சிறிலங்கா அரசு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாகத் தொடர்ச்சியாகப் பொறுப்புக்கூறலைத் தவிர்த்து வருகின்றது. காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினை இன்று நேற்று ஆரம்பமாகிய விடயம் இல்லை. 1980ம் ஆண்டு தொடக்கம் இன்று வரை நேரடியாகவும் மறைமுகமாகவும் நிகழ்ந்து வரும் ஒரு வகை இனவழிப்பின் செயற்பாடு.
குடும்பத்தலைவரைத் தொலைத்த குடும்பங்கள், பிள்ளைகளைத் தொலைத்த பெற்றோர், பெற்றோரைத் தொலைத்த பிள்ளைகள், வாழ்க்கைத்துணையைத் தொலைத்தவர்கள் எனப் பல வகைப்பட்டவர்கள் வடக்குக் கிழக்குப் பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
2009ம் ஆண்டிற்கு முன்னர் சிறிலங்கா அரசின் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றுவளைப்புகளின் போது கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்கள். இராணுவ சோதனைச் சுற்றிவளைப்பின் போது காணாமல் ஆக்கப்பட்டார்கள். வெள்ளை வானில் கடத்திச் சென்று காணாமல் ஆக்கப்பட்டவர்கள். அதே வேளை இராணுவக் கட்டுப்பாட்டு பகுதியில் வாழ்ந்த தமிழர்களின் வீடுகளில் வைத்து விசாரணை என அழைத்துச் செல்லப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டார்கள். தடுப்புக் காவலின் கீழ் சித்திரவதை, சர்வாதிகாரத்தைச் செயல்முறையின் பின்னர் பெறப்பட்டிருந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் காணாமல் ஆக்கப்பட்டார்கள்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தாங்களாக காணாமல் போகவில்லை. படையினரால் கைது செய்யப்பட்ட பின் காணாமல் போயுள்ளனர். பலரை உறவினர்களே படையினரிடம் நேரடியாகக் கையளித்தும் உள்ளனர். இதற்கு வலுவான சாட்சியங்களும் உண்டு. 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் மதகுருமாருடன் இராணுவத்திடம் சரணடைந்த போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள். இவர்களில் 280 பேரின் பெயர் விபரங்களையும் அவர்களது புகைப்படங்களையும் itjp – (International Truth and Justice Project) என்ற இணையதளம் வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.
2009ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் கொன்று புதைக்கப்பட்ட எமது உறவுகள் தமது உயிர் துறந்து உரிமைப்போரிற்கான விதையாகியுள்ளார்கள். ஆயுத மௌனிப்பின் முடிவுப்புள்ளியாகவும், தொடக்கப்புள்ளியாகவும் அமைந்துவிட்ட இராணுவக் கட்டுபாட்டிற்கு மக்கள் வரும்போது, விடுதலைப் புலிகள் அமைப்பில் ஒரு நாள் இருந்த எல்லோரையும் பதிவு செய்யும் படியும், சிறு விசாரணைகளின் பின்னர் குடும்பத்தினர்களுடன் அவர்கள் இணைக்கப்படுவார்கள் என்றும் இராணுவத்தினர் அறிவித்தனர். அதன் படி பதிவு செய்தவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுப் பின்னர் காணாமல் ஆக்கப்படுள்ளனர். இதே காலப்பகுதியில் இடம்பெயர்ந்து, மீண்டும் பொருட்களை எடுப்பதற்கு இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளுக்குச்j சென்றபோது காணாமல் ஆக்கப்பட்டவர்கள்.
2008 -2009 காலப் பகுதிகளில் விடுதலைப் புலிகளினால் கட்டாய ஆள் இணைப்பில் இணைக்கப்பட்டு போராளியாக இருந்தவர்கள் சிலர் தற்போது காணாமல் போய் உள்ளார்கள். இவர்களின் உறவுகள் கூறும் விடயத்தையும் இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். அவர்கள் தங்களுடைய உறவுகள் இறக்கவில்லை எனவும் இறந்திருப்பின் விடுதலைப் புலிகளின் மாவீரர் என்னும் கௌரவத்துடன் மாவீரர் பட்டியலில் தமது உறவுகள் இடம்பிடித்திருப்பார்கள் என்றும் கூறுகின்றனர். அதே வேளை தங்களது பிள்ளைகளை, உறவுகளை இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்ததை கண்டதற்கான முதலாம், இரண்டாம், மூன்றாம் நிலைச் சாட்சிகள் உள்ளதாகவும் கூறுகின்றனர்.
2009 ஆம் ஆண்டின் பின்னர் மீளக்குடியேற்றச் செயற்திட்டத்தையடுத்து தொழிலுக்குச் சென்ற போதும், காணி வீடு பார்க்கச் சென்ற போதும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் பான்கீமூனால் அமைக்கப்பட்ட குழுவின் இலங்கை தொடர்பான விவகாரத்திற்குப் பொறுப்பாக இருந்த உறுப்பினரும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார் .
காணாமற் போனோர் அல்லது காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய பிரச்சினையைத் தீர்ப்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளின்போது, காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திருப்பு முனையைக் குறிக்கிறது. 2016 இன் 14 ஆம் இலக்க காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகச் சட்டம் (தாபித்தலும் ஃ நிருவகித்தலும்/ பணிகளை நிறைவேற்றுதலும்) சுயாதீன ஆணைக்குழு என்ற வகையில் நிறுவப்பட்டுள்ளது.
படையினரின் கையில் கொடுத்தபிள்ளைகளை கேட்கின்றார்கள் . காணாமல் போனோர் அலுவலகம் காணாமல் போனவர்களை பற்றித்தான் கேட்ப்பார்கள் இவர்கள் தங்கள் பிள்ளைகளை படையினரின் கையில் கொடுத்தவர்கள் காணாமற் போனோர் அலுவலகமானது இவர்களிடமும் விசாரணைகளை மேற்கொண்டு உண்மைகளைக் கண்டறிய வேண்டும். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அவர்களது உறவினர்களே சாட்சியாக உள்ளனர். இந்நிலையில் அவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பாகச் சாட்சியமளிப்பதற்கு அவர்களது பாதுகாப்பையும், உடல் உள நலத்தையும் உறுதிப்படுத்த வேண்டிய கடப்பாடு எங்கள் அனைவருக்கும் உள்ளது.
காணாமல் செய்யப்படுதல் என்பது ஒருவருடைய அடிப்படை உரிமையான வாழுதலுக்கான உரிமையினைப் பறித்தலாகும் என வரையறை செய்யப்படுகின்றது. ஒரு ஜனநாயக நாட்டில் காணாமல் செய்யப்படுதல் என்பது அந்நாட்டின் ஜனநாயகத்தின் மீது ஐயத்தினை ஏற்படுத்தும் ஒன்றாகவே அமையும்.
இலங்கையின் வட புலத்தில் அதாவது யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் இருந்து கடந்த மூன்று தசாப்தங்களில் 60,000 பேர் காணாமல் போயுள்ளனர் என அல் ஜசீரா ( Al Jazeera )ஆவணப்படம் ஒன்றின் மூலம் அதனை ஆவணமாக்கி உள்ளது.
பல குடும்பங்கள் நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள நகரங்களில் தற்காலிகமாகக் கூடாரங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் புகைப்படங்களை ஏந்தியவாறு உறவினர்கள் வீதிகளில் அமர்ந்து, ஒவ்வொரு நாளும் தொடர்ந்து கோரிக்கை முழக்கங்களை எழுப்பிவருகின்றார்கள். காணாமல் ஆக்கப்பட்ட நேசமானவரின் இடத்திலேயே நீதி மற்றும் பதில்களைப் பெறுவதற்கான நம்பிக்கையில் முழுமையான விசாரணை மேற்கொண்டு தங்கள் உறவினர்களைக் கண்டுபிடித்து தருவார்கள் என நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
உரிமைக்காக போராடுபவர்களை அடக்கினால் நீதி எப்படி கிடைக்கும்? இலங்கையின் வடகிழக்கு உள்ளிட்ட அனைத்து மாகாணங்களும் மக்களின் உரிமைகளுக்காக போராடுபவர்களை பயங்கரவாதிகள் என்று சித்தரிப்பதும், போராட்டக்குழுவிற்கு தீவிரவாத சாயம் பூசுவதும் அரசியல் எதிராளிகளை இல்லாதொழிப்பதும் என பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டது மக்கள் மீதான இந்த ஜனநாயகமற்ற ஒடுக்குமுறையினையும் சிறிலங்க அரசு நிகழ்த்தி வருகின்றது.
