உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பாலினம் இருக்கிறது. தனிமனிதனுக்கு தன்னுடைய பாலினத்தை தேர்வு செய்ய உரிமை உள்ளது, தனி நபரின் அந்தரங்க வாழ்கையில் தலையிட எந்த நபருக்கும் , அரசுக்கும் உரிமையில்லை. மனித இனம் என்பதற்கு அப்பால் பால் நிலை பாகுபாடு இனம் தோன்றிய காலத்திலிருந்தே தோற்றம் பெற்றிருக்கிறது .
உலகளவில் பரவலாக பேசப்படும் ஆண், பெண் சமவுரிமை என்ற பாகுபாடு இனம் தோன்றிய காலத்திலிருந்தே பார்க்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கென்ற பண்புகள், குணாதிசயங்கள் இருபாலாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவையாகவே நடைமுறைச் சமூகங்களில் காண முடிகிறது. சமத்துவம் என்பது கேள்விக்குரியதாகவே உள்ளமை கசப்பான உண்மையாகும். மனித இனத்தில் உடல் ரீதியான வேறு பாட்டை குறித்துக் காட்டுவதும் உயிரியல் விஞ்ஞானத்தின் அடிப்படையில் பார்த்தால் ஹோர்மோன்கள் தான் எமக்கான குணாம்சங்களைத் தீர்மானிப்பவையாக நிரூபிக்கப்பட்டுள்ளன. ஆணுக்கும் பெண்ணுக்கும் உயிரியல் ரீதியாக கொடுக்கப்படும் அந்தஸ்த்து பால் எனப்படும். காலத்திற்குக் காலம் நோக்குகைகள் வித்தியாசப்பட்டாலும் இலிங்க வேறுபாடு, தொழிற்பாடுகள், ஓமோன் சுரப்புகள் ஆணுக்கும் பெண்ணுக்குமான வேறுபாடு பேணப்பட்டு வருகின்றது.
சமூக உயிரியல் ஆய்வு முடிவுகள் இதற்கு எதிர்மாறானவை. நடத்தை வழி தான் ஹோர்மோன் சுரப்புக்களேயன்றி ஹோர்மோன் வழி நடத்தைக் கோலங்கள் உருவாக மாட்டா என கட்டியம் கூறுகின்றன. எனவே இதிலிருந்து நிச்சயம் சமூகமயமாக்கல் செயற்பாடு தான் பால்நிலைப் பாகுபாடுகளை சமூகத்தில் உருவாக்குகின்றன என்ற முடிவுக்கு எம்மால் வர முடியும். இதில் இனம் , மதம் , சாதி வேறுபாடு தெரிவதில்லை.
ஆணுக்கும் பெண்ணுக்கும் சமூக ரீதியாக கொடுக்கப்படும் அந்தஸ்த்து பால்நிலை எனப்படும். (சமத்துவம், இடத்திற்கு இடம் மாறுபடுவது) சமூகம்,குடும்பம், கலாசாரம்,விழுமியம்,மூடநம்பிக்கைகள்,நடத்தைகள், மனப்பாங்குகள்,பாரம்பரியம், புத்தகம், நாவல்கள், அரசியல் தொழில், ஊடகம்,சட்டம்,சமயம்,இலக்கியம், கல்வி அமைப்பு அபிவிருத்தி ஒழுங்கமைப்புகள். இவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பண்புகள், குணாதிசயங்கள் இருபாலாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவையாகவே நடைமுறைச் சமூகங்களில் காண முடிகிறது.
ஒரு குழந்தை பிறக்கும் போது, அதன் பிறப்புறுப்பை வைத்து அது ஆணா பெண்ணா என தீர்மானிக்கிறோம். ஒருவர் தன்னுணர்வுடனும் ஆணாக அல்லது பெண்ணாக இருக்கும் உணர்வுடனும் தொடர்புடைய பாலின அடையாளம், பாலியல் போக்கிலிருந்து வேறுபட்டது. சமூகம் உருவாக்குகின்ற பாலினம் குறித்த பல மெய்யியல் மற்றும் சமூகவியல் கோட்பாடுகளில் இடம் பெறுகின்றது. இக்கருத்தியலின்படி சமூகமும் பண்பாடும் பாலினச் செய்கைகளை உருவாக்குகின்றன,அதுவும் சட்டக்கோவையின் கீழ் பாதுகாக்கப்படுகிறது. ஆணும் பெண்ணும் சமநிலையிலிருக்க வேண்டும். சலுகைகள் வேண்டாம், உரிமைகளே வேண்டும். பெண்ணின் பங்கு இல்லையென்றால், குடும்பம் மட்டுமல்ல சமூக முன்னேற்றமும் தடைப்படும் என்று பெண்ணியத் திறனாய்வு கூறுகிறது.
பெண், தன் உடல் உறுப்புகளின் வலிமையையும் மேன்மையையும் முதலில் அறிந்துகொள்ள வேண்டும் என்று பெண்ணியம் சொல்லுகிறது. பாலின வேறுபாடு, உடல் மொழி ஆகியவற்றைக் கொண்டு பெண் ஒடுக்கப்படுவதையும், இதன் பின்னால் அதிகார அரசியல் செயல்படுவதையும் வெளிப் படுத்துகிறார், கேட் மில்லட் என்ற பெண்ணியத் திறனாய்வாளர். மாற்றங்கள் ஒவ்வொருவரின் மனதில் இருந்து துவங்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே போகும் பெண்ணை கவனமாக இரு, யாரிடமும் அனாவசியமாக பேசாதே, ஒழுங்காக உடையணி என்று ஆயிரம் அறிவுரைகளைக் கூறும் சமூகம், வீட்டை விட்டு வெளியே செல்லும் ஆணைப் பார்த்து, ஒழுங்காக, யோக்கியமான ஆண் மகனாக நடந்துகொள் என்று அறிவுரை சொல்லும் காலம் வந்தால்தான் இந்தப் பாலின பாகுபாட்டுக்குத் தீர்வு ஏற்படும்.
சமுதாய மாற்றங்களுக்குத் தேவையான விதைகள் ஆண்களிடமிருந்தும் பெண்களிடமிருந்தும் மட்டும் வருவது இல்லை. பாலினம் என்றதும் ஆண் – Male, பெண் – Female, என்ற இரு பிரிவு மட்டும் தான் நம் கண்களுக்கும் முன் வருகிறது. சமீபக்காலமாக திருநர்(Transgender) திருநர் என்பவர்கள் தங்களின் பாலியல் உறுப்புக்களினடிப்படையில் ஒரு பாலினத்திலிருந்து மற்றொரு பாலினத்திற்கு மாறியவர்கள். ஆணாக பிறந்து பெண்ணாக மாறியவர்களை திருநங்கைகள்( Transwoman) என்றும் பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர்களைத் திருநம்பிகள் (Transman) என்றும் அழைக்கப்படுகின்றனர். பற்றிய கருத்துக்கள் மக்களிடம் பரவத் தொடங்கியுள்ளது.
