பொதுவாக மனிதர்களின் பாலியல் எதிர்வினை ஒரு சுழல் வடிவில் நடைபெறுகிறது. முதலில் ஆர்வம் ஏற்படுகிறது, அதற்கான செயல்பாடுகளில் இறங்கவேண்டும் என அவர்கள் தூண்டப்படுகிறார்கள், பிறகு அவர்கள் அந்தச் செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள், பிறகு உச்சகட்டம் எனப்படும் திருப்தி நிலையை எட்டுகிறார்கள். இந்த நிலைகளில் ஏதேனும் ஒன்றில் பிரச்னை ஏற்பட்டாலும் அது பாலியல் செயல்பாட்டின்மைக்கு வழிவகுக்கக்கூடும்.
பாலியல் செயல்பாட்டின்மை என்பது மிகவும் பொதுவான ஒரு பிரச்னை, இது எல்லா வயதிலும் உள்ள ஆண்கள், பெண்களைப் பாதிக்கிறது. அதே சமயம் வயதானவர்களுக்கு இந்தப் பிரச்னை வருவதற்கான வாய்ப்பு அதிகம்.
பாலியல் செயல்பாட்டின்மை சார்ந்த பிரச்னைகளில் பெரும்பாலானவற்றைக் குணப்படுத்த இயலும், ஆனால் மக்கள் இதைப்பற்றிப் பேசத் தயங்குகிறார்கள், தாங்கள் பேசினால் பிறர் தங்களைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்று எண்ணிவிடுகிறார்கள்.
ஒருவர் தன்னுடைய பாலியல் செயல்பாடுகளை அனுபவிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டால் அவர் தன்னுடைய பாலியல் கூட்டாளியிடம் அதைப் பற்றிப் பேசவேண்டும், உரிய நிபுணரிடம் உதவி பெற வேண்டும். சரியான சிகிச்சை எடுத்துக் கொண்டால் அவர்கள் இருவருமே மீண்டும் ஓர் ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கையை அனுபவிக்க இயலும்.