1979ல் இன்பம், செல்வம் என்ற இரு வாலிபர்களைக் கொலை செய்து பண்ணை–மண்டைதீவுச் சந்தியில் வீசிவிட்டுச் சென்றது அன்றைய ஆயுதப்படை இதன் தொடர்ச்சியாக வட–கிழக்கில் பல கைதுகள் நடைபெற்று வந்திருக்கின்றது. மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டு வரும் தொண்டு நிறுவனங்களின் பணியாளர்களும் அடிக்கடி கடத்தப்பட்டுக் காணாமல் கடத்தப்பட்டார்கள். 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி மாலை, சிவலிங்கம் சிவகுமார் என்ற தமிழ் இளைஞன் கடத்தப்பட்ட சம்பவமும் பதிவானது. இந்தச் சம்பவம் நடந்து 5 தினங்களின் பின்னர் அதாவது ஏப்ரல் 18ம் திகதி அவரது சடலம் யாழ்ப்பாணம் தொண்டமானாறு பிரதேசத்தில் மீட்கப்பட்டது.
இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தமானது மக்களுக்குப் பல்வேறு கசப்பான அனுபவங்களைத் தந்துள்ளது. அந்த வகையில் யுத்தத்தின் விளைவால் பொதுமக்களிற்கு ஏற்பட்ட பாதிப்புகள் பாரதூரமானவையாகும். உயிரிழப்புக்கள், காணாமல் ஆக்கப்படுதல், அங்கவீனமானோர், சொத்திழப்புக்கள் எனப் பாதிப்படைந்து காணப்படுகின்றனர். யுத்தம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டு ஒன்பது ஆண்டுகள் கடந்தும் இத்தகைய பாதிப்புகளிலிருந்து மீளாதவர்களாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
சகல பிரதேசங்களும் யுத்தப் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டதுடன் யுத்தத்தில் ஈடுபட்டுக் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், கடத்தப்பட்டவர்கள், நீண்ட காலம் இரகசியத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாலும் பெண்கள் குடும்பப் பொறுப்பை ஏற்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களது பிள்ளைகள், சகோதரர்கள், குடும்பத்தலைவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் ஆற்றல் அவர்களுக்கு குறைவாக உள்ளமையாழும் அவர்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர் நோக்குகின்றனர்.
இராணுவத்திடம் சரணடைந்து, அல்லது அவர்களால் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளுக்கு போதிய சட்ட ஆலோசனைகளைப் பெறுவதற்கோ அவர்களின் நாளாந்த வாழ்க்கையைத் தொடர அவர்களுக்கு வசதிகள் இல்லை. சமூகரீதியான சவால்கள், அடிப்படை வசதிகளின் பற்றாக்குறை, வாழ்விட வசதிகளின் பற்றாக்குறை ஒருபுறம் இருக்கத் தமது உறவு உயிருடன் உள்ளாரா இல்லையா என்பது தெரியாமையினால் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவினை எண்ணி உளவியல் ரீதியாகப் பாதிக்கப்படுதல் போன்ற இன்னோரன்ன பிரச்சினைகளினைக் காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்கள் எதிர்நோக்குகின்றனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்கள் தமது உறவைத் தொலைத்துப் பல ஆண்டுகள் கடந்தும் இன்றுவரை அவர்கள் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்காமல் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். ஆயுத முனை யுத்தம் முடிவிற்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் ஆட்சிமாற்றத்தாலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான எந்த ஆக்கபூர்வமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை என்பது மக்களின் ஆதங்கமாகவுள்ளது. விசாரணை ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டிருந்த போதும் அவற்றின் செயற்பாடுகள் இப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக அமையவில்லை. இவை பாதிப்புக்குள்ளான குடும்பத்திற்கு மேலும் பாதிப்பினையும் ஏமாற்றத்தினையும் எற்படுத்தி வருகிறது.
குடும்பத்தலைவர்களை, பெற்றோரை, பிள்ளைகளை இழந்த பலர் அநாதையாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டு மனவடுநோய், தற்கொலை, மதுப்பழக்கம், மனச்சோர்வு, இழவிரக்கம் போன்றவற்றிற்கு உட்பட்டுள்ளதையும் காண முடிகின்றது. இவர்கள் தற்கொலை செய்து கொள்கின்ற சம்பவங்களும் இன்றுவரை நடந்துகொண்டே இருக்கின்றது.
யுத்த காலப்பகுதியில் குறுகிய பகுதிக்குள் அதிகளவான மக்கள் வைக்கப்பட்டிருந்ததுடன் அப்பிரதேசத்தினுள் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளும் ஊடகங்களின் செயற்பாடுகளும் திட்மிட்ட வகையில் தடுக்கப்பட்டிருந்தது. சர்வதேச ஊடகவியலாளர் அனைவரையும் இலங்கையில் இருந்து முன்னால் சனாதிபதி மகிந்த இராசபக்சே வெளியேற்றினார். தொண்டு நிறுவனங்களான சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் பிரதிநிதிகள் மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த தொண்டு நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேற்றப் பட்டனர்.
சிங்கள இராணுவத்தைக் கொலை வெறி இராணுவமாக மாற்றி அவர்களைத் தமிழர்களுக்கு எதிராக எது வேண்டுமானாலும் செய்வதற்கு உரிமை கொடுத்து ஏவிவிட்டார். பாலியல் வன்முறை, படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் தங்கு தடையின்றி நடத்தப்பட்டன. தமிழர்களுக்கு எதிரான துரோகக் குழுக்களின் அட்டூழியங்கள் இராணுவ உதவியுடன் நடந்தன. இதனால் யுத்தத்தில் காணாமல் செய்யப்பட்டவர்களின் புள்ளி விபரங்களினைச் சரியான முறையில் திரட்டிட முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. யுத்தம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டு ஒன்பது ஆண்டுகள் கடந்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி இன்று வரை எந்தத்தகவலும் கிடைக்காமையினால் அவர்களது குடும்பங்கள் ஏமாற்றத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
யுத்தத்தினால் காணாமல் செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் தமது உறவு உயிருடன் உள்ளாரா ? இல்லையா என்பதை அறியாத நிலையில் காணப்படுகின்றனர். வடமாகாணத்தில் நடைபெற்ற 2016 ஆண்டு பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, காணாமற்போன உறவுகள் சிலர் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை எனவும் அவர்கள் இறந்துவிட்டனர் என தெரிவித்துள்ளார்.
போரில் காணாமல் போனவர்கள் இலங்கை இராணுவத்தினரின் முகாம்களிலோ அல்லது பொலீசாரின் சிறைச்சாலைகளிலோ இல்லை என 2018ம் ஆண்டு இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தமை காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவுகளின் குடும்பத்துக்கு இடிமேல் இடிவிழுந்து பேரதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
தமிழர் தாயகப் பிரதேசத்தில் கையளிக்கப்பட்டும் கடத்தப்பட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடி தொடர்ந்து எமது உறவுகள்
- காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாகத் தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும்.
- சட்டத்திற்கு விரோதமாக தொடர்ந்தும் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.
- பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் . என்ற மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துத் தொடர் போராட்டமாகக் கவனயீர்ப்பு போராட்டம், கறுப்புப் பட்டிப் போராட்டம், உணவு தவிர்ப்பு போராட்டம், தேங்காய் உடைக்கும் போராட்டம், கற்பூர தீச்சட்டி ஏந்தும் போராட்டம், மனிதச் சங்கிலி போராட்டம்,வீதி மறியற் போராட்டம், எழுச்சிப் போராட்டம், மௌன போராட்டம், முற்றுகைப் போராட்டம், காத்திருப்புப் போராட்டம், பதாதைகள் தாங்கிய போராட்டம் எனப் பல போராட்டங்களைக் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்ந்து தீர்வின்றி போராடி வரும் நிலை காணப்படுகின்றது. அதே வேளை தமிழ் அரசியல் கட்சிகள் இந்தப் போராட்டங்களை கண்டுகொள்ளாத நிலையும் காணப்படுகின்றது.