உண்மையில் இவர்களைத் தவிர பால் புதுமையினர் (Gender Queer) பொது பாலினம் மற்றும் திருநர்களை தவிர்த்து மற்ற அனைத்துப் பாலினத்தவர்களும் பால் புதுமையினராக கருதப்படுகின்றனர் பாலிலி (Agender) எந்தப் பாலினத்தையும் ஏற்றுக்கொள்ளாதவர்கள் (பாலினமற்றவர்கள்) பாலிலி என அழைக்கப்படுகின்றனர். பால் நடுநர் (Androgyny) ஆணாகவோ, பெண்ணாகவோ அல்லது எந்தப் பாலினமாகவும் தம்மைக் கருதி கொள்ளாதவர்கள். ஆனால், இவர்களுக்கு பொதுவாகவே ஆண் பெண் என்ற இரு பாலினத்தவர்களின் தன்மைகளும் குணங்களும் இருக்கும்.
முழுனர் (Pan gender) அனைத்துப் பாலினம் அல்லது ஓரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாலினத்தை ஏற்றுக்கொள்ளுபவர்கள் இருனர் (Bi-gender) ஆண் பெண் என்ற இரு பாலினத்தவராகவும் தம்மை நினைத்துக் கொள்பவர்கள். திரினர் (Tri-gender) தம்மை மூன்று வித்தியாசமான பாலினங்களாகக் கருதி கொள்பவர்கள். திருனடுனர் (Neutrois) பாலினமற்றவர்கள். பாலிலி, இருமையின்மை பாலினம் மற்றும் பால் நகர்வோர் ஆகியோரைக் குறிப்பதாகும். தோற்றப் பாலினத்தவர் (Appearance gendered) உடல் மொழி மற்றும் வெளித்தோற்றம் (உடை, அணிகலன்கள்) அடிப்படையில் மட்டும் தம்மை மற்றொரு பாலினத்தவராக மாற்றிக் கொள்பவர்கள்
இருமை நகர்வு (Binary butch) உடல் ரீதியாகவோ, மனோ ரீதியாகவோ மற்றும் உணர்ச்சி ரீதியாகவோ ஆண்களைப் போல் இருக்கும் பெண் அல்லது அகனளை (Lesbian) குறிப்பது. இடைபாலினம் (Intergender) ஆண் மற்றும் பெண் பாலினத்திற்கு இடையே இருப்பவர்கள். முழுமையான ஆணுமில்லை. முழுமையான பெண்ணுமில்லை. அரை பெண்டிர் (Demi girl) தம்மை 50 சதவீதம் பெண்ணாகவும் 50 சதவீதம் மற்றொரு பாலினமாகவும் அடையாளப்படுத்திக் கொள்பவர்கள். இவர்கள் பிறப்பால் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்கலாம். நம்பி ஈர்ப்பனள் ( Girl fags) திருநம்பிகள் மீது பாலின ஈர்ப்புடைய பெண்கள்.
நங்கை ஈர்ப்பனன் (Guy dykes) திருநங்கைகள் மீது பாலின ஈர்ப்புடைய ஆண்கள். பால் நகர்வோர் (Gender fluid) ஒரு நாள் ஆணாகவும் மற்றொரு நாள் பெண்ணாகவும் தம்மை நினைத்து கொள்பவர்கள். ஆணியல் பெண் (Tomboy) ஆண்களைப் போல் தோற்றம் மற்றும் உடல் செய்கைகளுடைய பெண்கள். இவர்கள் அகனள் (Lesbian) அல்லது ஆண் மீது பாலின ஈர்ப்புடைய பெண்ணாகவும் இருக்கலாம். பெண்ணன் (Sissy) பெண்களை போல் தோற்றம் மற்றும் உடல் செய்கைகளுடைய ஆண்கள். இவர்கள் அகனன் (Gay) அல்லது பெண் மீது பாலின ஈர்ப்புடைய ஆணாகவும் இருக்கலாம். இருமையின்மை ஆணியல்/ இருமையின்மை பெண்ணியல் (Non-binary butch/femme) ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ தம்மை அடையாளப்படுத்தி கொள்ள மாட்டார்கள். ஆனால், எதிர்பாலின வெளிப்பாட்டை அதிகமாக காட்டுபவர்கள். பெண் ஆண்மையாகவும்/ ஆண் பெண் குணாதிசயங்களுடன் இருப்பது.பிற்பால் உடை அணிபவர் (Cross dresser) இவர்கள் உடையணிவது மட்டுமே எதிர்பாலினத்தவர்களை போல் இருக்கும். இவர்களின் பாலின ஈர்ப்பிற்கும் உடையணிவதற்கும் எந்தத் தொடர்புமில்லை.
மேற்கூறிய மக்களாலும் மக்களின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்ற முடியும். இதற்கு பல எடுத்துக்காட்டுகளை வரலாறு நமக்குக் காட்டுகிறது. சமூகத்தால் வரையறுக்கப்பட்ட பாலின அடையாளத்திற்குப் பொருந்தாமல் தங்களின் உணர்ச்சிகளின் பிடியில் சிக்கிக் கொண்டு இன்றும் பல இளைஞர்கள் தத்தளிக்கின்றனர். பொதுவான பாலின கட்டமைப்பு விதிமுறைகளிலிருந்து விடுபட்டவர்களாக இருக்கும் இந்த பால் புதுமையினர் உடல்ரீதியாகவும், உணர்வுரீதியாகவும் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர் இதை நாம் சமூகவியல் , சட்டம் , மருத்துவம் , மதம் மற்றும் அறிவியல் என்று பல்வேறு தளம் சார்ந்து அணுகினால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.
மேலும் இதைப் பற்றி விரிவான ஆராய்ச்சிகள் 25வருடங்களுக்கு முன்னரே ஈவ் செட்விக் (Eve Sedwick ) என்பவரால் கோணல் கோட்பாடு (queer theory) மற்றும் LGBTQI படிப்பு (Lesbian, Gay, Bisexual, Transgender, Queer & Intersex studies) என்ற ஆராய்ச்சித் துறை 15ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பல்கலைகழகங்களில் பாடமாக துவக்கப்பட்டது.
குழந்தைகள் வளரும் போது தங்களைப் பற்றியும் சமூகத்தைப் பற்றியும் புரிந்து கொள்கிறார்கள். இட், ஆளுமை, பேராளுமை ஆகிய மூன்று நிலைகளினூடாகவும் இதனைச் செய்கின்றார்கள். ஆண்மை பெண்மை நிலைகளைப் பற்றி மேலும் புரிந்து கொள்ள அடித்தளமாக தனிமனித உணர்வு நிலை பற்றிய புரொய்டின் கருத்தாக்கம் உள்ளது. பால்நிலையில் பாகுபாடு காட்டப்படுகின்ற தன்மையானது உலகினில் பரவலாகவே காணப்படுகிறது. தனியனின் ஆளுமை உருவாக்கத்தில் சமூகப் புலத்தின் இன்றிமையாமையும் புரொய்டின் உளப்பகுப்பாய்வுக் கொள்கையூடாகத் தெளிவுபெறும். நனவிலியை அறியும் வழிமுறையாகவும், சிகிச்சை முறையியலாகவும் அமைகின்றது, ஆளுமையின் கூறுகளையும் விருத்தியையும் விளக்கும் ஒரு கோட்பாடாகவும் விளங்குகின்றது, சமூகம் பற்றிய பிரதான நிறுவனங்களைப் பற்றியதுமான சில முக்கிய கூற்றுக்களையும் முன்வைக்கின்றது.
