கருத்தடை மாத்திரைகள் கொடுக்கப்பட்டு இராணுவ முகாமில் பாலியல் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த பெண்கள் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளா் கோட்டாபாய ராஜபக்ஸவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளனா்.
யஸ்மின் சூக்காவை தலைமையாகக் கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் ஏற்பாட்டில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அதில் 3 வருடமாக பாலியல் அடிமையாக வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் இளம்பெண் ஒருவரும் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
கருத்தடை மருந்துகள் ஏற்றப்பட்டு, இராணுவ முகாமில் பாலியல் அடிமையாக வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருந்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களால்,
அமெரிக்காவில் மத்திய மாவட்டத்துக்கான மாவட்ட நீதிமன்றில் 10 புதிய நட்டஈட்டு
கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பொலிஸ் மற்றும் இராணுவ முகாம்களில் தாம் அனுபவித்த பயங்கரமாக மீறல்களை அவர்கள் விவரித்துள்ளனர்.
சூடாக்கப்பட்ட இரும்புக் கம்பிகளால் சுடப்பட்டுள்ளனர். கேபிள்களால் அடிக்கப்பட்டுள்ளனர்.
பெற்றோலில் நனைத்த பினாஸ்ரிக் பைகளை அவர்களது தலைகளுக்கு மேலாக போட்டு மூச்சு திணறடிக்கப்பட்டுள்ளனர்.
ஆறு பேர் திரும்பத் திரும்ப பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டதோடு பாலியல் ரீதியாகவும் தாக்கப்பட்டுள்ளனர்.
இந்த 10 புதிய வழக்குத் தொடுநர்களில் மூன்று பெண்களும் உள்ளடங்குகின்றனர். அத்துடன் அவர்களில் எட்டுப் பேர் தமிழர்கள். இரண்டு பேர் சிங்களவர்கள்.
இந்த வழக்குகள் அமெரிக்க நீதிமன்றங்களில் சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட நிவாரணம் வழங்கும்,
சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
தமக்கு நடந்த சித்திரவதைகளில் இலங்கையின் முக்கிய பொலிஸ் விசாரணை அதிகாரியான நிசாந்த டி சில்வா உட்பட குறிப்பிட்ட எண்ணிக்கையான
பாதுகாப்பு அதிகாரிகள் நேரடியாக தொடர்புபட்டுள்ளனர் என வழக்குத் தொடுநர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.
வவுனியா ஜோசப் முகாம், தலைநகர் கொழும்பு மற்றும் புல்மோட்டையிலுள்ள பொலிஸ் நிலையங்கள் மற்றும் காலியிலுள்ள பூசா தடுப்பு நிலையம்
உட்பட்ட இராணுவ முகாம்களில் 2008 ஆம் ஆண்டுக்கும் 2013 ஆம் ஆண்டுக்கும் இடையில் இடம்பெற்ற சித்திரவதைகள்
பற்றிய விரிவான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. – என்றுள்ளது.