கடந்த காலங்களில் போலி புள்ளிவிபரங்கள் ஊடாக நாட்டின் வறுமை நிலை மறைக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தகுதி வாய்ப்புகள் இருந்தும் சமுர்த்தி சலுகைகள் இல்லாத அனைவருக்கும் அடுத்த வாரத்தில் சமுர்த்தி சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் நாட்டின் வறுமை நிலை 6 தொடக்கம் 7 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்ததாக தெரிவிக்கப்பட்ட போதும் சமுர்த்தி சலுகைகளை பெறுவோர் 29 சதவீதமாக இருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர் ‘கடந்த காலங்களில் போலியான புள்ளிவிபரங்களை வெளியிட்டு மோசடியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
புள்ளிவிபர மோசடிகளை பயன்படுத்தி எங்கள் நாடு வறுமையில் இருக்கிறது என்று உலகத்திற்கு காட்டினார்கள். அதனூடாக, வறுமை நிலை குறைவாக உள்ள ஒரு நடுத்தர வருமான நாடு என்ற நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது.
எமது நாட்டு வழங்கப்பட்ட அனைத்து நிதியுதவிகளும் நிறுத்தப்பட்டன. நிதியுதவிகளுக்கு பதிலாக நெருப்பு வட்டியுடன் கடன்தான் கிடைத்தது.
உண்மையில் வறுமை நிலை தொடர்பான சதவீதம் முறையாக இருந்திருந்தால் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை கட்டமைப்பதற்கு கடனைப் பெறவேண்டிய அவசியம் இல்லை.
மத்தள விமான நிலையத்தை நிர்மாணிக்க எந்தவொரு கடன் தொகையையும் பெறவேண்டிய தேவைப்பாடு இல்லை. இதுதான் யாரும் கதைக்காத இரகசியமாக உள்ளது’ என்று அவர் குறிப்பிட்டார்.