வடதமிழீழம்: வவுனியா சாந்தசோலைக்கு நேற்று மாலையில் நுண்நிதி நிறுவனப்பணியாளர்கள் இருவர் நுண்நிதி நிறுவனங்களில் கடன் பணம் பெற்றுக்கொண்டவர்களின் வீடுகளுக்குச் சென்று பெற்றுக்கொண்ட கடன் பணத்தையும் தண்டப்பணத்துடன் செலுத்துமாறும் தவறினால் உங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்து அடாவடி செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
நுண்நிதி நிறுவனப்பணியாளர்களிடம் மாலை நேரங்களில் வீடுகளுக்குச் சென்று பணம் அறவிடுவது பிரதேச செயலகத்தினால் தடை செய்யப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்த குடும்பப்பெண்களிடம் அவ்வாறான ஆவணங்கள் ஏதும் உங்களிடம் இருந்தால் காண்பிக்குமாறு கோரி தகாதவார்த்தைப்பிரயோகத்திலும் ஈடுபட்டுள்ளதாகவும் குறித்த நிறுவனத்தின் பணியாளர்களின் அடாவடித்தனங்கள் தொடர்ந்து இடம்பெற்றுவருவதாகவும் இவ்வாறான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த பிரதேச செயலாளர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
நேற்று மாலை 5.50மணியளவில் சாந்தசோலைக் கிராமத்திற்குச் சென்ற வவுனியா 2ஆம் குறுக்கு தெரு வீதியிலுள்ள கம்பனியின் நிறுவனப்பணியாளர்கள் இருவர் அப்பகுதியில் கடன் பெற்றுக்கொண்ட குழுத் தலைவி வீட்டிற்குச் சென்று நிறுவனத்தினால் வழங்கப்பட்ட இறுதி நினைவூட்டல் கடிதம் ஒன்றினை வழங்கியதுடன் பணத்தை தண்டப்பணத்துடன் செலுத்துமாறும் கோரியுள்ளனர்.
இதன்போது இவ்வாறு மாலை 5.50மணியளவில் வீடுகளுக்குச் சென்று கடன் பணம் அறவிடுவது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்டபோது அவ்வாறான ஆவணங்கள் ஏதும் உங்களுக்கு வழங்கப்பட்டிருந்தால் காண்பிக்குமாறு கோரி தகாதவார்த்தைகளினால் அப்பெண்மணியிடம் நடந்து கொண்டதாகவும் அப்பகுதிக்குச் சென்ற ஊடகவியலாளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மாலை 6.15மணிவரையும் அங்கிருந்த குறித்த நிறுவனப்பணியாளர்கள் ஊடகவியலாளர்கள் சென்றதை அவதானித்ததும் தப்பிச் சென்றுள்ளனர்.
கடந்த பல மாதங்களுக்கு முன்னர் சாந்தசோலைப்பகுதிக்குச் சென்று நுண்நிதி நிறுவனங்கள் செயற்படுவதற்கும் வீடுகளுக்குச் சென்று பணம் அறிவிடுவதையும் தமது கிராமத்திற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடன் பெற்றுக் கொண்ட சிலரினால் செலுத்தப்படாமலிருந்த நிலுவைப்பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காக கடந்த சில தினங்களாக அப்பகுதிகளுக்குச் சென்ற நுண்நிதி நிறுவனப்பணியாளர்கள் அவதானிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் அப்பகுதிப் பெண்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
சாந்தசோலை பெண்களின் இக்குற்றச்சாட்டுக் குறித்து நுண்நிதி நிறுவனத்தின் முகாமையாளர் கி.ஸ்ரீபிரசாத்திடம் தொடர்புகொண்ட கேட்டபோது,
நேற்று மாலை சாந்தசோலைக்கிராமத்திற்கு பணம் அறவிடுவதற்காக எமது நிறுவனத்தின் பணியாளர்கள் செல்லவில்லை இறுதி நினைவூட்டல் கடிதத்தினை வழங்குவதற்காக அங்குள்ள வீடுகளுக்குச் சென்றதாகவும், பிரதேச செயலகத்தினால் நிறுவனங்களுக்கு மாலை 5மணியின் பின்னர் வீடுகளுக்குச் சென்று பணம் அறவிடவேண்டாம் என்று கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், தமது நிறுவனத்தின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக முகாமையாளர் என்ற ரீதியில் தமது நிறுவனத்தில் கடன் பணம் பெற்றுக்கொண்டவர்களுக்கு எதிராக சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.