயர், அதிர்ச்சியுணர்வு ,சந்தோசமாக இருப்பது பற்றிய குற்ற உணர்வுகள் என இவற்றின் விளைவாக தலை வலி மற்றும் முதுகு வலி என்பன தொடர்ச்சியாக மெய்பட்டு முறைப்பாடு அறிகுறிகளுடன். பலர் காணப்படுகின்றார்கள் .
வடக்கு – கிழக்கில் 89,000 பெண்கள் கணவனை இழந்திருக்கிறார்கள். கிழக்கில் 26,000 பெண்களின் கணவனை இழந்து வாழ்கின்றார்கள் (2010இல் நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஹிஸ்புல்லாவினால் சமர்பிக்கப்பட்ட தொகை ) இயற்கை மரணத்தினாலோ அல்லது நோய்வாய்ப்பட்டு ஏற்பட்ட மரணங்களினாலோ இவ்வாறு ஆனவர்கள் கிடையாது. இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த போரின் விளைவாகவே இப் பெண்தலைமைத்துவ குடும்பங்கள் உருவாகியுள்ளன. இது தவிர வடக்கில் மட்டும் தங்கள் குடும்பத்துக்கு வருவாயைப் பெற்றுக் கொடுத்த 20,000 அதிகமாண ஆண்கள் தற்போது அவர்கள் குடும்பத்துடன் இல்லை. (இந்த ஆண்கள் காணாமல் ஆக்கப்பட்டும் , கடத்தப்பட்டும் , அரசியல் கைதிகளாக சிறைக்ளில் இருக்கின்றார்கள்) இதனால் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் அதிக வாழ்வாதாரம் பின்னடைவைச் சந்தித்து வருகின்றார்கள்.
இதில் பல விதவைகள் 25 முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்களாகவும் கணவனை இழந்தவர்களாகவும் உள்ளனர். கணவன் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதை எண்ணி இவர்கள் அந்த துயரத்தினை மறக்க முடியாது தொடர்ந்தும் அத்துயரத்துடனேயே வாழ்கின்றனர். இந்தப் பெண்கள் உளவியல் ரீதியாகவும், சமூக ரீதியில் பாதிக்கப்படக்கூடிய குழுவாகவும் காணப்படுகின்றனர். கடுமையான உணர்ச்சி வலியை அனுபவித்த பெரும்பாலான பெண்களில் இன்னும் பலர் முழுமையாக பாதிப்புக்களின் தாக்கத்திலிருந்து மீளமுடியாத நிலையில்
குடும்பத்தையும் பிள்ளைகளையும் பார்த்துக்கொண்டு வருவாயைத் தேட வேண்டிய முழுப்பொறுப்பையும் பெண்களிடம் போர் வலிந்து திணித்தருக்கிறது. இதில் சில விதவைகள் தங்கள் பிள்ளைகளை மட்டுமல்லாது தங்களது ஏனைய குடும்ப உறுப்பினர்களையும் கவனித்துக்கொள்ள வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இதன் பாதிப்பு அவர்களையும், அவர்களின் பிள்ளைகளது எதிர்காலத்தையும் பெரிதும் பாதிக்கின்ற விடயமாக உள்ளது.
சமூகப் பாதுக்காப்பின்மையும் வன்முறை துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் பெண்கள் தமக்கு இழைக்கப்பட கொடுமை அல்லத சிதைக்கப்பட்ட கௌரவமான வாழ்வு மற்றும் அவப்பெயருக்கு மத்தியில் வாழமுடியாத நிலையில் நீதி கேட்பதில் கூட பல்வேறு இடர்பாடுகளை எதிர்நோக்கி வருகின்றார்கள் . இது மாத்திரம் மட்டுமல்லாது இதே பெண்கள்தான் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்கச் சொல்லியும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடியும் இன்றும் வீதிகளில் போராடுகின்றார்கள்.
போரினால் விதவைகளாக்கப்பட்ட பெண்தலைமைக் குடும்பங்கள் சமுதாயத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட அந்த அதிர்ச்சிகரமான அனுபவத்தைத் தவிர வறுமை, குடும்ப மோதல்கள், உடல் நலப் பிரச்சினைகள், வேலையின்மை, சமூக தனிமைப்படுத்தல் மற்றும் துன்புறுத்தல் போன்ற தினசரி அழுத்தங்கள் என்பன இவர்கள் வாழ்வில் பாரிய உளவியல் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கில் எல்லாவற்றையும்விட அதிக சவால்களுக்கு முகம் கொடுப்பவர்கள் கடன் பெற்ற பெண்கள். உளவியல், உடல் ரீதியான ,சுயஒழுக்கத்தைக் கேள்விக்குறியாக்கி அத்துமீறல்களை எதிர்கொள்ளும் ஆபத்தில் இருக்கின்றனர். இங்கு பாலியல்ரீதியான தாக்குதல்கள் ஏராளம். நுண்நிதி கடன் பெற்ற பெண்களில் சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தமது தவணையை செலுத்துவதற்கு பதிலாக ”பாலியல் சலுகைகளை” வழங்க நிர்ப்பந்திக்கப் படுகின்றார்கள். பாலியல் ரீதியாக சிதைக்கப்படும்போது அது அக்குடும்பச்சூழலை பெரிதும் உளரீதியாக பாதிக்கும் காரணியாக உள்ளது.
தமது நாளாந்த வாழ்வைக் கொண்டு செல்வதற்கு விலைமாதுக்களாக நிர்ப்பந்திக்கப்படும் பெண்கள் தமது குடும்பங்களுக்காக வருவாய் ஈட்டவும் தொழில் புரியும் இடங்களிலும், இராணுவ விசாரனைக் கூட்டங்களிலும் , புலம்பெயர் உறவுகளாய் உதவிகளை வழங்கும் சில உறவுகளினாலும் விலைமாதுக்களாக நிர்ப்பந்திக்கப் படுகின்றார்கள் இவர்கள் பாலியல் தொடர்பு மூலம் பரவும் எச்.ஐ.வி / எய்ட்ஸ் தொற்றினை எதிர்கொள்கின்றார்கள் .
போரில் பாதிக்கப்பட்ட பெண் முகம் கொடுக்கும் சவால்களைவிட பன்மடங்கு அதிகமாகப் போராளிப் பெண்கள். அதிலும் தனது உடல் அவயங்களை இழந்த பெண் போராளிகள் படும் துன்பம் பன்மடங்கு. போர்க்களத்தில் இறந்த பின்னர் பெண்களைப் பாலியல் ரீதியாகப் இராணுவத்தின்கள் துன்புறுத்தியமை என்பது நம்முடைய காலத்தின் மிகப் பெரிய மனிதாபிமானப் பிரச்சினைகளில் ஒன்று. ஆகவே இவ்விடயத்தில் விசேட கவனமெடுத்து தீர்வு காணவேண்டிய பொறுப்பு சமூகத்தில் உள்ள ஒவ்வொரு தனிநபருக்கும் உண்டு .
மனஅழுத்தம் , மனப்போராட்டங்களோ அடி மனதில் புதைத்து வைக்கப்பட்ட கசப்பான எண்ணங்களோ பிற்காலத்தில் மிதமான மனநோய்களாகவும் , பயம், பதற்றம், வலிப்பு, மற்றும் மாதவிடாய்க் கோளாறுகள் , கர்ப்பப்பை புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் போன்ற நோய்கள் அண்மைக்காலமாக பல நோய்களுக்குக் காரணமாக அமைந்துவிடுகின்றன. இவர்களிடத்தில் வாழ்வை சிறப்பாக அமைக்க முடியாமல்விரும்பத்தகாத கர்மம் , பல திருமணம் , தவறான பாலியல் தொடர்புகள் , விவாகரத்து , முறைகேடான உறவு , பாலியல் கொடுமைக்குட்பட்டவர்கள், சித்தரவதைக்கு ஆளானவர்கள், போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என பல உளச்சமூகப் பிரச்சினைகளுக்கும் உட்பட்டு வருகின்றார்கள்.