இலங்கை, இந்தியா பேன்ற நாடுகளில் இதை பற்றி எந்த விழிப்புணர்வும் இல்லை. மேலும் பெரும்பாலான மக்களுக்கு திருனருக்கும் (Transgender) சமபாலீர்புடையோருக்கும் (Gay , Lesbian ) உள்ள வித்தியாசம் கூட தெரிவதில்லை. இலங்கையில் இன்னும் இதை பற்றி யாரும் வெளிப்படையாக பேசத் தயாரும் இல்லாத நிலை தொடர்பதுதான் கவலை தரும் விடயம். குடும்பத்தில் ஆண், பெண் பாகுபாட்டை ஏற்படுத்துவது தாய், தந்தை, சகோதரி ,சகோதரன், உறவுகள் சந்தர்ப்பத்திற்கேற்ப இருவருமே பாகுபாட்டை காட்டுகின்றனர். குடும்பத்தில் அதிக வேலைகளைச்செய்கின்ற பெண்களே அனேகமான வீடுகளில் அதிகமான வேலைகளை பொறுப்புக்களை சுமக்கின்றனர் அல்லது செய்கின்றனர்.
சமூகத்தால் வேலைப்பாகுபாடு ஆணுக்குரிய வேலைகள் பெண்ணுக்குரிய வேலைகள் என பிரித்துக் காட்டுகிறது . ஆண் வர்க்கம், பெண் வர்க்கம் என்ற நோக்கில் ஆண்கள் செய்ய வேண்டிய கடைமைகள், பெண்கள் செய்ய வேண்டிய கடைமைகள் எனப் பிரித்துச் செயற்படுத்தப்பட்டனர். அடுப்பங்கரை பெண்களுக்கான இடம் என ஒதுக்குகின்றனர். சமையல் பெண்கள் தான் வீட்டில் செய்ய வேண்டும். என வலியுறுத்துகின்றனர். ஆனால் நட்சத்திர ஹோட்டல்களில் வேலை செய்கின்ற பிரதான சமையல்காரர்கள், சமையல் உதவியாளர்கள் அனைவருமே ஆண்களாகவே உள்ளனர்.
தொழில்நுட்ப முன்னேற்றத்தால் மனிதன் உயர்வடைந்திருக்கின்ற இன்றைய காலத்திலுமா பால் நிலையினை இறுக்கிப் பிடித்துள்ளது சமூகம். பெண்கள் வேலையில் பங்குபற்றும், அதிக வேலை, வேதனக் குறைவு, பாகுபாடு பார்த்தல், அலட்சியம் செய்தல்,சமுதாயத்தின் எதிர்பார்ப்பு, வீட்டு வேலைப்பழு, தன்னம்பிக்கையின்மை, வேலைத்தளத்திலும் வெளியிலும் தொந்தரவுகள் ஏற்படுதல், திறமைகள் புதைக்கப்படுதல், வாய்ப்புகள் வழங்காதிருத்தல், தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய தொழில்களை வழங்காதிருத்தல், இதனை மாற்றவே முடியாதா? மாற்றம் ஒன்று தான் வாழ்வில் மாறாதது.
உலக நாடுகள் எங்கும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் நடைபெற்று வந்துள்ள போதிலும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பிரகடனத்தையும், பெண்களுக்கு எதிரான சகலவிதமான பாரபட்சங்களுக்கும் எதிரான பிரகடனத்தையும் பல நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ள நிலையிலும், பெண்கள் மீதான துன்புறுத்தல்கள், துஷ்பிரயோகங்கள் எழுந்த வண்ணமே காணப்படுவதை தினமும் காணலாம்.
1949ல் ஜெனீவா பிரகடனத்தின் படி உயிர்வாழும் உரிமையும் சித்திரவதைக்குள்ளாக்கப்பட முடியாமைக்கான உரிமையும் காணப்படுவதுடன் பெண்களுக்கு எதிரான சகலவிதமான பாரபட்சங்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் அமைப்பு பெண்களின் தனித்துவமான பண்புகளைப் பேணிப் பாதுகாக்கின்றவர்கள் என்பதை சுட்டிக்காட்டி அதன் அடிப்படையில் பெண்கள் தொடர்பான உரிமைகள் பற்றிய எண்ணக்கரு தோற்றம் பெற்று 1993ம் ஆண்டில் ஐ. நா. பொதுச் சபையின் அறிவித்தலின்படி பெண்களை ஒரு தனிப்பிரிவாக ஏற்று அவர்களுக்கான உரிமைகளை மட்டுமே முற்றுமுழுதாக கையாளும் வகையில் சர்வதேச பெண்கள் சமவாயம் விளங்குகிறது.
1956ம் ஆண்டின் 47ஆம் இலக்கச் சட்டத்தின்படி பெண்கள் கைத்தொழிற்சாலைகளில் இரவு வேளைகளில் சேவையில் ஈடுபடுவது தடைசெய்யப்பட்டது. 1984ம் ஆண்டின் 32ம் இலக்க திருத்தச் சட்டத்தின் பிரகாரம் பெண்கள் இரவு வேளைகளிலும் சேவை செய்யலாம் எனச் சட்டமாக்கப்பட்டுள்ளது. அதில் சில நிபந்தனைகளை முன்னிறுத்தியே இராக்காலங்களில் வேலைகளில் ஈடுபடலாம் என்பதையும் கவனத்திற் கொள்ளப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையானது பெண்களுக்கு எதிராக ஏற்படுத்தப்படுகின்ற வன்முறைகள் இன்று பரவலாகப் பேசப்படும் ஒரு விடயமாகும். இதனை விளங்கிக் கொள்ளுமுன் வன்முறை என்பதன் முழு அர்தத்ததை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அகராதிகளின் படி பாதிக்கப்படக் கூடிய மோசமான தாக்கம், காயம், உணர்வுகளின் பாதிப்பு, இப்படிப் பல விடயங்கள் தரப்பட்டுள்ளன. தனி நபர் வாழ்க்கையில் உடலியல், உளவியல், பாலியல், ரீதியாக அவர்களுக்கு பால்நிலையினை அடிப்படையாக வைத்து இழைக்கப்படுன்ற அநீதிகள் தொந்தரவு என்பவற்றுடன் வெறும் உடல் தொடர்பான புறத்தாக்கம் என்று மட்டும் நினைக்காமல் சுய கௌரவம் வாழ்க்கைச்சுதந்திரம் என்பவற்றுக்கு ஏற்படுகின்ற அகத்தைப் பாதிக்கக் கூடிய நீண்ட கால நிரந்தர மனக் காயங்களைத் தரக் கூடிய உளவியல் ரீதியான அச்சுறுத்தல்கள் தாக்கங்களையும் மனதில் கொள்ள வேண்டும். வன்முறைகள் உடலியல் ரீதியானவை, உளவியல் ரீதியானவை என்று வகைப்படுத்தப்படும்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் சமூக மட்டத்தில் பரவலாக காணப்படுவதுடன் உடல் தாக்கங்கள், அடிதடி, மாமியார் கொடுமை, பாலாத்காரம் என்ற கட்டாய உடலுறவுக்கு வற்புறுத்தல், பாலியல் துன்புறுத்தலாகிய பல பிரச்சினைகள், பாலியல் ரீதியாக கொடுமை. பெண்களை அவமரியாதை செய்து அவர்களைப் பற்றி அவதூறு பேசி பெண்கள் துன்புறுத்தப்பட்டாலும் பெண்ணின் உடலும் மனமும் பாதிப்படைகின்றன.அத்தகைய பாதிப்பு மனதில் வடுக்களையும், துயரத்தையும் உருவாக்கக் கூடியன.