வார்த்தையளவிலான தமிழ்த் தேசியம் என்கிற நிலைகளைக் கடந்து அர்ப்பணிப்பான போராட்டங்களை அடுத்த கட்டங்களுக்கு நகர்த்துவதற்கு நீதிக் கோரிக்கைகளுக்கான அழுத்தங்களை வலுப்படுத்துவதற்கு, சிந்திப்பதற்கும் இயங்குவதற்குமான சூழலை நாம் உருவாக்க வேண்டும். மரணச்சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டு அரசாங்கத்தினால் வழங்கப்படும் நட்டஈடுகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் எனவும் தொடர்ந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரித்துக் கொண்டு தேடுதல் நடத்துவோம் என மரணச்சான்றிதழ்களைத் திணிக்கும் முயற்சியில் ஆணைக்குழுவினர் ஈடுபட்டிருந்ததைக் காணக் கூடியதாக இருக்கிறது.
யுத்தம் முடிந்த பின்னர் இராணுவக் கட்டுப்பாட்டிற்கு வந்த போது இராணுவத்தின் கரங்களில் புனர்வாழ்விற்கு என ஒப்படைக்கப்பட்ட எங்களுடைய உறவுகளுக்கு நடந்தது என்ன? அவர்களின் முடிவு தெரியாமல் அவ்வாறு மரணச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளமாட்டோம் அவர்களுடைய மரணத்தின் ஊடாக எமக்குக் கிடைக்கும் உதவிகள் தேவையற்றவை எனச் சாட்சியமளிக்க வந்தவர்கள் ஆணைக்குழுவிடம் பல கருத்துக்களை முன்வைத்து இருக்கிறார்கள் .
அரசியல்வாதிகளின் சிறுபிள்ளைத்தனங்களுக்குக் கவனம் கொடுத்து, ஊடகங்களும், புலம்பெயர் அமைப்புக்களும் உண்மையான பிரச்சினையைத் திசைதிருப்பி ஒதுங்கிப் போகும் நிலை காணப்படுகிறது. எனினும், இவ்வாறான நிலையைத் தொடர்ந்தும் அனுமதிப்பது என்பது, உண்மையான உணர்ச்சியாளர்களுக்கு விடுதலை நோக்கிய பயணத்திற்கு தடையாக இருக்கிறது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் என்கிற அடையாளத்துக்குள் பலரை நாளாந்தம் காண்கிறோம். உறவுகளைத் தேடி அலைந்து அவர்களது கால்கள் பலமிழந்து விட்டன. கண்களில் கண்ணீர் வற்றிவிட்டது. தமது பிள்ளைகளின் நிலை என்னவென்று அறியாமலேயே வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தேடி அலைந்த 48 தாய்மார்கள் இறந்துள்ளார்கள். மேலும் பலர் மன அழுத்தங்கள் காரணமாக நோய்வாய்ப்பட்டு உள்ளனர்.
சகோதரி இ.ராசநாயகம் நிலா (24) சுழற்சிமுறையிலான காணாமல் ஆக்கப்படவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். அவர், 22/07/2018 அன்று மனஅழுத்தம் மற்றும் உடல்நலக்குறைவு, மனவடு நோயினால் பாதிப்படைந்திருந்தமையினை காரணமாக மரணம் அடைந்துள்ளார். (இ.ஜெனிஸ்ராஜ் கடந்த 2007 ம் ஆண்டு நீர் கொழும்புப் பகுதியில் வைத்து காணாமல் போயிருந்தார்) ஆனால் இவற்றையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு நாம் வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்துகிறோம். இவ்வாறு செய்யாது பழையனவற்றையே நினைத்து வருந்திக் கொண்டிருப்பவர்களால் சாதாரண வாழ்க்கையை மேற்கொள்ள முடியாமல் போகிறது.
2007ம் ஆண்டின் மாசி மாதத்தில் வடமராட்சியின் துன்னாலை கலிகை சந்தி இலங்கை இராணுவ படைமுகாமில் வைத்து சிங்கள படையினராலும் ஒட்டுக்குழுக்களாலும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட துன்னாலையைச் சேர்ந்த ஊடகவியலாளர் சு.இராமச்சந்திரன் காணாமல் ஆக்கப்பட்டிருந்தார். இவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த சூழலில் ஓரிரு நாட்கள் அவரது தொலைபேசி செயற்பட்டுக் கொண்டிருந்தது. விசாரணையொன்றிற்காகத் தான் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையினை அவர் அப்போது பகிர்ந்துள்ளார்.
யாழ் – தினக்குரல், வலம்புரி நாளிதழ்களது பிரதேச செய்தியாளராக பணியாற்றிக் கொண்டிருந்த இராமச்சந்திரன் தொடர்பில் இன்று வரை தகவல்கள் இல்லாத நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட தனது பிள்ளையினைத் தேடி பெற்றோர்கள் தொடர்ப் போராட்டம் மேற்கொண்டு வந்த வேளை கடந்த மாதம் 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் 05ஆம் திகதி ஊடகவியலாளரின் தந்தையார் சுப்பிரமணியம் அவரது பிள்ளையை காணாத நிலையில் உயிரிழந்துள்ளார்.
படையினராலும் ஒட்டுக்குழுவாலும் இணைந்து கடத்தப்பட்டு ஊடகவியலாளர் இராமச்சந்திரனை தேடியே அலைந்து திரிந்து தாம் சாவதற்குள் மகனைக் கண்டுவிட வேண்டும் என்றிருந்தவர்கள் மகனைக் காணாமலே இந்நிலையில் இவரது தாயார் 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் திகதி அன்று பிள்ளையினைக் காணாத தாயாக மகனைக் காணாமலே உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இராணுவத்தால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி அலைந்த முல்லைத்தீவு தேவிபுரம் ‘அ’ பகுதியை சேர்ந்த சண்முகநாதன் விஜயலட்சுமி 68 வயதுடைய குறித்த தாயார் 2009ஆம் ஆண்டு முதல் சண்முகராசா அர்ஜின் என்ற தனது மகனைத் தேடிவந்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் தமது உறவுகளைத் தேடி கடந்த வருடம் மார்ச் மாதம் எட்டாம் திகதி முதல் போராடிவந்த நிலையில் 675ஆவது நாள் அன்று (10/01/2019) சண்முகநாதன் விஜயலட்சுமி என்ற தாயார் உயிரிழந்தார்.
மாங்குளம் செல்வராணி குடியிருப்பைச்சேர்ந்த வேலு சரஸ்வதி அம்மா மாரடைப்பால் மரணமாகியுள்ளார். வீரவேங்கை நகைமுகன், லெப்.கேணல் கணபதி,வீரவேங்கை கதிர்காமர் ஆகிய மூன்று மாவீரர்களின் தாயாரும் போராளியாக ஒருவர் தடுப்பு முகாமிலிருந்து வந்தவர்,மற்றும் காணாமலாக்கப்பட்ட தனது மகளைத்தேடியலைந்த அன்னை மனதாலும் உடலாளும் சோர்வடைந்த நிலையில் மாரடைப்பால் 13.02.2019 அன்று மரணமாகியுள்ளார். ஏற்கனவே பல தாய்மார்கள் காணாமலாக்கப்பட்ட பிள்ளைகளைத் தேடியலைந்து உயிரிழந்திருக்கிறார்கள் இந்நிலையில் சரஸ்வதியம்மாவும் தனது மகளை காணாமலே வலிகளோடு இவ்வுலகை விட்டு பிரிந்திருக்கிறார் . இன்று 923 தாவது நாளைக் கடந்த நிலையிலும் சுழற்சி முறையில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது .
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குடும்பங்களின் உறவினர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நினைவுகளில் இருந்து இன்றும் மீளமுடியாதவர்களாக உள்ளனர். மிகை நெருக்கீட்டுக்கு உட்பட்டவர்கள் சாதாரணமாக அதன் தாக்கத்திலிருந்து சில காலங்களின் பின்னர் விடுபட்டுத் தங்கள் சாதாரண வாழ்க்கையை மீளவும் தொடங்கக் கூடியதாக இருக்கிறது. ஆனால் இத்தகைய நோய்களுக்கு உட்பட்டவர்களுக்கு அது சாத்தியமற்றுப் போய்விடுகிறது. அல்லது பலகாலத்திற்கு அதன் தாக்கத்திலிருந்து விடுபட முடியாமல் தவிக்கின்றனர். அவர்களுக்கு உளச்சிகிச்சைகளும் தேவைப்படலாம். அதன் குணங்குறிகள் பாதிக்கப்பட்ட நபர்களுக்கிடையில் பெரிதும் வேறுபடலாம். ஆனாலும் அதனை நாம் மூன்று வகைகளாகப் பாகுபடுத்தலாம். ஊடுருவும் நினைவுகள், தவிர்த்தல் நடத்தைகள், அதிபர எழுச்சி நிலை இந் நிலையில் கோபம் மற்றும் சினம் ஏற்படுகிறது. தூக்கமின்மையால் பாதிக்கப்படலாம். சிறிய சத்தங்களுக்குக் கூடத் திடுக்கிடும் நிலை காணப்படலாம். அதைவிடப் பீதி நிலைக்குரிய குணங்குறிகளான நெஞ்சு வலி, தலை சுற்றல், அதிக மூச்சு வாங்கல், அர்த்தமற்ற பயம் என்பவையும் ஏற்படலாம்.
மேற்கூறிய மூன்று வகையான குணங்குறிகளையும் கொண்டதுதான் நெருக்கீட்டிற்குப் பிற்பட்ட மனவடுநோய். Post-traumatic stress disorder (PTSD) இந்த மூன்று வகையான குணங்குறிகளும் ஒருவரிடம் காணப்பட வேண்டுமென்பதில்லை. இரண்டு வகையான அல்லது தனியே ஒரு வகையான குணங்குறிகள் முதன்மைப்பட்டுக் காணப்படலாம். இந்தக் குணங்குறிகள் மிகை நெருக்கீடு ஏற்பட்டு பல மாதங்களின் பின்பும் ஏற்படலாம். இந்தக் குணங்குறிகள் பாதிக்கப்பட்டவர்க்கு ஒருவித பதற்றம் நிறைந்த உணர்வைக் கொடுக்கிறது. இத்தகைய தற்பதட்டநிலையை வெற்றி கொள்வதற்குப் பலர் மது மற்றும் வேறு போதைப் பொருட்களைப் பாவிக்கத் தலைப்படுவர். இந்தத் தற்பதட்டநிலை மற்றவர்களுடன் (குறிப்பாகக் குடும்பத்தில்) சுமுக உறவை ஏற்படுத்த முடியாமல் செய்து விடுகிறது. குறிப்பாகப் பாலியல் சம்மந்தப்பட்ட உறவுகளையும் பாதிக்கிறது.
பலருக்கு இந்தத் தற்பதட்ட நிலை மெய்ப்பாட்டு ரீதியாகவே வெளிப்படுகிறது. எமது பகுதியில் பலர் மெய்ப்பாட்டுக் குணங்குறிகளுடனே காணப்படுகின்றனர். உதவியற்ற மனப்பாங்கு, உணர்வு குன்றிய நிலை, தோல்வி மனப்பான்மை, மனித அடையாளமற்ற உணர்வு போன்றவற்றையும் இவர்கள் வெளிக்காட்டுகின்றனர்.
தனிமையை விரும்புபவர்களாகவும் நெருக்கமான உறவுகளைப் பேண முடியாதவர்களாகவும் வேறு எவராவது தன்னைக் காப்பாற்றுவார்கள் என நம்புபவர்களாகவும், தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியாதவர்களாகவும் இவர்கள் காணப்படுவார்கள். அத்துடன் வாழ்க்கையின் அர்த்தத்தினை இழந்தவர்களாகவும் எதிர்காலம், இறைவன் என எல்லாவற்றிலும் நம்பிக்கை இழந்தவர்களாகவும் காணப்படுகின்றனர்.
யுத்தத்தினைத் தொடர்ந்து ஏற்படும் உளநெருக்கீட்டின் விளைவாகவும் ஏனைய பல சமூகக் காரணிகளாலும் தற்கொலை பெருமளவில் அதிகரிக்கும் போக்குக் காணப்படுகிறது. மனச்சோர்விற்கு உட்படுவதாலும் மிகையான மதுப்பழக்கத்திற்கு ஆளாவதாலும் இந்நிலைமைகள் ஏற்படுகின்றன. எல்லாவற்றையும் இழந்த நிலையில் நம்பிக்கையற்ற உணர்வு மேலோங்கும் பொழுது சமூகம் மற்றும் குடும்பம் போன்றவற்றின் ஆதரவும் அற்ற நிலையில் இத்துன்பியல் முடிவுக்கு அவர்கள் செல்ல முயல்கின்றனர். தற்கொலையால் உயிரிழந்தவர்களும் தற்கொலைச்சம்பவங்களும் காணாமல் போதலினால் ஏற்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ஏற்பட்ட பல வலிகளையும் தாங்கமுடியாத ஆண்கள் தமக்கு தொடர்ந்து ஏற்படும் பதட்டம் மற்றும் உள நெருக்கடிகளை எதிர் கொள்வதற்குரிய குறுக்கு வழியாகப் பலர் மது அருந்துகின்றனர். குறிப்பாகப் பல ஆண்டுகள் தங்கள் உறவினரை இழந்து தவிப்பதால் மதுப் பழக்கத்திற்கு ஆளாகின்றனர்.
மது அருந்தும் போது ஒரு விதமான தற்காலிக மேன்மை உணர்வு ஏற்படுவதால் தற்பதட்டம் மற்றும் உள நெருக்கடியிலிருந்து தற்காலிகமாக விடுபடுவதால் மதுப் பழக்கம் மேலும் மேலும் வலுவடைகின்றது. மிகையான மதுபாவனை பல பாரதூரமான விளைவுகளைத் தர வல்லது. பல வழிகளில் உடல், உள உபாதைகளை ஏற்படுத்துகின்றது. மலிவாகக்கிடைக்கக்கூடிய கசிப்பு போன்ற மலிவான தீங்கு மிகுந்த மதுபானங்களும் புழக்கத்திலிருப்பதால் இப்பாதிப்புப் பல மடங்கு அதிகமாகின்றன.
மதுப் பழக்கம் உடல் மற்றும் உள உபாதைகளை ஏற்படுத்தும். உடலில் பெரும்பாலான உறுப்புக்கள் மதுபாவனையினால் பாதிப்பிற்கு உள்ளாகின்றன. உளப் பாதிப்புக்களால் ஒருவரது மனோபாவத்திலும் நடத்தைக் கோலங்களிலும் பெருமளவு மாற்றங்கள் ஏற்படுகின்றன. அத்துடன் அவரது அறிவியல் தொழிற்பாடுகளும் நீண்டகால நோக்கில் பாதிக்கப்படுகின்றன. அதைவிடத் தற்கொலை எண்ணமும் ஏற்படலாம்.
விபத்து, கொலை, குடும்ப உறவில் சிக்கல் மற்றும் பாலியல் பிரச்சினைகள் எனப் பல விளைவுகள் மதுபாவனையினால் ஏற்படுகின்றன. உண்மையில் மதுவினால் ஏற்படும் பாதிப்புக்கள் மிகக் குறைந்தளவில் உணரப்படுவதும் அதன் பாதிப்பு நீண்டு செல்வதற்குரிய காரணமாக இருக்கின்றது. மது வெறுமனமே மருத்துவப் பிரச்சனைகளை மட்டுமே தருகின்ற ஒன்றல்ல. அதன் சமூக மற்றும் பொருளாதாரப் பாதிப்புக்கள் மிக அதிகமானவை. அதைவிடக் குடும்ப உறவுகளில் ஏற்படும் பாதிப்புக்கள் குறிப்பாகக் குழந்தைகள் பாதிக்கப்படுவது என்பது அதன் இன்னுமொரு பரிமாணம்.