திருமணமான பெண்கள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினை சட்டவிரோதக் கட்டாயக் கருக்கலைப்பு . பெண்களை கருத்தடை செய்து தமிழ:P இன பிறப்பு வீதத்தை குறைப்பதற்க
தமிழ்ப் பெண்கள் மத்தியில் அதிகம் மேற்கொள்ளப்படுகிறது. பெண்கள் கட்டாயக் கருத்தடை மேற்கொள்வதற்கு ஒத்துழைக்காவிட்டால் அவர்களின் கணவன்மாருக்கு கருத்தடைச் சிகிச்சை செய்யப்படும் என எச்சரிக்கப்படுகின்றார்கள் இராணுவத்தினராலும் அச்சுறுத்தப் படுகின்றார்கள் . சிறிலங்கா அரசாங்கத்தால் சிறுபான்மை இனமான தமிழர்களை அழிக்கும் நோக்குடன் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கையின் விளைவாக தமிழ்ப் பெண்கள் தொடர்ந்தும் மரணிக்கின்றனர்.
இவ்வாறான குற்றங்களை உள்ளுர் சுகாதார அதிகாரிகள் தொடர்ந்தும் மறைக்க முயற்சிக்கின்றனர். இதில் பல இளம் பெண்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்லத் தயங்கும் மனநிலை காணப்படுகிறது . இதனால் ஏற்படக்கூடிய பல உளத்தாக்கங்களுக்கு எமது சமூகப் பெண்கள் வலிந்து தள்ளப்படுகின்றார்கள் . உடல் நலம் ,உளநலம் , வாழ்க்கை நிலைகள், இனப்பெருக்க நிலை உட்பட, என்றும்தீவிர மனநலக் குறைபாடுடைய பல பெண்களுக்கு நீண்ட காலச் சிகிச்சை மற்றும் மருத்துவப் புனார்வாழ்வும் தேவைப்படுகின்து.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களை வலுப்படுத்தலுடனான உளச்சமூகப் பணி என்பது முக்கியமானதாக அமைகின்றது. அவர்கள் முகங்கொடுக்கும் ஆற்றலை வளர்ப்பதற்கான கல்வி, தொழிற்கல்வி போன்றவற்றினூடான நலச்சேவை மற்றும் புனர்வாழ்வு என்பது வழங்கப்பட வேண்டும். தான் வாழும் சமூகத்துடன் , அமைப்புடன் போராடும் பெண்களை தாயாக, சகோதரியா எம்மைச் சூழ்ந்திருக்கும் பெண்களின் ஆரோகியத்திலும் மன நலத்திலும் மொத்த சமூகமும் அக்கறை கொண்டு பாதுகாக்க வேண்டிய பொறுப்புணர்வுடன் நாம் செயற்பட வேண்டும்.
சிறுவர்கள் – போரின் வட்டுக்கள் , வறுமை, பிரிவுகள், குடும்ப வன்முறைகள், இருப்பிடமின்மை , நிரந்தர வதிவிடமின்மை (சொந்த நிலம் ), அகதி வாழ்வு, போர் ஏற்படுத்திய உடற் காயங்கள் , அங்க இழப்பு , மற்றும் கிபிர் ,குண்டுகள், செல்கள், பொஸ்பரஸ் ,எறிகணைகள் என பாரிய ஆயுத முரண்பாடு போன்றவற்றின் தாக்குதல்களில் இழப்புகள் மற்றும் பயங்கரமான மோசமான சம்பவங்களைப் பார்த்து அதை அனுபவித்தவர்கள் இச் சிறுவர்கள். இதன் விளைவாக நேரடியாக அல்லது மறைமுகமாக இவர்கள் உடல், உள ரீதியான பாதிப்புக்களைச் சுமந்தவர்கள்.
சிறுவர்களுக்கு மன அழுத்தம், மனச் சுமை மற்றும் உடல் உள பாதிப்புகள் காரணங்களாகல் உடல் உள மற்றும் மன வளர்ச்சிகளை தொடர்ச்சியாகப் பாதிக்கின்றது. இதனால் உடல் உள வளர்ச்சியில் தாமதம் ஏற்படுவதுவதனாலும் ,தடுக்கப்படுவதாலும் ஆக்கபூர்வமான வகையிலான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு குறைபாடு இயலாமையுள்ள சிறுவர்களாக பலர் காணப்படுகின்றார்கள்.
அன்புக்குரியவர்களின் இழப்புகள், உறவுகளின் மரணங்கள் குறிப்பாக பெற்றோரை இழந்த பிள்ளைகளும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிள்ளைகளும் அதிகளவில் மனப்பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றார்கள்.
சிறு வயதில் மனதில் ஏற்பட்ட அதிர்ச்சிகளும், அன்றாடம் வாழ்க்கை முறையில் ஏற்படும் பிரச்சினைகளிம் பல குழந்தைகளும் சிறுவர்களும் உடல் உள சமூக ரீதியாக பாதித்த சம்பவங்கள் நடைபெற்றபோது எந்தவிதமான உதவியையும் பெற முடியாதவர்களாய் இருந்துள்ளார்கள் என்பது கவலைக்குரிய நிலையாகும்.
சிறு வயதில் அவர்களின் இயலுமைக்கு அப்பால் சுமக்க முடியாத பெரும் சுமைகளையும் வலிகளையும் சுமக்கின்றார்கள். இவர்களை இப் பாதிப்பிலிருந்து மீட்டெடுக்க நமது சமூகம் முன் வரவேண்டும். சிறுவர்களில் பெற்றோரோடு இருக்கும் பிள்ளைகள் இத்தகைய பாதிப்புக்களில் இருந்து படிப்படியாக மீளக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளது. பெற்றோர்கள் அவர்களுக்கான ஆதரவை உரிய வகையில் வழங்க வேண்டும்.
வடகிழக்கில் சிறுவர்களுக்கு உடல், உள பாலியல் ரீதியான துஸ்பிரயோகங்களும் நடந்தேறி வருகிறது. சிறுவயதில் பாலியல் வன்முறைக்கு இரையான ஆண்களும் பெரும்பாலான பெண்களும் மிதமான மன நோய்க்கு ஆளாகின்றனர். விடலைப்பருவம் மனநலக் குறைபாடுகளுக்கு வித்திடும் பருவமாகும், இப்பருவத்தில் ஏற்படும் துஸ்பிரயோகம் அவர்களின் வாழ்வில் மனநலக் குறைபாடுகளை ஏற்படுத்தியுள்ளது. இத்தகையப் பாதிப்புகள் நாளாந்தம் நடைபெறுவதைப் பார்க்கும்போது இது எத்தனை தலைமுறைகளுக்குத் தொடரப்போகின்றதோ என்று நினைக்கும்போது மனதில் ஒருவகைப் பயம் ஒட்டிக்கொள்வதைத் தவிர்க்க முடியவில்லை.
உடலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட பிள்ளைகளில் பெரும்பாலானோர் அவர்கள் அவமானம், பதகளிப்பு, ஆத்திரம் போன்றவற்றினால் வசம் தீர்க்கும் எண்ணம் போன்றன ஏற்பட்டு உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இப்படியாக பிற்கால வாழ்வில் இவர்கள் வன்முறையாளர்களாக மாறுவதற்கு வாய்ப்பாகவும் அமைகின்றது. உடல்ரீதியாக சமீபகாலமாக அதிகரித்து வருகின்ற மெய்பாடு முறைப்பாட்டு நோய்கள் குமட்டல், வாந்தி, தலை சுற்றல், தலைவலி, உடலின் சில பாகங்களில் வலி, வயிற்றுப்போக்கு மலச்சிக்கல் போன்ற பல அறிகுறிகளுக்கு உடல் ரீதியாகக் காரணங்கள் இல்லாத போது அவை ஒருவிதமான மன அழுத்தம்,மன விரக்தி, மற்றும் மனச் சோர்வு என்பன உளநோய்களுக்கு உள்ளாகி இருக்கின்றனர் என்பதை குறிகாட்டுகிறது.
