உடலிலோ அல்லது உள்ளத்திலோ ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக சிலரினால் சில விடயங்களை புரியமுடியாமல் போய்விடும். அவ்வாறானவர்கள் மாற்றுத்திறனாளிகள் என்ற வரையறைக்குள் வந்துவிடுகின்;றனர். மரபனுவினால் பிறப்பில் ஏற்படும் மாற்றங்கள், தாயின் கருவில் இருக்கும் போது அல்லது பிறந்தவுடனே ஏற்படும் நோய்கள் மூலம் ஏற்படும் மாற்றங்கள், விபத்தினால், தெரியாத காரணங்களினால், என உடலில் அல்லது உள்ளத்தில் ஏற்படுகின்ற மாற்றங்களினால் பலர் நிரந்தர வலுவிழந்தவர்களாக மாறுகின்றனர்.
உடல் ஊனம், புலன் குறைபாடு, பார்வைக் குறைபாடு, கேள்விக் குறைபாடு, நுகர்ச்சி மற்றும் சுவைசார் புலன் குறைபாடு, மனவளர்ச்சிக் குறைபாடு, உளப் பிறழ்ச்சி என்பவற்றுக்கு உள்ளாகுவோர் இந்த மாற்றுத்திறனாளி நபர்கள் என்ற வகைக்குள்ளாகின்றனர். இவர்கள் விஷேட தேவையுடையவர்களாகவும் கணிக்கப்படுகின்றனர்.
இத்தகைய விஷேட தேவையுடையவர்களிடத்தில் மாற்று திறன்கள், ஆற்றல்கள், ஆளுமைகள் மறைந்து காணப்படுகின்றன. இவ்வாறு காணப்படுகின்ற ஆற்றல்கள், திறன்கள் அடையாளாம் காணப்பட்டு அவை வலுப்படுத்தப்படுகின்றபோது, இத்தகைய மாற்றுத்திறனாளிகள்; சாதனையாளர்களாகவும், வெற்றியாளர்களாகவும், ஆளுமையுள்ளவர்களாவும் சமூக நீரோட்டத்தில் இணைந்து கொள்வார்கள்.
உலகளாவிய ரீதியில் மாற்றுத் திறனாளிகள் பலர் பல சாதானைகளைப் புரிந்துள்ளனர். புரிந்துகொண்டும் இருக்கின்றனர். அவர்கள் ஆற்றல்களின் அடையாளங்களாக மிளிர்கின்றனர். இத்தகையவர்கள்; புரிந்த சாதணைகளை இன்றும் உலகம் பாராட்டிக் கொண்டிருக்கிறது. பௌதீகவியலின் தந்தை என வர்ணிக்கப்படுகின்ற அல்பேட்; ஐன்ஸ்டின், அலக்சாண்டர் கிரஹம்பல் போன்றோர் கற்றல் குறைபாடுகளினால் பாதிக்கப்பட்டிருந்தனர். இருப்பினும், அவர்கள் புரிந்த சாதாணைகளை இன்றும் உலகம் போற்றிக்கொண்டிருக்கிறது. அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
சமகலத்தில் வாழும், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நிக் வுஜிசிக் இரு கால்கள் மற்றும் கைகள் ஊனமுற்ற நிலையிலும், உலகின் பிரபல ஊக்குவிப்புப் பேச்சாளராக தனது ஆளுமையின் அடையாளத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அமெரிக்காவைச் சேர்ந்த ஜெசிக்கா கொக்ஸ் இரு கைகள் இல்லாமல் முதன்முதலாக விமானியானவர். இவ்வாறான இவர்கள் இயலாமையை இயலுமாக்கி சாதனைபடைத்த ஆற்றல் உள்ளவர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை அவர்கள் வாழும் சமூகம் வலுவூட்டாமல் இருந்திருந்தால் இவர்கள் உலகளவில் பேசப்பட்டிருக்க மாட்டார்கள்.