உடலியல், பாலியல், ரீதியான வன்முறைகள், இலங்கையில் பால் நிலை சமத்துவமின்மை பிரச்சினையே தற்பொழுது அதிகரித்து கொண்டிருக்கிற பிரச்சினையாகும். கடந்த சில ஆண்டுகளாக பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன. நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் பாலியல் வன்முறை பற்றிய செய்திகள் வராத நாட்கள் அரிது என்கிற அளவுக்கு நிலைமை அபாயமாகி இருக்கிறது. யுத்தம், சுனாமி போன்ற அனர்த்தங்கள் பெண்களை அவர்களின் பால் நிலை பாத்திரங்களால் அதிகம் பாதிக்கின்றன. அனர்த்தங்களின் பின்னர் மீள் கட்டுமான பணிகளிலும், வாழ்வாதார திட்டங்களிலும் பெண்களின் உரிமைகள் தொடர்பான தெளிவான கொள்கைகள் இல்லை என்பது உண்மையாகும்.
பெண்களுக்கு எதிராக ஏற்படுத்தப்படுகின்ற வன்முறைகளாக நோக்கும்போது பெண்களுக்கு எதிரான உடல் ரீதியான வன்முறை, பாலியல் வன்முறை, மனவெழுச்சி மூலமான வன்முறை, உளவியல் ரீதியான வன்முறை, பொருளாதாரவியல் ரீதியான வன்முறை, சமூக பண்பாட்டுக் காரணிகளின் காரணமாகவும் இலங்கை மட்டுமன்றி உலகிலும் பெண்களின் வேலைவாய்பபுக்கள் இரண்டாம் இடத்திற்கே நிர்ணயப்படுத்தப் படுகினறன.
கல்வி, திறமை, அனுபவம் அனைத்துமே பால் அடிப்படையில் பதவிகள் தீர்மானிக்கப் படுகின்ற காரணத்தினால் பெண்கள் சந்திக்கும் சிக்கல்கள் அதிகமாகும். அரசியலிலம் சரி பணிப்பாகுபாடு காட்டி பெண்களை அச்சுறுத்தி உடல் ரீதியான தாக்கங்களை உண்டுபண்ணக் கூடிய ஆபத்துக்களை பெண்களின் மீது திணிக்கிறார்கள். பணியில் ஆணும் பெண்ணும் சரியாக சமமாக நடாத்தப்படாமை பெண்கள் செய்யும் பணிகளில் குற்றங்கண்டு பிடித்தல், பெண்களின் நடத்தையைத் தூற்றுதல், ஊதியத்தில் சமமின்மை போன்ற பல தீமைகள் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படுகின்றன. இவை அனைத்துமே பெண்களை உள ரீதியாகப் பாதிக்கின்றன. குறிப்பாகப் பெண்களை தரக்குறைவாகப் பேசும் கொடுமை பெரியளவு பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன.
உலகில் பெண்களுக்கு சமவுரிமை கொடுத்து, அவர்களையும் இனவிடுதலைக்காக ஆயுதம் ஏந்தி களத்திற்கு கொண்டுவந்து பாரதியின் கனவை நனவாக்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் வடக்குக் கிழக்கில் அனைத்துக் கட்டமைப்புக்களிலும் பெண் போராளிகள் தனியான படைப்பிரிவுகளைக் கொண்டு அரசியல், நிதி ,நிர்வாகம், இராணுவம், மருத்துவம், கல்வி, உட்பட பல துறைகளில் தமது பங்களிப்பினைச் செலுத்தியிருந்தனர். சிறீலங்கா படையினருடன் பல்வேறு சண்டைகளையும் பெண் போராளிகள் தனியே தங்கள் படையணிகளைக் கொண்டு மேற்கொண்டு வெற்றி பெற்றிருந்தார்கள். இவ்வாறு தமிழீழ விடுதலைப்புலிகள் மகளிர் பிரிவானது விடுதலைப்புலிகளின் சகல வேலைத் திட்டங்களிலும் படையணிகளிலும் பெண்களும் இடம்பெற்றுள்ளனர். கடல் மற்றும் தரை, கரும்புலிகளாகவும் பெண்புலிகள் பலர் வீரச்சாவடைந்துள்ளனர்.
இலங்கையில் பெண்களுக்கு சர்வஜன வாக்குரிமை கிடைத்து 80 ஆண்டுகளின் பின்பும் அப்படிப்பட்ட குறைந்தபட்ச கோட்டாவுக்காக பெரும் போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது. தென்னாசியாவிலேயே குறைந்தளவு பெண்களின் பிரதிநிதித்துவம் கொண்ட ஒரே நாடு இலங்கை மட்டுமே.ஆங்கிலேயே காலணித்துவத்தின் கீழ் இருந்த நாடுகளில் முதன் முதலில் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்ட நாடு இலங்கை. இலங்கையில் 1931இல் சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டபோது ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏக காலத்தில் வழங்கப்பட்டது.
தேர்தல் காலங்களிலும், அரசியல் கோரிக்கைகளாக முனைப்பு பெரும் போதும் அவை பருவ கால வாக்குறுதிகளாக பரிமாணம் பெறுகிறது. கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசியல் பிரதிதித்துவத்தை அதிகரிப்பதற்கான பெண்கள் அமைப்புகளின் தொடர்ச்சியான கோஷங்களாகிவிட்டுள்ளன. தீர்மானமெடுக்கும் அங்கங்கங்களில் பெண்களின் பங்களிப்பு அத்தியாவசியமாகியுள்ளது. இதற்காக போராடும் சிவில் அமைப்புகள் புதிய தந்திரோபாயங்களை வகுப்பது அவசியம்.
வன்முறைகளில் வீட்டு வன்முறை என்பது ஒரு மன்னிக்கப்பட முடியாத ஒரு வன்செயலாகவே இருந்து வருகின்றது. வேலியே பயிரை மேய்வது போல்தான் இந்த வீட்டு வன்முறை என்பதும். அதாவது நெருங்கிய வாழ்க்கை துணைவரால் ஏற்படுத்தப்படுகின்ற வன்முறைகளாக இது விளங்குகின்றது. இவ்வன்முறை வடிவ வெளிப்பாடானது வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் வாழ்வுக்கு அச்சுறுத்தலாகவும், பாதிப்பை ஏற்படுத்தும் விடயமாகவும் காணக்கூடியதாக இருக்கின்றது.
வீட்டு வன்முறை என்பது ஒரு குடும்பத்தின் அங்கத்தவர் வேறொரு குடும்பத்தின் அல்லது அதே குடும்பத்தை சேர்ந்த உறுப்பினரொருவரை உடலியல், பாலியல், மனவெழுச்சி, உளவியல், சமூகவியல் மற்றும் பொருளாதாரவியல் ரீதியில் கட்டுப்படுத்தல், ஆக்கிரமித்தல் அல்லது துஷ்பிரயோகம் செய்தலைக் குறிக்கும்.
