14 வயதான சிறுமி கார்த்திகா 2 வாரங்களுக்கு முன் ஆங்கிலத் தேர்வு எழுதிக் கொண்டிருக்கும் போது திடீரென அதிக தலைவலியோடு மயங்கி விழுந்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாள். உடல் மற்றும் நரம்பியல் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்த பிறகும் அவளுக்கு தொடர் தலைவலியும் மயக்கமும் ஏற்படவே மனநல மருத்துவரிடம் அழைத்துவரப்பட்டாள். உளவியல் ஆய்வில் 10ம் வகுப்புப் பொதுத்தேர்வில் நல்ல மதிப்பென் வாங்குவாள் என்று அவளுடைய பெற்றோரும் ஆசிரியரும் அவள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நிறைவேற்ற முடியுமா எனும் ஆழ்மன பயத்துடன் கூடிய ஒரு பெரும் போராட்டத்தை எதிர்கொள்ளும் உண்மை தெரியவந்தது. அதை வெளியில் சொல்ல முடியாத ஆழ்மன போராட்டம் ஒரு சமயத்தில் அதீத தலைவலியாக வெளிப்படுகிறது. தகுந்த உளவியல் சிகிச்சை மற்றும் மனநல ஆலோசனைக்குப் பின்னர் 480 மதிப்பெண்கள் பெற்று தற்போது மேற்படிப்பை தொடர்கிறாள்.
ஆழ்மன நம்பிக்கைகளும், ஆழ்மன குழப்பங்களும் நம் வாழ்வை வெகுவாக பாதிக்கக்கூடியது. நம் ஆழ்மனதில் உள்ள குழப்பங்களோ பயங்களோ வெளியில் சொல்ல முடியாமல் போனால் அது ஒரு கட்டத்தில் உடல்நல குறைபாடாக (இது ஒரு தோற்றமே, உண்மையில் உடல்நல குறைபாடு எதுவும் இருக்காது) வெளிப்படும். இவ்வாறு தன் சுயம் மறந்த வேறு ஒரு நிலையோ, அல்லது உடல் நல குறைபாடோ ஏற்பட்டால் அதற்கு மனப்பிறழ்சிக் குறைபாடு என்று பெயர்.
தன்னுடைய ஆழ்மனப்பிறழ்ச்சியினால்தான் தனக்கு இவ்வாறு நிகழ்கிறது என்பதை சம்பந்தப்பட்டவரால் உணரமுடியாது என்பதே இந்நிலையின் முக்கியமான அறிகுறி ஆகும், சுருக்கமாகச் சொன்னால் நோயாளி நடிக்கவும் இல்லை நோயும் உண்மை இல்லை. இது ஒரு ஆழ்மன அதிர்ச்சியின் அல்லது குழப்பத்தின் அல்லது பயத்தின் அல்லது ஏக்கத்தின் வெளிப்பாடே.
இதுபோன்ற சில ஆழ்மன குறைபாடுகள் கலாச்சாரத்தோடு ஒன்றிப்போனவை. உதாரனமாக சாமியாடுதல், பேய் பிசாசு தனக்குள் புகுதல் போன்றவை. நம் ஆழ்மனதில் தீர்க்கமாக நம்பும் விசயங்கள் நம் உணர்வுகளையும், உடல் இயக்கங்களையும் கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டவை. அதானாலேயே அவர்கள் சாமியாடும்போதும், நெருப்பில் நடக்கும் போதும், தன்னை அடித்து வருத்திக்கொள்ளும் போதும் அவர்களுக்கு வலி தெரிவதில்லை.