மதுப் பழக்கமுடைய ஒருவரது உடலில் உச்சி முதல் உள்ளங்கால் வரையான சகல பகுதிகளையும் மது பாதிக்கின்றது. மதுப் பழக்கத்தினால் ஈரல் அழற்சி மட்டுமே ஏற்படுவதாகச் சமூகத்தில் பலர் கருதுகின்றனர். ஆனால் மூளை, இதயம், குடல், சதை போன்ற பல உறுப்புக்களை மது தாக்குகின்றது. இதயநோய், பாரிசவாதம் போன்றவற்றை ஏற்படுத்துவதில் மதுவும் முக்கிய பங்காற்றுகின்றது. அத்துடன் பல புற்றுநோய்களுக்கு மதுவினால் ஏற்படும் பாதிப்பே முக்கிய காரணமாக அமைகின்றது.
குருதியமுக்கம், நீரிழிவு ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் குருதியமுக்கம் சீர்செய்யப்படுதல் மற்றும் குருதிசார் சீனியின் அளவினைக் கட்டுப்படுத்துதல் போன்றவற்றில் பாதிப்பினை ஏற்படுத்துவதனால் குருதியமுக்கம் மற்றும் நீரிழிவினால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் ஒரு காரணியாக மது அமைகின்றது. அத்துடன் குடிபோதை விபத்துக்களை அதிகரிக்கின்றது. அதைவிட வன்முறை மற்றும் சமூகக் குற்றங்களுக்கும் மதுப் பழக்கம் காரணமாக அமைவதுடன் நஞ்சருந்தல், தன்னைத் தானே காயப்படுத்துதல் போன்ற செயற்பாடுகளுக்கும் மது காரணமாக அமைகின்றது என்னும் உண்மையைப் பலர் உணர்வதில்லை.
மதுவினால் மனச்சோர்வு மற்றும் தற்கொலை என்பன பெருமளவில் ஏற்படுகின்றன என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. மதுப்பாவனை தொழில் நிலையங்களிலும் பல பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது. தொழிலுக்கு வராமல் விடுமுறையில் செல்லல், மற்றும் உடல் ஆரோக்கியத்துடன் தொழிலில் ஈடுபட்டு உற்பத்தி அதிகரிப்பில் உதவ முடியாமை ஆகியவை மதுப்பழக்கத்தினால் ஏற்படுகின்றன.
குடும்பத்தின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை மது ஏற்படுத்துகின்றது. வறுமையால் வாடுகின்ற பெரும்பாலான குடும்பங்களில் மூன்றிலொரு பங்கிற்கும் மேற்பட்ட வருமானம் மதுவினால் விரயமாக்கப்படுகின்றது. இது பெரிதாக உணரப்படாமல் இருப்பதால் அவர்கள் மேலும் வறுமைக்கு ஆளாகிச் சமூகத்தின் கீழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
குடும்பத்தின் ஏழ்மை நிலைக்குக் காரணமாக அமைகின்ற மது அந்த குடும்பத்தின் குழந்தைகளின் கல்விச் செயற்பாடு மற்றும் அவர்களது போஷணை, மனநலம் என்பவற்றில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. எனவே தனிமனித, குடும்ப சமூக மட்டங்களில் மது பெருமளவில் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. இவ்வாறு மதுபோதையினால் பல்வேறு விளைவுகளையும் எதிர் கொள்ளும் மதுவுக்கு அடிமையானவர்கள் தமது சமூகத்தினரால் ஒதுக்கி வைக்கப்படுவதனையும் அவதானிக்கலாம். அதுமட்டுமல்லாமல் அவர்கள் தாமாகவே அனைத்து விடயங்களிலும் வெறுத்து தமது உறவுகள் நண்பர்கள் சமூகம் போன்றவற்றில் இருந்து விலகிக்கொள்வதனையும் அவதானிக்க முடிகின்றது. இவ்வாறு யுத்தினால் உறவுகளினைத் தெலைத்த முதுமையான குடும்பத்தலைவர்கள் மது பாவனைக்கு அடிமையாகி உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டிருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
காணாமல் செய்யப்பட்டதனால் உளப் பேரதிர்விற்கு உட்பட்ட ஒருவர் எளிதில் உணர்ச்சி வசப்படுபவராகவும் ஆழ் மனதில் பெரும் கோபத்தைக் கொண்டவராகவும் மாறுவதனை அவதானிக்கலாம். அவரது ஆளுமையானது முழுமையாக மாற்றமடையலாம். இதனால் அவர் பிற மனிதர்களுடன் உறவாடுவது பெருமளவு பாதிக்கப்படுகின்றது.
நெருங்கிய உறவுகளுடன் இதன் தாக்கம் பெருமளவில் வெளிப்படும். இதனால் குடும்பத்தில் உறவுச் சிக்கல்கள் ஏற்பட்டு அது பூதாகரமாக வெளிப்படும். எடுத்துக்காட்டாகக் கணவன் மனைவிக்கு இடையில் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு விவாகரத்து வரை சென்று விடும் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றது. உளப் பேரதிர்வின் தாக்கத்திலிருந்து விடுபடுதலின் மூலமே இந்த உறவுச் சிக்கல்கள் சீரடைய வாய்ப்பு உண்டாகும்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குடும்பத்தினைச்சேர்ந்த அதிகளவானோர் உறவுச்சிக்கல்களிற்கு உட்பட்டுள்ளனர். இது ஒரு மனிதனின் தொழிற்படும் திறனைப் பெருமளவில் பாதிக்கச் செய்கின்றன. அத்துடன் குடும்பம் என்ற அலகு பலமிழக்கலாம். இதனால் சமூக அளவில் உபயோகமான பாத்திரத்தை உளப் பேரதிர்விற்கு உட்பட்ட மனிதன் இழந்து விடுகிறான்.
நீண்டு செல்லும் இந்த உளப் பேரதிர்வுகளின் தாக்கங்கள் பல குடும்பங்களில் தனி மனிதர்களில் பெருமளவில் காணப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இந்த உளப் பேரதிர்விற்கான பரிகாரங்களைப் பற்றி நாம் சிந்தித்துச் செயற்படாவிடின் ஆரோக்கியமற்ற ஒரு சந்ததியினையே எதிர்காலத்தில் கொண்டிருப்போம்.
யுத்தம், கடத்தல், உயிரச்சுறுத்தல், அனர்த்தங்கள் வாழ்வின் நெருக்கீடுகளைத் தொடர்ந்து ஏற்படும் மனநலக் குறைபாடுகளில் மனச்சோர்வு மிக முக்கியமானது. இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுத்தும் துயரங்கள் மற்றும் தாங்கொணாத் துன்பங்கள் ஒரு மனிதனில் எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு மீண்டும் மீண்டும் ஏற்படும் எதிர் மறையான சிந்தனைகள் அவரை மனச்சோர்வு என்னும் கடலில் மூழ்கடிக்கக் கூடியவை. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குடும்பத்தில் பலர் மனச்சோர்வு என்னும் மனநிலையை அனுபவித்துக்கொண்டிருக்கின்றார்கள்.
மக்களின் வாழ்வில் துன்பியல் நிகழ்வு குறுக்கிடும் போது மனச்சோர்வுக்கு ஆளாகின்றார்கள். என்றால் யுத்தத்தின் காரணமாகவே இவர்கள் பெரும்பாலும் மனச்சோர்வு நோய்களுக்கு ஆளாகியுள்ளார்கள். தொடர்ச்சியான மனச்சோர்வு ஒருவரை மீள முடியாத நிலமைக்கு இட்டுச் செல்லுமாயின் அது ஒரு நோயியல் வெளிப்பாடாக அடையாளப்படுத்தப் படுகின்றது. அதாவது மனச்சோர்வு ஒரு நோயாக மாறுகின்றது. ஏதிர்மறையான நிகழ்வுகள் ஒருவரது வாழ்வில் தொடர்ந்தும் ஏற்படும் போது அவருக்கு ஏற்படும் மனச்சோர்வு நீண்டதாக அமைவதும், நோயாக மாறுவதும் தவிர்க்க முடியாதது.