சாதியை, இனத்தைக் கருத்தில் கொள்ளாது குடும்பங்களில் சம்பவிக்கின்றது. பெண்கள் அவர்களின் கணவர்கள், ஆண் நண்பர்கள், தகப்பன்மார்கள், சகோதாரர்கள், மாமன்மார்கள் அல்லது மகன்கள் ஆகியோரினால் இலக்கு வைக்கப்படக்கூடும். பெண்பிள்ளைகளும் வீட்டிலான வன்செயல்களுக்கு ஆளாக்கப்படக்கூடியவர்களே. வன்முறையானது பாதிக்கப்பட்டவரிடமிருந்து சுய கௌரவத்தை முற்றாக இல்லாமற் செய்வதுடன் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியதாக அமைகின்றது.
இல்ல வன்முறை என்பது பிரதானமாக ஆண்கள் தமது அதிகாரத்தைப் பிரயோகிக்கும் பொருட்டு பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளும் ஒரு நடவடிக்கையாகும். இல்லங்களில் இடம் பெறும் இல்ல வன்முறையானது, உடலியல். பாலியல், வன்முறை அச்சுறுத்தல், பயமுறுத்திக் கட்டாயப்படுத்தல் என பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. புதிதாக அங்கீகரிக்கப்பட்ட இல்ல வன்முறைச்செயல் தடுப்புச்சட்டம், இல்லங்களில் ஆண்/பெண் இருவருக்கிடையில் ஏற்படும் உடலியல் துஷ்பிரயோகம், அல்லது மனவெழுச்சி சார்ந்த வன்முறைச் செயலைத் தடுக்கும் சட்டமாகும்.
இல்லத்து வன்முறை: 2005 வரை வீட்டு வன்முறைக்கு என்று சட்டம் ஒன்றும் இல்லை. பெரியதோர் போராட்டத்தின் விளைவாக 2005 ஒக்டோபர் பாராளுமன்றத்தினால் வீட்டு வன்முறைக்கு எதிரான சட்டம் கொண்டுவரப்பட்டது. 2005 இன் 34ம் இலக்க வன்முறைத் தடுப்புச் சட்டம் என இது அறிமுகப்படுத்தப்பட்டது.
பெண்ணுரிமைக்கான சீடோ சமவாயம்: சீடோ சமவாயத்தில் உள்ளடக்கப்பட்டு இருக்கும் விடயங்கள் 30 உறுப்புரைகள் ஆகும். இதன் முதலாம் உறுப்புரையில் பெண்களுக்கு இழைக்கப்பட்டு வரும் பாரபட்சங்கள் எவை என்பது பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்களின் உரிமைகள் வழங்குவது தொடர்பாக அரசாங்கம் கொண்டு இருக்கும் பொறுப்பு உறுப்புரை 2 இல் இருந்து 6 வரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உறுப்புரை 7-16 வரையில் பெண்களுக்கு உள்ள உரிமைகள் எடுத்து விளக்கப்பட்டுள்ளன. உறுப்புரை 17-26 வரையில் பெண்களின் உரிமை மீறல்கள் தொடர்பாகக் கண்டறியும் சீடோ சமவாயம் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண்களுக்கு இழைக்கப்படும் பராபட்சங்கள்: உறுப்புரை 1: பெண்களுக்கு இழைக்கப்படும் பாரபட்சங்கள்- தமது குடும்பத்தின் உள்ளும் பாடசாலையிலும் பாதையிலும் என பல்வேறு இடங்களிலும் பெண்கள் பெருந்தொகையான துன்பதுயரங்களை அனுபவிக்க வேண்டியவர்களாக இருந்து வருகின்றனர். இதன் காரணமாக அவர்களால் சுதந்திரமான விதத்தில் தமது வாழ்க்கையை நடாத்த முடியாது உள்ளது. பெண்களின் முன்னேற்றத்துக்கு இடையூறு விளைவிக்கும் அல்லது அவர்களுடைய சுதந்திரத்தை பறிக்கும் எந்தவொரு நடவடிக்கை காரணமாகவும் பெண்களுக்க எதிரான பாரபட்சங்களைத் தடுக்கும் உரிமை.
அரசாங்கத்தின் பொறுப்பு: உறுப்புரை 2 – 6: அரசாங்கத்தின் பொறுப்பு – பெண்களின் உரிமைகள் தொடர்பான சீடோ சமவாயத்தை அங்கீரித்து, அதில் கைச்சாத்திட்ட நாடுகளில் எமது நாடும் ஒன்றாகும். அதன் காரணமாக சீடோசமவாயத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் உரிமைகளை இலங்கை வாழ் பெண்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு ஏற்ற சூழலை அமைப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். பெண்களுக்கு நியாயம் வழங்கும் விதத்தில் மற்றும் புதிய சட்டங்களை உருவாக்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கான பொறுப்பினை அரசாங்கம் கொண்டுள்ளது. பெண்களின் உரிமைகளுக்குச் செயல் வடிவம் கொடுக்கும் பொருட்டு அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கும் உரிமை பெண்களுக்குள்ளது.
அரசியல் செயற்பாடுகளில் பங்கேற்கும் சம உரிமை: உறுப்புரை 7: அரசியல் செயற்பாடுகளில் பங்கேற்கும் சம உரிமை- அரசியல் செயற்பாடுகளில் பங்கேற்பதற்கு ஆண்களைப் போலவே பெண்களும் சமமான ஒரு உரிமை உள்ளது. ஆனால் பெரும்பாலான பெண்களின் அரசியல் உரிமை வாக்களிப்பதற்கு மட்டும் வரையறுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தில் பதவிகளை வகிக்கும் உரிமையை பெண்கள் கொண்டிருந்த போதிலும் அத்தகைய பதவிகளை மிகக் குறைந்த எண்ணிக்கைணிலான பெண்களே வகித்து வருகின்றனர். நாட்டை நிர்வகிக்கும் சட்டங்களை உருவாக்குவதிலும் அவற்றை அமுல்செய்வதிலும் பங்குபற்றும் உரிமையை பெண்கள் கொண்டுள்ளார்கள். அதுமட்டுமல்ல அரசியல் அமைப்புக்கள் மற்றும் சங்கங்கள் என்பவற்றில் இணைந்து செயற்படுவதற்கு ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சமமான உரிமை உள்ளது.
அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் சம உரிமை: உறுப்புரை 8: அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் சம உரிமை- உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டுவரும் பல்வேறு விதமான கூட்டங்கள் பற்றியும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இத்தகைய கூட்டங்களில் உலகில் யாரோ ஒருவர் பங்கேற்கின்றார். இக் கூட்டங்களில் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஆண்களே எமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்கள். இது தொடர்பாகப் ஒரு சமமான உரிமை பெண்களுக்கும் உண்டு. பெண்கள்; நாட்டைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கும் உரிமையை பாதுகாத்துக் கொள்வதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
இனத்துவத்திற்கான சம உரிமை: உறுப்புரை 9: இனத்துவத்திற்கான சம உரிமை- உங்கள் தேசிய அந்தஸ்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கும், மாற்றியமைத்துக் கொள்வதற்கும் மற்றும் உங்கள் குழந்தைகளுக்கு அதனை வழங்குவதற்கும் நீங்கள் கொண்டிருக்கும் உரிமையைப் பாதுகாத்துக் கொள்வது உங்களுடைய பொறுப்பாகும்.