சிறுவர்களின் பெற்றோர்கள் மத்திய கிழக்குக்குச் சென்றிட வயது முதிர்ந்த பாட்டிமாருடனும், உறவினர்ளுகடனும் வாழும் சிறுவர்களில் சிலர் படும் பாடு பரிதாபம். நாளுக்கு நாள் சகல வீடுகளில் எற்படும் துஷ்பிரயோகங்களும் . வீட்டில் தனியே இருக்கும் பெண்பிள்ளைகளின் அல்லது முன் பள்ளிக்கு செல்லும் சிறுவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறது .
வீடுகளில் சண்டைபோட்டு ஓடிவரும் சிறுவர்கள், வீதியோர மனிதர்களாக மாறிவிடுகின்றனர் , குப்பைத் தொட்டியிலும் கிடங்கு வெட்டித்தாட்டும், வீதியிலும் போடப்படும் குழந்தைகள் என இந்த வட்டம் மிகப் பெரியதாக நீண்டு செல்கின்றது. குடும்பத்தின் சரியான பராமரிப்பு இல்லாமல் தெருவோரங்களிலும், கோயில்களிலும், பாலங்களின் கீழும் தஞ்சம் அடைகிறார்கள். சமுதாயத்தால் இவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் சொல்லில் அடக்கிட முடியாது.
குழந்தைகளிடம் அன்புடன் கூடிய கண்டிப்பும், கண்காணிப்பும் அவசியம். குழந்தைகளிடம் நேரம் செலவிட்டு அவர்களின் பேச்சைக் கேட்டறிய குடும்பத்தில் பெற்ரோரை இழந்தும் பிரிந்தும் வாழும் சிறுவர்களின் மனதில் எழும் கவலை , மனச் சோர்வு , பதட்டம், தாழ்வுமனப்பான்மை, பயம், வேதனை, துன்பம், இயலாமை, தன்நம்பிக்கையின்மை, எதிர்மறை எண்ணங்கள் , மற்றும் தம்மால் சமாளிக்க முடியாத உணர்வுக் கோளாறுகளுடனும் வாழ்கின்றார்கள் .
போர் ஏற்படுத்திய பாதிப்புக்களை ஏற்றுக்கொள்ளவோ புரிந்துகொள்ளவோ முடியாத பயங்கரமான நெருக்கடியான வேதனையான சூழலுக்குள் தொடர்ச்சியாக வாழ்வதால் மன உளவியல் என்பவற்றில் ஏற்படுகின்ற தாக்கத்தினால் உருவாகின்ற பாதிப்பு வகைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மீள மீள ஏற்படும் ஒரேவிதமான பல்வேறு பயங்கரமான நெருக்கடி சம்பவங்களின் பின் சிறுவர்களுக்கு ஏற்படுகின்ற மன உளவியல் தாக்கத்தை ஆங்கிலத்தில் The post traumatic stress disorder (PTSD) இது குழந்தைகள் மற்றும் சிறுவர்களிடம் அதிகமான ஆழமான உளவியல் மற்றும் மனநிலை பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது .
சிறுவர்கள் எதிர் கொள்கின்ற உள, சமூக பிரச்சினைகளைக் குறைப்பதற்கு பொதுவாக குடும்ப சூழலில் கிடைக்கின்ற அன்பு, அரவணைப்பு, ஆதரவு, பாதுகாப்பு, உணர்வுமதித்தல், மற்றும் ஆலோசனையும் வழிகாட்டல் என்பன நெருக்கடியான சம்பவங்களின் பின் உருவாகின்ற மன இறுக்கம் இல்லாத சூழ்நிலையில் வாழ்வதே மன அமைதிக்கும், மனநலத்திற்கும் வழி வகுக்கும், தனிப்பட்ட மனிதனின் குணநல மேம்பாடு, சூழ்நிலையில் ஆக்கப்பூர்வ மாற்றம், சமுதாய மேம்பாடு போன்ற பல காரணங்களும் இதற்குத் துணையாக இருக்கும்.
மனச் சுமை, மன அழுத்தம் மற்றும் உளவியல் பாதிப்புகளை கட்டுப்படுத்திட குடும்பச் சூழலிலும் , சமுதாயத்திலும் வைத்துப் பராமரிக்கப்படுவது மிகப் பிரதானமானது. மன மகிழ்வோடு, மனநலத்தோடு வாழ முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம். அத்துடன் சிறுவர்களுடன் பணியாற்றுபவர்கள் சுகாதார , பாரம்பரிய , சமய, கல்வி சார் அமைப்புக்கள் மற்றும் அரச , அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து சட்ட ரீதியாக செயற்படுகின்ற வேளையில் சிறுவர்களை பிரச்சினைகளில் இருந்து மீட்டெடுக்க முடியும் என்பதில் ஐயமில்லை.
முதியவர்கள்– போர், முதுமைப் பருவத்தை அடைந்த பலரை பலவிதமான துன்பங்களுக்கு ஆளாகி உள்ளது. பல ஆண்டுகளாக தேசத்தின் முதுகெழும்பாகவும் குடும்பத்திற்கு தூண்களாக இருந்து பெரும் ஆதரவு தந்து வந்தவர்கள் இன்று அவர்களில் சிலர் வாழ்க்கைத் துணையினை இழந்தும், குடும்பத்தை இழந்தும், குழந்தைகளை இழந்தும் , குழந்தைகளின் ஆதரவு இல்லாமல் பெரும் சிரமத்தின் மத்தியில் தமது வாழ்நாளை நகர்த்துகின்றார்கள் .
முதியோர்களிடம் மனச்சோர்வும் தற்கொலை மனப்பான்மையும் அதிக அளவில் காணப்படுகிறது. இதற்குக் காரணம், யுத்தத்தில் கும்பத்தினரை இழந்து தனித்து வாழுதல், முதியோரின் வாழ்நாளின் பிற்பகுதியில் ஏற்படும் கடுமையான இழப்பும் , உடல்நலம் குன்றுதல், பாரிய நாட்பட்ட நோய்கள் , உடல்நிலையில் மாற்றம், இராணுவத்தின் நில ஆக்கிரமிப்பு இதனால் ஏற்படும் பாரம்பரிய விவசாயம்,தோட்டம் , அதன் வருமான இழப்பு, உறவினர்கள் மற்றும் நண்பர்களின் இழப்பும் அவர்களின் மனநிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள், தீயது ஏதோ நடக்கப்போகிறது என்ற பயம், எப்போதும் உடல் சோர்வும் ,சோகம்., ஒன்றில் கவனம் செலுத்த இயலாமை, சோம்பேறித்தனம், எதிலும் ஆர்வமின்மை, உற்சாகமின்மை, குற்றவுணர்வு, ஒழுங்கற்ற பசி மற்றும் தூக்கம் ஆகியவையும் மனச்சோர்வின் வெளிப்பாடாக முதியவர்களிடத்தில் அதிகம் காண முடிகிறது .
இவர்களில் பிள்ளைகளை யுத்தம் காவுகொள்ள மற்றும் பிள்ளைகள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டும் , நீண்டகால தடுப்பும் , அரசியல் கைதிகளாய் சிறை பிள்ளைகளின் துயர்மிகு வாழ்வை சுமந்தவர்களாகவும் ஒரு தொகுதியினர், வயோதிபகால வியாதிகள், நோய்களால் பாதிக்கப்பட்டு , மருத்துவக் கவனிப்பின்மை என்றெல்லாம் முதியவர்கள் பலர் தமது செலவுகளை சமாளிக்க முடியாமல் பெரும் துன்பங்களுடன் நாளாந்த வாழ்க்கைக்காக போராடி வாழ்வதையும் காண முடிகின்றது. இன்னொரு தொகுதியினர் பிள்ளைகளை வெளிநாடு அனுப்பிவிட்டு தனிமையில் வாழ்பவர்களாக உள்ளனர்.
