மறக்கத்தகுமோ…?
கேணல் கோபித் மறக்க முடியாத வீரத்தின் இருப்பிடம்.
2009 பங்குனித்திங்கள் முப்பதாம் நாள் நாங்களும் எமது தேசமும் அடுத்த விநாடி இறுதி மூச்சை விடப் போகின்றோமோ என்று தெரியாது இருந்த நாட்களில் ஒன்று அப்போது நாங்கள் இரட்டைவாய்ககால் பகுதியில் யாட்டடி என்ற இடத்தில் இருந்தோம். பல இடர்கள், பல சாவுகள், பல எதிர்பார்ப்புக்கள் என்று நகர்ந்து கொண்டிருக்க, இன்றைய நாள் பிறப்பெடுக்கிறது. புலிகளின்குரல் வானொலியே எமது பிரதான செய்தித் தொடர்பூடகம். ஆனாலும் தாயக, உலக, களச் செய்திகளை அதுவரை ஊடகங்களூடாக அறிந்து வந்த நாம் களச்செய்திகளை கண்முன்னே அறியும்படி எம் முற்றத்திற்றகு நகர்ந்திருந்தது களமுனை. நாம் ஒவ்வொரு துப்பாக்கி ரவைகளின் செய்திகளையும் கண்முன்னே கண்டுக்கொண்டிருந்தோம்.
இன்றைய நாளும் அவ்வாறான ஒன்றாகவே விடிந்தது. ஆனால் தேசத்தை தம் கரங்களில் தாங்கிய பல்லாயிரம் வேங்கைகளில் பெரும் நாயகன் ஒருவனை இழந்து நின்றது இன்றைய நாள். கேணல் கோபித் என்று அழைக்கப்படும் வைத்திலிங்கம் சந்திரபாலன்… என்று தொடர்ந்த அந்த செய்தி எம் மனங்களுக்கு பெரும் தாக்கத்தை உண்டுபண்ணியது. அன்றைய நாளில் தாயகமே உச்சரித்த பெயர் “கோபித்” என்ற தீச்சுவாலை நாயகன்.
தீச்சுவாலை நாயகர்களாக நிமிர்ந்து நின்ற வேங்கைகள் வரிசையில் முன்னிலை நிற்பவன் கோபித். நான் கோபித் அண்ணையை முதன்முதலில் அப்போது தான் சந்தித்திருந்தேன். தீச்சுவாலை சண்டை முடிந்து சிறு காலம் கழிந்த நிலையில் வடபோர்முனை களமுனை நோக்கிய ஒரு பயணத்தில் பளைப்பகுதியில் ஒரு முகாமுக்கு என்னை அழைத்து சென்றார் லெப் கேணல் ரதன். இருவரும் அங்கே சென்ற போது முகாம் வாசலிற்கு சற்று தூரத்தில் ஒரு மெலிந்த கறுத்த உருவம் கையில் வோக்கியில் உரையாடியபடி வருகிறது. “தம்பி யார் தெரியுமாடா…? ரதன் அண்ண கேட்ட போது இல்லை என்றேன். கோபித் அண்ணைடா. அருகில் வந்தார். வணக்கம் சொல்லி நலன் விசாரித்து என்ன மச்சான் இந்தப்பக்கம்? என்ற விசாரணையோடு நகர்ந்தார் தனது அணியோடு.
கோபித் அண்ண அந்த ஒஓரிரு நிமிடங்களில் என் மனதில் நிறைந்து விட்டார். ஒரு பெரும் தளபதி, ஒரு மாபெரும் படையணியின் துணைத்தளபதியாக இருக்கும் ஒரு போராளியின் எளிமை என்னை சிந்திக்க வைத்தது. எமது போராளிகள் இப்படித்தான் இருப்பார்கள் அதில் ஐயமில்லை ஏனெனில் அவர்கள் பகட்டுக்காகவோ அல்லது பணத்துக்காகவோ களம் புகுந்தவர்கள் அல்ல தாயக நின்மதிக்காக களமாடும் புலிகள். அவர்கள் இவ்வாறுதான் இருப்பார்கள்.
