ஈழப்போராட்டத்தை, இறுதிவரை, தோள்மீது சுமந்த வன்னி மண் தாங்கிய இழப்புக்கள் ஏராளம், அவலங்கள் எராளம். குறிப்பாக இறுதிப்போரின், கடைசிக்கட்டத்தில் சந்தித்த பலிகளுக்கு சமமாக, ஆரம்ப கட்டத்திலும் அதிகமான உயிர்கள், சிறிலங்காவின் வான்படையால் காவு கொள்ளப்பட்டன. நேரம் காலமின்றி, திடீரென வன்னி வான்பரப்பில் நுழையும் விமானங்கள் இடபேதமின்றி குண்டுகளை வீசிச் செல்லும். உறையவைக்கும் அதன் இரைச்சல் குறைந்து செல்லும்போது, பல உயிர்கள் பலிகொள்ளப்பட்ட சம்பவம் நடந்தேறியிருக்கும். அவ்வாறுதான், 22.02.2008 அன்று, கிளிநொச்சி கிராஞ்சியில் நடாத்தப்பட்ட விமானத் தாக்குதலில், ஆறுமாத சிசு உட்பட எட்டுப்பேர் காவுகொள்ளப்பட்டார்கள்.
கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேசசெயலர் பிரிவில் அமைந்துள்ளது கிராஞ்சி, சிவநகர் எனும் கிராமம். பொருளாதாரத்தில் ஓரளவு திருப்திகரமான நிலையைக் கொண்ட ஒரு விவசாயக் கிராமம். இயற்கை வளங்களைக் கொண்டு சுயசார்பாக வளர்ந்த கிராமம், இறுதிப்போரின் ஆழிவுகளில் சிக்கிச் சிதைந்து இன்று இயல்பு வாழ்க்கைக்காக போராடிக் கொண்டிருக்கின்றது.
22.02.2008, பள்ளி செல்லும் சிறுவர்கள், வேலைத்தளத்திற்கு செல்லும் பணியாளர்கள் என பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த காலைப்பொழுதில், பாரிய இரைச்சலுடன் வான்பரப்பில் நுழைந்தன சிறிலங்கா விமானப்படையின் விமானங்கள். அன்று வெள்ளிக்கிழமை என்பதால் சிவநகர் முருகன்கோவிலில் பக்தர் கூட்டம் கூடியிருந்தது. ’கூட்டமா நின்றால் அடிப்பாங்கள் விழுந்து படுங்கோ, படுங்கோ’ என பெரியவர் ஒருவர் பதற்றத்துடன் கத்திக்கொண்டிருந்தார். வீதிகளில் போனவர்கள், பாடசாலை மாணவர்கள் எல்லோரும் நின்ற இடத்திலேயே விழுந்து படுத்தார்கள். முருகா, முருகா என்று பக்தர்கள் கதறியழைத்துக்கொண்டே இருந்தார்கள்.
இரண்டு நொடிப்பொழுதுகள் வான்பரப்பை வட்டமிட்ட நான்கு கிபிர் விமானங்கள், 8.10 மணியளவில், முருகன் கோயிலுக்கு அருகாக உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது இருபது குண்டுகளை மழைபோலப் பொழிந்தன். விமானங்களின் இரைச்சலிலும் குண்டுகளின் சத்தத்திலும் அப்பிரதேசம் அதிர்ந்தது. சொற்ப நேரத்தில், ஒரு கிராமத்தையே கொலைக்களமாக்கிய விமானங்கள் தமது தாக்குதல் வெற்றிக்களிப்பில் திரும்பிவிட்டன. அதிர்ச்சியிலிருந்து மீண்டு சுற்றிப் பார்த்தபோதுதான் தெரிந்தது வீடுகளுடன் சேர்த்து பல உயிர்களும் பறிக்கப்பட்டிருந்தன.
வான்படையின் மிலேச்சத்தனமான தாக்குதலில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு மாதக் குழந்தை, 04வயதுச் சிறுவன், அவர்களின் தாயார் உட்பட எட்டுப்பேர் அந்த இடத்திலேயே பலிகொள்ளப்பட்டிருந்தனர். பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த ஆங்கில ஆசிரியை ஒருவரும் அந்த எட்டுப்பேரில் ஒருவராக பிணமாக இருந்தார். பலரது உடல்களை முழுமையாகப் பெறமுடியவில்லை. துண்டுகளாகப் பொறுக்கிச் சேர்த்து அடையாளம் காணப்பட்டனர். மூன்று வீடுகள் முற்றாகத் தரைமட்டமாக்கப்பட்டதுடன், பல வீடுகள் பலத்த சேதங்களுடன் சிதைந்து போயிருந்தன.
மேலும் படுகாயமடைந்த நிலையில் 12 பொதுமக்கள் முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் மிகவும் ஆபத்தான நிலையிலிருந்த 07 பேர் உடனடியாக நோயாளர் காவுவண்டி மூலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர். மறுநாள் பூமணி என்ற வயோதிபர் சிகிச்சை பலனளிக்காது வைத்தியசாலையில் மரணமானார். சில கணங்களில் நிகழ்ந்த அவலத்தில், பல உயிர்களும், வீடுகளும், சொத்துக்களும், பயன்தரு மரங்களும், தென்னைமரங்களும் பெருமளவில் அழிவடைந்து ஒரு அனர்த்தக் கிராமமாக உருக்குலைந்துபோனது.
மறுநாள் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செய்தித்தளத்தில் பிரதான தலைப்புச் செய்தி ’கிளிநொச்சியின் மேற்கே உள்ள கடற்புலிகளின் தளத்தை முற்றாக அழித்து விமானப்படை வெற்றிகரமான தாக்குதல்’ என வெளியிடப்பட்டது. அதுவே சிங்கள ஊடகங்களுக்கும் சர்வதேசத்திற்கும் வழங்கப்பட்டது. அநியாயமாகக் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் கொலையும் நியாயத்திற்குப் புறம்பாக இரட்டடிப்புச் செய்யப்பட்ட அவலம் சிறிலங்காவில் மட்டுமே சாத்தியம்.
விமானப்படையால் கொல்லப்பட்டவர்களின் விபரம்
சசிகரன் கௌரிநாயகி………………………. 34
சசிகரன் தமிழ்வேந்தன்……………………..06 மாதம்
சசிகரன் கஜீவன்………………………………….04
கதிரவேலு திருநீலகண்டன்……………..79
கிருஸ்ணசாமி சிவாநந்தி………………….27
விஜயகுமார் விதுஜா………………………….21
இந்திரன் லலிதா
சுதாகரன் சுமதி……………………………………..30
தர்மலிங்கம் பூமணி…………………………….68
காயமடைந்தவர்கள்
சசிகரன் கருணயன்…………………………….08
சிறிபதி இராஜேஸ்வரி……………………….33
சத்தியநாதன் தெய்வநாயகி………………43
சதாசிவம் கமலாதேவி………………………60
சுதாகரன் பாணுசன்…………………………….06
விஜயகுமார் சிவாநந்தினி…………………36
விஜயகுமார் டினோசன்……………………..21
அருளானந்தம் லீலாவதி……………………68
அருளானந்தம் சத்தியவரதன்…………..43
சுதாகரன் சபீனா…………………………………..05
விஜயகுமார் கினோசன்…………………….02