இலங்கையிலும் பல மாற்றுத்திறனளரிகள் பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர்களாக இருக்கின்றனர். பல துறைகளில் பாராட்டத்தக்க பணிகளைப் புரிந்து வருகின்றனர்;. இலங்கைக்கு முதன்முதல் பரா ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் பெற்றுக்கொடுத்தவரும் ஒரு மாற்றுத்திறனாளி நபர்தான். பிரதிப் சஞ்சய எனும் இராணுவ வீரர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டதன் விளைவாக அவரது ஒரு கை பக்கவதத்தால் செயலிழந்தது. இருந்தும் மன உறுதியுடன் பயிற்சி பெற்று 2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற பரா ஒலிம்பிக் போட்டில் இலங்கை சார்பாக பங்குபற்றி பதக்கத்தைப் பெற்றார்.
கடந்த 2016ல் இந்தோனேசியாவில் நடைபெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சர்வதேச போட்டியில் இலங்கை சார்பில் கலந்து கொண்ட நான்கு மாணவர்களில் ஒரு மாணவர் தங்கம் பதக்கம் பெற்று சாதணை படைத்து இலங்கைக்குப் பெறுமை தேடித்தந்துள்ளார். அதேபோல் கடந் வருடமும் வியட்னாமி;ல் நடைபெற்ற போட்டியொன்றில் இலங்கை மாணவர் தங்கப் பதக்கம் பெற்றார்.
இவ்வாறு இயற்கை மற்றும் செயற்கையாக ஏற்படுகின்ற உடல், உள மாற்றங்களினால் மாற்றுத்திறனாளிநபர்களாகச் சமூகத்தின் மத்தியில் வாழ்கின்றவர்களின் ஆற்றல்கள் வலுப்படுத்தப்பட்டதனால்; அவர்கள் சாதனைபடைத்திருக்கிறார்கள். அவர்களின் ஆளுமைகள் அடையாளம் காணப்பட்டதன் விளைவாக அவர்கள் வெற்றியாளர்களாக ஆகியிருக்கிறார்கள்.
மாறாக, சமூகத்தின் மத்தியில் வாழும் மாற்றுத்திறனாளிகள் சமூகத்தினாலும,; சூழலினாலும் புறக்கணிக்கப்படுகின்றபோது, அவர்களின் உரிமைகள் மதிக்கப்படாதபோது, அவர்கள் மீது மனிதாபிமானம் காட்டப்படாது அவர்ளை சமூக நீரோட்டத்தில் இணைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படாது விடப்படுகின்றபோது, இத்தகைய மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்குள் உறைந்து கிடக்கும் ஆளுமைகளை வெளிப்படுத்த முடியாது, அடைவுகளை அடைந்து கொள்ளாது ஒதுங்கி ஓராமாகி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவார்கள்.
அவ்வாறு அவர்கள் ஒதுக்கப்படுவதை அல்லது அவர்களாக ஒதுங்கிக் கொள்வதைத் தடுக்க வேண்டுமாயின் அவர்களுக்கான கல்வி உரிமை வழங்கப்பட வேண்டும். முறையான கல்வி வழங்கப்படுவதன் ஊடாக அவர்களும் சமூகத்தின் மத்தியில் இயலாமையிலும் இயலுமையுள்ள பிரஜைகளாக மாறுவார்கள்;.
சமகால உலகும் மாற்றுத்திறனாளின் உரிமைகளும்
உலகளாவிய ரீதியில் ஒரு பில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் தொகையினர் மாற்றுத்திறனாளிநபர்களாக உள்ளனர். உலகளவிலுள்ள சிறுபான்மையினரர்களில் மாற்றுத்திறனாளி நபர்கள் அதிகமானவர்கள். உலக சனத்தொகையில் இவர்கள் 15 வீதத்தை நிரப்பியுள்ளனர். அதிகளவிலானோர் அபிவிருத்தியடைந்த நாடுகளிலேயே வாழ்கின்றனர். உலகின் சனத்தொகை எண்ணிக்கையில் ஐந்தில் ஒருவர் மாற்றுத்திறனாளி நபர்களாகும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தகவல் ஒன்று சுட்டிக்காட்டுகிறது.