முதியோர்கள் அதிகளவிலான நேரத்தினை தனிமையில் கழிக்கின்றனர். இதனால் தமது ஆசைகள், ஏக்கங்களை பிள்ளைகளுக்கோ, பேரப்பிள்ளைகளுக்கோ அல்லது ஏனைய உறவினர்களுக்கோ தெரியப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களை அதிகளவில் இழந்தவர்களாகக் காணப்படுகின்றனர். இன்னும் சிலர் பிள்ளைகளால் பராமரிக்க முடியாமல் முதியவர்கள் அநாதரவான முதியோர் பராமரிப்பு இல்லங்களிலும் வீதியோரம் நடைபாதையில் இரவு பகலாக வாழ்கின்றார்கள் .
முதிர்ச்சி, காது கேளாமை, கண் பார்வை மங்குதல், தனிமை, உணர்வுக் கோளாறுகள் உட்பட தொடர்ந்து நடத்தப்படும் போராட்டங்கள் (காணாமல்போனோர் , நிலமீட்பு, அரசியல்க்கைதிகள் விடுதலை ) இதனால் பல விதமான உளப் பிரச்சினைகளோடு உடல் ரீதியான நோய்களுக்கும் உட்படுகின்றார்கள். இதனால் முதியவர்களிடம் மன அழுத்தம், பித்து (mania – அதீத உற்சாகத்துடன் செயல்படுதல்),மனப் புலவு நோய் (Schizophrenia), ஆளுமைச் சிதைவு (Personality disorder), டெக்ஸ்ட்டாஃரீனியா (textaphrenia) ஆகிய நோய்களுடன் மனநலக் கோளாறுகளை கொண்ட நடைபிணங்களாக நாளாந்தம் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்ததோ, ஏது நடந்ததோ என்ற ஏக்கமும், மன அழுத்துடனும் வெற்று மனிதர்களாக வாழ்கின்றார்கள்.
யுத்தம் விளைவு மற்றும் நெருக்கடிகள் மக்களின் மனோநிலையில் எப்படியான தாக்கத்தை உண்டுபண்ணி உள்ளதேனக் காண்கிறீர்கள்?
ஈழத்தில் பதுங்குகுழிகளிலும் பதுகாப்பு வலய நிலையங்களிலும் வாழ்ந்த மக்கள் மகிழ்ச்சி நிறைந்தவர்கள் அல்ல. சுமார் மூன்று தசாப்தகால போர் அனுபவத்தினை கடந்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரின் பாதிப்புகளைக் கொண்டவர்களாகவே மக்கள் காணப்படுகின்றனர். இழப்புக்களால் ஏற்பட்ட துயரம், பிரிவுத்துயர் , இடர்களால் ஏற்பட்ட மனக்காயம் பல படைகளாக காணப்படுகின்றது.
மனித உயிர்களுக்கு மதிப்பற்று இறந்தவர்களின் இறுதி ஊர்வலத்தில் பங்குகொள்வதற்கு முடியாமலும் , உடல்களை எரித்திட அல்லது புதைத்திட முடியாமல் வாழ்ந்த அவலமும் அதற்கு பக்கத்தில் பதுங்குகுழி வெட்டி வாழ்ந்தவர்களும், பின்னர் அதே பதுங்குகுழிக ளில் பிணங்களாகவும் குடும்ப உறவுகளை காவுகொடுத்து அவையங்களை இழந்தும் இடம்பெயர்வு , நலன்புரி நிலைய வாழ்க்கை, தடுப்பு முகம், விசாரணைகள், காட்டிக்கொடுப்பு என ஏற்படுத்திய பாதிப்புக்களை வார்த்தைகளினூடாக வெளிப்படுத்த முடியாதவர்களாக காணப்படுகிறார்கள்
இழப்பு, வெறுமை, ஆத்திரம், கோபம், சினம், கவலை, சோகம், குற்றவுணர்வு, நாட்டமின்மை ,தொடர்ச்சியான அழுகை , மீண்டும் பழைய விடயங்களை பற்றி சிந்தித்து இருத்தல், காரணமின்றி யோசித்துக் கொண்டிருத்தல், எதிலும் ஆர்வமின்மை,அவர்களின் அடுத்த கட்ட தீர்மானத்தை எடுப்பது தொடர்பில் இடர்பாடுகளை எதிர் நோக்குதல், இலகுவில் பதட்டம் அடைதல், குழம்பிய நிலையில் காணப்படுதல் தோற்றுப்போனதான மனநிலையை கொண்டவர்களாகவும் மனவடுவின் தாக்கத்தின் குணயியல்புகளைக் கொண்ட ஒருவித உணர்ச்சிக் கொதிநிலையில் காணப்படுகிறார்கள்.
பாதிப்புக்களை பல காலம் எதிர்கொண்டவர்கள் ஒரு பகுதியில் பலவீனமானவர்களாகவும் மறுபகுதியின் தைரியம் கூடியவர்களாகவும் எதையும் எதிர்கொள்ளும் வல்லமையும் சக்தியும் வளர்ச்சிநிலை கொண்டவர்களாகவும் காணப்படுகின்றனர். இன்னுமொரு பகுதியினர் என்ன நடக்கிறது என்பது கூட தெரியா நிலையில் எது நடந்தாலும் நமக்கேன வாழும் நிலை கொண்டவர்களாகவும் வெவ்வேறு விதமான மனநிலையில் காணப்படுகின்றனர்.
வலுவிழந்தவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகள் , விசாரணை என பல உடல் உள பாலியல் ரீதியாக சித்தரவதைகளை அனுபவித்தவர்கள் அதனை வெளிப்படுத்த வழிதெரியாதவர்களாக செய்வது அறியாது திகைத்துப் போய் உணர்ச்சிக் கொந்தளிப்போடு வாழ்கின்றனர் என்றால் மிகையாகாது.
நித்தமும் நடைபெறறு வரும் இராணுவத்தின் நில ஆக்கிரமிப்பு, சிங்களக் குடியேற்றங்களும், நாளாந்தம் நடைபெற்றுவரும் பயங்கரவாத தடைச்சட்ட கைதிகள், மரணங்கள் பாதுகாப்பு வலயங்களாக இருந்ததும் தற்போதும் உயர்பாதுகாப்பு வலயங்களாக இருக்கின்றதுமான பகுதிகள் , புதிய புதிய விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்ற நிலை, மக்கள் வாழ்கின்ற குடியிருப்புகளுக்கு அருகில் இராணுவ காவலரன்கள் என பல்வேறு வாழ்வியல் மற்றும் சமூக பிரச்சினைகளை எதிர்கொண்டு சிலர் இன்று செய்வதறியாது தவிக்கின்றனர். சிலர் வாழ வழியின்றி தற்கொலை செய்கின்றனர். இன்னும் சிலர் பெருமூச்சுடன் எல்லாம் முடிஞ்சு போச்சு என எதிர்காலம் பற்றிய நம்பிக்கையற்றநிலை காணப்படுவது கண்கூடு.
தற்போது சமூகத்தில் பெரும் அச்சத்தினை எற்படுத்தியிருக்கும் விஷஊசி மரணம், இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
இலங்கை அரசு தமிழர்களை பல்வேறு வழிமுறைகளில் இன அழிப்பினை மேற்கொண்டு வருகின்றார்கள், முன்னாள் போராளிகள் தொடர்ச்சியாக பலர் பல்வேறு விதமான மர்மமான நோய்கள் காரணமாகவும் இறக்கின்றனர். புனர்வாழ்வு பெற்ற 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் சமூகத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றார்கள். புனர்வாழ்வு முகாம் என்ற பெயரில் அழைக்கப்படுவது மாபெரும் வதை முகாம் என்ற உண்மையை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
இராணுவத்தினரிடம் சரணடைந்த அல்லது படையினரால் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு, புனர்வாழ்வு முகாம்களில் இருந்த போது தடுப்பூசி என்ற பெயரில் மெல்லக் கொல்லும் விச ஊசி காலம் செல்லச் செல்ல மெதுவாக பல்வேறு உடற் பாதிப்புக்களை எற்படுத்திய மரணத்திற்கான காரணங்களும் கண்டறியப்பட முடியவில்லை. புனர்வாழ்வு முகாம்களில் வைத்து ஏற்றப்பட்டதாகக் கூறப்படுகின்ற ஊசி சமூகத்திலும், போராளிகள் மத்தியிலும் பதட்டமும், பாதுகாப்பு அச்சம் தொடர்பான நம்பிக்கையற்ற ஒரு நிலைமையினை ஏற்படுத்தியிருக்கின்றது.