கல்வியைப் பெறுவதற்கான சம உரிமை: உறுப்புரை 10: கல்வியைப் பெறுவதற்கான சம உரிமை- கல்வியைப் பெற்று ஒரு நல்ல அந்தஸ்தைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமை பெண்களுக்குண்டு.
தொழில் செய்வதற்கான சம உரிமை: உறுப்புரை 11: தொழில் செய்வதற்கான சம உரிமை- ஒரு தொழிலைச் செய்வதற்கும் வருமானம் ஈட்டுவதற்கும் உங்களுக்கு இருக்கும் உரிமையைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் தாழ்ந்த அந்தஸ்தை இல்லாதொழிக்கலாம்.
சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமை: உறுப்புரை 12: சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமை- இலவச வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமை பெண்களுக்குண்டு.
பொருளாதார மற்றும் சமூக உரிமை: உறுப்புரை 13: பொருளாதார மற்றும் சமூக உரிமை- வளங்கள் மற்றும் வாய்ப்புக்கள் என்பனவற்றை பெற்று உங்கள் சமூக அந்தஸ்தை மேம்படுத்திக் கொள்வதற்கான உரிமைகள் பெண்களுக்குண்டு.
கிராமியப் பெண்களின் உரிமை: உறுப்புரை 14: கிராமியப் பெண்களின் உரிமை- கிராமத்தில் வாழும் பெண்கள் பின்வாங்கும் குணத்தில் இருந்து விடுபட்டு தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
சட்டத் துறை சார்ந்த சமத்துவம்: உறுப்புரை 15: சட்டத் துறை சார்ந்த சமத்துவம்- சட்டத்தின் முன் நீங்கள் கொண்டிருக்கும் சமத்துவ நிலையினைப் பெறப் பெண்களுக்கு உரிமையுண்டு.
திருமணத்திலும் குடும்பத்துள்ளும் சமத்துவம்: உறுப்புரை 16: திருமணத்திலும் குடும்பத்துள்ளும் சமத்துவம்- குடும்பத்துள் பெண்களுக்கு கிடைக்க வேண்டிய கண்ணியம் மற்றும் ஒத்துழைப்பு என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான உரிமைகள் உண்டு.
பெண்ணுரிமையைப் பாதுகாப்பதற்கான சட்டத்தினால் செய்யப்பட்டுள்ள பிற ஏற்பாடுகள்: இலங்கை அரசியல் அமைப்பின் 12(2) உறுப்புரையானது ஆண்கள், பெண்கள் என்று எல்லோருக்கும் சட்டத்தின் முன் சமத்துவத்தை விளம்புகின்றது. பாலடிப்படையில் பாரபட்சம் எதுவும் செய்யக் கூடாது. 1956 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்கப் பெண்கள், இளம் நபர்கள் மற்றும் சிறுவர்கள் ஊழியச்சட்டத்தின் கீழ் பெண்களையும் 18 வயதிற்குக் குறைந்தோரையும் இரவில் வேலைக்கு அமர்த்தக் கூடாது.
பாலியல் வல்லுறவு: தண்டனைச்சட்டக் கோவையின் 364 ஆம் பிரிவு பாலியல் வல்லுறவுக்கான தண்டனையினை ஏற்பாடு செய்கின்றது.
இயற்கைக்கு மாறான உடலுறவு: தண்டனைச் சட்டக் கோவையின் 345ஆம் பிரிவு எவரேனும் ஒருவர் தாக்குதலின் மூலம் அல்லது குற்றமுறைப்பலாத்காரத்தின் மூலம் தொல்லைப்படுத்துவதற்கு உடைய சட்டம். இக்குற்றத்திற்கு இயற்கைக்கு மாறான உடலுறவு தொடர்பான தண்டனைச்சட்டத்தின் கோவை 365 ஆம் இலக்கச் சட்டம் கூறுகின்றது.
விபச்சாரம், பெண் வியாபாரம்: விபச்சாரம் என்பது பாலியல் ரீதியாகச் சுரண்டும் இன்னுமொரு வடிவமாகும். விபச்சார விடுதியின் கட்டளைச் சட்டத்தின் 2ஆம் பிரிவு இதனைக் கூறுகின்றது.
உலகம் முழுவதிலும் வருடாந்தம் ஐம்பது இலட்சத்துக்கும் மேற்பட்ட கருக்கலைப்புகள் நடைபெறுகின்றன. பல நாடுகளில் கருக்கலைப்பை அங்கீகரித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. பல நாடுகளில் கருக்கலைப்பும் தாய், சேய் மரண வீதமும் பொது சுகாதார பிரச்சினையாக உள்ளது. இலங்கையில் பிரித்தானியர் காலத்தில் 1885ம் ஆண்டு முதல் கருக்கலைப்பு குற்றமாக இருப்பினும் தாய் மரண வீதத்தில் மூன்றாம் இடத்தில் கருக்கலைப்பு காணப்படுகிறது. இலங்கையில் கருக்கலைப்பு தொடர்பாக நடைமுறையில் உள்ள சட்டம் மிகவும் பலமானது. கருவினால் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சந்தர்ப்பங்களில் மாத்திரமே கருக்கலைப்புச் செய்யலாம் என குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 303 ஆம் பிரிவு கூறுகிறது.
இலங்கையில் உள்ள சட்டத்தின்படி தாயின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய கருவைக் கலைப்பதற்கு அனுமதிக்கப்பட்டிருப்பது அதில் ஒன்றாகும். இலங்கையில் கருக்கலைப்பு சட்டத்துக்கு முரணான அம்சம் என்ற போதிலும் ஒரு நாளைக்கு 750 –1000 வரையான சட்ட விரோத கருக்கலைப்புகள் நடைபெறுவதாக அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கருக்கலைப்பு செய்து கொள்ளும் பெண்களில் 90% ஆனவர்கள் திருமணமான பெண்களாவர். கர்ப்பிணிப் பெண்களின் மரண வீதத்தில் 12.5% மரணங்கள் சட்டவிரோத கருக்கலைப்பினால் ஏற்படுகிறது. வருடாந்தம் 18 வயதிற்கு குறைந்த சுமார் 24000 சிறுமிகள் கருக்கலைப்பு செய்வோருள் அடங்குவதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களிடத்தில் வாழ்வை சிறப்பாக அமைக்க முடியாமல்விரும்பத்தகாத கர்மம் , பல திருமணம் , தவறான பாலியல் தொடர்புகள் , விவாகரத்து , முறைகேடான உறவு , பாலியல் கொடுமைக்குட்பட்டவர்கள், சித்தரவதைக்கு ஆளானவர்கள், போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என பல உளச்சமூகப் பிரச்சினைகளுக்கும் உட்பட்டு வருகின்றார்கள்.