இந்நோய் குறித்த விளக்கம்:
உதாரணத்திற்கு, ஒரு குழந்தை கணக்கில் மிகவும் சுமாராக படிக்ககூடியன். ஆனால் அவனுடைய கணக்கு ஆசிரியரும், பெற்றோர்களும் அவனிடம் கணக்குப்பாடம் பயில்வது தொடர்பாக மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட கணித தேர்வு நாள் வருகிறது. அதற்கு முந்தய நாள் முதல் அவன் மிகவும் பயத்துடன் காணப்படுகிறான். அவனால் பெற்றோரிடம் சொல்லவும் பயம், பரிட்சை எழுதவும் பயம். இந்த இருமுனை சிக்கலில் தவித்துக்கொண்டிருந்த அவனுக்கு திடீரென்று தேர்வு ரத்தானதாக செய்தி வருகிறது. அவன் உள்ளம் எவ்வளவு மகிழ்ச்சி அடையும். இது தற்காலிக மகிழ்ச்சி தான் என்றாலும் அதை அவன் மனம் விரும்பும். ஆனால் இது ஒவ்வொரு முறையும் சாத்தியமில்லை. மாற்றாக, குறிப்பிட்ட அந்த தேர்வு நாளன்று அவனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால் தேர்வு எழுத செல்லாமல் மருத்துவமனை செல்ல நேரிடுகிறது. ஆனால் அப்பாவும், ஆசிரியரும் அவனைத் திட்டவில்லை. மாறாக அவனை அக்கறையோடு கவனித்துகொள்கிறார்கள். திட்டும் இல்லை தேர்வும் இல்லை. இது இன்னும் மிகிழ்ச்சியான விசயம் தானே. இப்போது இதே தந்திரத்தை அவனுக்குத் தெரியாமல் அவனுடைய ஆழ்மனது ஒவ்வொருமுறையும் இது போன்ற சிக்கலான, பயம் தரக்கூடிய, அவமானப்படக்கூடிய விசயங்களிலிருந்து தப்பிக்கவக்க செய்யுமானால் அதுவே மனப்பிறழ்வுகுறைபாடு ஆகும். இது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பொருந்தும். ஆனால் சிறியவர்கள் மற்றும் பெண்களையே இக்குறைபாடு அதிகம் ஆட்கொள்ளும். சுருக்கமாக சொன்னால் குடும்பத்திலும், சமூகத்திலும் அதிக நெருக்கடியையும் அழுத்ததையும் எதிர்கொள்பவர்களுக்கு இந்நோய்க்குறைபாடு அதிகம் ஏற்படுகிறது.
இதன் அறிகுறிகள்:
- சில நிமிடங்கள் முதல் சில மணிநேரம் வரை சுய நினைவின்றி பேசுதல், ஆடுதல், சத்தம் போடுதல், எங்காவது செல்லுதல், சாமி ஆடுதல், பேய் ஆடுதல், வேற்று மொழியில் பேசுதல்.
- அடிக்கடி திடீர் மயக்கம், அதிக தலைவலி, தொடர் வலிப்புநிலை ( உண்மையான் வலிப்புநோய் ஓரிரு நிமிடங்கள் மட்டுமே இருக்கும் மற்றும் நோயாளிக்கு காயம் ஏற்படலாம், ஆனால் மனப்பிறழ்வால் வரும் வலிப்பு நிலையில் இவை அரிதாகவே நடைபெறும்)
- எந்த மருத்துவ அறிகுறிகளும் இல்லாமல், வயிற்றுவலி, உடல் வலி போன்றவை.
- திடீரென உடல் மதமதத்து போகுதல், பார்வை தெரியவில்லை என்று சொல்லுதல்.
- குறிப்பட்ட சில வாழ்க்கை சம்பவங்கள் மறந்து போகுதல். தன்னிலை மறந்து வேறு இடத்துக்கு செல்லுதல்.
- தனக்குள் வேறு ஒருவர் இருப்பது போலவோ அல்லது தானே வேறு ஒருவர் போலவோ நடந்துகொள்ளுதல்.
முக்கிய காரணிகள்:
- ஆழ்மன நம்பிக்கைகள் அல்லது பயங்கள்.
- தீராத வாழ்க்கைப்பிரச்சினைகள்
- அதீத பயம் மற்றும் குழப்பநிலை.
- திடீர் அதிர்ச்சிகரமான சம்பவங்கள்
- மரபணு மற்றும் கலாச்சார தொடர்புகள்
சிகிச்சை முறைகள்:
மனப்பிறழ்வு குறைபாடு ஆழ்மன பாதிப்பின் வெளிப்பாடாகும். நோயாளியின் ஆழ்மனதினை பாதித்த விசயங்களை உளவியல் ரீதியாக ஆராய்ந்தறிந்து முதலில் அதை சரி செய்ய வேண்டும்.
அதேவேளையில் நோயாளியின் பயம் மற்றும் அது தொடர்பான உடலியல் மற்றும் நரம்பியல் ரீதியிலான அறிகுறிகளை மனநல மருத்துவ உதவியோடு சரி செய்ய வேண்டும்.
மெல்லிய மின் அதிர்வு சிகிச்சை மனப்பிற்ழ்வினால் ஏற்படும் நரம்பியல் பிரச்சினைகளுக்கு சிறந்த பலனளிக்கும்.
குடும்பம் மற்றும் நோயாளியோடு நெருங்கிய தொடர்புடையவர்களுக்கு (பெற்றோர், உறவினர், சில நேரங்களில் குழந்தைகளாயிருப்பின் அவர்களின் ஆசிரியர்கள்) தகுந்த உளவியல் கலந்தாலோசனை வழங்க வேண்டும்.
தொடர் மருத்துவ கண்கானிப்பில் இருப்பதும் அவசியம்.