விடுதலைப்புலிகள் தாங்கள் கொண்ட கொள்கையில் இறுக்கமான பற்றுறுதி கொண்டவர்கள். தமிழ்த் தேசியப் போராட்ட வரலாற்றில் அதியுச்ச தியாகங்களைச் செய்த்திட்ட போராளிகள் இன்று மரணப் பயம் துரத்தும் நடைப்பிணங்களாக வாழ்கின்றார்கள். இராணுவ புலனாய்வு பிரிவினரால் இறுக்கமான விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். சித்திரவதை சார்ந்த நடவடிக்கைகளுக்கும் ஆளாகியிருக்கின்றார்கள். சரணடைந்தவர்கள் மனிதாபிமானத்துடன் நடத்தப்படவில்லை. சரணடைந்தவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் எல்லோருமே விடுதலை செய்யப்படவில்லை. என்பதை உலகமே நன்கறியும்.
அரசியல் கைதிகள் சிறையிலே வாடுகின்றார்கள். விடுதலை செய்யப்பட்டவர்கள் புனர்வாழ்வு முகாமில் இருந்து வெளியில் வந்த அனைவரும் ஆரோக்கியம் உடையவர்களாக வெளியே வரவில்லை என்பதும் உண்மை. உளவியல் பாதிப்புக்கும் உள நெருக்கீடு மிக்க உடல் உபாதைகளுக்கும் உள்ளாகி இருக்கின்றார்கள். இலங்கைப் பாதுகாப்புத் தரப்பினரின் கண்காணிப்புக்கள் மிக மோசமான மன உளைச்சலுக்கும் அச்ச உணர்வுக்கும், எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற ஒரு நிலையில் தேகாரோக்கியம் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி இவர்களது எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கியுள்ளது.
போராளிகளுக்கு புனர்வாழ்வின் போது, இரசாயன மருந்தூட்டப்பட்டதா? அல்லது மெல்லக் கொல்லும் மருந்து செலுத்தப்பட்டதா? என்னும் வினா ஒருபுறம் இருக்க இதுவரை புனர்வாழ்வளிக்கப்பட்ட 120போராளிகளுக்கு மேல் போராளிகள் மரணமடைந்துள்ளனர். இவர்களில் ஏராளமானோருக்கு விஷ ஊசி போடப்பட்டுள்ளதாகவும், இதனால் படிப்படியாக உடல் நலம் குன்றி அவர்கள் இறப்பை எதிர்கொள்வதாகவும் இலங்கை அரசின் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. ஆனால் இலங்கை அரசு அதை ஏற்க மறுக்கிறது. அதற்காக இந்தக் குற்றச்சாட்டு பொய்யானது என்ற முடிவுக்கு வர முடியாது.
போராளிகள் திடீர் மரணம் விஷ ஊசி விவகாரம் இருந்தாலும் இது பற்றிய அதிகாரபூர்வ தரவுகள் யாரிடமும் கிடையாது இந்தக் கூட்டு மரணங்கள் குறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அச்சத்தைப் போக்கி, நம்பிக்கையுடன் வாழ்வியலில் ஈடுபடுவதற்கு தரம் வாய்ந்த மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். நோயினால் மரணமடைந்ததாக சாதரணமாக மரண சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன இவ்வாறான உயிரிழப்புக்கள் பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களைப் பாதுகாக்க வேண்டிய தார்மீகக் பொறுப்பும் கடமையும் அனைவருக்கும் இரக்க வேண்டும்.
யுத்தத்தின் பின்னர் எவ்வாறன குற்றச்செயல்கள் காணப்படுகிறது இக் குற்றச் செயல்களின் அதிகரிப்புக்கான காரணங்கள் என்ன ?
நீண்டகால யுத்தம் அதன் பாதிப்புக்களைக் கொண்டிருக்கும் எமது சமூகத்தில் யுத்தம் முடிவடைந்ததும் பல்வேறு சமூகப் பிரச்சினைகள் எழுவது இயல்பு. தற்போது சமூகத்தின் மத்தியில் எழுப்பப்படும் குற்றச் செயல்களும் அதற்கான காரணங்களும் முன்னொருபோதும் இல்லாத அளவு வடகிழக்கில் அதிகரித்துக் காணப்படுகின்றமையை அன்றாடம் பரவலாக இடம் பெறும் துன்பகரமான சம்பவங்கள் சான்று பகிர்கின்றன.
உள்ளத்தில் ஏற்படுகின்ற ஆரோக்கியமற்ற மாற்றங்கள், நடத்தைப் பிறழ்வுகள் சமூக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடச் செய்கிறது. கொலை, தற்கொலை, விபத்துக்கள் , கொள்ளை, கடத்தல், விவாகரத்து, பெண்கள் சிறுவர் மீதான பாலியல் துஷ்பிரயோகம், வீட்டு வன்முறை என செய்திகள் வெளியாகி தமிழ் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றன. பாலியல் வன்புணர்வின் பின்னர் சிறுமிகள் கொடூரமாகக் கொலை செய்யப்படும் சம்பவங்களும் இடம்பெற்று வருகிறது. இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் ஏதோவொரு வகையில் உளப்பாதிப்புக்களுக்கு உள்ளாகியிருக்கவும் கூடும்.
சமூக விரோத எண்ணங்களின் வெளிப்பாட்டால் ஏற்படுகின்ற மிகவும் கொடூரமான குற்றச் செயல்களின் பின்னணியில் அவற்றைப் புரிகின்றவர்கள் பலமான உள நோய்களுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். ஆளுமை உளக்கோளாறு மற்றும் பாலியல் உளக்கோளாறுகளினால் பீடிக்கப்பட்டுள்ளவர்களால் புரியப்படுகின்ற குற்றங்கள் பாலகர்களைக் கூட பலி எடுத்துக் கொண்டிருக்கின்றன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சமூக, கலாசார மாற்றங்கள்,போதைப்பொருள் பாவனை , பல தாரத்திருமணம் , குறிப்பாக இளவயதினரிடையே பாரம்பரிய, சமூக, கலாசார பண்பாட்டுச் சிதைவுகளைக் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்கிட பேரினவாதச் சிங்கள அரசு மிகத் தீவிரமாக முனைப்புக் காட்டி வருகிறது .
குறிப்பாக வாள்வெட்டுச் சம்பவங்கள் உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்து வரும் நிலையில் வடமாகாணத்தில் கோடிக்கணக்கில் பெறுமதியாக போதைப்பொருள் நாளாந்தம் கைமாற்றப்படுவதும் அதிலும் குறிப்பாக இவை அனைத்தும் சிங்கள பொலிஸாசர் மற்றும் அரசியல் வாதிகளின் ஆதரவுடனேயே நடைபெறுகிறது என என்னும்போது மனிதகுலம் வெட்கித் தலைகுனிய வேண்டிய செயல். இதனைக் கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றார்கள்.
தமிழர் தேசத்தை அழிப்பதற்கு சிங்கள தேசம் எடுத்திருக்கும் புதிய நடவடிக்கையாக இந்த ஹெரோயின் கஞ்சா மற்றும் கசிப்பு போன்ற போதைப்பொருள் பாவனையும் அதனால் சங்கிலியாக தொடரும் குற்றச் செயல்களினால் ஏற்படும் பல்வேறு தாக்கங்களுக்கு குடும்பங்களும் சமூகங்களும் முகம்கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர்.