இலங்கை சிங்கள அரசு போரினால் மட்டுமன்றி பல்வேறு வழிகளில் தமிழர் இனத்தையும் வளர்ச்சியையும் முடக்கி தமிழர்களை முற்றிலுமாக அழித்தொழிக்கும் இனவழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்கான பல்வேறு உத்திகளைத் திட்டமிட்டு மிகத் தந்திரோபாயமாகக் கையாண்டு வருகின்றது. திருமணமான பெண்கள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினை சட்டவிரோதக் கட்டாயக் கருக்கலைப்பு . பெண்களை கருத்தடை செய்து தமிழ் இன பிறப்பு வீதத்தை குறைப்பதற்க தமிழ்ப் பெண்கள் மத்தியில் அதிகம் மேற்கொள்ளப்படுகிறது. பெண்கள் கட்டாயக் கருத்தடை மேற்கொள்வதற்கு ஒத்துழைக்காவிட்டால் அவர்களின் கணவன்மாருக்கு கருத்தடைச் சிகிச்சை செய்யப்படும் என எச்சரிக்கப் படுகின்றார்கள் இராணுவத்தினராலும் அச்சுறுத்தப் படுகின்றார்கள் .
இலங்கையில் போர் நடைபெற்ற பகுதிகளில் தமிழர்களில் கருவுற்றிருக்கும் தாய்மார்களின் கருக்களைக் கலைக்குமாறு மருத்துவமனை அதிகாரிகளுக்கு சிறிலங்கா படை உயரதிகாரிக ளு ம் அரச ஊழியர்களும் இணைந்து சிறுபான்மை இனமான தமிழர்களை அழிக்கும் நோக்குடன் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் நடவடிக்கையின் விளைவாக தமிழ்ப் பெண்கள் தொடர்ந்தும் மரணிக்கின்றனர். இவ்வாறான குற்றங்களை உள்ளூர் சுகாதார அதிகாரிகள் தொடர்ந்தும் மறைக்க முயற்சிக்கின்றனர். இதில் பல இளம் பெண்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்லத் தயங்கும் மனநிலை காணப்படுகிறது . இதனால் ஏற்படக்கூடிய பல உளத்தாக்கங்களுக்கு எமது சமூகப் பெண்கள் வலிந்து தள்ளப்படுகின்றார்கள் . சிங்கள மொழியில் அச்சிடப்பட்ட அனுமதிப் படிவங்களில் வற்புறுத்தி கையொப்பமிட வைத்தும் கருக்கலைப்பு செய்யப்பட்டு தமிழர்களின் வருங்காலச் சந்ததியினர்களும் இலங்கைத் தீவில் இருக்கக் கூடாது என்பதற்கான திட்டமிடப்பட்ட நடவடிக்கையாகும். ஒரு இனத்தைக் கருவிலேயே அழித்தொழிக்கும் செயலாகும்.
தமிழ் மக்களின் எதிர்கால நலன் என்ற ஓர் இலக்கை நோக்கி பயணிப்பதற்காக போராடப் புறப்பட்ட பெண்களில் ஒரு பகுதியினர் இறுதியில் உறவுகளை இழந்து கால்கள், கைகள் இன்றி, கண்கள் தெரியாமல், முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு நிரந்தரமாக நடக்க முடியாமல், உடம்பில் இரும்புத் துண்டுகளை சுமந்துகொண்டு 2009ஆம் ஆண்டு விருப்பமின்றி இராணுவத்திடம் சரணடைந் தார்கள்.
ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகள், போர்க்குற்றங்களுக்கு சிங்களப் இராணுவம் அரசின் படைகள் குற்றவாளிகளாக இருந்துள்ளனர். பெண் போராளிகள், சிறிலங்கா இராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டு படுகொலை செய்யப் பட்டனர். ஒரு ஊடகவியலாளராக பணியாற்றிய இசைப்பிரியாவின் கொலை, போர்க்குற்ற ஆவணமாக உலகை உலுக்கியது. யுத்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட பெண்கள் யுத்தம் முடிவுற்று 10 வருடங்கள் கடந்த நிலையிலும் இவர்கள் பலவித சமூகப் பிரச்சினைகளுக்குள்ளாகின்றனர். பெண்கள் எப்பொழுதும் அரச புலனாய்வு உத்தியோகத்தர்களால் கைத்தொலைபேசி மூலம் மிரட்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றனர்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வடக்கிலும் கிழக்கிலும் இன்று 90,000கும் மேற்பட்ட குடும்பத் தலைவரை இழந்து உள்ளார்கள். வலிந்து காணாமற்போனோர், கடத்தல் மற்றும் படுகொலைகள், அரசியல் கைதுகள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ்த் தொடரும் வரையறையற்ற கட்டுப்பாடில்லாத தடுத்துவைப்பு, சட்டத்திற்குப் புறம்பான தடுத்துவைப்புக்கள் என தமிழர் பிரதேசங்களில் பெருமளவிலான பாதுகாப்புப் படைகள் நிலைகொண்டுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான குடும்பப் பெண்கள் மற்றும் பிள்ளைகள் யுத்தத்தின் பின்னர் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்வாதார நிர்க்கதி நிலையில் வாழ்கின்றனர். பெண்களின் மீதான இரட்டைச் சுமை அதிகரித்திருக்கிறது. பெண்கள், சிறுவர்கள் மீதானா பாலியல் பிரச்சினைகள் மோசமாகிவருகிறது. கணவரை இழந்த பல பெண்கள் பெண் என்ற வகையிலும் பல அச்சுறுத்தல்களுக்கும் பிரச்சினைகளுக்கும் சமூகத்தில் முகம் கொடுத்து வருகின்றார்கள் .
போரில் பாதிக்கப்பட்ட பெண்கள். முகம் கொடுக்கும் சவால்களைவிட பன்மடங்கு அதிகமாகப் போராளிப் பெண்கள். அதிலும் தனது உடல் அவயங்களை இழந்த பெண் போராளிகள் படும் துன்பம் பன்மடங்கு. போர்க்களத்தில் இறந்த பின்னர் பெண்களைப் பாலியல் ரீதியாகப் இராணுவத்தினர்கள் துன்புறுத்தியமை என்பது நம்முடைய காலத்தின் மிகப் பெரிய மனிதாபிமானப் பிரச்சினைகளில் ஒன்று. ஆகவே இவ்விடயத்தில் விசேட கவனமெடுத்து தீர்வு காணவேண்டிய பொறுப்பு சமூகத்தில் உள்ள ஒவ்வொரு தனிநபருக்கும் உண்டு . உடல் நலம் ,உளநலம் , வாழ்க்கை நிலைகள், இனப்பெருக்க நிலை உட்பட, என்றும்தீவிர மனநலக் குறைபாடுடைய பல பெண்களுக்கு நீண்ட காலச் சிகிச்சை மற்றும் மருத்துவப் புனர்வாழ்வும் தேவைப்படுகின்து.
