போருக்குப் பிந்திய கடந்த ஒரு தசாப்தத்தில் போரால் மிகவும் பாதிக்கப்பட்டு சிதைந்து போயுள்ள சமூகத்திற்கு அவசியம் தேவைப்பட்ட உள சமூக தலையீடு என்பது ஒழுங்கமைக்கப்பட்டு தரமான முறையில் செய்யப்படவில்லை என்பது பாரிய குறைபாடாகவும், குற்றச்சாட்டாகவும் உள்ளது.
தற்போது எமது சமூகத்தின் இருப்பைக் கேள்விக்குறியாக்கும் வகையில் சிறுவர்கள், பெண்கள், முதியோர், மாற்றுவலுவுள்ளோர் மீதான வன்முறைகள், போதைப் பொருள் பாவனை, அடிதடி வன்முறை போன்ற விடயங்கள் அதிகரித்துக் காணப்படுகிறது . இது உரிய நேரத்தில் தரமான முறையில் ஒருங்கிணைக்கப்பட்டு வழங்கப்பட்டிருக்க வேண்டிய உளசமூகத் தலையீடு நடைபெறாமையின் ஒரு எதிர் மறை விளைவு என்பதை அனைத்து துறைசார் வல்லுனர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். பொறாமையூடாக சமூகம் மீதான அக்கறையின்மைமையைக் காட்டுகின்றது.
அண்மைக்காலமாக உளசமூக உளவளத்துணை பாடநெறிகளை வழங்குவதற்கு பல வடபகுதியை தளமாகக் கொண்ட நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதை அவதானிக்கமுடிகின்றது. இதுவோர் நல்ல அறிகுறியாக பகுதியளவில் இருந்தாலும் பாடநெறிகளின் உள்ளடக்கம், பயிற்றுவிப்பாளர்களின் தரம், களப் பயிற்சி, பரீட்சை போன்ற தரம் (quality) தொடர்பான விடயங்கள் போதிய அளவு கவனிக்கப்பட்டுள்ளதா என சிந்திக்க வேண்டியுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்துடன் சேர்ந்து வழங்கப்படும் பாட நெறிகளில் தரக் கட்டுப்பாடு என்பது பேணப்படும். ஆனால் தனிப்பட்ட நிறுவனங்களினால் வழங்கப்படும் பாடநெறிக்கான தரக்கட்டுப்பாடு தொடர்பில் எவ்வித ஒருங்கிணைப்போ கண்காணிப்பு இருப்பதாகத் தெரியவில்லை. இவ்வாறான பாடநெறியைப் படித்து சமூகத்தின் மத்தியில் சேவையாற்றுபவர்களை மேற்பார்வை செய்து நெறிப்படுத்துவதற்கு என எவ்வித நிறுவனப் பொறிமுறைகளும் இல்லாமல் இருப்பது மேலும் நிலைமையை மோசமாக்கவே செய்யும்.
அரசு அரச சார்பற்ற அமைப்புக்களால் பயிற்சி விக்கப்பட்டு போதிய மேற்பார்வை கண்காணிப்பு இன்றிச் செயற்படும் உளச் சமூகப் பணியாளர்களால் பயனாளிகள் மேலும் பாதிக்கப்பட்டும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முதலில் அவசரமாக நாம் செய்ய வேண்டிய விடயமாக இருப்பது உளச் சமூக சேவைகளின் தரத்தை பேணும் நோக்கில் அதிகார பூர்வமான ஓர் அமைப்பை சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் உருவாக்குவது ஆகும். அந்த அமைப்பின் கீழ் உளச் சமூகசேவைகள் உளச் சமூகப் பாடநெறிகள் என்பவற்றை ஒருங்கிணைத்து கட்டுப்படுத்தி முகாமைத்துவம் செய்வது தலையாய பணியாக உள்ளது. இச் செயற்பாட்டை முன் எடுக்க அனைத்து தரப்பினரும் முன்வருதல் காலத்தின் கட்டாயம் ஆகும். அந்தவகையில் சமூக அக்கறையுடையவர்கள் தொடர்பு கொண்டு செயற்படுவது அவசியமாகும் .
நிலவன் / நிக்சன் பாலா,
உளவளத்துணை,
மற்றும் உளச்சமூகப்பணியாளர்.