அனர்த்த காலங்களைத் தொடர்ந்து மிக அதிகமாகக் காணப்படும் உளநலக் குறைபாடு மனச்சோர்வேயாகும். யுத்த நெருக்கீட்டினைத் தொடர்ந்து எமது பிரதேசத்தில் பலர் இந்த உளநலக் குறைபாட்டிற்கு ஆளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஒருவரது மனதில் தோன்றும் எதிர்மறையான எண்ணங்கள் பல விளைவுகளை அவரிடம் ஏற்படுத்துகின்றன. அவரது உணர்ச்சிகள், உடற்றொழில், நடத்தைக் கோலங்கள் மற்றும் எண்ணக் கோலங்கள் பெரும் மாற்றங்களுக்கு உள்ளாகின்றன.
இழப்பினை எண்ணி எண்ணி இரங்குகின்ற நிலை இழவிரக்கம் எனப்படும். ஆய்வுப்பிரதேசத்தில் உறவுகளை தொலைத்தமையினால் இம்மக்கள் இழவிரக்கத்தினால் பாதிப்படைந்துள்ளனர். இது எல்லோருக்கும் ஏற்படும் சாதாரண நிகழ்வு ஆனால் ஒரு சிலரின் இழவிரக்கம் அசாதாரண நிலையினை அடையலாம். இழப்பினைத் தொடர்ந்து ஏற்படும் எதிர்த்தாக்கம் ஒரே மாதிரியானதல்ல. அது பல்பரிமாண நிலையினைக் கொண்டது. இது ஒரு உறவின் பிரிவினால் உலகளாவிய அளவில் ஏற்படுகின்ற வலி தருகின்ற அனுபவம். குறிப்பாக உயிரிழப்பினைத் தொடர்ந்து ஏற்படுகின்ற எதிர்த்தாக்கங்களை இழவிரக்கம் என வகைப்படுத்தினாலும் தொழில் இழப்பு, காதல் தோல்வி மற்றும் உடல்நல இழப்பு என்பவற்றைத் தொடர்ந்தும் இத்தகைய எதிர்த் தாக்கங்கள் ஏற்படுகின்றன. எல்லோரும் பெரும்பாலும் இந்த இழவிரக்கச் செயற்பாட்டினூடாக தங்களுடைய இழப்பினை அது தந்திட்ட தாக்கத்தினை எதிர்கொள்கின்றனர். இத்தகைய சாதாரண நிகழ்வினைப் பற்றித் தெரிந்து கொள்வதன் மூலம் அதனை நாம் புரிந்து கொள்ளலாம்.
அன்புக்குரியவரின் இழப்பு, மனவதிர்ச்சி, கோபம், குற்ற உணர்ச்சி, தேடுகை, கவலை, இழப்பினை ஏற்றுக்கொள்ளல், இழப்புகள் ஏற்படும்போது அதிலும் குறிப்பாக எதிர்பாராத இழப்புக்கள் ஏற்படும்போது முதலில் பெரும்பாலும் எவரும் அதிர்ச்சிக்கு உட்படுவர். இழப்பினை மறுதலித்து அதனை ஏற்றுக் கொள்ள முடியாதவொரு நிலையில் காணப்படுவர். அந்த இழப்பினைத் தாங்க முடியாததால் கடும் கோபத்திற்கு உள்ளாகிக் காணப்படுவர். பிற இடங்களிலும் மக்கள் கூட்டங்களிலும் இறந்தவரைத் தேடுவர். அத்துடன் இறந்தவர் உயிருடன் இருப்பது போன்ற உணர்வைக் கொண்டிருப்பதுடன், அவர்களது உருவங்கள் தெரிவது போலவும் அவர்களுடன் உரையாடுவதைப் போலவும் தோற்றப்பாடுகள் ஏற்படலாம். அவர்களுடைய நினைவுகளில் மனதைப் பறிகொடுத்த நிலையிலே காணப்படுவர்.
இழப்பினைத் தொடர்ந்து மனநெருக்கீடு ஏற்பட்டு அது கவலையாகவும் கண்ணீராகவும் வெளிப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் எல்லாவிதமான மகிழ்ச்சியான விடயங்களையும் தொலைத்து விட்டவர்களாகக் காணப்படுகின்றனர் அத்துடன் இவர்கள் தமது தொலைந்த உறவு உயிருடன் உள்ளாரா இல்லையா என்பதனை அறிய முடியாமையினால் ஈமச்சடங்குகள் மற்றும் கிரியைகள் மற்றும் இழவிரக்கத்தை ஆரோக்கியமாக எதிர்கொள்வதற்கு உறுதுணையாக உள்ளனவற்றை மேற்கொண்டு இழவிரக்கத்தைக் குறைக்க முடியாத நிலையில் காணப்படுகிறனர்.
வடக்கு கிழக்கு பிரதேசத்தில் பிரதான பொருளாதாரமானது விவசாயப் பொருளாதாரமாகவே காணப்படுகின்றது. அதாவது பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்த உழைக்கும் வர்க்கத்தினரே அதிகளவில் காணாமல் செய்யப்பட்டுள்ளனர். இதனால் பொருளாதாரரீதியான பாதிப்பினை இவர்களது குடும்பங்கள் எதிர்நோக்குகின்றனர். சமூகத்தினைப் பொறுத்தவரையில் தொழில், வருமானம் போன்றன அந்தஸ்த்தைத் தீர்மானிப்பதாகவும் இக் குடும்பங்களின் சமூக – பொருளாதார நிலையைத் தீர்மானிப்பதாகவும் அமைகின்றன.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குடும்பங்கள் தமது வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதில் பல்வேறு பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். இந்தவகையில் வேலை வாய்ப்பின்மை, வருமானம் போதாமை, கடன் வசதிகளின்மை போன்ற பிரச்சினைகள் அவர்களது பொருளாதாரத்தைப் பாதிக்கின்றன.
அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படுகின்றபோதும் இவை சரியாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களைச் சென்றடைவதில்லை என்று மக்கள் தெரிவிக்கின்றனர். இவர்கள் தமது வறுமையைப் போக்க வழி தெரியாது சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்கின்றார்கள்.
குடும்ப அங்கத்தவர்களினைத் தொலைத்தமையினால் இவர்களது குடும்பத்திற்கான வருமானம் போதாமலுள்ளது. உழைக்கும் பிள்ளைகள் மற்றும் குடும்பத்தலைவர்களை இழந்தமையினால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டிலுள்ள முதுமையடைந்தவர்கள் வேறு நபர்களுடைய வயல்கள், தோட்டங்களில் கூலி வேலைகளில் ஈடுபடுகின்றனர், வீடுகளில் பணிப் பெண்களாக வேலை செய்கின்றனர். இவர்களுக்கு வழங்கப்படுகின்ற நாட்கூலி அவர்களது குடும்பச் செலவுக்குப் போதுமானதாக இருப்பதில்லை. இவர்கள் முழுநேர வேலைகளில் ஈடுபடுவது கடினமாக இருக்கின்றது. ஏனெனில் தமது வீட்டு வேலைகளைக் கவனித்துக் கொண்டு தூர இடங்களுக்குக் கூலி வேலைகளுக்காகச் செல்வது பெரும் பிரச்சினையாகக் காணப்படுகின்றது.
தமது வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்திக் கொள்ளக் கூடிய நிரந்தரமான தொழில் முயற்சிகளைச் செய்ய வேண்டும் என்ற அக்கறை உடையவர்களாகக் காணப்படுகின்றனர். ஆனால் இவர்களிடம் மூலதனம் என்பது மிக அரிதாகவே காணப்படுகின்றது. இதனால் இவர்கள் கடன்களைப் பெற்றுச் சிறுதொழில் முயற்சிகளை ஏற்படுத்த விரும்புகின்றனர். ஆனால் இவர்களுக்கான கடன்களை வழங்குவதில் பாரபட்சமான நிலையே காணப்படுகின்றது.
சுயதொழில் தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் குறைகின்றன. நிதி நிறுவனங்கள் மட்டுமல்லாது உறவினர்கள் கூட கடனாகப் பணம் கொடுக்க அஞ்சுகின்றனர். இவ்வாறான பொருளாதாரப் பிரச்சினைகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்குத் தடையாக உள்ளன. எனவே இவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவிகள் வேண்டப்படுகின்றன.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது சொத்துக்கள் வதிவிடங்களை இழந்த நிலையில் காணப்படுவதனால் அவர்களுக்கு அடிப்படை வசதிகளைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்களின் வீடு, மலசலகூட வசதிகள், குடிநீர் வசதிகள் குறைவாக பிள்ளைகளின் கல்வி நிலை மிகவும் மோசமான நிலையிலேயே காணப்படுகின்றது.