2001ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையின் சனத்தொகை விகிதத்தில் 6.1 வீதமும், 2013ல் 10 வீதமுமாகக் காணப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் வீதமானது 2041ஆம் ஆண்டில் 24.8 வீதமாக அதிகரிக்குமென சுகாதார அமைச்சின் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு மாற்றுத்தினாளிகளின் அதிகரிப்புக்கான காரணங்களாக முதியோர் சனத்தொகை அதிகரிப்பு, அதிகரித்த வீதி விபத்துக்கள் மற்றும் தொற்றா நோய்களின் அதிகரிப்பு என்பன காணப்படுமென சுட்டிக்காட்டப்படுகின்;றன.
மாற்றுத்தினாளிகள் சமூகத்தின் மத்தியிலிருந்து ஓராமாக்கப்படாது அவர்கள் மனிதாபிமானத்துடன் அணுகப்படுவதும், அவர்களின் உரிமைகள் மதிப்படுவதும், பாதுகாக்கப்படுவதும் அவசியம். யுத்தத்தினாலும், இன்னும் பல அசாதாரண நிகழ்வுகளாலும், இயற்கையாகவும் வலுவிழந்தவர்களாக மாறி அல்லது ஆக்கப்பட்டு நம்மத்தியில் வாழும் மாற்றுத்திறனாளிகளை சமூக நீரோட்டத்தில் இணைத்து அவர்களையும் நம்மில் ஒருவராக நோக்குவதும் அவர்களிடையே காணப்படும் ஆற்றல்களை, திறன்களை அடையாளம் கண்டு வலுவூட்டுவதும,; அவர்களை வலுப்படுத்த வேண்டியதும் சமூக உறுப்பினர்கள் என்ற ரீதியில் ஒவ்வொருவரினதும் கடப்பாடாhகவுள்ளன.
இவர்கள் தமது தனிப்படட வாழ்விலும் சமூக, பொருளாதார, கல்வி, அரசியல் என பல்வேறு துறைகளிலும் பல இடர்பாடுகளை எதிர்நோக்குகின்றனர். இவ்வாறு இடர்பாடுகளை எதிர்நோக்குகின்ற இவர்கள் மீது மனிதாபிமானம் காட்டப்படுவது அவசியமாகும். அவர்களின் உரிமைகள் மதிக்கப்படுவதும் பாதுகாக்கப்படுவதும் முக்கியமாகும்.
2007 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றுத்திறனாளி நபர்களின் உரிமைக்கான ஒப்பந்தமானது இந்நபர்களின் உரிமைகளைப் பாதுகாக்குமாறு வலியுறுத்துகிறது. அதில், மாற்றுத்திறனாளி நபர்களின் உரிமைகள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
‘நாம் அனைவரும், உலக அமைதி, சுதந்திரம் மற்றும் நியாயம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சமத்துவமான மனித குடும்பத்தின் உறுப்பினர்கள் என்றும், நாம் அனைவரும் சமம் மற்றும் நம் அனைவருக்கும் மனித உரிமைகள் உண்டு என்றும் மாற்றுத்திறனாளி நபர்கள் அனைவரும் அனைத்து மனித உரிமைகளையும், அடிப்படை சுதந்திரத்தையும் அனுபவிக்க வேண்டும என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களுக்கு எதிராக எந்த பாரபட்சமும் இருக்கக் கூடாது என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சுற்றுப்புறச் சூழல் மற்றும் மக்களுடைய எண்ணங்களும்தான் மாற்றுத்திறனாளிகளின் இயலாமையை ஊக்கப்படுத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மாற்றுத்திறனாளி நபர்களின் முன்னேற்றத்திற்காக உலக அளவில் உள்ள பொதுவான விதிகள் மற்றும் செயற்பாடுகளால் அவற்றை அடைவதற்கு உருவாக்கப்படும் சட்டங்கள், விதிகள், திட்டங்கள், முடிவுகள் மற்றும் செயல்கள் ஆகியவற்றை நாம் கருத்திற்கொள்வது மிகவும் அவசியமாகும். ஒவ்வொரு அரசாங்கமும், சர்வதேச நிறுவனங்களும் வறுமை ஒழிப்பு, தொழில் வாய்ப்பு போன்ற தேசிய வளர்ச்சிக்கான திட்டங்களை மேற்கொள்ளும்போது மாற்றுத்திறனாளி நபர்களின் நிலைமையையும் சம அளவில் கருத்திற்கொள்ள வேண்டும்
அத்தோடு, வாழ்க்கையில் பல சூழ்நிலைகளிலும் உள்ள விடயங்களை நாம் புரிந்து கொண்டு செயற்படுவது மாற்றுத்திறனாளி நபர்களின் வாழ்க்கை மேம்பட உதவியாக இருக்கும். அபிவிருத்தியடைந்த, அபிவிருத்தியடையாத நாடுகளில் வாழும் மாற்றுத்திறனாளி நபர்கள் சமமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அனைத்துச் செயற்பாடுகளிலும் சம அளவில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும் என ஐக்கிய நாடுகளின் மாற்றுத்திறனாளி நபர்களுக்கான ஒப்பந்தத்தின் சுருக்கத்தில் கூறப்பட்டுள்ளன.