அத்துடன் சட்டத்தில் உள்ள ஓட்டைகளைக் குற்றவாளிகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதும் ஒரு காரணமாகும். இவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு உரிய தண்டனை வழங்குவதில் நீண்டகாலம் எடுப்பதுவும் இத்தகைய குற்றச் செயல்கள் அதிகரித்துச் செல்வதற்கு ஒரு காரணமாக அமைகிறது.
ஒருவரின் உள்ளம் பாதிக்கப்படுகின்றபோது தான் அவரது நடத்தையில் விரும்பத்தகாத மாற்றங்களைக் காண முடியுமென உளவியல் சுட்டிக்காட்டுகிறது. மேலைத்தேய நாகரிகத் தாக்கங்களின் விளைவாக ஏற்பட்டுள்ள குடும்பக் கட்டமைப்பு மாற்றங்களினால் உளநெருக்கீடு, மனித உறவுகளில் ஏற்படுகின்ற தாக்கத்தினை பலர் எதிர்நோக்குகின்றார்கள்.
மக்கள் வேதவாக்காக வாய்க்குள் முணு முணுப்பது விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் எங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்பது மட்டுமல்லாமல் ஆதங்கத்தினையும் வெளிப்படுத்தி வருகின்றார்கள் . நாம் அடுத்தவர்களை விமர்சித்துக்கொண்டு இருப்பதை தவிர்த்து இவற்றை தடுப்பதற்கும் அல்லது கட்டுப்படுத்துவதற்கும் மற்றும் எதிர்கொள்வதற்கு அந்தச் சமூகம் ஒருங்கிணைந்த முறையில் ஆற்றுப்படுத்திட ஆரோக்கியமான சமூக வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
நீங்கள் சொல்வதுபோல் பாதிப்புக்களினால் பாதிக்கப் பட்டவர்களை எப்படி வகைப்படுத்துவீர்கள்?
பாதிப்பில் பொதுவாக மூன்று வகையினர் உள்ளடங்குவர். உடல் , உள , சூழல் காரணிகளுக்கு இசைவாக்கமடைந்தும், இசைவாக்கமடையாமலும் பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களை மூன்று பிரிவுகளாக வகைப்படுத்த முடியும்.
- பாதிப்புக்குள்ளானவர்கள் .
- பாதிப்புக்குள்ளாகிக் கொண்டிருப்பவர்கள் .
- பாதிப்புக்குள்ளாக் கூடியவர்கள்.
யுத்தத்தின் பாதிப்பு நேரடியாகவும் மறைமுகமாகவும் அங்கிருப்பவர்கள் மட்டும்பாதிக்கப்படுவதில்லை. இந்தப் பாதிப்புகளைப் பற்றிக் கேள்விப்படுவோரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இவர்கள் நிலத்திலும் , புலத்திலும் இன, மொழி, கடந்தும் பலர் உளரீதியான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
அதிகமாக பாதிப்புக்குள்ளானவர்கள் யுத்தத்தில் நேரடி அனுபவங்களைக் கொண்டவர்கள் இவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். மீளவும் அவர்கள் அந்த பிரதேசங்களில் வாழ்ந்து வருவதனால் அங்கு தோண்றும் மீள் நினைவுகளை கையாள முடியாமல் பாதிப்பிலிருந்து மீளவும் முடியாமல் தொடர்ந்தும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
விடுதலைப் போரில் ஈடுபட்ட போராளிகள் மத்தியில் தப்பிப் பிழைத்த குற்றவுணர்ச்சி சார்ந்த பாதிப்பு. கையாலாக நிலையிலான பாதிப்பு, என இதை நாம் அடையாளம் காண முடியும். இவர்கள் வார்த்தைகளில் நாம் அன்று வீரச்சாவடைந்திருக்கலாம் எனவும் எந்த மக்களுக்காக எல்லையில் இருந்தோம் அந்த மக்களை காப்பாற்ற முடியவில்லை, நில ஆக்கிரமிப்பை தடுக்கமுடியாதவர்களாய் அடிமை வாழ்வை வாழ்வதை விட மண்ணுக்குள் விதையாகி இருக்கலாம் என கூறுகின்ற இந்த வகையான பாதிப்புக்குள்ளாகியோரை நாம் பல இடங்களிலும் அவதானித்துள்ளோம்.
உளநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களை எப்படி அடையாளம் காண்பது?
இது சற்று கடினமான காரியம். உண்மையில் பாதிக்கப்பட்டவர்களையும் பாதிப்பின் தன்மை அல்லது பாதிப்பின் வகையையும் தெரிந்து கொள்ள வேண்டும் ,உதரணமாக தெளிவற்ற சிந்தனை, நீடித்திருக்கும் கவலை அல்லது எரிச்சல்,தனிமையை நாடுவது, குடும்பம் மற்றும் நண்பர்களிடமிருந்து விலகுவது,எதிலும் நாட்டமின்மை,காரணமில்லாமல் மற்றவர் மீது சந்தேகப்படுவது, அதிக சந்தோஷம் ,அதிக கவலை, தேவையில்லாத பயம், சோகம், பதற்றம், அளவுக்கு அதிகமான, கட்டுப்படுத்த முடியாத மது , போதைப் பழக்கம், உணவு மற்றும் தூங்கும் பழக்கத்தில் மிகுந்த மாற்றம் ஏற்படுவது,தற்கொலை எண்ணங்கள் அல்லது முயற்சி, நாளாந்தச் செயற்பாடுகளைக் கூட சமாளிக்க முடியாமல் திணறுதல், அளவுக்கு அதிகமான கோபம் அல்லது குற்றவுணர்வ, இல்லாத விஷயத்தைப் பார்ப்பது , யாரோ தம் காதில் பேசுவது போல உணர்தல், தன்னைத் தானே காயப்படுத்தி கொள்ளுதல்,குறிப்பிட்ட வயதுக்கு பின்னரும் கட்டுப்படுத்த முடியாமல் சிறுநீர் கழித்தல், தொடர்ந்து வரும் கெட்ட கனவுகள், அடிக்கடி எரிந்து விழுதல் அல்லது கோபப்படுதல், கவனம் செலுத்த முடியாத நிலை ( கவனச் சிதறல் / வார்த்தைகளையும் ஒலியையும் தொடர்புபடுத்த முடியாமல் போவது ஒருவர் சொல்வதை பின்பற்ற இயலாமை, எல்லாவற்றுக்கும் பிறரைச் சார்ந்திருப்பது , கற்றல் குறைபாடுகளை எழுதுவது, படிப்பது கணக்குப் போடுவது போன்றவற்றில் ஏற்படும் குறிப்பிட்ட பிரச்சினைகள்.
பள்ளி செயல்திறனில் மாறுதல், திடீரென மதிப்பெண் குறைதல்,பள்ளிக்குச் செல்லாமலிருத்தல், திருடுதல், பொருட்களை சேதம் செய்தல், கட்டுப்படாமல் இருத்தல் உடல் ரீதியான பிரச்சினைகள் அடிக்கடி ஏற்படுதல் ஓரு விடயத்தை மீள மீள சரி பார்ப்பது போன்ற நேரத்தை வீணடிக்கும் செயல்பாடுகள்.ஒரிடத்தில் உட்கார முடியாமல் நிலைகொள்ளாமல் இருத்தல் , தொடர்ந்து பள்ளி நிர்வாகத்துக்கு பணிந்து போகாமல் இருத்தல் மற்றும் வன்முறைச் செயல்பாடுகளில் ஈடுபடுதல்.
