கடந்த சில ஆண்டுகளாக பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன. நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் பாலியல் வன்முறை பற்றிய செய்திகள் வராத நாட்கள் அரிது என்கிற அளவுக்கு நிலைமை அபாயமாகி இருக்கிறது.
மனைவியாக இருந்தாலும் அவரது அனுமதியின்றி உறவு கொள்ள முயல்வது குற்றம் என்கிற அளவு Marital Rape பற்றி விவாதம் வந்துகொண்டிருக்கும் ஒரு நாகரிகமடைந்த சமூகத்தில், தினந்தோறும் தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்முறைகள் பெரும் கவலையையும், பதற்றத்தையும் உண்டாக்கிக் கொண்டிருக்கிறது.
இனி இதுபோன்ற கொடிய செயல்கள் நடக்காமல் தடுக்க நாம் என்ன செய்யவேண்டும், கடந்த காலங்களில் நாம் செய்த தவறுகள் என்ன, கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினைகள் என்ன, செய்ய வேண்டிய மாற்றங்கள் என்னவென்று இப்போதாவது நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
பாலியல் குற்றங்களுக்கான உளவியல் காரணங்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலியல் ரீதியாக அளிக்க வேண்டிய சிகிச்சைகள், சமூக ரீதியாக மேற்கொள்ள வேண்டிய உலகியல் மாற்றங்கள் பற்றி முடிவுக்கு வர வேண்டிய நேரம் இது. துறை சார்ந்த வல்லுநர்கள்
மாற்றத்துக்கான சமுதாயத்தை உருவாக்கும் வழிகளை இங்கே சொல்கிறார்கள்.
‘‘பாலியல் பலாத்காரத்துக்குள்ளான பெண்கள் உடலைப் போலவே மனதளவிலும் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதுடன் மன நல ஆலோசனையும் மிகவும் அவசியம். இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் அவர்களின் எதிர்காலமே சிக்கலாகிவிடும்’’ என்கிறார் உளவியல் மருத்துவர் சித்ரா அரவிந்த்.
‘‘மனப்பதற்றம், மனக்குழப்பம், தற்கொலை எண்ணம், கோபம், இயலாமை, பயம், இப்படி நிகழ்ந்ததற்கு தானும் காரணம் என்கிற குற்றவுணர்ச்சி, சமுதாயம் எப்படி நடத்துமோ என்ற பயம் அவர்களை மனரீதியாக பாதிப்புக்குள்ளாக்கும். இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் எதிர்காலத்தில் PTSD என்கிற அதிர்ச்சிகரமான மன அழுத்த நோய் வர வாய்ப்புண்டு.
இதில் திரும்பத்திரும்ப நடந்த சம்பவம் ஃபளாஷ்பேக் போல் வந்து பயத்திலேயே ஆழ்த்தும். இத்துடன் தூக்கக் கோளாறுகள்(Sleep Disorders), உண்ணுதல் கோளாறுகள் (Eating Disorders), ஆளுமை கோளாறு(Borderline Personality Disorder), யாரையும் நம்ப முடியாமை(குறிப்பாக ஆண்கள் மீது வெறுப்புணர்வு / பயம்) போன்ற பல்வேறு மன நலப்பிரச்னைகளை எதிர்கொள்வார்கள்.
இதனால் இவர்களின் திருமண வாழ்க்கை, உடல்நலம், வாழ்க்கைத்தரம் என எல்லாமே பாதிக்கும். திருமணமாகாமல் இருந்தால் மனரீதியான பாதிப்பு மேலும் அதிகரிக்கும். தான் கெட்டுப் போய்விட்டதாகவும், வாழ்க்கையே முடிந்துவிட்டது எனவும் பெரிதும் அச்சப்படுவார்கள்.’’
பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?
‘‘எந்த விபரமும் அறியாத குழந்தை களும் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகிறார்கள். தான் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகிறோம் என்பது தெரியாததால் குழந்தைகள் பெற்றோரிடம் சொல்வதில்லை. விபரம் அறிந்த குழந்தைகள் இதை பெரிய அவமானமாகவும், தனக்கு தரப்பட்ட உரிமைகள் இதனால் மறுக்கப்படுமோ என்கிற எண்ணத்திலும், தன் மீது குற்றம் சொல்லிவிடுவார்களோ என்கிற பயத்திலும் வெளியில் சொல்லாமலும் மனரீதியாக பெறும் பாதிப்புக்குள்ளாகி இருப்பார்கள்.
இது பெரும் பிரச்னையாக வெடிக்கும்போது மன நல சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போதுதான் தெரிந்துகொள்ள முடியும். இதனால் பாலியல் சார்ந்த விஷயங்களில் பாதிப்புக்குள்ளானால் அதை பெற்றோர் இடத்தில் தெரிவிக்கக்கூடிய மன தைரியத்தை பெற்றோர்தான் வளர்க்க வேண்டும்.
குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினர் பாதிப்புக்குள்ளாகும்போது பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் அவர்களைக் கையாள வேண்டும். நடந்ததை திரும்பத் திரும்ப பேசாமல் இருக்க வேண்டும். Victim Blaming என்கிற நீயும் காரணம் என குற்றம் சாட்டாமல் இருப்பது முக்கியம்.
பாசிட்டிவான வார்த்தைகளை சொல்லி மன தைரியத்தை தர வேண்டும். அவர்களை உடனே மனநல ஆலோசகரிடம் அழைத்துச் சென்று அவர்களுடன் சேர்ந்து தாங்களும் மனநல ஆலோசனைகளைப் பெற வேண்டும்.’’
பலாத்காரத்தில் ஈடுபடும் ஆண்களை முன்னரே அடையாளம் காண வழி இருக்கிறதா?
‘‘ஆண்கள் எல்லோரும் பாலியல் பலாத்காரம் செய்வதில்லை. சில மனநலக் கோளாறுகள் கொண்டவர்களே இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். பிறரின் துன்பத்தில் இன்பம் காணுதல்(Sadist), தங்களைக் குறித்து மிக உயர்வான கருத்துக் கொள்ளுதல்(Narcissistic), சமூக விரோத செயலில் ஈடுபடுபவர்கள்(Antisocial), குழந்தைகள் மேல் பாலியல் விருப்பம் கொண்டோர்(Pedophilia) என மனப்பிறழ்வுகளைக் கொண்டவர்களே பாலியல் வன்முறையாளர்களாக இருக்கிறார்கள்.
இவர்களை சாதாரணமாகக் கண்டறிவது கடினம். அவர்களது நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்தால்தான் இதை உணர முடியும். அவ்வாறு இருப்பவர்களை உடனடியாக மனநல சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டும்.
மேலும் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோர் சில வித்தியாசமான குணாதிசயம் உடையவர்களாகவும் இருப்பார்கள். தாழ்வு மனப்பான்மை, சகஜமாக பெண்களிடம் பேச தெரியாமலிருத்தல், மித மிஞ்சிய கோபம், அதீத மனக்கிளர்ச்சி, குடி மற்றும் போதை பழக்கம், வாழ்வில் நடந்த சம்பவங்களாலோ /வளர்க்கப்பட்ட சூழ்நிலையாலோ பெண்கள் மீது கீழ்த்தரமான / எதிர்க்கும் எண்ணம், வெறுப்பு கொண்டவர்கள், ஆதிக்க மனப்பான்மை கொண்டோர், பிறரின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாமை போன்ற குணாதிசயம் உள்ளோர் இச்செயலில் ஈடுபடுவார்கள்.’’
அதிகரித்து வரும் பாலியல் வன்முறைக்கான காரணங்கள் என்னென்ன?
‘‘பொதுவாக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் சிறு வயதில் தாங்களும் உடல் மற்றும் உணர்வு சார்ந்த துன்புறுத்தல்களுக்கு ஆளாகி இருப்பர். பெற்றோரின் அன்பும், பாதுகாப்பும் இல்லாமல் வளர்ந்திருக்கலாம். மேலும் பெண்களை மதிக்காத சமூகத்தில் வளர்க்கப்பட்டிருக்கலாம்.
பெண்களை இவ்வகையில் அடக்கி / அவமானப்படுத்துவதன் மூலம் அவர்களை இழிவுபடுத்தி ஒடுக்கி விட்டதாகவும், தங்களை சக்திமிக்கவர்களாகவும் இவர்கள் உணர்கிறார்கள். அப்படி தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும்/ ஒழுங்குபடுத்துவதாகவும், ஆணாதிக்க சிந்தனையிலிருந்தும் பெண் தனக்கு கீழே என்கிற சிந்தனை மேலோங்கி இருப்பதாலும் இப்படி செய்வதுண்டு.
ஊடகங்கள் பெண்களை கவர்ச்சிப் பொருளாகக் காட்டி பாலின ஈர்ப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். இதுவே, பெண்கள் மேல் மரியாதை
இல்லாமல், அவர்கள் ஆண்களின் தேவைக்கென படைக்கப்படும் பொருட்கள் எனும் எண்ணத்தை ஆண்கள் மத்தியில் அதிகப்படுத்தி இருக்கிறது.