இந்நபர்களின் அடிப்படை உரிமைகளில் கல்வி உரிமையும் ஒன்றாகும். ஐக்கிய நாடுகள் சபையின் கல்விக்கான அமைப்பான யுனஸ்கோ அமைப்பின் தகவல்களின் பிரகாரம் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் 90 வீதமான சிறுவர்கள் கல்வி வாய்ப்பை இழந்தவர்களாக உள்ளதாக குறிப்பிடப்படுள்ளது.
இருப்பினும், இலங்கையைப் பொறுத்தவரை, மாற்றுத்திறனாளி சிறுவர்கள் உட்பட பாடசாலை செல்லாத மாணவர்களை பாடசாலைகளில் இணைக்கும் நடவடிக்கைகள் திட்டமிட்ட அடிப்படையில்; முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையை சுட்டிக்காட்டுவது அவசியமாகும்
மாற்றுத்திறனாளி நபர்களான விஷேட தேவையுடைய மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கான நடவடிக்கை தொடர்பில் கடந்த பல வருடங்களாக மத்திய கல்வி அமைச்சினாலும். மத்திய கல்வி அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமைய மாகாணக் கல்வி அமைச்சுக்களினாலும், கல்வித்திணைக்களங்களினாலும்; அக்கறை செலுத்தப்பட்டு வருவது முக்கிய அம்சமாகும். அந்தவகையில், இத்தகையவர்களுக்கான விஷேட கல்வி வழங்குவதிலும் அக்கல்வியை மேம்படுத்துவதிலும் அதிக அக்கறை செலுத்தப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்ட வேண்டும்.
விஷேட கல்வியும் பாடசாலைகளும்
விஷேட தேவையுடையவர்களிடத்தில் புதைந்து கிடக்கும் திறன்கள், ஆற்றல்களை வளர்த்துக்கொள்வதற்கு உதவும் கல்வி முறையையே விஷேட கல்வியாகும். இவ்விஷேட கல்வித் திட்டத்தினூடாக இத்தகைய பிள்ளைகளுக்கு கல்வி வாய்;ப்பை வழங்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு அப்பிள்ளைகளின் பெற்றோர்களுக்கும் சமூக அங்கத்தவர்களுமுள்ளதாகும.