MeToo இயக்கம் பெண்களுக்கு உளவியல் ரீதியான வெற்றியைத் தரும்.அதே வேளை, பாலியல் துன்புறுத்தல் மற்றும் அத்துமீறல்களுக்கு எதிரான முயற்சி இது நிச்சயம் ஒரு நல்ல தொடக்கமாகும். ஆண்களின் பாலியல் அத்துமீறல்களை பெண்கள் ட்விட்டரில் MeToo என்ற பதத்தை பயன்படுத்தி வெளிக்கொணரும் நிகழ்வு கடந்த ஒருவருட காலமாக சமூகவலைத் தளங்களை ஆக்கிரமித்துள்ளது. பெண்கள் இது போன்ற துன்புறுத்தலை சந்தித்தால் அதை எளிதாக கூற இயலுமா என்று தெரியவில்லை இந்த கடுமையான சூழலை எப்படி கடந்து செல்வது? இதுபோன்ற ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தைகள் சமூகத்தில் எப்படி ஆழ வேரூன்றியுள்ளது என்பதையும் சட்டரீதியாகப் பார்க்கும்போது தற்போது வெளிவந்துள்ள குற்றச்சாட்டுகளில் எத்தனை உண்மையான குற்றச்சாட்டுகள் என்பதில் தெளிவில்லாமல் பலர் சமூக ஊடகங்களில் போரிட்டு வருகிறார்கள்.
வன்முறைகள் உலகுக்கு உணர்த்தப்பட வேண்டியதாகும். இது தொடர்பான சமூக விழிப்புணர்வு உருவாக்கப்பட வேண்டும். பெண்களுக்கு உயர்தரக் கல்வி கற்க வாய்ப்பளிக்க வேண்டும்.அதனால் சமூக அணுகுமுறைகள் மாற்றப்பட வேண்டும். பெண்களிடம் அவர்களுடைய உரிமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பெண் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும். பெண் வயதுக்கு வருமுன்பு திருமணம் செய்து கொடுக்கக் கூடாது. அவர்களுக்கு விருப்பமில்லாத ஒருவனை மணம் செய்து கொள்ள வற்புறுத்தக் கூடாது. திட்டமிட்ட குடும்பக் கட்டுப்பாட்டு முறைகள் பெண்களைப் பலப்படுத்தக் கூடிய அவர்களின் தொழில் பொருளாதார மேம்பாட்டிற்கு வழிவகுப்பதாக மாற்றப்பட வேண்டும். பெண் குழந்தைகளுக்குச் சொத்தில் சமபாகம் கொடுக்க வேண்டும்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களை வலுப்படுத்தலுடனான உளச்சமூகப் பணி என்பது முக்கியமானதாக அமைகின்றது. அவர்கள் முகங்கொடுக்கும் ஆற்றலை வளர்ப்பதற்கான கல்வி, தொழிற்கல்வி போன்றவற்றினூடான நலச்சேவை மற்றும் புனர்வாழ்வு என்பது வழங்கப்பட வேண்டும். தான் வாழும் சமூகத்துடன் , அமைப்புடன் போராடும் பெண்களை தாயாக, சகோதரியா எம்மைச் சூழ்ந்திருக்கும் பெண்களின் ஆரோக்கியத்திலும் மன நலத்திலும் மொத்த சமூகமும் அக்கறை கொண்டு பாதுகாக்க வேண்டிய பொறுப்புணர்வுடன் நாம் செயற்பட வேண்டும்.
பெண்களிடையே தன்னம்பிக்கையையும் சுயநிர்ணயத்தையும் உருவாக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். கணவன் இறந்த பின்பு மறுவிவாகம் செய்ய அனுமதிக்க வேண்டும். பெண்கள் தொடர்பான புதிய புரிந்துணர்வையும் புதிய நோக்குகளையும் பயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். விவாகம் செய்யாமல் கைத்தொழில் முதலியன செய்து கௌரவமாக வாழ விரும்பும் பெண்களை அங்ஙனம் வாழ இடம் கொடுக்க வேண்டும். குறிப்பாக பெண்கள் பிரச்சினைகள் பற்றி பெண்கள் சரியாகப் புரிந்து கொள்ள வழிகளைத் திறந்து விட வேண்டும். பெண்கள் கணவனைப் பிரிந்து வாழ விரும்பினால் அதற்கு இடமளிக்க வேண்டும். அவளை அவமானப் படுத்தக்கூடாது. இந்த முயற்சி முதலில் பெண்களிடையேயும் பின்னர் குடும்பங்கள் இடையேயும் அதன் பின் சமூகத்திலும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
உடல்,உள ரீதியாக வன்முறைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் உள்ளாக்கப்படாமல் நடாத்துதல். விருப்பமில்லாத செயற்பாடுகளுக்கு வார்த்தைகளாலும் செயற்பாடுகளாலும் தூண்டாதிருத்தல் கடத்துதல், மிரட்டுதல், தன்புறுத்தல், அடிமைப்படுத்துதல், கொலை செய்தல் பேன்றவற்றில் இருந்து பாதுகாக்க வேண்டும் . ஆற்றல், திறன், பதவிநிலை வளர்ச்சிகளை வெளிப்படுத்த முடியாமல் முடக்கி அடிமைத்தனமாக நடாத்தும் சிந்தனையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் . குடும்ப, சமூக, பொருளாதார, கல்வி, அரசியல், கலாசார, நிலைகளில் இரண்டாந்தரப் பிரஜையாக நடாத்ததுதலை நிறுத்த வேண்டும்.
பெண்கள் தொடர்பான இயக்கங்கள் பெண்களை நம்பிக்கையூட்டும் பாதைக்கு இட்டுச் செல்லும் புதிய படிமுறைகளை அறிமுகப்படுத்தவும் பெண்கள் தொடர்பான புதிய அணுகுமுறைகள் சார்ந்த கருத்துப் பரப்பலுக்கு வழிசெய்ய வேண்டும். சுதந்திரமற்ற குடும்பச்சுமைதாங்கியாக கலாசாரம் என்ற சமூகக் கொடுமைக்குள் உட்படுத்தாது சமூக, பொருளாதார, கல்வி, கலாசார, சகல அபிவிருத்தி நிலைகளில் தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் வளர்ச்சி வேண்டும்.
திட்டங்கள் செயற்பாடுகள் அறிவூட்டல் பணிகள் அனைத்துமே பெண்களைப் பற்றிய சரியான ஒரு புரிந்துணர்வை வெளிப்படுத்தக் கூடிய நோக்கத்தை மையமாகக் கொண்டே செயற்பட வேண்டும். தமிழ் மக்கள் குறித்தும் இலங்கை வரலாறு குறித்தும் கட்டமைக்கப்பட்டுள்ள கருத்தியல்களை மாற்றியமைக்காமல் எதையும் செய்ய முடியாது.சமூகத்தில் பெண்களின் விடுதலை எது என்பதை மிகச் சரியாக, சமரசமின்றி சுதந்திர எண்ணம், அரசியல் மறுமலர்ச்சி, சமூகச் சீர்திருத்தம், பெண் விடுதலை பற்றிய அக்கறை யாவும் பெண்ணுக்குச் சமூக விடுதலை கிடைக்காமல் நாட்டிற்கு அரசியல் விடுதலை கிடைத்துவிட போவதில்லை கொள்கைகள் மூலமே சமூக விடுதலையினை உறுதி செய்து உழைக்கும் பெண்களின் விடுதலையினை முன்னிலைப்படுத்தி தமிழ்த்தேசியம் என்ற உறுதிமொழியுடன் பயணத்தைத் தொடர்வோம்’
– நிலவன்.