அரசாங்கம் மீள்குடியேற்றமெனக் கூறி அவசர அவசரமாக முறையற்ற விதத்தில் மீள்குடியேற்றங்களை மேற்கொண்டதால் யுத்தம் முடிவடைந்து ஒன்பது வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் வன்னி மக்கள் பருவ மழையினால் பல்வேறுபட்ட இன்னல்களை அனுபவிக்கின்றனர்.
அரசாங்கம் மீள்குடியேற்றம் செய்வதாக உலகுக்குக் காண்பிக்கும் நோக்குடன் அவசர அவசரமாக அதனை மேற்கொண்டது. உரிய முறையில் மீள்குடியேற்றத்தை மேற்கொள்ளாததாலும் யுத்தம் முடிவடைந்து ஒன்பது வருடங்கள் கடந்துள்ள நிலையில் அவர்களுக்குரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காததாலும் காணாமல் போனோரது குடும்பங்கள் அல்லல் படுகின்றனர். மீளக்குடியேறியவர்கள் கொட்டில்களில் வாழ்கின்றனர். மழை நீர் கூரையினால் கொட்டில்களுக்குள் புகுகின்றது. அதைவிட வெள்ளம் கொட்டில்களுக்குள் உட்புகுவதாலும் இவர்கள் பெரும் அல்லல்களுக்கு உள்ளாகின்றனர்.
நிலஅபகரிப்பு ஒரு வித மனிதபாதுகாப்புப் பிரச்சினையுமாகிவிட்டது. இந்தச் சூழ்நிலையில் மனித பாதுகாப்பே மக்களின் சீவனோபாயச் செயற்பாடுகளின் முன்நிபந்தனையாகிறது. இந்த நிலை இக்குடும்பங்களின் வாழ்வாதார மற்றும் நீண்டகால தனிமனித விருத்திக்கு உதவும் சந்தர்ப்பங்களைக் கட்டுப்படுத்துகிறது.
கூலிவேலைகளிற்கு செல்வதனால் தற்போது அவர்களது வாழ்வாதார முயற்சிகள் மிகக் குறுகியவட்டத்திற்குள் உள்ளவையாகவும் பருவகாலத்திற்கேற்ப இருப்பவையாகவும் இருக்கின்றன. அவர்களுக்கு இருக்கும் வினைத்திறன்கள் மட்டுப்படுத்தப்பட்டவையாக இருப்பதும் அவர்களது பிரச்சினையை இன்னும் அதிகரிக்கின்றது. புதிய பயிற்சி முறைகள் அவர்களிற்கு கிட்டாத காரணத்தினால் உழைக்கும் ஆற்றல் மட்டுப்படுத்தப்படுகின்றது.
குடும்பங்களுக்குத் தலைமை தாங்கும் பெண்களாக இருந்து நிரந்தர வருமானமின்றி வறுமையில் வாழும் அவர்களுக்குச் சாதாரண நிதிநிறுவனங்களிலிருந்து கடன் வசதிகளைப் பெறுவதும் கடினமாக இருக்கின்றது. வாழ்வாதார முயற்சிகளுக்கான வாய்ப்புக்கள் குறைந்த நிலையில் கசிப்பு வடித்தல் போன்ற சட்டபூர்வமற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
வீடு போன்ற உதவித் திட்டங்கள் பெரிய குடும்பங்களை முன்னுரிமைப்படுத்தி வழங்கப்படுவதால் தனித்து வாழும் பெண்களும் தங்கி வாழும் ஓரிரண்டு குடும்ப உறுப்பினருடன் வாழும் பெண்களும் இங்கு ஒதுக்கப்படுகின்றனர். வீட்டுத் திட்டங்கள் போன்ற சமூக உட்கட்டுமானத் திட்டங்கள் பயனாளிகளின் உழைப்பு ரீதியான பங்களிப்பினை வேண்டுவதனால் இவர்கள் கூலிவைத்தே அவற்றைச் செய்து முடிக்க நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இது அவர்களது கடன் சுமையை அதிகரிக்கின்றது.
உதவித் திட்டங்கள் யாருக்கு வழங்கப்பட வேண்டும் என அரச நிறுவனங்களினால் எடுக்கப்படும் தீர்மானங்கள் வெளிப்படைத் தன்மையற்றவையாக இருப்பதால் சமூகத்தின் பலவீனமான குழுக்கள் மேலும் ஒதுக்கப்படுகின்றன. அரசினால் வழங்கப்படும் மாதாந்த உதவித் திட்டங்கள் தற்போதைய விலைவாசி உயர்வுக்கு கொஞ்சம் கூட ஏற்றதாக இல்லை.
கடந்தகால அசாதாரண நிலைமையின் போது, காணாமல் ஆக்கப் பட்டவர்களது உறவினர்களான தமிழ் பெண்களிடம் இராணுவம், அரசியல்வாதிகள், துணைக் குழுக்கள் பாலியல் லஞ்சம் கோரியதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து குறிப்பிட்ட அவர்கள், காணாமல் போயுள்ள தமது உறவுகளை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளின் போது, தங்களிடம் கையூட்டாக பணம் கோரப்பட்டதாகவும், பணம் இல்லாத நிலையில் பாலியல் லஞ்சம் கோரப்பட்டதாகவும், காணாமால் போயுள்ளவர்களின் உறவினர்களான பெண்கள் தெரிவித்துள்ளனர். அரச படையினரின் புலானய்வுப் பிரிவினர் மற்றும் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் மட்டுமல்லாமல், அரசியல்வாதிகள் மீதும் இவ்வாறு பாலியல் லஞ்சம் கோரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருப்பதாகவும் கூறுகின்றனர்.
அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ள காணாமல் போனோருக்கான அலுவலகம், மக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட லஞ்சப் பணத்தை சம்பந்தப்பட்டவர்களிடம், இருந்து மீளப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதுடன், பாலியல் லஞ்சம் கோரிய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
அடுத்ததாகக் காணாமல் போனவர்கள் ஒருவேளை கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம். ஆனால் அவர்களின் உறவுகள் காணாமல் போனவர்களையே நினைத்துக்கொண்டு கவலையில் வாழ்கின்றனர். எனவே அவர்களுக்கு உளவள ஆலோசனைகள் வழங்கப்படவேண்டும். மேலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தமது பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான வாழ்வாதார உதவிகளை செய்வதற்கு அரசாங்கம் உடனடியாக ஒரு பொறிமுறையை தயார்செய்யவேண்டும் என தெரிவித்துள்ளனர்.
தமது கணவன்மார்களைத் தொலைத்த பெண்கள் சமூகத்தினால் ஒதுக்கப்படுகின்ற சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. மற்றும் சுப நிகழ்ச்சிகளில் முன்னின்று செய்வதிலிருந்து ஒதுங்கியிருக்கின்றமையினையும் காண முடிகின்றது. இக்குடும்பங்களதும் சமூக நிலை கீழ்மட்டத்திலேயே காணப்படுகின்றது. காணாமல் போதலினால் குடும்பத்திலுள்ள திருமணமாகாத மூத்த பெண் குடும்பத்தை தாங்குகின்ற நிலைமையும் காணப்படுகின்றது. இதனால் அவர்களது திருமணமும் நடைபெறாமல் போகின்றது.