நிறைவேறாத பாலியல் தேவைகள் காரணமாகவும் பலாத்காரங்கள் நடக்கிறது. இனப்பெருக்கத்துக்கு தயாரான ஆண்கள் தங்களுடைய உடல் தேவை தீராத பட்சத்தில் இது அடக்கி வைக்கப்பட்டு எதிர்பாலினத்தினரின் சம்மதம் இல்லாமல் பாலியல் பலாத்காரம் செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
செக்ஸ் பற்றிய சரியான புரிதல் இல்லாமல் இருப்பதாலும், மது உள்ளிட்ட போதைக்கு உள்ளாகும்போதும் இதுபோன்ற பலாத்காரங்கள் நிகழ்வதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.
பெண்களின் உடை பலாத்காரத்துக்கு காரணமல்ல. இது, ஒரு ஆண் செய்த தவறை அர்த்தம் கற்பிக்கக் கொடுக்கும் ஒரு காரணமே தவிர இதில் உண்மையில்லை. இதைத் தடுக்க எடுக்கும் முக்கிய வழிஇல்லையெனில், தவறு இழைத்தவரை விட்டு பாதிக்கப்பட்டோரையே குற்றம் சொல்ல பழகிவிடுவோம்’’.
சிலர் கூட்டாக இணைந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவது ஏன்?
‘‘ஒன்றுக்கும் மேற்பட்டோர் சேரும்போது இயல்புக்கு மீறி நடக்கும் உந்துசக்தியை, அசாத்திய தைரியத்தை அந்த கும்பலான மனப்பான்மை அவர்களுக்கு தந்துவிடும். மேலும், ஒருமித்த கருத்துகொண்டவர்கள், ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்று கூடும்போது இவர்களின்
செயல்பாடுகள் மிகவும் வித்தியாசமாகவும், கொடூரமாகவும் இருக்கும்; அவர்கள் செய்யும் செயல்பாடுகள் தவறென்ற உணர்வும் இவர்களுக்கு தோன்றாது. இதனால், தங்களை மறந்து, மேலும் பலாத்காரம் செய்த பெண்ணை கொலை செய்யும் அளவுக்கும் செல்கிறார்கள்.’’
பாலியல் குற்றங்களை முடிவுக்குக் கொண்டு வர உளவியல் மருத்துவராக உங்கள் ஆலோசனைகள் என்ன ?
‘‘எல்லா இடங்களிலும், எல்லா துறைகளிலும் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல்தான் நிலவுகிறது. பெண்களுக்கு, குழந்தைகளுக்கு வீட்டிலும் பள்ளியிலும் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும்.
பெண்கள் தனக்கு ஏற்படும் பாலியல் சீண்டலை தைரியமாக வெளிக்கொண்டு வந்து சட்டப்படி குற்றவாளியைத் தண்டிப்பதற்கு முன் வர வேண்டும். பாலியல் சீண்டலை அவமானமாகக் கருதாமல் ஒருவர் இன்னொருவர் மீது தொடுக்கும் தாக்குதலாக கருதி அவரை சட்டத்துக்கு முன் நிறுத்தி அவருக்கு தண்டனை வாங்கி கொடுக்க துணிய வேண்டும்.
ஆண்கள் சுய கட்டுப்பாடோடும், ஒழுக்கத்தோடும் இருக்க வேண்டியது அவசியம். எதிர்பாலினத்தவரை ஓர் அதிசய பொருளாக பார்க்காமல்
இயல்பாகப் பேசி பழக வேண்டும். எப்போதும் மனதில் பாலியல் சார்ந்த விஷயத்தையே நினைப்பது, படங்கள் பார்ப்பது போன்றவையிலிருந்து வெளிவர வேண்டும்.
இதுபோன்ற மாற்றங்கள் நிகழ, பாடத்திட்டத்தில் செக்ஸ் இடம் பெற்றிருக்க வேண்டும். இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாலியல் சார்ந்த பிரச்னைகளை கணக்கில் கொண்டு அதற்கேற்ப பாலியல் கல்வியை அமைக்க வேண்டும்.முக்கியமாக, பெண்களை மதிக்கும், பாதுகாக்கும் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க உறுதிமொழி ஏற்க வேண்டும்.
ஆண் குழந்தைகளைப் பெற்ற பெற்றோர் அவர்களுக்கு நல்லொழுக்கத்தை கற்றுத் தர வேண்டும். பெண் குழந்தைகளை தைரியம் கொடுத்து வளர்க்க வேண்டும், பெரும்பாலும் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகிற பெண்கள் பயந்த மற்றும் பாதுகாப்பில்லாமல் இருக்கும் பெண்களையே தேர்ந்தெடுப்பதாக ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
மேலும் சக மனிதரை நேசிக்கும் பண்பு, மனிதநேயம், ஒருவரை பலாத்காரத்துக்கு உட்படுத்துவது பாவம்; தவறு என்று ஆண்கள் உணரும் ஆரோக்கிய சமுதாயமாக நாம் உருவாகும்போது பாலியல் பலாத்காரம் எனும் ஈன கொடிய செயலை இல்லாமலே ஆக்க முடியும்’