திரும்பத் திரும்ப தொந்தரவு செய்யும் விரும்பத்தகாத எண்ணங்கள் திரும்பத் திரும்ப ஒரே செயலை கட்டுப்பாடின்றி பதற்றத்துடன் செய்வது (உதாரணம்: கதவு பூட்டி விட்டோமா அல்லது அடுப்பு அணைத்து விட்டோமா என பலமுறை சரிபார்ப்பது, கையை கழுவிக்கொண்டே இருப்பது, அதீதமாக சுத்தம் பார்ப்பது. உதாரணம் வீட்டை மணிக்கு பலமுறை கூட்டுதல் அல்லது துடைத்தல் , பல மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகும் கண்டுபிடிக்க முடியாத உடற்கோளாறுகள் (உதாரணம்: எரிச்சல் கொண்ட குடல் நோய் , மெய்பாட்டு முறைப்பாட்டு அறிகுறிகள். உடல் எடை குறித்த மிகுந்த பயம் அல்லது பதற்றம்.பிடித்த விஷயத்தில் நாட்டமில்லாமல் போவது,
வழக்கத்துக்கு மாறான பாலியல் விருப்பங்கள் (உயிரில்லாத பொருட்கள், ஆண் பெண்ணாக, பெண் ஆணாக உடை மாற்றுதல், பிறரையோ, தன்னைத் தானே துன்புறுத்துதல், அடுத்தவரின் படுக்கையறையை எட்டிப் பார்த்தல், பிறப்புறுப்பை அந்நியரிடம் காட்டுதல், குழந்தையுடன் உறவு கொள்ளுதல் என ஆரோக்கியமற்ற முறையில் பாலியல் உணர்வுகளால் தூண்டப்படுபவர்கள். தொடர்ந்து பாலியல் எண்ணங்களோ அல்லது ஆசையோ இல்லாமல் இருத்தல், பாலுறவில் வெறுப்பு அல்லது துணையை இதுசம்பந்தமாக தவிர்ப்பது, விரைவாக விந்து வெளியேறுதல் அல்லது உச்சகட்டம் அடையாதிருத்தல் அல்லது அடைவதில் தாமதம், இத்தகைய அறிகுறிகள் எல்லோருக்கும் இயல்பாக இருப்பது போலவே தோன்றக் கூடியவையே.
இவை ஒருவரிடத்தில் ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேல் காணப்படலாம் எப்போது அவை அளவுக்கு அதிகமாகவும் நீடித்தும் காணப்பட்டு, ஒருவரின் தனிப்பட்ட திறனைப் பாதித்து, நாளாந்த வாழ்க்கைக்கு இடையூறாக அமைவதை நாம் அவதானிக்கும் போதும் அதன் தீவிரத் தன்மையை உணருகின்றபோதும் , இந்த அறிகுறிகள் தனிநபரை மற்றும் குடும்பம் உட்பட சமூகத்தில் பாதிப்புக்கள் ஏற்படுத்தும் என உணரும் பட்சத்திலும் வைத்தியசாலையின் உளநல மருத்துவ அதிகாரி, மாவட்டச் செயலக உளவள அதிகாரி, மாவட்ட வைத்தியசாலையின் உளசமூகப் பணியாளர், உளவியல் நிபுணரிடம் ஆலோசனை பெற்க்று கொள்வதும் மருத்துவப்பரிசோதனைகள் செய்வதும் உளவளத்துணை ஆலோசகரை சந்திக்க வேண்டியதும் அவசியமாகிறது. அதன் பின்னர் நாம் அவர்களுக்கான சிகிச்சையினை மேற்கொள்ளலாம். ஆனால், பாதிப்படைந்தவர்களை அணுகுவதும் அடையாளம் காண்பதுமே கடினமானது.
உளவளத்துணை ஆசிரியராக பாதிக்கப்பட்ட மாணவர்களை அடையாளம் காண்பது சாத்தியமாக இருந்துள்ளதா ?
வடக்கில் அதிகமான மாணவர்கள் கொடும் போரின் வடுக்களைச் சுமந்து கந்தகத் துவள்களுடன் வாழ்கின்றார்கள். யுத்தத்தில் அவயங்களை இழந்து உடல்களிலுமுள்ள யுத்தத் தழும்புகள் இனம் காட்டிட உற்றார், உறவினர், நண்பர்களை இழந்து பிரிந்து வாழ்கின்றார்கள்.
வறுமை, மாணவர் ஆசிரியர் தொடர்பாடலில் இடைவெளி, காதல் வயப்படல், பாலியல் பிரச்சினைகள் மற்றும் சம வயது நண்பர்களின் அழுத்தங்கள் உட்பட பல்வேறு காரணங்களினால் மாணவர்கள் பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தல், பாடசாலைக்கு ஒழுங்காக சமூகமளிக்காமை, பாடங்களில் கவனம் செலுத்தாமை, தூக்கமின்மை, மனதை ஒருமுகப்படுத்த முடியாமை பரீட்சைகளுக்கு முகங்கொடுக்க முடியாமை போன்ற பல பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றனர்.
இளம்பராயத்தினர் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுடைய வயதை மீறிய மறதியும் பதற்றத்துக்கும் உள்ளாகியிருப்பதை அவதானிக்கலாம். அத்துடன் அவதானக்குறைவு, சோர்வு போன்ற தாக்கங்களுக்கும் உட்பட்டிருந்தனர். வன்னிப்பகுதியில் இத்தகைய பாதிப்பு நிலையில் உள்ள பல சிறார்களை நாம் பல பாடசாலைகளிலும் அவதானித்துள்ளோம். இதைப் பற்றிய மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அங்குள்ள ஆசிரியர்களும் தெரிவித்துள்ளனர்.
இவர்களின் இத்தகைய குறைபாடுகள் இவர்களுடைய எதிர்காலத்தையே பாதிப்புக்குள்ளாக்கும். இவர்கள் தங்களுடைய இந்த நிகழ்காலத்தை இழக்கும்போது, சக பிள்ளைகளோடு சமமாகப் பயணிக்க முடியாமற் திணறுகின்றார்கள். எனவே இந்தச் சிறார்களை நாம் கூடிய கவனத்திற்குட்படுத்தி, இவர்களுக்குத் தேவையான பணிகளைச் செய்ய வேண்டும். இல்லையென்றால் ஆயிரக்கணக்கில் இருக்கும் இந்தச் சிறார்கள் நாளை நலிவுற்ற சமூகமொன்றின் பிரதிநிதிகளால் நிரப்பப்பட்டதாகவே இருக்கும்.
நீங்கள் சொல்வது போல் உளவளத்துணைப் பணிகளில் யார் ஈடுபடுகின்றனர் அல்லது யாரை நாடுவது எப்படித் தீர்ப்பது தொடர்பாக கூறுங்கள் ?
நீண்டகாலப் பாதிப்பு மற்றும் பெரிய அளவிலான தாக்கம் என்பவற்றுக்குரிய வகையில் எம்மையும் நாம் வாழும் சமூகத்தையும் ஊர்களைப் பாதுகாப்பதற்கும் பராமரிப்பதற்கான ஏற்பாடுகளும் தேவைப்படுகின்றன. ஒவ்வொரு தனி நபர் தொடக்கம் குடும்பம் மற்றும் சமூகம் உட்பட பலருக்கும் பொறுப்புகள் உண்டு.
இதில் சமூக , கிராம அபிவிருத்திச் சங்கம் , மாதர்சங்கம், விளையாட்டுக்கழகம் , சிறுவர்கழகம், முதியோர் சங்கம் ஆலய நிர்வாகங்கள் உட்பட பிரதேச செயலகம் -DS, கச்சேரி, சமுக சேவைகள் திணைக்களம், ONUR), உளசமுகப் பணியாளர்கள் (psw), பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் (WDO) , மருத்துவச்சி (PHM), மதத்தலைவர்கள், கிராம சேவகர் (GS), சமுர்த்தி உத்தியோகத்தர்கள்( SDO), சமுக சேவைகள் உத்தியோகத்தர். (SSO), பாடசாலை சூழலில் – உளவளத்துணை ஆசிரியர், அதிபர், வகுப்பாசிரியர், நம்பிகைக்குரிய ஆசிரியர், பாட ஆசிரியர், பல்கழைக்க மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள், ஆன்மீக வாதிகள், உளநல வைத்தியர்கள், பிரதேச வைத்தியர்கள், வைத்தியசாலையின் விசேட பிரிவுக்குள் STD, நாட்டு வைத்தியர்கள், ONUR ~ உளசமுக பணியாளர்கள், தன்னார்வுத் தொண்டு நிறுவனங்கள் (NGO) ஆகியோரிடம் அவற்றின் பணியாளர்கள், பொதுச்சேவையாளர்கள் எனப்பலரும் இந்த நிலையை, தங்கள் முன்னே உள்ள இந்தப் பாரிய பிரச்சினையை விளங்கிக் கொள்ள வேண்டும். இதனை எவ்வாறு உரிய தரப்புகளுடன் தொடர்பு கொண்டு உரிய முறையில் இந்தப்பிரச்சினையைச் சீர் செய்ய வேணும்.