சாதாரண வகுப்பறைகளில் கல்வி கற்கும் மாணவர்களுடன் தமது கற்றல் செயற்பாடுகளை தொடர முடியாதவர்கள் அல்லது தொடர்வதில் சிரமங்களை எதிர்நோக்குகின்றவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் உடல், உளக் குறைபாடுகள் அல்லது இயலாமைக்கு ஏற்ப விஷேடமான வகுப்பறைகள் உருவாக்கப்பட்டு அவற்றினூடாக கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விஷேட தேவையுடைய மாற்றுத்திறனாளிகளின் கல்வி விருத்தியில் உலகம் அதிக அக்கறை செலுத்தி வருவதைக் சமகாலத்தில் காண முடிகிறது. வலுவிழந்த அல்லது விஷேட தேவையுடையோரான மாற்றுத் திறனாளிகளின் நலன்கள் தொடர்பில் மக்களின் கவனத்தைச் செலுத்தவும், அவர்கள் குறித்த மனிதாபிமானத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவும், அவர்களையும் சாதாரணவர்களில் ஒருவராக நோக்கவும், அவர்களுக்கான உதவிகளையும், உரிய சந்தர்ப்பங்களையும் வழங்கவும் அவர்களுடைய உரிமைகளைப் பேணவும், பாதுகாப்பதையும் அவர்களை வலுவூட்டுவதையும் நோக்காகக் கொண்டு சர்வதேச மாற்றுத்திறனாளி நபர்களுக்கான தினம் ஒவ்வொரு வருடமும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
1992ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 3ஆம் திகதி சர்வதேச மாற்றுத்திறனாளி நபர்களுக்கான இத்தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
விஷேட தேவையுடையவர்களுக்கான விஷேட கல்வியினை வழங்குவதற்கு விஷேட பயிற்சி பெற்ற ஆசியர்கள் வருடந்தொரும் பயிற்சி அளிக்கப்பட்டு குறித்த பாடசாலைகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர். இவ்வாறு நியமிக்கப்படுகின்றவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு பயிற்சி வழங்கப்படுகின்றன.
கல்வி அமைச்சின் 2014ஆம் ஆண்டுக்கான புள்ளி விபரங்களின் பிரகாரம். சகல மாகாணங்களும் அடங்களாக 26 விஷேட தேவையுடையோருக்கான பாடசாலைகள் உள்ளன, அத்தோடு, தேசிய பாடசாலைகளில் 104 விஷேட தேவையுடைய மாணவர்களுக்கான பிரிவுகளும் மாகாணப் பாடசாலைகளில் 600 பிரிவுகளுமாக 704 விஷேட கல்விப் பிரிவுகள் உள்ளன. தேசிய பாடசாலைகளில் உள்ள பிரிவுகளில் 1,220 விஷேட தேவையுடைய மாணவர்களும், மாகாணப் பாடசாலைகளில் உள்ள பிரிவுகளில் 6,223 விஷேட தேவையுடைய மாணவர்களுமாக 7,443 மாணவர்கள் கல்வி கற்பதோடு, உதவி பெறும் விஷேட தேவையுடைய பாடசாலைகளில் 2,613 மாணவர்களும் கல்வி கற்கின்றனர்.
இதுதவிர, கல்வி அமைச்சினால் பதிவு செய்யப்படாத பல பாடசாலைகள் ஒரு சில அமைப்புக்களினால் உருவாக்கப்பட்டு விஷேட தேவையுடைய மாணவர்களுக்கான கல்வி வாய்ப்பை வழங்கி வருகின்றன. இவ்வாறான நிலையில், இம்மாணவர்களைக் காட்டி உழைக்கும் சில கூட்டங்களும் உருவாகியிருப்பது கவலையளிக்கும் விடயமாகும்.
விஷேட தேவையுடைய மாணவர்களி;ன் கல்வி வாய்ப்பு உட்பட பல நலன்களைப் பேணுவதற்காக பல நிலையங்கள் சமூக அமைப்புக்களினால் உருவாக்கப்பட்டு, அவ்வமைப்புக்கள் சர்வதேச தொண்டு நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் நிலையும் காணப்படுவதாக அறிய முடிகிறது.
இது தவிர, இப்பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சினால் வழங்கப்படுகின்ற உபகரணங்கள் உட்பட பல வளங்களை இப்பாடசாலைகளை நடாத்துகின்ற ஒரு சில அமைப்புக்கள் தங்களது சொந்தப் பாவனைக்கு உட்படுத்துவதாகவும் அறிய முடிகிறது. இவ்வாறு செயற்படுவதானது இத்தகைய மாணவர்களி;ன கல்வி வாழ்க்கைக்குத் துரோகம் செய்வதாகவும், அவர்களின் இயலாமையை தங்களது பொருளாதார விருத்திக்கும், அன்றாட தேவைகளுக்கும் பயன்படுத்துவதாகவும் அமையும்.