அண்ண என்ன ஆள் இப்பிடி சிம்பிளா போகுது…? கோபித்த பற்றி உனக்குத் தெரியாது. அவன் எப்பவுமே இப்பிடித்தான் கொடுக்கப்பட்ட வேலைகளுக்காக எவ்வளவு கஸ்டப்படனுமோ அவ்வாறு கஸ்டப்பட்டு பணி முடிப்பான். அவன் சிறந்த தளபதி என்று அறிஞ்சிருப்பாய் ஆனால் அவனுக்குள் மறைந்திருக்கும் தீரம்மிக்க போரியல் சிந்தனைகள் நீ அறிய மாட்டாய் தம்பி. லீமாவோட வளர்ப்பல்லவா? தன் பதினேழாவது வயசில லீமா கேட்ட ஒரு வரைபடத்தை அதுவும் முக்கியமான சண்டைக்கான வரைபடத்தை உருவாக்கியதன் மூலம் இனங்காணப்பட்ட போராளி. அனுபவம் என்பது அற்றிருந்தாலும் பெற்றிருந்த படையறிவியல் பயிற்சியின் துணை கொண்டு களத்தை ஆள துடிக்கும் இனமானமுள்ள தமிழ்வீரன் அவன்…
போன அலுவல் முடித்து திரும்பிய போது அண்ண ஆள பற்றி கொஞ்சம் சொல்லுங்கோவன். என் ஆவலுக்கு தீனியிட்டார் ரதன் அண்ண ஆள பற்றி சொல்லுறதென்டா நிறைய இருக்குடா ஆனாலும் முக்கியமா சிலத சொல்லித்தான் ஆகனும். எங்கட ஆக்கள இறங்கி அடிச்ச சண்டை ஒன்று பலாலில நடந்த போது ஆள் ஒரு செக்சனில சாதாரண போராளி. அந்த சண்டையில முக்கிய கட்டம் அருகில் நின்ற அணித்தலைவன் வீரச்சாவடைய கட்டளைப்பணியகத்துக்கான தொடர்புகள் அற்றுப்போய் சண்டையின் போக்கு பாதகமாக தொடங்கியது. அணியின் நிலை தெரியாது இருந்த நிலையில் கம்பீரமான குரல் ஒன்று நிலவரத்தை தெரியப்படுத்தி சண்டையை எங்களுக்கு சாதகமாக்குகிறது. அது தான் கோபித் என்ற பெரும் தளபதியாகுவதற்கான முதல் புள்ளியாக இருக்கலாம். அதுவே அவனை செக்சன் கட்டளை அதிகாரியாகவும் தலைவனாகவும் ஆக்கியிருந்தது. இதுவே எமது முதலாவது மரபுவழி படையணிக்கட்டமைப்பான சார்ள்ஸ் அன்டனி படையணிக்குள் உள்வாங்கப்பட காரணமாகிறது.
தொடர்ந்த ஒவ்வொரு சண்டையிலும் காட்டிய நேரிய போரியல் பண்பு சிறந்த வேவாளனாக அவனை இனங்காட்ட சார்ள்ஸ் அன்டனி படையணியின் முக்கிய வேவுப்போராளியாக உருவெடுக்கிறான். பாரிய வெற்றித் தாக்குதல்களின் முதுகெலும்பே இவனின் வேவுத்தகவல்கள் தான். ஓயாதலைகள் 1 ன் வேவு கூட ஆக்கள்தானடா.. ரதன் அண்ண தொடர்ந்து கொண்டிருக்க நானோ ஆவலுடன் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
ஆள் நல்ல வேவு மட்டுமில்ல நல்ல கட்டளைக்காறன் மட்டுமல்ல சிறந்த GPS காறனும் கூட. பல நூறு போராளிகளுக்கான ஒரு பயிற்சியில் நெடுந்தூர நடைப்பயணத்தை GPS ல நடந்து வந்து முதலாவது ஆளாக முடித்து பொறுப்பாளர்களை தன்பக்கம் திருப்பிய திறமைசாலி. அவன் செய்த சண்டைகளின் கணக்கே இல்ல வேவு அல்லது வலிந்து தாக்குதல்கள் அல்லது தடையுடைப்பு அல்லது எல்லைக்காப்பு என்று அவன் பணி விரிந்தே கிடந்தது.
இந்த நிலையில் படையணியை விரிவுபடுத்தி கட்டமைப்பில் பல மாற்றங்களைக் கொண்டு வர மும்முரமாக உழைத்த போராளி கோபித் இவனின் தீவிர முயற்சியே படையணிக்குள் படையணி மாவீரர் போராளிகள் நலன் காப்பு, இராகசீலம் இசையணி போன்றவை உருவெடுத்தன. அத்தோடு சிறு வேவு அணிகள், ரோந்து அணிகள் பதுங்கித் தாக்குதல் அணிகள் என புது மாற்றங்கள் உருவாகின
தொடரும்
– கவிமகன்.இ