புலம்பெயர் தொண்டுநிறுவனங்கள், முக்கியமாக பாடசாலை மட்டத்தில், கிராம மட்டத்தில், பிரதேச மட்டத்தில் என இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படவேண்டியுள்ளது. இதன் அடிப்படைகள் பாதுகாப்பு, உதவி, சிகிச்சை, நம்பிக்கை, முன்னேற்றத்துக்கான ஏற்பாடு போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் .
சமூகத்தின் பல்வேறு மட்டங்களில் அவசர அல்லது அனர்த்த உள ஆதரவுகளை மேல் கூறியவர்கள் மேற்கொள்ளப்பட்டாலும் தொழில்வாண்மை உளவளத்துணையும் ஏனைய துறைகளைப் போன்று பல்வேறு பிரிவுகளைக் கொண்டுள்ளது. உளவியல் உளவளத்துணை, கல்வி உளவளத்துணை, தனிநபர் உளவளத்துணை, குடும்ப உளவளத்துணை, குழு உளவளத்துணை, தொழில் உளவளத்துணை விஷேட உளவளத்துணை என பல்வேறு துறைகளில் இன்று உளவளத்துணை பயன்படுத்தப்படுகிறது. உள ஆற்றுப்படுத்தல் முறையாக திட்டமிடப்பட்ட முறையில் தொழில்வாண்மை உளவளத்துணையாளர்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.
சமகால நோக்கில் ஆற்றுப்படுத்தல் ஆரோக்கியமானதாக உள்ளதா ?
உள ஆரோக்கியம் சீர்குலைந்து புரியப்படும் பாதகச் செயல்களிலிருந்து உளவளத்துணை பற்றிய விழிப்புணர்வும் அது பற்றிய அறிவும் நமக்கு இன்றியமையாததாகும். இலங்கையின் சனத்தொகையில் 2.3 வீதமானோர் உளப் பிரச்சினையுடன் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் கூட்டாக இழைக்கப்பட்ட பாலியல் மற்றும் பால்நிலைசார் வன்முறைகள் பற்றிய அறிக்கையிடல் மற்றும் ஆவணப்படுத்தலுக்கான பற்றாக்குறை காணப்படுகின்றது. மன ரீதியாக அவர்கள் பாதிக்கப்பட்டதை ஒரு உளவள ஆலோசகராக என்னால் இனங்காண முடிந்தது.
இன்று நாட்டில் சமூக மட்டத்தில் பல்வேறு விதமான உளசமூகப் பிரச்சனைகள் எம்மத்தியில் காணப்படுகின்றன. போருக்கு பின்னரான,வடக்கு, கிழக்கின் சமூகப் அபிவிருத்தியில் கல்வி,பொருளாதாரம் என்பன பெருவீழ்ச்சியைக் கண்டுள்ளன. இவ்வாறு பல்வேறு மட்டங்களில் பல்வேறு தரப்பினருக்கு நிகழுகின்ற வன்செயல்கள் துஷ்பிரயோக நடவடிக்கைகள் மற்றும் தற்கொலைகள் போன்ற சமூக பிரச்சினைகளில் உளப் பாதிப்புக்களும் குறித்த வகிபங்கினை வகிக்கிறது. சில பிரச்சினைகளை பார்க்கும் போது அவை மிகவும் ஆழமாக இருந்தது. உளநலப் பிரச்சனையின் தாக்கம் உடன் வெளிக்கொணரப்படுவதில்லை. அன்றாட செயற்பாடுகளைச் செய்ய முடியாமல் அல்லது செய்வதில் இடர்களை எதிர்நோக்கு கின்றவர்கள் உளவளத் துணையாளர்கள் அல்லது மனநல வைத்தியரை நாடி தமக்குத் தேவையான உதவியை அல்லது சிகிச்சையினை பெற்றுக்கொள்வது அவசியம் .
உளநலப்பணிகளுடன் பயிற்சிகளையும் வழங்குகி பல நிறுவனங்கம் இந்த உளச் சமூகப் பணியினைச் செய்கின்றார்கள். ஆனால் அங்கு பணிபுரிகின்றவர்களுக்கு போதுமான துறைசார் அறிவு உள்ளதா என்பது கேள்வி ? அது ஒருபுறம் இருக்க நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் அமைப்புக்கள் வியாபராமாக உளவளத்துணையாளர் ஆவதற்கான டிப்ளோமா கற்கை நெறியினை ஆரம்பிகத்துள்ளதும் ஒரு கட்டமைக்கப்பட்ட பெறிமுறை இல்லாது தொடரும் உளவளத்துணையாளருக்கும் சேவைநாடிக்கும் இடையில் நிலவும் உறவானது தொழில்வாண்மையிலான உறவாகவே காணப்படமை. உளவளத்துணையாளர் துணைநாடியின் மீது சிகிச்சையளித்தல் தவறான சிகிச்சை முறைகளும் மேலும் எமது சமூகத்தில் தாக்கத்தினை எற்படுத்தி வருவது வருத்தம் தரும் செயல்.
தமிழ் மக்களின் உரிமைக் குரலை உயர்த்தி நிற்க மக்களுடைய வாழ்வியல் உரிமை, அரசியல் உரிமை எவ்வாறு பறிக்கப்பட்டன என்பது குறித்தும், பேரினவாதத்தினுடைய அடிப்படைச் சிந்தனை உளவியல் குறித்தும் மரணங்களும், பேரவலங்களும் வன்முறை மற்றும் அடக்குமுறைச் சூழல் சிதைந்துகிடக்கும் சமூகவிழுமியம் இனம் அழிக்கப்பட்டமைக்கான காரணங்களை கண்டறிவதற்கு உளநலன் சார்ந்த பிரச்சினைகளை தீர்த்து வலிமையான சமூகக்கட்டமைப்பை உருவாக்கும் ஆலோசனை வழங்குதல் போன்ற பல செயல்திட்டங்கள் மூலம் எமது சமூகத்தை மனோதிடமான ஒரு சமூகமாக உருவாக்கிட உளம் சார் திறன்களையும் வளங்களையும் பகிர்ந்து கொள்கின்ற எங்களது இளைஞர், யுவதிகளை உளவள சேவையில் தொழில்ரீதியாக ஈடுபடுபடுவது மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால் தொழில்வாண்மை உளவளத்துணையாளர்களின் உதவி இன்றியமையாததாகவுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்கள் உளவியல் காயங்களிலிருந்து மீண்டெழ வேண்டும். நாளைய சமுதாயத்தின் மீது பற்றுக்கொண்டு இளைய தலைமுறைக்கு வழிகாட்டியாக சமூகப் பணிக்கு தயார் செய்வது அவசியம் எம் ஒவ்வொருவருக்குமுள்ள கடப்பாடாகும். எதிர்காலம் பற்றிய நம்பிக்கையினை ஏற்படுத்தப்பட வேண்டி திட்டமிடலின் அடிப்படையில் உளவியல் காயங்களை ஆற்றுப்படுத்த வேண்டியதேவையுள்ளது.
அந்திப் பொழுது மிகுதி தொடரும்…