மனித அடடடைகளாகச் செயற்பட்டு இத்தகைய மாணவர்களின் இயலாமையில் வயிறு வளர்க்கும் மாபியாக்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியமாகும். இவ்விடயத்தில் பெற்றோர்களும,; சமூக ஆர்வலர்களும் குறித்த அதிகாரிகளும் கவனம் செலுத்துவது இம்மாணவர்கள் விடயத்தில் ஆரோக்கியமாக அமையும்.
அத்தோடு, மாற்றுத் திறனாளிகளுக்கான பாடசாலை அல்லது நிலையங்களின் உண்மைத்தன்மையயை அறிந்துகொள்வது பிள்ளைகளின் பெற்றோர்கள், பாதுகாவலர்கள் மற்றும் சமூக தொண்டர்களின் கடப்பாடாகும். இத்தகைய சில மாபியாக்களினால் விஷேட தேவையுடைய பிள்ளைகளின் மீது காற்றுகின்ற மனிதாபிமானது செல்வக் குவிப்பாக மாற்றப்படுகிறது என்பதே நிதர்சனமாகும்.
சகல மனிதர்களிடமும் குறிப்பாக துயரில் தவிப்போரிடம் அன்பும் பரிவும் காட்டப்படுவதையே மனிதாபிமானம் என்கின்றோம். இந்த மனிதாபிமானம் மாற்றுத்திறனாளி நபர்களிடமும் காட்டப்படவேண்டும். ஒவ்வொரு சமூகத்திலுமுள்ள மாற்றுத்திறனாளிகளின் எதிர்கால வாழ்வில் அக்கறைகொள்வதும், அவர்களிடையேன காணப்படும் ஆளுமைகளை விருத்தி செய்வதற்கான வழிகளை ஏற்படுத்தி, அவர்களும் சமூகத்தின் மத்தியில் இன்னலற்றவர்களாக வாழ்வுப் பயணத்தைத் தொடர்வதற்கு ஒவ்வொரு சமூகமும் அக்கறை கொள்ள வேண்டும்.
மாறாக அவர்களுக்காக வழங்கப்படும் வளங்கள் மற்றும் நலன்களைச் சுரண்டி தத்தமது வாழ்வை வளப்படுத்திக் கொள்வது சட்டத்திற்கு முன் குற்றமென்பதோடு இக்குற்றத்திற்கான கூலியையும் படைத்த இறைவனிடமிருந்து கிடைக்கப்பெறச் செய்யும் என்பதும் நிச்சமானதாகும்.
ஏனெனில், ‘நிச்சமாக யார் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குகிறர்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான். இன்னும் அவர்கள் (மறுமையில்) கொழுந்து விட்டெறியும் (நரக நெருப்பிலேயே புகுவார்கள் (அல்குர்ஆன் 4:10)
மேலும் ‘எந்த நபிக்கும் மோசடி செய்வது கூடாது. எவரேனும் மோசம் செய்வாராயின், அவர் மோசம் செய்ததை இறுதி நாளில் கொண்டு வருவார். அவ்வேளையில் ஒவ்வொரு ஆத்மாவுக்கும், அது சம்பாதித்த(தற்குரிய)பலனைக(க் குறைவின்றிக்) கொடுக்கப்படும். இன்னும் அவர்கள் எவ்வகைளிலும் அநியாயம் செய்யப்பட மாட்டர்கள்’ (அல்குர்ஆன் 3:161) எனச் சுட்டிக்காட்டும் அல்குர்ஆன் நிச்சயமாக அல்லாஹ் மோசம் செய்பவர்களை நேசிப்பதில்லை எனவும் சுட்டிக்காட்டுகிறது. ஆல்லாஹவைப் பயந்து மாற்றுத்திறனாளிகளுக்குரிய வளங்களையும் நலன்களையும் பாதுகாத்து அவர்களை சமூகத்தின் சாதனைமிக்க பிரஜைகளா மாற்றுவதற்கான மனப்பாங்கை உருவாக்குவமாக!