காணாமற் போனோர் பற்றியும் கடத்தப்பட்டவர் பற்றியும் நீண்ட காலம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளோர் பற்றியும் கவலை கொள்கின்றனர். காணாமற்போன அவர்களது மகன்மார், சகோதரர்கள், கணவன்மார்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் ஆற்றல் அவர்களுக்கு இல்லை. தடுப்பில் இருப்பவர்களுக்குத் தேவையான சட்ட ஆலோசனை பெறுவதற்கோ அவர்களின் வழக்கைத் தொடரவோ அவர்களுக்கு வசதிகள் இல்லை. அத்துடன் நட்டஈடு வழங்கப்படுதல் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
வடக்கு கிழக்குப் பிரதேசங்கள் இராணுவமயப் படுத்தப்பட்டதனாலும் அங்கு இராணுவப் படைகளின் அதிகரித்த நடமாட்டத்தினாலும் பாதுகாப்புக் குறித்து அச்சம் நிலவுகின்றது. பாதுகாப்பின்மையால் அவர்களது சுதந்திர நடமாட்டம் தடைப்படுகின்றது. இதனால் கல்வி தொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதிலும் சுகாதார சேவைகள் போன்ற சேவைகளைப் பெற்றக் கொள்வதிலும் தடைகளை எதிர்நோக்குகின்றனர். பாதுகாப்பான நிரந்தர வீட்டு வசதிகள் அளிக்கப்படாமை அவர்களது பாதுகாப்பின்மையை இன்னும் அதிகரிக்கின்றது. வடகிழக்குப் பிரதேசங்களில் இராணுவத்தினரின் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும்.
யுத்தத்தினால், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கும்டுபத்தைச் சார்ந்த மாணவர்கள் மேலதிகமான உதவிகள் கிடைக்காமையினாலும் கற்றலுக்கு இயலாமையாலும் கல்வி பாதிக்கப்பட்டமையாலும் அவர்களது பிள்ளைகள் பாடசாலை விட்டு இடைவிலகுகின்றமை அதிகரித்துள்ளது. பாடசாலைக்குச் சென்றாலும் அவர்களது கல்வி ரீதியான அடைவுகள் குறைவாகக் காணப்படுகின்றன. வறுமையும், பிள்ளைகள் பாடசாலை இடைவிலகுவதற்கான காரணமாகின்றது. பாடசாலைகள் கிரமமாக கட்டட நிதிக்காகவும் வேறு பல தேவைகளுக்காகவும் பிள்ளைகளிடமிருந்து நிதி அறவிடுகின்றன. இந்த அறவீடு பாதிக்கப்பட்ட குடும்பங்களிலிருந்தும் அறவிடப்படுகின்றன. இவற்றைக் கட்டமுடியாதவிடத்தில் பிள்ளைகள் சோர்வுற்று பாடசாலை செல்வதற்குத் தயக்கம் காட்டுகிறார்கள்.
யுத்தத்தினால் ஏற்பட்ட உளப்பாதிப்பும் வறுமையினால் பொருத்தமான சுகாதார சேவைகளை அணுக முடியாத தன்மையினாலும் யுத்தகாலத்தில் தோன்றிய பல நோய்கள் இன்றும் தொடரும் தன்மையினாலும் அவர்களது முழு ஆற்றலையும் உபயோகித்து உழைக்க முடியாமல் இருக்கின்றனர். அவர்களது பிள்ளைகள் குறைவளர்ச்சியுடன் இருப்பதாக அறியமுடிகின்றது. தங்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டாலும் வைத்திய வசதிகளை நாடுவதில்லை ஏனெனில் வைத்தியசாலைக்குச் செல்வதாலும் அங்கு பல மணிநேரம் செலவிடுவதாலும் அவர்கள் தங்களது ஒருநாள் கூலியினை இழக்கின்றதாகச் சொல்கின்றனர்.
வறுமை முத்திரை மாதமொன்றுக்கு ரூ.250 கொடுக்கப் படுகின்றது. இதைவைத்துக்கொண்டு மூன்று வேளை சாப்பிட முடியாமல் இருக்கின்றனர். குடும்பத்தலைவர்களை, உழைக்கும் பிள்ளைகளினை இழந்தமையினால் பொருளாதார ரீதியாகப்பாதிக்கப்பட்டு வறுமையில் வாழுகின்றனர். உளவியல் பொருளாதார ரீதியாக பாதிப்படைந்தமையினால் சமுக ரீதியில் ஒதுங்கி அல்லது ஒதுக்கப்பட்டு வாழ்ந்து வருகின்றார்கள்.
இன்று காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் எப்போதும் சாட்சியாக உள்ளவர்கள் எந்நேரத்திலும் இறக்க நேரிடும் என்பதை பலரது இறப்புக்கள் காட்டி நிற்கின்றது. அந்த வகையில் சாட்சியாமாக உள்ளவர்களிடமும், பாதிக்கப்பட்டவர்களிடமும் நேர்காணல்களை மேற்கொண்டு அவர்களது பதிவுகளை பல மொழிகளில் எழுத்துதல், ஒளி நாடாக்கள் மூலம் ஆவணப்படுத்துவதன் ஊடாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு வலுச் சேர்ப்பதுடன் சர்வதேச சமூகத்திடம் ஒப்படைக்க வேண்டிய பொறுப்பு அனைவரிடமும் இருக்க வேண்டும். இவை எக்காலத்திலும் அவற்றைப் பயன்படுத்திச் சர்வதேசத்தின் நீதிக்கதவைத் தட்டி நீதியைப் பெற்றுக்கொள்ள வழியமைக்கும்.
இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து இலங்கையில் காணாமல் போகச் செய்யப்படுகின்ற சம்பவங்கள் இடம் பெற்று வருவதாக பேசப்படுகின்றது. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விடயம் வடக்கு கிழக்கு மக்களை இன்னும் சோகத்தில் ஆழ்த்தி வருகின்றது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது உலகிலேயே அதிகமாக காணாமலாக்கப்பட்டவர்களின் பட்டியலில் இலங்கை இரண்டாவதாக இருப்பதாகப் பலவந்தமாக அல்லது சுயவிருப்பின்றி காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பான செயற்குழு Working Group on Enforced or Involuntary Disappearances (WGEID).அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததாகவும் அது மட்டுமன்றி 2006 இல் இலங்கை அரசாங்கத்திற்கு காணாமல்போகும் சம்பவங்கள் தொடர்பாக அவசரமான வேண்டுகோள்களை உலகில் ஏனைய நாடுகளை விடவும் இலங்கையிடம் முன்வைத்ததாக, 2007 ஆம் ஆண்டில் அந்த செயற்குழு குறிப்பிட்டிருந்ததாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தொடர்பான புலன் விசாரணை அறிக்கையில்( 30 ஆவது நிகழ்ச்சி நிரல் விபரம் 2) குறிப்பிட்டுள்ளது.
காணாமல் போனோரது குடும்பங்களின் வாழ்வாதார பிரச்சினையை மனிதாபிமான நோக்கில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் அணுக முன்வர வேண்டும். இதனால் அம்மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்குப் படிப்படியான தீர்வுகளைக் காணமுடியும். இவர்கள் உளவியல் ரீதியான பாதிப்புக்களிலிருந்து மீட்டெடுக்க வேண்டிய நிலையில் உள்ளதோடு வாழ்வாதாரத் தேவைகளினையும் நிறைவேற்ற வேண்டியவர்களாகவும் உள்ளனர். எனவே இவை தொடர்பாக சர்வதேச விசாரணை நடாத்தப்படல் வேண்டும். குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும். காணாமல் போனவர்கள் பலர் உயிருடன் இருக்கலாம்; அவர்களைக் கண்டுபிடித்தல் வேண்டும். உயிருடன் இல்லாதவர்களுக்கு அவர்களின் சொந்தங்களுக்கு தகுந்த நியாயமான இழப்பீடு வழங்கப்படல் வேண்டும்.
மக்களுக்காக அரசியல் செய்வதாகப் பாசாங்கு காட்டுகின்றதை ஜனநாயகம் என்ற முகமூடி போட்டுக் கொண்டு இருப்பதனால் முற்போக்குச் சக்திகளும் இவர்களினால் ஏமாற்றப்படுகின்றார்கள். இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு உட்படாது தனித்துவமான அரசியல் பாதையை தெரிவு செய்து இயங்குவதன் மூலமும் அடக்குமுறைகளையும் மக்களுக்கு எடுத்துச் செல்வதன் ஊடாகவும் ஒடுக்குமுறைக்கு எதிரான தீர்க்கமான புரட்சிகரமான போராட்டத்தினை நடத்துவதனூடாக இனவிடுதலையினையும் அடையமுடியும்.
நிலவன் / நிக்சன் பாலா,
உளவளத்துணை,
மற்றும் உளச்சமூகப்பணியாளர்.